பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 17

சத்தான உணவு, நல்ல தூக்கம், விளையாட்டு இவை மூன்றும் மாணவர்களுக்கு சரியான முறையில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமை. குப்பை உணவுகளை வாரம் ஒருமுறை என்று குறைத்து விடுங்கள். புதிதான காய்கறி, பழங்கள் இவை உணவில் தினமும் இருக்க வேண்டும். பள்ளிக்கு எடுத்துச் செல்லும் உணவில் அதிக மாற்றங்கள் செய்ய இயலாது. அதனால் அவர்கள் வீட்டில் சாப்பிடும்போது நிறைய காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொடுங்கள். அதுவும் மாலை வேளையில் பள்ளியிலிருந்து திரும்பும்போது அதிகப்பசியுடன் வருவார்கள். அப்போது நொறுக்குத்தீனி என்ற பெயரில் எண்ணையில் பொரித்ததைக் கொடுக்காமல் பழங்களை கொடுங்கள். பால் ஒரு பூர்த்தியான உணவு. தினமும் மூன்று வேளை பால் கொடுங்கள்.

 

பாதாம், பிஸ்தா போன்ற உலர்பழங்களை தவறாமல் கொடுங்கள். புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் வளரும் குழந்தைகளுக்கு அவசியம் தேவை. இவை விலை அதிகமானவை என்று சிலர் எண்ணக்கூடும். குப்பை உணவுகள், எண்ணையில் பொறித்தவைகளைக் கொடுப்பதற்கு பதில் இவைகளை வாங்கிக் கொடுப்பது நல்லது. நெய், வெண்ணை, தயிர் போன்ற பால் புரதங்களை தினமும் உணவில் இருக்கட்டும்.

 

 • பிள்ளைகளுக்கு விருப்பமானவற்றைச் செய்து கொடுங்கள். சமையல் வேலையில் அவர்களையும் ஈடுபடுத்துங்கள். இளம் பிள்ளைகளை நேரடியாக அடுப்பில் வேலை செய்ய விடா விட்டாலும் ‘நறுக்கிய அந்த தக்காளிகளை எடுத்துக் கொடு; உப்பு பாட்டிலை எடுத்துக் கொடு’ என்று உதவி செய்யச் சொல்லுங்கள். சமையல் அறையின் சுத்தம், காய்கறிகளின் சத்துக்கள் என்று பலவகையான விவரங்களை அப்போது அவர்களுடன் பேசுங்கள். உணவில் நீங்கள் என்னென்ன சேர்க்கிறீர்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கும்போது அவர்களுக்கு சாப்பாட்டின் மேல் ஒரு ஆசை உண்டாகும்.
 • சமையல் என்பது விளையாட்டல்ல என்பது புரியும்போது சமையலைக் குறை சொல்லாமல் சாப்பிடுவார்கள்.
 • உணவுப் பொருட்கள் வாங்கப் போகும்போது அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். அவற்றின் மேல் இருக்கும் லேபில்களைப் படிக்கச் சொல்லிக் கொடுங்கள்.
 • விலை, மற்றும் எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம், குறிப்பிட்ட உணவுப்பண்டத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது போன்றவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள இது உதவும்.
 • உணவை வீணாக்கக் கூடாது என்று இளம்வயதிலேயே சொல்லிக் கொடுங்கள்.
 • முளைகட்டிய பயறு வகைகளில் புரதம் அதிகம் இருக்கிறது; கால்சியம் நிறைந்த உணவுகளால் வலிமையான, பற்கள், எலும்புகளைப் பெறலாம் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். இதனால் அவர்களுக்கு உணவு பற்றிய புரிதல் ஏற்படும்.
 • சாப்பாட்டு நேரத்தில் தட்டுகளைக் கழுவி வைப்பது, நீர் எடுத்து வைப்பது, உணவுப் பண்டங்களை எடுத்துக் கொண்டு போய் மேசை மீது வைப்பது போன்றச் சின்னச்சின்னஉதவிகள் செய்யட்டும்.
 • மேசையைச் சுத்தம் செய்யும் வேலையையும் அவர்கள் செய்யட்டும்.
 • கையில் தட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தபடியே சாப்பிடுவது நல்லதல்ல. குடும்பம் முழுவதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது.
 • சாப்பிடும் நேரம் எந்தவிதமான மின்னணு சாதனங்களும் கையில் இருக்கக் கூடாது. சாப்பிடும் சாப்பாட்டில் முழு கவனமும் இருக்க வேண்டும். அன்றைய நாள் எப்படி இருந்தது என்பதை அவரவர்கள் சொல்லலாம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று திட்டம் போடலாம். அறிவுரை, வாதப்பிரதிவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
 • ‘நீ சமத்தாக வீட்டுப்பாடம் செய்து முடித்தால், ஐஸ்க்ரீம் வாங்கித் தருகிறேன்’ என்று உணவுப் பண்டங்களை விலை பேசாதீர்கள், ப்ளீஸ்! இதுபோன்ற உணவுகளை அளவிற்கு மீறி குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதும் ஆபத்து. இந்தக் காலக் குழந்தைகளுக்கு உடற்பருமன் மிகப் பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

