பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 12

 

சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை கீழை நாடுகளின் மதங்களைப் பற்றிய எண்ணங்களை வெகுவாக மாற்றியது. மாயமந்திரம், சித்துவேலைகளே கீழை நாடுகளின் மதங்கள் என்ற வாதத்தைத் தகர்த்து அவை மகோன்னதமானவை என்று மேலைநாடுகளுக்குப் புரிய வைத்தது.

‘இந்து மதம் மனிதர்களைப் பாவிகளே என்று அழைக்க மறுக்கிறது. நாம் எல்லோரும் இறைவனின் குழந்தைகள்; பூரணமானவர்கள்; வையத்துள் வாழும் தெய்வங்கள்; அப்படியிருக்கையில் மனிதர்களை பாவிகள் என்று சொல்வது மனித இயல்புக்கே அழிக்க முடியாத கறை. மனித இனம் தன்னுள் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணர உதவி செய்வதை தன் முதல் நோக்கமாகக் கொண்டது இந்து மதம்’ என்று சொல்லி மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டத்தையும், இந்து மதத்தைப் பற்றிய கண்ணோட்டத்தையும் மாற்றினார்.

‘கிறிஸ்தவ மதக் கொள்கைகளை பின்பற்றும் நாடுகள் செல்வம் மிகுந்த, ஆற்றல் வாய்ந்த நாடுகள். மிகவும் பழமையானதும், சிறந்ததுமான இந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியா ஏன் ஏழ்மையில் வாடுகிறது?’ இந்தக் கேள்வி சுவாமிஜியிடம் பலமுறை கேட்கப்பட்டது. அவர் சொன்ன பதில்:

‘ஐரோப்பாவின் செல்வம் சக மனிதர்களுடன் போரிட்டு, அவர்களைக் கொன்று அதனால் வந்தது. இத்தகைய செல்வத்தை  இந்து விரும்புவதில்லை. இங்கிலாந்து நாட்டவர்களிடமிருந்து நாட்டை ஆள்வது பற்றி அறிய விரும்புகிறோம். விஞ்ஞானம், விவசாயம் போன்றவற்றின் நேர்த்தியை அமெரிக்கா எங்களுக்குக் கற்றுத் தரட்டும். ஆனால் ஆன்மீகத்தை நாங்கள் உலகிற்குக் கற்றுத் தருவோம்’.

இப்படிப்பட்ட உரைகள் மூலம் உலகிற்கு மட்டுமல்ல. இந்தியாவிற்கே இந்தியாவைப் பற்றி அறிய வைத்தார் சுவாமிஜி. சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இன்னும் நிறைய கற்க வேண்டும் நாம்.

‘வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்குக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்கிறார் சுவாமிஜி. அவரது தந்தை விசுவநாத தத்தர். தாய் புவனேசுவரி தேவி. பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் நரேந்திரன்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்களே, அதே போலத் தான் நரேந்திரனின் இளமைப் பருவமும் அமைந்திருந்தது.

ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு தாய்பாலுடன் நல்ல பண்புகளையும், நல்ல லட்சியங்களையும் ஊட்டவேண்டும். இந்தியக் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களையும் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமும் சிறுவயதிலேயே சொல்லிக் கொடுத்தார் புவனேசுவரி தேவி. தனது பாட்டியிடமிருந்தும் பல்வேறு பாகவதக் கதைகளை கேட்டு வளர்ந்தார் நரேந்திரன்.

எத்தனை புத்தகங்கள் படித்தாலும் ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் கற்கும் கல்வியே அவனது வாழ்க்கையை வளப்படுத்தும். நரேனும் தன் பெற்றோரிடமிருந்து வாழ்க்கையின் அடிப்படை பாடங்களை கற்றார். நல்லொழுக்கம், விடாமுயற்சி, இறை நம்பிக்கை போன்றவற்றை தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டார்.

