பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 16

 

 

சென்ற வாரம் நான் எழுதியிருந்த அப்பாவின் அனுபவம் என்பதை எழுதியவர் ஜே லிட்வின் (Jay Litvin). Chabad.org என்ற இணையதளத்தில் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

https://www.chabad.org/theJewishWoman/article_cdo/aid/2366419/jewish/Dont-Forget.htm

 

தனக்குச் சமமாகப் பேசும் தந்தையிடம் குழந்தை தனது பள்ளியில் தான் சந்திக்கும் பிரச்னை பற்றியும் பேசுகிறது. பள்ளியில் என்ன நடக்கிறது என்பதை தங்கள் பிள்ளைகள் தங்களிடம் சொல்வதேயில்லை என்று பல பெற்றோர்கள் வருத்தப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இளம் வயதிலேயே குழந்தைகளுடன் ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொண்டுவிட்டால் பள்ளியில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உங்களிடம் வந்து சொல்லுவார்கள்.

குழந்தையுடன் பேசுவது என்பதில் தான் பாதிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள். பள்ளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்துவிட்டு தேர்வு வரும் சமயத்தில்  விழித்துக் கொள்வார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. தினமும் குழந்தையுடன் பேசி பள்ளியில் என்ன நடந்தது என்பதைக் கேட்டு அறிந்து கொள்வது பெற்றோர்களின் தலையாய கடமை. அவ்வப்போது பள்ளிக்குச் சென்று குழந்தைகளின் படிப்பு, வகுப்பில் அவர்களின் பங்களிப்பு, மற்ற மாணவர்களுடன் பழகும் விதம்  முதலியவற்றை ஆசிரியர்களிடமிருந்து தெரிந்து கொண்டு வாருங்கள்.

குழந்தைகளுடன் பேசும்போது சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

நமது மூளை நாம் பேசும், கேட்கும் வார்த்தைகளை வியப்பான முறையில் பதிவு செய்துகொள்ளுகிறது. பேசுவதற்கு முன் சற்று யோசித்துவிட்டுப் பேசுவது நமக்கும், நாம் மிகவும் விரும்பும் நம் குழந்தைகளுக்கும் நன்மையை விளைவிக்கும். பேசுமுன் யோசி என்றே நம் முன்னோர்களும் சொல்லியிருக்கிறார்கள். நாம் கூறும் வார்த்தைகள் எப்படி செயல்முறைப் படுத்தப் படுகின்றன, எப்படி ஏற்றுக்கொள்ளப் படுகின்றன எப்படி நாம் சொல்லும் சொற்களை அதிக பலன் கொடுக்கும்படியாகச் சொல்லுவது என்றெல்லாம் புரிந்துகொண்டால் வார்த்தைகளையும் தேர்ந்தெடுப்பது சுலபமாகும். நமது குறிக்கோளும் நிறைவேறும்.

சுருக்கமாகப் பேசுதல் மூளைக்கு சட்டென்று புரிகிறது: நீங்கள் நீளமாக அறிவுரை என்று கூறுவது அதற்குப் புரிவதில்லை. சின்னச்சின்ன உறுதியான கட்டளைகள் மனதில் அழுத்தமாகப் படிகின்றன.

