பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 18

 

 

 

பெற்றோர்களுக்கு ஓஷோ கூறும் அறிவுரைகள்: 3.11.2018

உங்கள் குழந்தையை நீங்கள் மனமார விரும்புகிறீர்கள் என்றால் அவர்கள் வலிமையானவர்களாக வளர உதவுங்கள். உடலாலும், உள்ளத்தாலும் வலிமையான குழந்தைகள் தாங்களாகவே இந்த உலகத்தை ஆராய விரும்புவார்கள். குழந்தையை, அதன் உணர்வுகளை மதியுங்கள். பெரியவர்களுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் உண்மை. குழந்தைப்பருவம் பரிசுத்தமானது; கலப்படமில்லாதது. அதற்கு மரியாதை கொடுங்கள்.

 

வாழ்க்கையின் மூலத்திற்கு ஒரு குழந்தை மிகவும் நெருக்கமாக இருக்கிறது. வெற்றுத்தாள் போல ஒரு குழந்தை இந்த உலகத்திற்கு வருகிறது. எதற்காக அதன் மேல் உங்கள் ஆசைகளை, உங்கள் கதைகளை  எழுத அவசரப்படுகிறீர்கள்?

 

குழந்தைகள் சின்னஞ்சிறுசுகள். பக்குவப்படாத சிறிய விதை போன்றவர்கள். எதிர்காலத்தில் இப்படி உருவாகக் கூடும் என்ற ஒரு சாத்திய நிலையிலேயே இருப்பவர்கள். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் அளவில்லாத அன்பையும் கொடுங்கள். சாதித்துக் காட்டுவார்கள். அவர்களது எதிர்காலத்தை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க முடியாது. உங்களது கடந்த காலத்தில் அவர்களை வாழ வைக்க நினைக்காதீர்கள். உங்களது பழைய நைந்து போன வாழ்க்கையை அவர்கள் மேல் சுமத்தாதீர்கள். அவர்களே தங்கள் வாழ்க்கையை எழுதிக்கொள்ளட்டும். அவர்களுக்கு திறந்தவெளியாக இருக்கும் ஒரு எதிர்காலத்தைக் காட்டுங்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் உண்மையில் விரும்பினால் அவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்.

 

அவர்கள் வலிமை பெற உதவுங்கள். அறியாதவற்றை அறிய உதவுங்கள். உங்கள் யோசனைகளை கொடுக்காதீர்கள். சின்னக் குழந்தைகளைப் பார்த்தால் அவர்களது பார்வையில் ஒரு தெளிவு இருக்கும். நீங்கள், கடந்து போன நாட்களைச் சேர்ந்தவர்கள். அவர்களோ நாளைய தினங்களை ஆளப் போகிறவர்கள். எத்தனை அன்பு செலுத்த முடியுமோ அத்தனை அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். நிச்சயமாக உங்கள் கடந்த காலத்தை அவர்களது எதிர்காலமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்காதீர்கள்.

 

அவர்களுக்கு மனவலிமையைக் கொடுங்கள். உங்கள் தூய அன்பைக் கொடுங்கள். அவர்கள் தூர தூர பிரதேசங்களுக்குப் பயணம் செய்ய விரும்புவார்கள். அதற்கு வலிமை தேவை. உங்கள் குழந்தைகள் உங்களை விட்டு வெகு தூரம் சென்று ஒரு தனி மனிதனாக உருவாகும் போது மகிழ்ச்சி கொள்ளுங்கள். உங்களுக்குக் கீழ் படியும் ஒரு முட்டாளாக அவன் இல்லை என்று மகிழ்ச்சி அடையுங்கள். முட்டாள்கள் மட்டுமே அடிபணிந்து நிற்பார்கள்.

 

அவர்களுக்கென்று  ஒரு எதிர்காலம் இருக்கிறது. அவர்களது திறமைக்கேற்ப அவர்கள் வளரட்டும். உங்களுடைய நகலாக உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்திற்குத் தடை போடுங்கள். உங்கள் குழந்தைக்கென்று ஒரு அசல் முகம் இருக்கட்டும். அசல் முகத்திற்கு என்று ஒரு அழகு, தெய்வீகம், கவர்ச்சி இருக்கிறது. அதையெல்லாம் நகல் எடுக்க முடியாது. நீங்கள் ஒரு வில் என்றால் உங்கள் குழந்தைகள் அதிலிருந்து புறப்படும் அம்புகள். அந்த அம்புகள் இதுவரை காணாத, அறியாத நிலங்களுக்குச் செல்லட்டும். அதைத் தடுக்காதீர்கள்.

