டிஎன்ஏ சாட்சியங்கள்

வலம் மாத ஜூலை இதழில் பிரசுரமான கட்டுரை.

 

‘நான் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெண்’ என்று சொல்லிக்கொண்டு சில பெண்கள் வழக்காடு மன்றம் வரை போய் வந்த செய்தி பரபரப்பாக செய்தித்தாள்களில் வெளியாகி மக்களால் பேசப்பட்டது. கடைசியாக பெங்களூரிலிருந்து இப்படிச் சொல்லிக் கொண்டு வந்த அம்ருதா என்ற பெண் ஒருபடி மேலே போய் ‘ஜெயலலிதாவின் டிஎன்ஏ வுடன் என் டிஎன்ஏவையும் வைத்துப் பரிசோதனை செய்யுங்கள். நான் அவரது பெண்தான் என்பது தெரிய வரும்’ என்று ஒரு சவால் விட்டார். நீதிமன்றமும்  டிஎன்ஏ சோதனை செய்யலாம் என்று ஒரு யோசனையைக் கூறியிருக்கிறது. ஒரு செய்தித்தாள் அம்ருதாவின் குண்டுக் கன்னங்கள், தடித்த உதடு  ஆகியவை ஜெயலலிதாவை நினைவு படுத்துகின்றன என்று வேறு எழுதியது!

 

பிரபலமானவர்களின் மறைவிற்குப் பிறகு இது போல நிகழ்வது புதியது அல்ல. சமீபத்தில் நான் எழுதி முடித்த ‘ஜோன் ஆப் ஆர்க்’ புத்தகத்திலும் இதுபோல ஒரு நிகழ்ச்சி வருகிறது. ஜோனின் மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் கறுத்த கூந்தலை உடைய பெண் ஒருத்தி பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு எல்லைக்கு வெளியே தொம்ரேமியிலிருந்து 50 மைல் தொலைவிலிருந்த மெட்ஸ் (Metz) நகரில் தோன்றினாள். அவள் ஜோன் போலவே இருந்தாள். அல்லது ஜோன் தன்னைச் சுற்றி மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து எப்படியே தப்பித்துவிட்டாள் என்று நம்ப ஆசைப்பட்ட மக்களுக்கு இவள் ஜோன் போலவே காட்சி அளித்தாள் என்றும் சொல்லலாம். ஜோனின் இரண்டு சகோதரர்கள் உட்பட பலரும் அவளை அடையாளம்  தெரிந்து கொண்டதாகக் கூறினர். அவள் ஜோன் போலவே ஆண்களின் உடையை அணிந்திருந்தாள். மிக லாவகமாக, திறம்படக் குதிரை சவாரி செய்தாள். அவள் பிரபலமான அந்தக் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு மெட்ஸ் நகரின் சிறந்த வீரரான ராபர்ட் (Robert des Armoises) கணவராகக் கிடைத்தார். அவர் அந்த ஊரின் மிகப் பெரிய செல்வந்தரும் கூட. இந்த ஜோனின் நகல் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயும் ஆனாள். 1439 ஆம் வருடம் அவள் ஆர்லியன் நகரின் மேற்குப் பகுதிக்குச் சென்ற போது, அவள் அந்த நகருக்குச் செய்த நன்மைக்காக அவளுக்கு தங்க பணப்பைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் 1440 ஆம் வருடம் திரும்பவும் அவள் பாரிஸ் நகருக்கு வந்தபோது, அவள் ஜோன் இல்லை, ஏமாற்றுக்காரி என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாள். இந்த மோசடியால் எந்தவிதப் பயனும் இல்லை என்று அறிந்து அந்தப் பெண் மெல்ல மறைந்து போனாள்.

 

நிற்க. சிலநாட்களுக்கு முன் டிஎன்ஏ குற்றவிசாரணையில் பயன்படுத்தப்படும் விதம் குறித்து நான் படித்த கட்டுரையிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

 

டிஎன்ஏ என்பது ஒரு குறியீடு. பிற்காலத்தில் நாம் எந்த மாதிரி உருவாகுவோம், வளர்வோம் செயல்படுவோம் என்பதை சொல்லும் குறியீடு. மனிதர்களின் டிஎன்ஏ க்கள் 99.9% ஒரே மாதிரி இருக்கும். மீதி இருக்கும் 0.1% டிஎன்ஏக்கள் தான் நம்மை பிறரிடமிருந்து ‘வேறுபட்டவன்’ என்று தனித்தனி மனிதர்களாகக் காட்டுகின்றன. சிம்பன்சி குரங்குகளிலிருந்து நாம் ஒரே ஒரு சதவிகிதம் டிஎன்ஏவால் வேறுபடுகிறோம் என்பது மிக முக்கியமான விஷயம். ஒரு சின்னஞ்சிறு வித்தியாசம் கூட எத்தனை மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது இதிலிருந்து புரிகிறது, இல்லையா? பொதுவாக நெருங்கிய உறவுகளின் நடுவே டிஎன்ஏ-க்கள் ஒன்றே போல இருக்கும்.

