பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 13  

 

குழந்தை என்பது நமக்குக் கடவுள் கொடுக்கும் பரிசு. அதை பத்திரமாகப் பாதுகாத்து நன்றாக வளரும்படி செய்ய வேண்டியது நமது கடமை. குழந்தையின் மேல் ஆழ்ந்த பாசம், அன்பு கொண்டிருந்தாலும் சிலசமயங்களில் பெற்றோர்கள் இந்தக் கடமையிலிருந்து நழுவி விடுகிறார்கள். தங்களது அலுவலக வேலையில் மும்முரமாக இருப்பதால் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகிறது. விளைவு குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பதேயில்லை. ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். யாருமே பூரணமான (Perfect) பெற்றோர் ஆக இருக்க முடியாது. இருக்கவும் வேண்டாம்.

நல்ல பெற்றோர் ஆக இருப்பது எப்படி? சில விஷயங்களைத் தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகளைப் பார்த்து சத்தம் போடாதீர்கள்

சில சமயம் குழந்தைகள் நம் சொல்லுக்குக் கட்டுப்படாமல் போகும்போது குழந்தைகளைப் பார்த்து சத்தம் போடுகிறோம். நாம் நமது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் இது என்பதைத் தவிர இதனால் எந்தப் பலனும் இல்லை. ‘இவங்க எப்பவும் இப்படித்தான் சத்தம் போடுவாங்க, இதைப் பெரிதாக எடுத்துக்க வேணாம்’ என்று குழந்தைகள் உங்கள் கத்தலுக்குப் பழகி விடுவார்கள்.

நச்சரித்தல்

நச்சரிக்கும் பெற்றோர்களை குழந்தைகள் விரும்புவதில்லை

‘இதைச் செய்தாயா? அதைச் செய்தாயா?’ என்று நச்சரித்துக் கொண்டே இருந்தால். ‘கத்தலு’க்குக் கிடைக்கும் மரியாதைதான் இதற்கும் கிடைக்கும்.

நீளமாகப் பேசுவது – அறிவுரை வழங்குவது.

இவை இரண்டுமே ஒருவழி பேச்சு. அதாவது நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருப்பீர்கள். உங்கள் குழந்தைகளிடமிருந்து எந்தவித மறுவினையும் கிடைக்காது. நீங்கள் எப்போது முடிப்பீர்கள் என்று உங்கள் குழந்தைகள் காத்திருப்பார்கள். நீங்கள் சொல்வது எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்!

குழந்தையை சிறுமைப்படுத்துவது:

‘உன்னால் என்ன முடியும்? எதற்கும் லாயக்கில்லாதவன்’ ‘தண்டச்சோறு’ ‘புத்தியில்லாதவன்’ என்பது போன்ற சொற்களை பெற்றோரின் வாய்மூலம் கேட்கும் குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, தாழ்வு மனப்பான்மையுடன் வளருவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை இப்படிச் சிறுமை படுத்தாதீர்கள்.

குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தல்

ஒரு குழந்தையை அடித்துத் திருத்துவது என்பது மிகவும் மோசமான விஷயம். அடிப்பது மூலம் குழந்தை திருந்தவும் திருந்தாது என்பதுடன் முரட்டுத்தனம் இன்னும் அதிகமாகும். பிரச்னை என்ன என்பதை குழந்தையுடன் பேசி அவனுக்குப் புரிய வையுங்கள். எங்கே தவறு என்பதை நிதானமாகச் சொல்லுங்கள்.

பிற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அப்படித்தான் அதன் நடவடிக்கைகளும் அமையும். மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு திறமை உங்கள் குழந்தையிடம் இல்லை என்று நினைப்பதற்கு முன், அவர்களிடம் இல்லாத ஒரு திறமை உங்கள் குழந்தையிடம் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையிடம் அதைப் பற்றிப் பேசி அந்தத் திறமையை வளர்க்க உதவுங்கள்.

குற்ற உணர்வில் குழந்தையை தவிக்க விடாதீர்கள்.

குழந்தை செய்யும் தவறுகளை பெரிதாக்காதீர்கள். திரும்பத்திரும்ப அவற்றைச் சொல்லிச்சொல்லி குழந்தை ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டது போல உணரச் செய்யாதீர்கள். நாளடைவில் குழந்தை மனஅழுத்தத்திற்கு ஆளாகும்.

குழந்தையை குழந்தையாக நடத்துங்கள்.

ஏராளமான எதிர்பார்ப்புகளை அவர்கள் தலைமேல் சுமத்த வேண்டாம். அவர்களுக்கு தேவையான இடைவெளியைக் கொடுங்கள். முடிவுகளை அவர்களே எடுக்கட்டும்.

உதாரணப் பெற்றோர்களாக இருக்க முயற்சியுங்கள்.

உங்கள் குழந்தைகள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அவற்றையெல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். உங்களைப் பார்த்துதான் அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள். உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில செயல்களை அவர்களும் செய்யும் போது உங்களுக்குக் கோபம் வரலாம். அதனால் கூடுமானவரை நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, குழந்தையை ‘அடுத்த அறைக்குப் போய்ப்படி’ என்று சொல்லாதீர்கள். உங்கள் குழந்தையின் நன்மைக்காக தொலைக்காட்சி பார்ப்பதை உங்களால் நிறுத்த முடியாதா? வெறும் சாப்பாடு போட்டு துணிமணி வாங்கிக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புவது மட்டுமல்ல பெற்றோரின் கடமை. அவனை நல்ல ஒரு மாணவனாக உருவாக்குவதும் உங்கள் பொறுப்புகளில் ஒன்றுதான். நீங்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகளும் கற்றுக் கொள்ளுவார்கள்.

குழந்தை எதிரில் மற்றவரின் குறைகளை சொல்லிக்காட்டி சிரிக்காதீர்கள்.

குழந்தையின் எதிரில் சண்டை போடாதீர்கள்.

விருந்தாளிகளின் எதிரில் குழையக் குழையப் பேசுவதும், அவர்கள் சென்றபின் அவர்களைத் தூற்றுவதும் செய்யாதீர்கள். உங்களது இரட்டை வேடம் குழந்தைகளைக் குழப்பும். நாளடைவில் குழந்தைகளின் மதிப்பில் நீங்கள் தரம் தாழ்ந்து போவீர்கள்.

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவர். இதில் தவறேதும் இல்லை. அதற்காக வீண் ஆடம்பரம், ஜம்பம் செய்யாதீர்கள். உங்கள் பணவரவு செலவு இவை உங்கள் குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கட்டும். அதற்காக அவர்களுக்கு ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு சொல்லவேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களுக்காக நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் உங்கள் கடுமையான உழைப்பிலிருந்து வருவது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் சிலவற்றிற்கு ‘நோ’ சொல்லவும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுடன் ஒரு நல்ல நண்பனாக இருக்க முயலுங்கள். நிறைவான பெற்றோர்களின் லட்சணங்கள் இவை தான்.

One thought on “பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 13  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s