முதல் பகுதி – அறிமுகம்
எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது என்றால் மிகையாகாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறோம்.
ஒரு சமுதாயம் என்பது பலவிதப்பட்ட தனி மனிதர்களால் ஆனது. பலவிதப்பட்ட மனிதர்கள் என்று சொல்லும்போதே ஏற்றத்தாழ்வுகளும் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கம், இல்லையா? இந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வது கல்வி என்று நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். நம் குழந்தைகளின் கல்விக்கு பெற்றோர் ஆகிய நாமும் பொறுப்பு என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஒரு குழந்தை தனது கற்கும் அனுபவத்தை ஆரம்பிப்பதே வீட்டிலிருந்துதான். அதுவும் தனது பெற்றோரிடமிருந்து தான் தனது முதல் பாடத்தைக் கற்றுக் கொள்ளுகிறது. வீட்டில் கற்பதை வைத்துக் கொண்டே வெளியுலகத்தைப் பார்க்கிறது.
ஒருகாலத்தில் குருகுலம் என்ற அமைப்பு கல்வியை போதிக்கும் இடமாக இருந்து வந்தது. காலம் மாற மாற இந்த அமைப்பும் மாறி தற்போது குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட கல்விச்சாலைகளாக உருமாறியிருகின்றது. கல்விச்சாலைகள் மாறிவிட்டன. ஆனால் அங்கு கற்பிக்கப்படும் பாடங்கள் மாறினவா? குரு என்று அழைக்கப்பட்டவர்கள் இப்போது ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்தக் கால குருவிற்கும் இந்தக் கால ஆசிரியர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் மேம்பட்டவர்களா? இவர்கள் மேம்பட்டவர்களா?
அந்தக் காலப் பெற்றோர்களுக்கும், இந்தக் கால பெற்றோர்களுக்கும் என்ன வித்தியாசம்? அந்தக் கால மாணவர்களுக்கும், இந்தக் கால மாணவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லா அமைப்புகளும் மாறியிருப்பது போலவே இவர்களும் மாறித்தான் இருக்கிறார்கள். இந்த மாற்றம் சரியானபடி நடந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கு விடை அளிப்பது சற்று கடினம் தான்.
பெற்றோர், ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு மாணவனை உருவாக்குகிறார்கள். வீட்டில் குழந்தையாக இருப்பவர்கள் வெளியில் கல்விச்சாலைக்குச் சென்று வெளி உலகத்தைக் காண்கிறார்கள். முதலில் பெற்றோர்களின் கண்களின் வழியே உலகத்தைப் பார்ப்பவர்கள் பிறகு ஆசிரியர் என்னுமொரு வழிகாட்டியுடன் வாழ்வியலைத் தொடங்குகிறார்கள்.
பெற்றோர், ஆசிரியர் இருவரின் மேற்பார்வையில் வளரும் குழந்தையின் கடமை என்ன? எத்தனை காலம் பெற்றோர், மற்றும் ஆசிரியரைச் சார்ந்திருக்க முடியும்? தான் கற்கும் கல்வியிலிருந்து நல்லவை கெட்டவை பிரித்து அறிந்து தனது வாழ்க்கையின் பாதையை தீர்மானிப்பது தான் ஒரு மாணவனின் கடமை.
ஒரு குழந்தை மாணவனாகி, வாழ்வியலைக் கற்கத் தொடங்கும் இடமே கல்விச்சாலை. இங்கும் ஒரு கேள்வி கேட்கலாம். கல்விச்சாலைகள் தேவையா? கல்வி மற்றும் கல்வி கற்பித்தல் இவற்றின் பயன் என்ன? இந்த இரண்டிற்கும் யார் பொறுப்பேற்க வேண்டும்? இந்த விஷயங்களை பொதுவில் அவ்வளவாக யாரும் விவாதிப்பதில்லை. இவை பற்றி அறியாமல் நாமும் நம் குழந்தைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்; அவர்களும் கற்று வருகிறார்கள். அங்கு என்ன கற்கிறார்கள் என்பதும் கேள்விக்குறி தான்.