 

நமக்கென்று தனித்துவமாக இருக்கும் டிஎன்ஏ-வின் சிறிய பகுதியைக் கொண்டு நம்முடைய டிஎன்ஏவின் சுயவிவரத்தை (DNA Profile) உருவாக்க முடியும். பொதுவாக இந்த சுயவிவரம் ஒரு வரைபடமாகக் (graph) காட்டப்படும். இதில் பல்வேறு உச்சங்களைக் (peak) காணலாம். நமது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நமது டிஎன்ஏ தனித்துவமாக செயல்படும் விதங்களை இந்த உச்சங்கள் காட்டுகிறன.

டிஎன்ஏ சாட்சியங்கள் தற்காலத்தில் குற்ற விசாரணையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குற்ற விசாரணையில் இந்த டிஎன்ஏ சாட்சிகள் வழக்கையே மாற்றும் தன்மை படைத்தவை. ஆனால் இவை பெரிய புதிரின் ஒரே ஒரு பகுதி தான். இதை வைத்துக் கொண்டு ‘இவன் தான் செய்தான்’ என்று தெளிவாகச் சொல்வது அரிது. ஒரு குற்றத்தைப் பற்றி டிஎன்ஏ சொல்லும் தகவல்கள் ஒரு எல்லைக்குள் தான் இருக்கும் என்று கைரேகை நிபுணர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் சொல்லுகிறது. கூடவே நீதிமன்றத்தில் இந்த சாட்சி எதை நிரூபிக்கும், எதை நிரூபிக்காது என்பதும் அதனுடைய நம்பகத்தன்மையும் இன்னும் தெளிவுபடுத்தப் படவேண்டிய நிலையில் உள்ளன.

லிநெட் வொயிட் 1988 இல் கொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளி என்று சிறையிலடைக்கப்பட்ட மூவரும் தவறாக தண்டனைக்கு ஆளானவர்கள் என்று தெரிய வந்தது. உண்மைக் குற்றவாளி யார்? அவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரிகள் 2002 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய உத்தியின்படி பரிசோதிக்கப்பட்டன. கொலை செய்திருக்கக் கூடிய வயது அல்லாத ஓர் இளைஞனின் டிஎன்ஏ வுடன் அந்த மாதிரிகள்  ஒத்துப்போயின. அதனால் அவனது குடும்ப நபர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அந்த இளைஞனின் மாமா அந்தக் கொலையை தான் செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு 2003 இல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

 

இந்த டிஎன்ஏ சுயவிவரம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை அடைய உதவியிருக்கிறது. ‘க்ரீன் ரிவர் கில்லர்’ என்ற ஒரு குற்றவாளியை இதன் மூலம் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தக் கொலையாளி சுமார் ஐம்பது  பெண்களை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வாஷிங்டன் ஸ்டேட்டில் இருக்கும் க்ரீன் நதியின் பல்வேறு இடங்களில் இந்த உடல்களைப் புதைத்து வைத்திருந்தான். இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தக் கொலைக் குற்றவாளியை டிஎன்ஏ மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.

 

இருப்பினும் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு தனிப்பட்ட மனிதனை இவனே குற்றவாளி என்று முடிவாகச் சந்தேகமில்லாமல் சொல்லுவதில்லை. வேறு வேறு விதமான 16 உடலியல் கூறுகள் அல்லது பண்புகள் இருந்தால் ஒரு டிஎன்ஏ மாதிரியிலிருந்து ஒரு தனி நபரின் கைரேகைகளை வரைய முடியும். ஆனால் இவை சில காரணங்களால் அதாவது ஈரம், கடுமையான உஷ்ணம் போன்றவற்றால் பழுதுபட்டிருந்தால் சில பண்புகள் மட்டுமே கிடைக்கும். அப்போது முழுமையான சுயவிவரம் (full profile) தயாரிக்க முடியாது. ஒரு பகுதிச் சுயவிவரம் (partial Profile) அல்லது முழுமை அடையாத சுயவிவரத்தை தடயவியலாளர்கள் உருவாக்குவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு டிஎன்ஏ சுயவிவரம் முழுமையானதாக இருந்தால் ஒரு மனிதனின் முழு உருவத்தையும் விவரிக்கும் என்று வைத்துக் கொண்டால் இந்த முழுமை அடையாத சுயவிவரம் அந்த மனிதனின் ஒரே ஒரு விவரத்தை மட்டுமே உதாரணமாக அவரது கூந்தலின் வண்ணத்தை மட்டுமே காட்டக்கூடும்.

