பெற்றோர் + ஆசிரியர் = மாணவர்15 

எனது பேஸ்புக் தோழி திருமதி காயத்ரி ஹரிஹரன் தனது அனுபவத்தைச் சொல்லுகிறார், கேளுங்கள்:

இன்று எனக்கு ஒரு ஆனந்தமான வேடிக்கையான அனுபவம். எனது உறவினர் குழந்தை படிக்கும் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதால் நீங்கள் வந்து குழந்தைகளுக்கு கிருஷ்ணர் கதை சொல்ல முடியுமா என்று கேட்டார்.  சரி என்று ஒப்புக்கொண்டேன். என் கணவர் உடனேயே ஐபேடில் மஹாபாரதம் டௌன்லோட் செய்து கொடுத்து, பரீட்சை எழுதும் குழந்தைக்கு உதவியாக முன்னேற்பாடு செய்யும் தந்தை போல, இதைப்பார்த்து படித்துக்கொள்..கதை சொல்ல சௌகரியமாக இருக்கும் என்றார். நான் அதெல்லாம் வேண்டாம். அங்கு போய் எப்படி சொல்ல வருகிறதோ அப்படி சொல்லிக் கொள்ளுகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  ஸ்கூலில் மாக்கோலத்தில் கிருஷ்ணர் காலடியெல்லாம் போட்டிருந்தார்கள். நான் எல்கேஜி அறையில் போய் “ஹாய் குழந்தைகளா! உங்களுக்கு கிருஷ்ணர் கதை சொல்ல வந்திருக்கேன்” என்று சொல்லி நான் எடுத்துப் போயிருந்த தொட்டில் கிருஷ்ணரை தாலாட்டச் சொல்லி, கதையை ஆரம்பித்தேன். அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போயிற்று. கிருஷ்ணரை கோகுலத்தில் வசுதேவர் விட்டுவிட்டு, அங்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்தார். அந்தக்குழந்தை கம்சன் கையில் எடுத்தவுடன் பறந்து மேலே போனாள் என்று சொன்னவுடன், ஒரு பையன் என்னிடம் எனக்கும் பறக்க முடியும் என்றான். அவ்வளவுதான்…எனக்கும் முடியும், எனக்கும் முடியும் என்று கையை விரித்து குழந்தைகள் ரூம் முழுக்க “பறக்க” ஆரம்பித்து விட்டார்கள்! கதையும் அத்தோடு முடிந்தது!!’

இதுதான் ‘குழந்தைகள் உலகம்’. இந்த உலகத்தில் நுழைவதற்கு ஒரே தேவை: குழந்தைகளின் வயதிற்கு நீங்களும் கீழே இறங்கி வரவேண்டும். அவர்களின் கண்கள் மூலம் உலகத்தைப் பார்க்க வேண்டும். எந்த வயதுக் குழந்தையாக இருந்தாலும் அந்த வயதுக்குரிய அறிவு, பொருள்களை பற்றிய புரிதல் நிச்சயம் இருக்கும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால் குழந்தைகள் ஒரு காலி பாத்திரம் என்று நினைத்துக்கொண்டு நம்மிடம் இருக்கும் அறிவு என்னும் நீரூற்று மூலம் அதை உடனடியாக நிரப்ப முயலுகிறோம்.

இதோ ஒரு அப்பாவின் அனுபவம்

ஜன்னல் வழியே பாத்துக் கொண்டிருந்த என் பிள்ளை  கேட்டான்: இந்த மரம் எப்படி தன்  கிளைகளை இது போல முன்னும் பின்னும் இப்படி அசைக்கிறது?’

நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் சொன்னேன்: ‘மரம் அசைக்கவில்லை, மகனே! காற்று…….’ என்று ஆரம்பித்தவன் சற்று நிதானித்தேன்.  புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மகனின் அருகில் போய் உட்கார்ந்து நானும் அந்த மரத்தைப் பார்த்தேன். அறையின் உள்ளேயோ, ஜன்னலின் வழியாகவோ காற்றை உணர முடியவில்லை. காற்றின் ஒலியையும் கேட்க முடியவில்லை. ஒரு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு காற்றுதான் மரத்தின்  கிளைகளை அசைக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? அது மரத்தின் தன்னிச்சையான செயலாக ஏன் இருக்கக்கூடாது? மரத்தின் அசைவைப் பார்த்துக் கொண்டே என்னை மறந்து நின்றேன்.

‘நீ சொல்வது இப்போ எனக்குப் புரிகிறது, மகனே! மரத்தின் அசைவு மிக அழகாக இருக்கிறது’.

‘மரம் நடனம் ஆடுகிறதோ?’

‘ஏன் மரம் நடனம் ஆட வேண்டும்?’

‘இப்போது வசந்த காலம். அதனால் இருக்கலாம். குளிர் நன்றாகக் குறைந்திருக்கிறது. அதனால் இருக்கலாம்’

‘இருக்கலாம்’

நாங்கள் இருவரும் மரத்தின் அசைவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு லயம் இருப்பது போல தோன்றியது. முதலில் பலமாக, மிகுந்த வலிமையுடன்; பிறகு மெதுவாக, மென்மையாக, திடீரென்று மிக பலமாக, சிலசமயம் மூர்க்கத்தனமாக மரம் அசைந்து கொண்டிருந்தது. நான் இதுவரை பார்க்காத ஒன்றாக இந்தக் காட்சி இருந்தது.

‘அப்பா, மரத்திற்கு உயிர் உண்டா?’

‘உண்டு’

‘அவைகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?’

‘எனக்குத் தெரியவில்லை, ஏன் கேட்கிறாய்?’

‘இந்த மரம் சந்தோஷமாக இருப்பது போலத் தெரிகிறது. ஒரு மரம் சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இருக்க முடியுமா?’

‘என்ன சொல்ல விரும்புகிறாய்?’

‘குளிர்காலத்தில் கிளைகள் எல்லாம் மொட்டையாக இலைகள் உதிர்ந்து போய், தலை கவிழுந்து கொண்டு தனியாக பாவமாக இருக்கும். இப்போது பாருங்கள் கிளைகள் முழுவதும் புதிய இலைகள், சூரிய ஒளியில் மின்னுகின்றன; பறவைகள் அங்கே வசிக்கின்றன. இப்போது மரமும் சந்தோஷமாக இருக்கிறது’.

நாங்கள் இருவரும் மெளனமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். மற்ற மரங்களும் இப்போது காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மரமும் ஒவ்வொருவிதமாக எதையோ சொல்ல விரும்புவது போல இருந்தன.

‘அதோ அங்கிருக்கும் ஒரு பெரிய மரத்தைப் பார். அது என்ன சொல்ல நினைக்கிறது?’

‘அது மிகவும் பழைய மரம். நிறைய வயதாகியிருக்கும். நிறைய தடவை வசந்த காலத்தையும், வெயில் காலத்தையும் பார்த்திருக்கும். அதனால் அது அதிகம் எதுவும் சொல்லவில்லை’

கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு என் மகன் சொன்னான்: ‘நடனம் ஆட வேண்டுமென்றால் இசை வேண்டும். ஒருவேளை காற்று அந்த மரத்திற்கு மட்டும் கேட்கும் படியாக இசையை கொண்டு வருகிறதோ, என்னவோ?’

என் மகன் சொன்னதை நானும் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

என் மகன் மெதுவாகச் சொன்னான்: ‘அப்பா, எனக்கு என் வகுப்பு ஆசிரியரை அவ்வளவாகப் பிடிக்கவில்லை’

இப்போது புரிகிறதா குழந்தைகளின் உலகின் நாம் நுழைவது எவ்வளவு முக்கியம் என்று?

https://www.chabad.org/library/article_cdo/aid/2706/jewish/My-Childs-Window.htm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s