  • ‘நீ நன்றாகப் படித்தால் தான் நாளை பெரிய மனிதனாகலாம். வாழ்வில் உயரலாம்’ என்றெல்லாம் நீளமாகச் சொல்லுவதற்கு பதில் ‘நன்றாகப்படி’ என்று மாணவப் பருவத்தில் இருக்கும் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
  • இப்போது நடக்க வேண்டியதைச் சொல்லுங்கள். பழைய விஷயங்களை போட்டுக் கிளறாதீர்கள். ‘வரப்போகிற தேர்விற்கு ஆயத்தம் செய்து கொள்’ என்பது நல்ல பேச்சு. ‘சென்றமுறை நீ சரியாகப் படிக்கவில்லை. மதிப்பெண்கள் குறைந்துவிட்டன. இந்த முறையாவது சரியாக தயார் செய்துகொள்ள வேண்டாமா?’ இது அனாவசியப் பேச்சு.
  • எதிர்மறைச் சொற்களை நமது மூளை ஏற்பதில்லை. அதேபோல ‘இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’ என்பனவற்றையும் விரும்புவதில்லை. ‘புத்தகத்தை மறந்துவிட்டுப் போய்விடாதே!’ என்று சொல்லுவதைவிட ‘ஞாபகமாகப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போ!’ என்பது மூளையில் நல்ல வார்த்தைகளாகப் பதியும்.
  • குழந்தைகள் உங்களிடம் பேசும்போது உங்களது மறுவினையும் சரியான முறையில் அமைய வேண்டும். ‘இன்றைக்கு கஷ்டமான வீட்டுப்பாடம்!’ என்று அவர்கள் சொல்லும்போது ‘நீ ரொம்ப சுலபமா பண்ணிடுவே பாரு, நானும் உதவி பண்ணுகிறேன், சரியா’ என்று சொல்லுங்கள். ‘எப்படித்தான் முடிக்கப் போகிறாயோ?’ என்று நீங்கள் சொன்னால் குழந்தைகளின் மனதில் ‘முடிக்க முடியாது’ என்று பதிந்துவிடும்.
  • நமது மூளை நாம் பேசும் வார்த்தைகளில் இருந்து ‘லேபிள்’ களைத் தயார் செய்துவிடும். உதாரணமாக உங்கள் பிள்ளைகள் இருவரும் காலையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஒரு பிள்ளையிடம் நீங்கள் சொல்லுகிறீர்கள்: ‘உன் அக்காதானே அவள்? அவளிடம் நீ இத்தனை மோசமாக நடந்து கொள்ளலாமா?’ என்று. கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தையின் மனதில் நான் மோசமானவன் என்ற லேபிள் விழுந்துவிடும். இப்படிச் சொல்லுவதற்கு பதில் ‘உன் அக்கா அவள். அவளிடம் நீ நல்லபடியாக நடந்து கொள்’ என்று சொல்லுங்கள். நான் நல்லவன் என்ற லேபிள் குழந்தையின் மனதில் பதிந்து நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • குழந்தைகள் உற்சாக மிகுதியில் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது ‘ஏன் இப்படிச் சத்தம் போடுகிறீர்கள்? குரலை அடக்குங்கள்’ என்று சொல்வதை விட ‘தயவுசெய்து மென்மையாகப் பேசுங்கள்’ என்று சொல்லுவது உங்கள் மனதையும் அமைதிப் படுத்தும்.

 

குழந்தைகள் வளர வளர அவர்களது விருப்பங்களும், தேர்வுகளும் மாறுகின்றன. ஆனால் உங்கள் அணுகுமுறை உறுதியானதாக, அன்பு நிறைந்ததாக இருக்கட்டும். அவர்களது உணவுப் பழக்கம், தூக்கம், விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்களது தூக்கம், உணவுப் பழக்கம் ஆகியவையும் மிகவும் முக்கியம். உங்களைப் பார்த்துத்தான் குழந்தைகள் வளருகிறார்கள். அவர்கள் எதிரில் ஏதாவது ஒரு உணவுப் பொருள் அல்லது காய்கறி, பழம் பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்னால், குழந்தைகளும் அதையே சொல்லுவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும் என்பதை முதலிலேயே பழக்கி விடுங்கள்.

சிறு குழந்தைகளுக்கு தினமும் இரவில் புத்தகம் படித்துக் காண்பிப்பது பெற்றோர், குழந்தைகள் இடையே ஒரு நல்ல உறவை, நெருக்கத்தை  ஏற்படுத்தும். கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்க அனுமதியுங்கள். இவைகளுடன் நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும் நன்றாகக் குறைத்துக் கொள்ளுங்கள். இரவில் நன்றாகத் தூங்கி எழுந்திருக்கும் குழந்தைகள் பள்ளியில் மிகவும் கவனத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்ளுவார்கள். அவர்களது படிக்கும் திறனும்,ஞாபகசக்தியும் உயரும்.

 

உணவுப் பழக்கம், தூக்கம், விளையாட்டு பற்றி தொடர்ந்து பேசுவோம்.

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s