 

டிஎன்ஏ வின் முழுமையான சுயவிவரம் குற்றவாளியைத் தவிர இன்னொரு மனிதனின் டிஎன்ஏ – வுடன் ஒத்துப் போகக்கூடும். முழுமையடையாத  சுயவிவரம்  இன்னும் அதிகமான மனிதர்களின் டிஎன்ஏ – வுடன் ஒத்துப் போகக்கூடும். பல மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தற்செயலாக இணைக்கப்பட்டு விடும்போது தவறுதலாக ஒரே ஒரு டிஎன்ஏ சுயவிவரம் மட்டுமே உருவாக்கப்பட்டு விஷயம் சிக்கலாகிவிடும் அபாயம் இருக்கிறது.

 

அந்த சமயத்தில் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு குறிப்பிட்ட தனி நபரிடமிருந்து மட்டுமே வந்திருக்கும் என்று அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒப்பீட்டு சாத்தியக்கூறுகள் – அதாவது குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏவையும், அனுமானத்தில் இருக்கும் ஒருவரின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கிடைக்கும் தகவல்கள் – பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடும். இன்னும் கடுமையான அணுகுமுறை என்றால் நேரடியாக இரண்டு டிஎன்ஏக்களை ஒப்பிடுவது தான். அதாவது சந்தேகத்திற்குரிய நபரின் டிஎன்ஏ மற்றும் இன்னொருவருடைய டிஎன்ஏ இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து விகிதாசாரத்தைக் கணக்கிடுவது. இந்த விகிதாசாரம் கூட டிஎன்ஏ ஆராய்ச்சிக்கு விஞ்ஞான ரீதியான ஆதரவைக் கொடுக்குமே ஒழிய  தவிர ஆம் இல்லை என்ற பதிலைக் கொடுக்காது.

 

அமெரிக்கன் பார் அசோசியேஷன் (American Bar Association) டிஎன்ஏ தொழில்நுட்பத்தை ஆதரித்த போதிலும் புள்ளிவிவரங்களை ஆராயும்போது போதுமான எச்சரிக்கை தேவை என்ற கருத்தை முன்வைக்கிறது. மேலும் வழக்கறிஞர்களும் டிஎன்ஏ சாட்சியங்களை அதிக அளவில் நம்பவேண்டாம் என்றும் நீதிமன்றங்கள் டிஎன்ஏ வை ஆராயும் பரிசோதனைக் கூடங்களின் தரங்களையும் (Quality) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகிறது. ‘சந்தேகத்திற்குரிய நபரைத் தவிர இன்னொருவருக்கும் ஒரே மாதிரியான டிஎன்ஏ முடிவுகள் இருக்கக்கூடும் என்று தீர்ப்புக் குழுவினருக்குச் சொல்வது ஏற்புடையது அல்ல’ என்று இந்த அறிக்கை கூறுகிறது.

 

ஒரு குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றிய விவரங்கள், நீதிமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். எது கதை எது நிஜம் என்பது நமக்குப் புரியும். அந்த வித்தியாசம் பத்திரிகைகளில் வரும் பரபரப்பு செய்தியினால் மங்கிப் போகக்கூடும். இதன் காரணமாக பெரும்பான்மை மக்களுக்கு விஞ்ஞான சாட்சியங்கள் என்பது பற்றிய உண்மையல்லாத சில புரிதல் இருக்கின்றன. அதுவும் டிஎன்ஏ பற்றிய தவறான புரிதல்கள் நீதியை தவறான திசைக்குத் திருப்பக்கூடும்.

 

சில சமயங்களில் டிஎன்ஏ சாட்சியம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்: ஒரு கொள்ளைக் குற்றம் சம்மந்தமாக எடுக்கப்பட்ட டிஎன்ஏவின் பகுதி சுயவிவரம் ஒரு பார்கின்சன் நோயாளியின் டிஎன்ஏ வுடன் ஒத்துப் போனது. பாவம் அந்த நோயாளியால் நான்கு அடி கூட பிறர் உதவியின்றி நடக்க முடியாத நிலை! பார்கின்சன் நோயாளியின் வழக்கறிஞர் மேலும் பல பரிசோதனைகளைச் செய்யச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். அவற்றின் அடிப்படையில் பார்கின்சன் நோயாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

 