‘எப்போதும் தூயவனாக இரு. உன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதுடன், பிறரது சுயமரியாதையையும் மதிக்கக் கற்றுக்கொள். சமநிலை தவறாதவனாக, எந்த சூழ்நிலையிலும் சமநிலை குலையாமல் பார்த்துக்கொள். மென்மையானவனாக இரு. அதேசமயம் தேவைப்பட்டால் உன் இதயத்தை இரும்பாக மாற்றிக் கொள்ளவும் தயங்காதே. உன் செயல்கள் நியாயமாக இருக்குமானால் நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். நியாயமானதை செய்ய தயங்காதே.’ தாயின் இந்த வார்த்தைகள் பல இக்கட்டான சமயங்களில் நரேனுக்கு சரியான முடிவு எடுக்க வழி காட்டியிருக்கின்றன.

 

நரேனின் தந்தை பணிவுடன் கூடிய சுயமரியாதையை அவர் நெஞ்சில் விதித்தார். குழந்தைகள் தவறு செய்யும்போது எல்லா தந்தையரும் செய்வதுபோல அவர் ஆத்திரப்படவோ, அடிக்கவோ மாட்டார். குழந்தைகளை கண்டபடி திட்டுவதும், வசைச்சொற்களை பேசுவதும், அடிப்பதும் குழந்தைகளைத் திருத்தாது என்று அவர் உறுதியாக நம்பினார்.

 

ஒருமுறை நரேன் தனது தாயை கெட்டவார்த்தைகளால் திட்டிய போது அவனது தவறைச் சுட்டிக் காட்ட அவர் நரேன் தன் நண்பர்களை சந்திக்கும் அறையின் வாசலில், ‘இன்று நரேன் தன் அன்னையை இன்ன வார்த்தைகளால் திட்டினான்’ என்று எழுதி வைத்துவிட்டார். ஒவ்வொருமுறை தன் நண்பர்கள் அந்த அறைக்கு வரும்போதும் நரேன் கூனிக் குறுகினார். அதன்பிறகு அவர் அந்த வார்த்தைகளை தவறியும் பயன்படுத்தவில்லை.

 

‘எதைக்கண்டும் ஆச்சரியப்படதே, இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற உணர்வுடன் முன்னேறிப் போக வேண்டும்’ என்ற தந்தையின் வாக்கு நரேனுக்கு வழிகாட்டியாக இருந்தது. நன்நெறிகளைத் தவிர தந்தையிடம் நரேன் நன்றாக சமையல் செய்யவும், பாரம்பரிய சங்கீதத்தையும் கற்றுக் கொண்டார். பலவிதமான உணவுவகைகளையும் மிகவும் சுவைபடச் சமைப்பார் நரேன். இசை என்பது அவரது இரத்தத்திலேயே கலந்த ஒன்றாக இருந்தது. இசைக்கருவிகள் வாசிக்கவும் கற்றார்.

 

நல்ல கல்வி, ஆரோக்கியமான உடல், வளமான வாழ்க்கைத்தரம் இவற்றை குழந்தைகளுக்கு அளித்தால் அவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று உறுதியாக நம்பினார் விசுவநாத தத்தர். ஆழ்ந்த அறிவும், மதி நுட்பமும் படைத்தவர் புவனேசுவரி தேவி. அவர்களுக்குப் பிறந்த மகன் உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்ததில் வியப்பென்ன?

 

சுவாமி விவேகானந்தருக்கும் நமது தொடருக்கும் என்ன சம்மந்தம் என்று இத்தொடரைப் படிப்பவர்களுக்கு சந்தேகம் வரலாம். இந்தியாவின் அடையாளங்களுள் மிக முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். ஆன்மீகத்தின் தலைநகரம் என்ற அடையாளம் அவராலேயே இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என்று எல்லோருக்கும் அவரது செய்தி காத்திருக்கிறது.

 

‘எழுமின், விழிமின், குறி சேரும் வரை நில்லாது செல்மின்’ இந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா?

 

 

2 thoughts on “பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 12

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s