பணி ஓய்வு பெறப் போகிறீர்களா?

பணி ஓய்வு

நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வருடங்களாக ஒருநாளைப் போல காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பதும் இயந்திரம் போல சமையல் செய்து முடித்து அலுவலகம் வருவதும், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது அடுத்த நாளைக்கு தேவையான கறிகாய்கள், பழம், சில சமயங்களில் மளிகை சாமான்கள் வாங்கிப்போவதும்…. மூச்சுவிடாமல் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இது மனதிற்கு மிகப் பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், அலுவலகத்தில் இத்தனை நாட்கள் செலவழித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் இனி என்ன செய்வது? சோம்பேறியாகி விடுவோமோ? மதிய நேரத்தில் தூங்கித் தூங்கி காலத்தைக் செலவிட வேண்டியிருக்குமோ? இத்தனை நாட்கள் தூங்குவதற்கு நேரமே கிடைக்காமல் தவித்தோம்; இனி தூக்கமே வாழ்க்கை என்று ஆகிவிடுமோ? பணியிலிருந்து ஓய்வு என்பது சிறிது நாட்களுக்கு நன்றாக இருக்கும். பிறகு என்ன செய்வது? இந்தக் கவலையும் கூடவே எழுந்தது விசாலத்திற்கு.

 

பணி ஓய்வுப் பெறப்போகிறோம் என்ற உணர்வே ஐந்தில் நான்கு மூத்த குடிமக்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுக்கிறது. இனி என்ன செய்வது என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். நாமெல்லோருமே சிறிய வயதில் நம் சொந்த ஊரில் – முக்கால்வாசி அது ஒரு கிராமமாக இருக்கும் – காவிரிக் கரையிலோ, தஞ்சாவூர் பக்கமோ வயல்வெளியைப் பார்த்திருப்போம். பணிஓய்வு பெற்றுவிட்டோம் என்று இப்போது வயலில் இறங்கி வேலை செய்வது இயலாத ஒன்று. இத்தனை நாள் இல்லாத வழக்கமாக திடீரென  புத்தகம் படிப்பதும் முடியும் காரியமில்லை. பணிஓய்வு பெற்றவர்களில் 62.3% பேர்கள் உண்மையில் சலிப்பு அடைகிறார்கள். இந்த சலிப்பு அவர்களுக்கு தாங்கள் எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்வைக் கொடுக்கிறது. ஒரு சிலர் பழையபடி 9-5 நேரப்படியே வேலை வேண்டும் என்று வேலை தேடத் தொடங்குகிறார்கள். பலர் என்ன வேலையானாலும் பரவாயில்லை; ஒருநாளைக்கு மூன்று நான்கு மணிநேரம் வேலை என்றிருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

 

பெண்களைவிட தங்கள் பணி ஓய்வு பற்றி ஆண்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதல் காரணம் இதுவரை புருஷ லட்சணமாக இருந்த உத்தியோகம் இனி இல்லை என்ற நிலைதான். என்னதான் இப்போதெல்லாம் பணி ஓய்வு ஊதியம் என்பது தாராளமாக வந்தாலும், மாதாமாதம் வருவது போல ஆகுமா? கையில் காசு அவ்வளவாக இருக்காது. பணப் புழக்கம் குறைவதால், முன் போல நண்பர்களுடன் வெளியில் போவது, வெளியில் சாப்பிடுவது எல்லாமே குறையும். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் பொழுதை எப்படிப் போக்குவது என்பதுதான். சிறிய வயதிலிருந்தே ஏதாவது விளையாட்டோ, அல்லது படிப்பது, எழுதுவது என்று பழகியிருந்தால் அவற்றை வளர்த்துக் கொள்ளலாம். திடீரென்று இப்போது ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? செய்தித்தாள் தவிர வேறு புத்தகங்கள் எதுவும் படித்துப் பழகாதவர்களுக்கு புதிதாகப் புத்தகம் படிக்க ஆரம்பிப்பது சற்று கடினம் தான்.

 

புதிதாக பணி ஓய்வு பெற்ற ஆண்கள் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. முதலாவது புதிய வாழ்க்கை – அலுவலகம் செல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும். அலுவலகம் செல்லும் இத்தனை வருடங்களில் ஒரு ஒழுங்குமுறை வந்திருக்கும். நேரத்திற்கு எழுந்து, நேரத்திற்குக் குளித்து, நேரத்திற்கு சாப்பிட்டு என்று நேரம் தப்பாது நடந்து வந்தது. முதலில் செய்தித்தாள் படிப்பது, முதலில் டிபன் சாப்பிடுவது, முதலில் குளிப்பது என்று எல்லாவற்றிலும் முதல்வராக இருந்திருப்பார் இத்தனை நாட்கள்.

 

இப்போது வேறு ஒருவிதமான வாழ்க்கை. விருப்பப்பட்ட நேரத்தில் எழுந்திருப்பது;  நீண்ட நேரம் தொலைக்காட்சி முன் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு செய்திச் சானலாக மாற்றிக் கொண்டே இருப்பது. இதுவரை நேரப்படி நடந்து வந்த விஷயங்கள் நேரக் குளறுபடியுடன் நடக்க ஆரம்பிக்கும். எழுந்திருப்பது தாமதம் என்றால் மற்ற வேலைகளும் தாமதம் ஆகும். குளிப்பது, சாப்பிடுவது எல்லாமே நேரம் தவறி நடந்து வீட்டிலுள்ளவர்களின் கோபத்திற்கு இலக்காவார்கள். இவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லையென்றாலும், வீட்டில் இருப்பவர்களுக்கு – குறிப்பாக மனைவிக்கு நாள் முழுவதும் வேலை செய்யும்படி ஆகிவிடும். இப்படி நேரம் தவறிச் செய்வதும் கூட சில நாட்களில் அலுத்து விடும். அடுத்து என்ன?