குழந்தைகள் தூங்கும் நேரமும் அவர்களது வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல மாறும். இரவு அதிக நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டி வரலாம். கடுமையான உழைப்பிற்குப் பின் ஓய்வும் அவசியம். பள்ளிப் பருவத்தில் தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. முதலிலிருந்தே இவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவது பெற்றோர்களின் கடமை. நல்ல தூக்கம் ஞாபகசக்தியை அதிகரிக்கிறது என்று பல ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

தூங்குவதற்கு முன் ஒருமணி முன்பாகவே தொலைக்காட்சி, அலைபேசி ஆகிய மின்னணு சாதனங்களை அணைத்து விடுவது கண்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். தூங்குவதற்கு முன் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடத்தில் உருவாக்குங்கள். இயற்கை வெளிச்சத்தில் பிள்ளைகளை படிக்க வையுங்கள். மின்சாரப் பயன்பாடு குறைவதுடன், இளம் வயதிலேயே கண்ணாடி போடும் அவசியத்தைத் தவிர்க்கலாம்.

விளையாடுவதற்கு பிள்ளைகளை அனுமதிப்பது மிகவும் முக்கியம். குழு விளையாட்டுக்கள் இளம் பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களை கற்பிக்கின்றன.

 • குழுவினருடன் ஆடுவது பிற்காலத்தில் சமூகத்தில் கூட்டாக வாழுவதன் அவசியத்தையும், லவித மனிதர்களை எதிர்கொள்ளும் திறனையும் கொடுக்கிறது.
 • விட்டுக்கொடுப்பது, பகிர்ந்து கொள்ளுவது, கவனம் செலுத்துதல், குறியை அடைதல், நேரமேலாண்மை ஆகியவற்றைக் கற்கிறார்கள். இந்தப் பயிற்சிகள் அவர்களுக்குப் படிப்பதிலும் உதவுகின்றன.
 • வெற்றி தோல்விகள் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள் என்பதை விளையாட்டுக்கள் மூலம் புரிந்து கொள்ளுகிறார்கள்.
 • வெற்றிகளைவிட தோல்விகள் மாணவர்களின் மனஉறுதியை அதிகப்படுத்துகின்றன.
 • இளம்பருவத்தினருக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை நல்லவழியில் செலவழிக்க விளையாட்டுக்கள் உதவுகின்றன.

 

படிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் உடல் ஆரோக்கியம். நல்ல உணவு, நல்ல தூக்கம், விளையாட்டு இவை உடல் ஆரோக்கியத்தைக் காக்க உதவும்.

One thought on “பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 17

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s