பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் பகுதி 5 

         

மருத்துவர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆகவேண்டும்; தாங்கள் கட்டி வைத்திருக்கும் பெரிய மருத்துவமனையை அவர்கள் நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பொறியியலாளர் தன் மகன் தன்னைப் போலவே அந்தத் துறையில் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டுமென்று விரும்புகிறார். வியாபாரி தன் மகன் தனக்குப் பின் தனது வியாபார சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.

 

ஆனால் ஒரு ஆசிரியர்…. ?  ஏனோ அவரும் இவர்களைப் போலவே தன் குழந்தை மருத்துவராகவும், பொறியியலாளர் ஆகவும் ஆகவேண்டும் என்றே விரும்புகிறார். தன்னைப் போல ஆசிரியர் ஆக வேண்டும் என்று விரும்புவதில்லை. மிகவும் வருந்தத்தக்க சூழ்நிலை. யாருமே விரும்பி ஆசிரியர்கள் ஆவதில்லையோ என்று தோன்றுகிறது, இல்லையா?

 

அந்தக் காலத்தில் பெண்களுக்கென்றே ஏற்பட்டது இந்த ஆசிரியர் தொழில் என்று சொல்லுவார்கள். இந்தப் பணிக்கு பெண்களிடையே மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. தையல், பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்றவர்களுக்கும் இந்த ஆசிரியர் தொழில் கை கொடுத்தது. குழந்தைகளுடன் போய்விட்டு அவர்கள் வீட்டிற்கு வரும்போது திரும்பி வந்துவிடலாம்; அவர்களுக்கு விடுமுறை என்றால் அம்மாக்களுக்கும் விடுமுறை என்று பெண்களுக்கு மிகவும் உகந்த ஒரு தொழிலாக இருந்தது இந்த ஆசிரியப்பணி. இவை மட்டுமே காரணங்கள் ஆகிவிடுமா? கற்பிப்பது என்பதைத் தாண்டி வேறு காரணங்களும் இருக்க வேண்டுமல்லாவா?

 

ஆசிரியர்களின் வாயிலாகவே அந்தக் காரணங்களைக் கேட்கலாம் வாருங்கள். அப்படியே போன வாரக் கேள்விக்கும் விடை தேடலாம்.

 

முதல் காரணம்:

என்னை வளர்த்து ஆளாக்கிய இந்த சமூகத்திற்கு நான் என் பங்களிப்பைக் கொடுக்க வேண்டும்.

இந்தக் காரணத்துடன் ஆசிரியர் ஆனவர் தான் திரு பாபர் அலி. மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே ஆசிரியர் ஆனார். தனது கிராமத்தில் இருக்கும் சிறுவர்கள் பணம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கு வர இயலவில்லை என்பது இவரை மிகவும் வருத்தியது. இவரது கிராமத்தில் நல்லப் பள்ளிக்கூடமும் இருக்கவில்லை. இவரே பத்து கிலோமீட்டர் பயணித்துத்தான் பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தார். ஐந்தாவது வகுப்புப் படிக்கும்போது பள்ளிக்குப் போகாமலிருக்கும் சிறுவர்களுக்கு மாலைவேளைகளில் படிப்பு சொல்லித் தர ஆரம்பித்தார். தான் பள்ளியில் கற்பதை இந்தச் சிறுவர்களுக்கும் சொல்லித் தரலானார். 9 வயதில் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்த இவரே உலகின் மிக இளைய தலைமையாசிரியர் ஆக இருந்திருப்பார்.

 

சிறிய வயதிலேயே இந்தக் குழந்தைகளின் படிப்பின் மீது இவர் காண்பித்த அக்கறை இவரது வாழ்க்கையையும், இவரிடம் படிக்க வந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையையும் மாற்றியது. எட்டு மாணவர்களுடன் ஆரம்பித்த இந்தப் பள்ளிக்கூடம் இப்போது 300 மாணவர்களையும், ஆறு ஆசிரியர்களையும், பத்து தன்னார்வலர்களையும்  கொண்டுள்ளது. இவரது வீட்டின் பின்புறம் இருந்த கொய்யா மரத்தடியில் தான் இவரது தாற்காலிகப் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியில் கிடைக்கும் உடைந்த சாக்பீகஸ்ளை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் இருக்கும் சுட்டமண் பலகைகளால் கரும்பலகை செய்து பயன்படுத்துவார். இப்போது அவருக்கு 21 வயது. ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற இவர், இப்போது முதுகலை பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருக்கிறார். இவரது இந்தச் சேவையைக் கண்ட ராமகிருஷ்ணா மிஷன், மாணவர்களின் அடிப்படைத் தேவையான புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுகிறது.

 

இரண்டாவது காரணம்:

மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது.

‘கல்வியை எல்லோருக்கும் கொண்டு செல்வது தான் என் குறிக்கோள்’. இப்படிச் சொல்பவர் ‘சைக்கிள் குருஜி’ என்று மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் திரு ஆதித்ய குமார். தினமும் 60, 65 கிமீ சைக்கிளில் சென்று லக்னோ நகரில் இருக்கும் குடிசை வாழ் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறார். 1995 ஆம் ஆண்டிலிருந்து இதைச் செய்து வரும் இவர் சொல்லுகிறார்: ‘கல்விக்கூடத்திற்கு உங்களால் வரமுடியவில்லையா, அந்தக் கல்வியை நான் உங்களிடம் அழைத்து வருகிறேன்’ என்று. சைக்கிளின் பின் கரும்பலகையைக் தூக்கிச் செல்லும் இவர், குடிசைகளின் அருகில் இருக்கும் நடைபாதை, பூங்காக்கள் என்று எங்கு மாணவர்கள் இருந்தாலும் அங்கு தன் பள்ளியை நடத்துகிறார். ‘நான் அவர்களில் ஒருவன். ஏழையாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருப்பதின் வலியை நான் புரிந்து கொள்ளுகிறேன்’ என்கிறார் இவர்.

 

மூன்றாவது காரணம்:

கல்வித் தரத்தை உயர்த்தி, கற்கும் வழிகளை அதிக சுவாரஸ்யம் ஆக்குவது.

இந்தியா முழுவதும் நிறையப் பள்ளிகள் இயங்குகின்றன என்றாலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடுவது போன்ற குறைகள் இன்னும் களையப்படவில்லை. கல்வியின் தரத்தை உயர்த்தி, கற்கும் வழிகளையும் சுவாரஸ்யம் ஆக்குவது ஒன்றே இந்தக் குறைகளை களைய வழி. அரசு எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும் கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தி  வகுப்பறையில் மாணவர்களை உட்கார வைப்பது ஆசிரியர் தான். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுடையது.

இதற்காக ரோஷ்ணி முகர்ஜி என்னும் ஆசிரியை இணையத்தை பயன்படுத்தி  மாணவர்களுக்கு கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இவர் ExamFear.com என்கிற  இணையதளத்தை அமைத்து மாணவர்களுக்கு காணொளி மூலம் பாடங்களைக் கற்பிக்கிறார். இந்தக் காணொளிகளை யூடியூப்பில் ஏற்றுகிறார். இணையத் தொழில் நுட்பம் எல்லாவிடங்களிலும் இருக்கும் மாணவர்களை ஒன்று சேர்க்கிறது.

 

ஆதாரம், நன்றி : https://www.thebetterindia.com/33200/inspiring-teachers-in-india/

 

Leave a comment