குழந்தைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்புவதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறதா? பெற்றோர்களுக்கும், கல்விச்சாலைகளுக்கும் வேறு எந்தவிதமான சம்மந்தமும் இல்லையா? வருடாவருடம் பணம் கட்டுவதுடன் அவர்களது கடமை முடிந்துவிடுகிறதா? கல்விச்சாலைகளின் வாசலில் குழந்தைகளை விட்டுவிட்டு வருவது மட்டுமே அவர்களின் தினசரி கடமையா? கல்விச்சாலைகளில் நடக்கும் எந்த விஷயத்திலும் அவர்கள் பங்கு பெற முடியாதா? குழந்தைகளிடம் ‘நன்றாகப்படி, நல்லவேலை கிடைக்கும்’ அல்லது ‘நன்றாகப்படித்து அமெரிக்கா போய் நிறைய சம்பாதி’ போன்ற அறிவுரைகளை கொடுப்பது மட்டுமே அவர்களது கடமையா?
குழந்தைகளின் கடமை என்ன? தினமும் சீருடை அணிந்துகொண்டு கல்விச்சாலைக்குப் போய், அவர்கள் கொடுக்கும் புத்தகங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி, தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வருவதா? நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவன் புத்திசாலி. ஒரு மாணவனின் புத்திசாலித்தனம் அவனது மதிப்பெண்ணை வைத்து தீர்மானிக்கப்படுவதா? ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட ஏதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல அழும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்வது? தேர்வில் தோல்வி என்றவுடன் வாழ்வை முடித்துக் கொள்ளும் மாணவர்கள்!
தற்சமயம் கல்விச்சாலைகளில் நடப்பதாக நாம் கேள்விப்படும் சம்பவங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. ஆசிரியரை மாணவன் கொலை செய்கிறான். பேராசிரியை ஒருவர் மாணவிகளை மதிப்பெண்களுக்காக உயர் அதிகாரிகளுடன் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளச் சொல்லுகிறார். அதுவும் வெளிப்படையாக. என்ன நடக்கிறது இங்கு? கல்வி கற்பிக்கும் இடம் இதுபோன்ற அழிக்கமுடியாத களங்கத்தை அடையக் காரணம் என்ன? எங்கு தவறு நேருகிறது? யார் செய்யும் தவறு இது? இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? பெற்றோரா? ஆசிரியரா? அல்லது மாணவர்களா? அல்லது கல்விச்சாலைகள் கொடுக்கும் கல்வியா?
கேள்விகள், கேள்விகள். நமது கல்விமுறை, கல்விச்சாலைகள் பற்றி இதுபோல நிறைய கேள்விகள். தொடர்ந்து பேசலாம்.
Super start, Ranjani. Congratulations and all the best.
தேங்க்யூ ஜெயந்தி.
அழகாக எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.அன்புடன்
நன்றி காமாக்ஷிமா.
சிந்திக்க வேண்டிய கேள்விகளுடன் அருமையாக தொடங்கி உள்ளீர்கள் அம்மா…
முயற்சி + பயிற்சி = வெற்றி போல தலைப்பும் அருமை…
நன்றி தனபாலன்
சிந்திக்க வைக்கும் கட்டுரைத் தொடர்.. நிறைய எதிர்பார்கிறோம்…
நன்றி, திரு முத்துசாமி.
கல்வி கற்றல் மதிப்பீடு பட்ரிய பெற்றோர் மாணவர் ஆசிரியர் மன்ப்பான்மையில் ஏராளமான மாற்தல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கள் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்னோக்குகிறேன். நல்ல தொடக்கம்.
கல்வி கற்றல் மதிப்பீடு பற்றிய பெற்றோர் மாணவர் ஆசிரியர் மனப்பான்மையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கள் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நல்ல தொடக்கம்.
ஆமாம் முரளிதரன். அடுத்த பகுதியையும் போட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி கட்டுரைகளை எழுத வேண்டுமே என்று ஒரு சிறிய பயம் மனதிற்குள் எட்டிப் பார்க்கிறது. நன்றி