பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 14  

 

 

சுயசார்புடைய, முடிவுகளைத் தாங்களே எடுக்கக்கூடிய, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய, தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகளாக தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டுமென்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். வேகமாக மாறிவரும் உலகில் குழந்தைக்குத் தேவையான திறமைகளை எப்படி வளர்ப்பது?

சிறுவயதிலேயே ஆரம்பித்து நிதானமாக அவர்களை பழக்குவது தான் ஒரே வழி.

 • வீட்டிற்குள் சுதந்தரப் பறவையாக உலவ விடுங்கள்:

சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போதே குழந்தைகளை வீட்டுக்குள்ளே சுதந்தரமாகச் சுற்ற விடுங்கள். குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு செலுத்துவது, அவர்களது வயதிற்குத் தகுந்த, பளிச்சென்ற வண்ணங்களில் கிடைக்கும் விளையாட்டு சாமான்களால் வீட்டை நிறைப்பது இவையெல்லாம் குழந்தைகளை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகச் செய்யும். அதே நேரத்தில் தவழும் குழந்தையாக இருந்தாலும், நடக்கத் துவங்கிய குழந்தையாக இருந்தாலும் அவர்களை வீட்டினுள்ளே அவர்கள் போக்கில் உலவ விடுங்கள். அம்மா அப்பாவின் மேற்பார்வையில் வீட்டில் இருக்கும் எல்லா அறைகளுக்கும் போய் அங்கிருக்கும் சாமான்களைத் தொட்டுப் பார்க்கட்டும். இதற்கும் முன்னால் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி: உங்கள் வீட்டை குழந்தைக்கு பாதுகாப்பு நிறைந்ததாகச் செய்வது. வீட்டை தூசு தும்பு இல்லாமல் சுத்தமாக வையுங்கள். குழந்தையின் கைபட்டு சாமான்கள் எதுவும் குழந்தையின் மேல் விழாமல் இருக்க வேண்டும். அறைக்கதவு அடித்துக் கொள்ளாமல் நிலையாக இருக்க வேண்டும். எதன் மேலும் இடித்துக் கொள்ளாமல் குழந்தை வீட்டில் வளைய வரவேண்டும். தரையில் நீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மிதியடிகள், செருப்புகள் குழந்தையின் கைக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் குழந்தை தடுக்கி விழுந்து விடுமோ, அடிபட்டுக் கொண்டுவிடுமோ என்கிற கவலை இல்லாமல் வீட்டைச் சுற்றி வரும் அளவிற்கு வீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

 • பொறுப்புக்களை கொடுத்துப் பழக்குங்கள்:

விளையாடிய பின் விளையாட்டுச் சாமான்களை அதனதன் இடத்தில் வைக்கப் பழக்குங்கள். முதலில் நீங்கள் எடுத்து வையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையையும் எடுத்து வைக்கச் சொல்லுங்கள். அதாவது நீங்கள் 90% செய்யும் வேலையில் 10% குழந்தை செய்யட்டும். மெதுமெதுவே உங்கள் பங்கினைக் குறைத்துக் கொண்டு குழந்தையின் பொறுப்பில் விட்டுவிடுங்கள். சற்று வளர்ந்தவுடன் தன்னுடைய புத்தகங்களை அடுக்குவது, தன்னுடைய துணிமணிகளை மடித்து அலமாரியில் வைப்பது, தானாகவே குளித்துவிட்டு வருவது, அறையில் விளக்கு, மின்விசிறி இவைகளை அணைப்பது என்று பொறுப்புகளைக் கொடுங்கள். பெரிய குழந்தைகளை முதல் நாள் இரவே பள்ளிச் சீருடைகளை எடுத்து வைத்துக் கொள்வது, டைம்-டேபிள் பார்த்து அடுத்தநாளுக்குத் தேவையான புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொள்வது, தண்ணீர் பாட்டிலில் நீர் பிடித்து வைத்துக் கொள்வது, காலணிகளை பாலிஷ் போட்டு வைப்பது, சாக்ஸ்களை எடுத்து வைத்துக் கொள்வது போன்ற வேலைகளைச் செய்யப் பழக்குங்கள். மிக முக்கியமான பொறுப்பு வீட்டுப் பாடங்களை பாக்கியில்லாமல் முடிப்பது, தேர்வுகளுக்கான பாடங்களை தானாகவே படிப்பது இவைதான். மதிப்பெண்கள் அவர்களது உழைப்பைப் பொறுத்தது என்று தெளிவுபடுத்தி விடுங்கள்.