 

அறிவுத்திறன் என்பது பல புரட்சிகளைச் செய்யும். ஒரு புரட்சிக்காரனைப் பெற்றிருக்கிறோம் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். இதைப் பற்றி பெருமைப் படுங்கள். அதற்கு பதில் மக்கள் மனஅழுத்தம் கொள்ளுகிறார்கள். நீங்கள் ஒரு வில்லாளியின் கையில் வில்லாக இருக்கிறீர்கள். உங்களைப் பிடித்திருக்கும் வில்லாளிக்கு அவன் எய்தும் அம்புகளை மிகவும் பிடிக்கும். அந்த அம்புகள் பல காத தூரம் சென்று விழவேண்டும் என்று விரும்புவான். அதே சமயம் அவன் கையிலிருக்கும் அம்பு திடமாக இருக்க வேண்டும் என்றும் விழைவான். உங்கள் காலம் முடிந்துவிட்டது. புதிய அம்புகளுக்கு வழி விடுங்கள். அவைகளை வாழ்த்துங்கள். உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து குழந்தைகளை விடுவித்து அவர்கள் வாழ்க்கையை வாழவிடுங்கள்.

 

இந்தத் தொடரைப் படிக்கும் பெற்றோர்கள் ஓஷோவின் மேற்சொன்ன அறிவுரைகளையும் மனதில் நிறுத்திக்கொள்வது அவசியம்.

 

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளிடத்தில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். ‘ஊஹூம், நான் அப்படியெல்லாம் என் குழந்தைக்கு எந்தவித அழுத்தமும் கொடுப்பதில்லை’ என்று சொல்லும் பெற்றோருக்கும் கூட மனதின் அடிஆழத்தில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். எதிர்பார்ப்புகளை குழந்தைகளிடத்தில் சொல்லாவிட்டால் கூட அம்மா அல்லது அப்பாவின் மனதில் தோன்றும் எண்ணங்கள் குழந்தையின் மனதிற்குத் தெரிந்துவிடும். எண்ணங்களின் சக்தி இது என்று சொல்லலாம்.

 

நம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நமக்கு சில பயங்கள், சந்தேகங்கள் இருக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்று நீங்கள் பயப்படுவது உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிந்தால் அவர்களும் எல்லாவற்றிற்கும் பயப்பட ஆரம்பிப்பார்கள். தேவையில்லாத  மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஆகவே எதிர்மறை எண்ணங்களை நேரான எண்ணங்களாக மாற்றிவிடுங்கள். உதாரணமாக பள்ளியிலிருந்து உங்கள் மகள் வரத் தாமதம் ஆகிறது என்றால் உடனே ஏதாவது விபத்து நேர்ந்திருக்குமோ, அவளை யாராவது ஏதாவது செய்திருப்பார்களோ என்றெல்லாம் எண்ணத் தொடங்காமல், போக்குவரத்து அதிகமிருக்கும் அதனால் தாமதம், அல்லது பள்ளியிலேயே சற்றுத் தாமதம் ஆகியிருக்கலாம் என்று எண்ணுங்கள். இப்படிப்பட்ட நேரான எண்ணங்களால் உங்களுக்கும் மனஅழுத்தம் அதிகமாகாமல் இருக்கும். உங்கள் மகளுக்கும் தாமதத்திற்கான காரணத்தைச் சொன்னால் வீட்டில் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும்.

அனாவசியமான பயங்களைப் போலவே சந்தேகங்களையும் தவிர்த்து விடுங்கள். நம் குழந்தைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? யாரிடம் தங்களது குறைகளைச் சொல்லிக் கொள்வார்கள்?

 

உடல்நலம் போலவே பிள்ளைகளுக்கு மனநலமும் முக்கியம். இரண்டையும் பேணிக் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s