இது மட்டுமல்ல; இன்னொரு சங்கடமான உண்மையும் இருக்கிறது இதில். ஒரு குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்படும் டிஎன்ஏ மாதிரி நம்முடைய டிஎன்ஏ மாதிரியுடன் – நாம் அங்கு இருந்திருக்கவே முடியாது என்றாலும் – ஒத்துப் போகலாம். குற்றம் நடப்பதற்கு முன்பாகவே யாராவது ஒருவர் அங்கு வந்திருக்கக் கூடும். பிறகு குற்றம் நடந்திருந்தால், அவரது டிஎன்ஏ வும் அங்கிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

இந்த டிஎன்ஏ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. ஒருபக்கம் முன் எப்போதையும் விட இப்போது டிஎன்ஏ சாட்சியங்களை வைத்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகமாகிக் கொண்டே போகிறது. இன்னொரு பக்கம் குற்றம் நடந்த இடத்தில் கலப்படம் ஆன டிஎன்ஏ கிடைப்பது. இரண்டு நபர்கள் கை குலுக்கும் போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறும் டிஎன்ஏக்கள் (Touch DNA) விசாரணையில் குழப்பங்களை வரவழைக்கின்றன. டிஎன்ஏ சாட்சியங்களை எப்படி ஆராய்வது என்று சட்டம் மற்றும் நீதித்துறை நிபுணர்கள் பயிற்சி பெற்றாலொழிய தவறான முடிவுகளும், தவறான நீதிகளும் வருவதைத் தடுக்க முடியாது.

 

இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். மனிதர்கள் தங்கள் டிஎன்ஏ க்களை வேறு வேறு விகிதங்களில் இழக்கிறார்கள். பொதுவாக டிஎன்ஏ க்கள் நமது உடலில் உள்ள திரவங்களில் அதாவது இரத்தம், விந்து மற்றும் எச்சில் இவற்றில் இருக்கும். இவை தவிர நாம் மிக நுண்ணிய அளவில் நமது கூந்தல், தோல் ஆகியவற்றையும் இழக்கிறோம். சிலர்  தோல் வியாதி காரணமாக அதிக அளவில் டிஎன்ஏ க்களை இழப்பார்கள். ஒரு திருடன் ஒளிவதற்கு என்று வழக்கமான ஓரிடத்தை தேர்ந்தெடுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு ஒருவர் அடிக்கடி செல்கிறார். அவருக்கு தோல் வியாதி இருக்கிறது. திருடனைப் பற்றிய புகாரை காவல்துறைக்கு அவர் சொல்லுகிறார் என்றால் தடயவியல் முதலில் இவரைத் தான் அடையாளம் காட்டும். அந்த இடத்தில் இருக்கும் அவரது டிஎன்ஏ-வின் அளவு அவர் அந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார் என்பதைக் காட்டும். தோல்வியாதி காரணமாக அவரது டிஎன்ஏ க்கள் அங்கு அதிக அளவில் கிடைக்கும்.

 

இந்த மாதிரி ஆராய்ச்சியினால் தெரிய வருவது இதுதான்: குற்றப் புலன் விசாரணையில் டிஎன்ஏ சாட்சியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவி. ஆனால் அதை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அதை மட்டுமே அதிகமாக நீதி மன்றங்களில் பயன்படுத்தாமல், மற்ற சாட்சியங்களுடன் கூட பயன்படுத்த வேண்டும். உதாரணமாக உடைத்துத் திறக்கப்பட்ட ஒரு வீட்டில் சமையல் அறையில் கிடைக்கும் டிஎன்ஏ க்கள் அந்த வீட்டின் சொந்தக்காரார், வந்திருந்த விருந்தாளிகள் இவர்களுடையதாக இருக்கலாம். அல்லது குற்றம் நடந்த இடத்தை ஆராய வந்த குழுவினரில் ஒருவரின் டிஎன்ஏ வாகவும் இருக்கக்கூடும். கலப்படம் இல்லாமல் டிஎன்ஏக்களை சேகரிக்கவில்லை யென்றால் இதுவும் சாத்தியம்.

 

 

நன்றி:  கட்டுரை https://daily.jstor.org/forensic-dna-evidence-can-lead-wrongful-convictions/

 

9 thoughts on “டிஎன்ஏ சாட்சியங்கள்

    1. நன்றி ஸ்ரீராம்!
      எழுதி முடித்தாகிவிட்டது. வரும் ஆண்டில் புத்தகக் கண்காட்சியில் வெளிவரும் என்று நினைக்கிறேன்.

  1. தகவல்களைத் திரட்டி, உரிய மொழிபெயர்ப்புகளைச் சேர்த்துத் தந்துள்ள விதம் அருமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s