 

 • கனவுகள் நிறைவேற உதவுங்கள்

 

சிறுவயதில் நிறைவேறாத உங்கள் ஆசைகளை அளவுகோலாக வைத்துக் கொண்டு குழந்தைகளை உருவாக்க முயலாதீர்கள். இப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருக்கும் உங்கள் சின்னஞ்சிறு குழந்தைக்கு களிமண் வைத்துக்கொண்டு விளையாடப் பிடிக்குமா விளையாடட்டும். உங்கள் பத்து வயது சுட்டிப் பெண்ணுக்கு மெஹந்தி போடப் பிடிக்குமா போடட்டும். அவளது கைத்திறனையும், கற்பனைத் திறனையும் மனதாரப் பாராட்டுங்கள். கல்லூரியில் இருக்கும் உங்கள் பதின்ம வயது மகனுக்குக் கவிதை எழுதப் பிடிக்குமா? உற்சாகப்படுத்துங்கள். அவன் எழுதும் கவிதைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். உங்கள் கனவுகளையே அவர்களும் காண வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். புதிய கனவுகளை, பெரிய கனவுகளை அவர்கள் காணட்டும். அவர்களது கனவுகளை நிறைவேற்ற உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள்.

 

 • வீட்டு வேலைகளையும் செய்யப் பழக்குங்கள்:

‘குழந்தைகள் படிக்கட்டும். வீட்டு வேலைகளை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்று சில தாய்மார்கள் சொல்லுகிறார்கள். இது தவறு. வீட்டு வேலைகளையும் அவர்களிடத்தில் ஒப்படையுங்கள். மிகச் சிறப்பாகச் செய்து காண்பிப்பார்கள். வேலைக்குப் போகும் தாய்மார்களுக்கு இத்தகைய குழந்தைகள் ஒரு வரப்பிரசாதம். மாலையில் நீங்கள் வீட்டிற்கு வந்து சேருவதற்கு முன், வீட்டில் விளக்குகளைப் போட்டு, உலர்ந்த துணிகளை மடித்து வைத்து, வீட்டை சுத்தம் செய்து, பள்ளிக்குப் போட்டுக் கொண்டு போன சீருடைகளை களைந்துவிட்டு வேறு உடை அணிந்து, தலை வாரி, முகம் கழுவி என்று எல்லா வேலைகளையும் செய்யப் பழக்குங்கள். தம்பி, தங்கைகள் இருந்தால் அவர்களுக்கும் உடைமாற்றி, முகம் கழுவி விட்டு, வேறு உடை அணிவித்து அம்மா வீட்டிற்குள் வரும்போது உற்சாகமாக அம்மாவை வரவேற்கலாம். அலுவலகப் பணியினால் அலுத்துப் போய்வரும் அம்மாவிற்கு இவை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். இல்லத்தரசிகளும் இதுபோன்ற வேலைகளை குழந்தைகளைச் செய்யச் சொல்லலாம். வீட்டு வேலையைச் செய்வது – அதுவும் நம் வீட்டு வேலையைச் செய்வது எந்தவிதத்திலும் தவறு இல்லை.

 

 • தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம்.

வெற்றியைப் போலவே தோல்விகளும் வாழ்க்கையில் இன்றியமையாதவை என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கும் தோல்வியை எப்படி ஏற்றுக்கொள்வது என்று சொல்லிக் கொடுங்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்கலாம் என்று சொல்லிக் கொடுங்கள். தோல்வியில் துவளாமல் எழுந்து நிற்பதுதான் புத்திசாலித்தனம் என்று புரிய வையுங்கள். தோல்வி வாழ்வின் முடிவு அல்ல.

மேலும் பேசுவோம்……

 

 

 

 

3 thoughts on “பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 14  

 1. EXTREMELY Brilliant analysis of Parental Guidance to Children .
  Keep going and All the best .
  CONGRATULATIONS .

  Sent from my iPad

  >

 2. மிக நல்ல கருத்துக்கள். பாராட்டுக்கள். இத்தகைய பழக்கங்களை மேற்கொள்வது பற்றிய எடுத்துக்காட்டுகளையும் இணைத்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். இது பற்றி புள்ளி விவரங்கள் (இந்தியா + மேலை நாடுகள்) ஏதேனும் உள்ளனவா? நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s