பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7

 

 

நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில:

 

ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

திரு அப்துல் கலாம் இதற்கு மிக அழகாக தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லுகிறார்.

‘எனக்கு அப்போது பத்து வயது. ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எனது ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர். எங்கள் எல்லோருக்கும் அவரது வகுப்பு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அவர் பறவை பறக்கும் விதம் பற்றி பாடம் நடத்தினார். ஒரு பறவையின் படத்தை கரும்பலகையின் மேல் வரைந்தார். வால் பகுதி, இறக்கைகள், தலை, உடம்பு என்று ஒவ்வொன்றாக வரைந்து அது எப்படி தன் உடலைத் தூக்கிக்கொண்டு பறக்கிறது;  பறக்கும்போது அது எப்படி தன் பறக்கும் திசையை மாற்றுகிறது, தன் உடம்பை இழுத்துக் கொண்டு எப்படிப் பறக்கிறது என்று விளக்கினார். பத்து, இருபது என்று பறவைகள் சேர்ந்து பறப்பதையும் விளக்கினார்.

 

கடைசியில் ‘புரிந்ததா?’ என்று கேட்டார். நான் எழுந்திருந்து ‘புரியவில்லை, ஐயா’ என்று சொன்னேன். பல மாணவர்கள் புரியவில்லை என்றனர். அதற்கு அவர் கோபப்படவேயில்லை. ‘இன்று மாலை கடற்கரைக்குச் செல்லலாம்’ என்றார். மாலை மொத்த வகுப்பும் கடற்கரையில் இருந்தது. இனிமையான மாலை வேளை. பெருத்த சத்தத்துடன் அலைகள் பாறைகளின் மீது வந்து மோதுவதை நாங்கள் எல்லோரும் ரசித்துக் கொண்டிருந்தோம். கடற்பறவைகள் பத்து, இருபது என்று சேர்ந்து பறப்பதை ஒரு புதிய ஆர்வத்துடன் பார்த்தோம். எங்கள் ஆசிரியர். ‘பறவைகளைப் பாருங்கள், பிள்ளைகளே!’ என்றார். பறவைகள் தங்கள் சிறகுகளை அடித்துக் கொண்டே தங்கள் உடலை உயரே தூக்குவதைக் கண்டோம். தங்கள் வாலை திருப்பி பறக்கும் திசையை மாற்றுவதையும் கண்டோம். பறவைகளின் செயல்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காலையில் நடத்திய அதே பாடத்தை விளக்கினார் ஆசிரியர்’.

 

‘எனக்கு அந்த மாலை மறக்க முடியாத மாலை ஆயிற்று. பறவைகள் பறப்பத்தைப் பார்க்க மட்டுமே நான் அங்கு வரவில்லை என்ற உண்மை புரிந்தது. எதிர்காலத்தில் நான் என்ன படிக்க வேண்டும் என்று அந்த மாலைவேளை தான் தீர்மானித்தது. ‘பறத்தல்’ என்பதை ஒட்டியே எனது எதிர்காலப் படிப்பு அமைய வேண்டும் என்று உறுதி பூண்டேன். உண்மையில் எனக்கு அதற்கு முன் பறத்தல் விஞ்ஞானம் பற்றி எந்தவித அறிவும் இருந்திருக்கவில்லை. எனது ஆசிரியரின் கற்பிக்கும் விதம், ஏட்டுக்கல்வியை நடைமுறையில் சாத்தியப்படுத்தியது எல்லாமும் சேர்ந்து எனது வாழ்வின் குறிக்கோளை நிர்ணயித்தது.

 

ஒருநாள் வகுப்பு முடிந்தபின் என் ஆசிரியரிடம் சென்று எனது எதிர்கால ஆசையைக் கூறினேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டேன். அவர் மிகவும் பொறுமையாக என்னிடம் சொன்னார்: ‘நீ முதலில் எட்டாம் வகுப்பு முடிக்க வேண்டும். பிறகு உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும். அதன் பிறகு கல்லூரியில் பறத்தல் சம்மந்தப்பட்டப் படிப்பை படிக்க வேண்டும் என்றார். உண்மையில் எனது ஆசிரியர் எனது வாழ்வின் குறிக்கோளைத் தீர்மானித்தார் என்றே சொல்ல வேண்டும்.

 

கல்லூரியில் நான் இயற்பியல் (Physics) எடுத்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வானூர்தி அறிவியல் பாடத்தை எடுத்துக் கொண்டு படித்தேன். இப்படித்தான் எனது வாழ்வு ஒரு ராக்கெட் விஞ்ஞானி, விண்வெளி பொறியியலாளர், தொழில்நுட்ப விஞ்ஞானி என்று மாறியது.

 

திரு சிவசுப்பிரமணியம் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களது வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

 

கற்பதில் ஒரு நிர்பந்தத்தை உண்டாக்க வேண்டும்

 

இதற்கும் திரு கலாம் தம் வாழ்க்கையிலிருந்தே ஒரு உதாரண ஆசிரியரைக் காட்டுகிறார்.

‘நான் எம்ஐடி- இல் படித்துக் கொண்டிருந்த போது நானும் எனது வகுப்புத் தோழர்கள் ஐந்து பேர்களும் சேர்ந்து ஒரு செயல்முறைத் திட்டம் செய்ய வேண்டி வந்தது. ஒவ்வொருவருக்கும் அந்த செயல் திட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பு. எங்களது வரைவுப் பேராசிரியரும், எம்ஐடியின் அப்போதைய இயக்குனரும் ஆன திரு ஸ்ரீநிவாசன் ஒருமுறை நாங்கள் எத்தனை தூரம் எங்கள் செயல் திட்டத்தை முடித்திருக்கிறோம் என்று பார்க்க வந்தார். எங்கள் வேலை மிகவும் ஏமாற்றத்தை அளிப்பதாகச் சொன்னார். நான் அவரிடம் ஆறு பேர்கள் இருப்பதால் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள கஷ்டங்களைச் சொல்லி, ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் செய்து முடித்து அவரிடம் கொடுப்பதாகச் சொன்னேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ‘இதோ பார் இளைஞனே! இன்றைக்கு வெள்ளிக்கிழமை. திங்கட்கிழமை உன்னுடைய கட்டமைப்புத் திட்டம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் உனது ஸ்காலர்ஷிப் நிறுத்தப்படும்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 

எங்களுக்கு வேறு வழியே தெரியவில்லை. இரண்டு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து வேலையை முடித்தோம்.  ஞாயிற்றுக்கிழமை நான் என்னுடைய வரைவை சரிபார்த்துக் கொண்டிருந்தேன். யாரோ என்னருகே நிற்பது போல உணர்ந்தேன். எனதருமை ஆசிரியர் தான் நின்று கொண்டிருந்தார். என்னுடைய வரைவு பார்த்துவிட்டுச் சொன்னார்: ‘எனக்குத் தெரியும் நான் உன்னை மிகவும் அழுத்தம் கொடுத்து வேலையைச் செய்யச் சொல்லியிருக்கிறேன் என்று. உன் செயல்திட்டம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது’ என்று பாராட்டினார்.

 

கல்வி என்பது மிகவும் சீரியஸ்ஸான விஷயம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இந்த ஆசிரியர்.

 

 

 

One thought on “பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s