 

இத்தனை நாட்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தவரின் பார்வை வீட்டிலுள்ளவர் மேல் விழுகிறது. முதலில் இவர் கண்களில் விழுவது மனைவி தான். அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் கவனிக்க ஆரம்பிக்கிறார். சில கணவன்மார்கள் ‘பாவம் எத்தனை வேலை இவளுக்கு. நாம் கொஞ்சம் உதவலாம்’ என்று மனைவி மேல் கரிசனம் காட்டுவார்கள். சிலர் ‘எதற்கு இவள் இத்தனை நேரம் கழித்து சாப்பிடுகிறாள்? கிடுகிடுவென வேலையை முடிக்கத் தெரியவில்லை இவளுக்கு. நானாக இருந்தால் சீக்கிரம் முடித்து விடுவேன். சமர்த்து போதவில்லை!’ என்று நினைத்துக் கொண்டு அதை நிரூப்பிக்கவும் முயலுவார்கள். இரண்டுமே மனைவியை பாதிக்கும் என்பதை பல ஆண்கள் உணருவதில்லை. இவ்வளவு நாட்களாக இல்லத்தில் தனியரசு செலுத்திக் கொண்டிருந்த மனைவிக்கு இவரது தலையீடு நிச்சயம் ரசிக்காது.

 

என் தோழி ஒருவரின் கணவர் ஓய்வு பெற்ற புதிதில் அடிக்கடி இப்படிச் சொல்வாராம்: ‘இத்தனை நாள் ஓடி ஓடி உழைத்துவிட்டேன். இனிமேல் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி. வாழ்க்கையை ரசிக்கப்போகிறேன். வேளாவேளைக்கு சாப்பிட்டுவிட்டு டீவி பார்ப்பது, தூங்குவது தான் இனி என் வேலை’ என்று. நாள் முழுவதும் இவரை வீட்டில் எப்படி சமாளிப்பது என்று ஒருவித பயம் வந்துவிட்டது என் தோழிக்கு. நல்லகாலம் சீக்கிரமே தோழியின் கணவருக்கு ஒரு பகுதி நேர வேலை கிடைத்து அவர் மறுபடியும் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்துவிட்டார்.

 

பணி ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைக்கும், என்ன செய்யலாம்? ஒன்றுமே செய்யாமல் இருப்பதோ, அல்லது அதிகமாகச் செய்வதோ மறுபடியும் உங்களுக்கு மனஅழுத்தம், அமைதியின்மை, ஞாபகமறதி, தூக்கமின்மை, பசியின்மையை ஆகியவற்றை கொண்டு வரும்.

 

இதற்கு ஒரே வழி உங்களை நீங்கள் எப்படி பிசியாக வைத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதுதான்.

 

தற்காலிகமாகச் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

 • வாரத்திற்கு ஒருமுறை .அரசு சாரா அமைப்பு ஏதாவது ஒன்றில் சேர்ந்து தன்னார்வலராக சேவை செய்யலாம்.
 • மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம். உங்களுக்குத் தெரிந்த பாட்டு, நடனம் ஆகியவற்றைச் சொல்லித் தரலாம்.
 • புதிதாக ஒரு பகுதி நேர வேலையில் சேரலாம்.
 • வீட்டில் தோட்டம் போட்டு பராமரிக்கலாம்.
 • விட்டுப்போன படிப்பைத் தொடரலாம்.
 • புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
 • பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிக்கலாம். இத்தனை நாட்கள் வாசகியாக இருந்த நீங்கள் இப்போது எழுத்தாளராக மாறலாம்.
 • வீட்டில் சின்னதாக ஒரு நூலகம் அமைத்துப் பராமரிக்கலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் புத்தகப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
 • வீட்டில் இணைய வசதி இருந்தால், வலைத்தளம் ஆரம்பித்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

 

 

இங்கும் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:

 • எதுவாக இருந்தாலும், அந்த வேலை உங்களுக்குப் பிடித்ததாக, உங்களை மனமுவந்து செய்யத் தூண்டுவதாக இருக்க வேண்டும். சமூகத்திற்காக ஒரு வேலையைச் செய்வது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இத்தனை நாள் இந்த சமூகம் உங்களுக்குச் செய்தவற்றை நீங்கள் சமூகத்திற்குத் திருப்பி செய்வதும் உங்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும்.

 

 • தேர்ந்தெடுக்கும் வேலை மிகவும் சுலபமாகவோ, அல்லது மிகவும் கஷ்டமாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபம் என்றால் சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று தோன்றும். இன்றில்லாவிட்டால் நாளை என்று ஒரு சின்ன அலட்சியம் கூடத் தோன்றக்கூடும். ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும். அதிக சிரமப்பட்டு செய்யவேண்டிய வேலை என்றாலும் மனஅழுத்தம் அதிகமாகி ஆர்வம் குறைந்துவிடும். உங்கள் கவனத்தையும், உங்கள் மனதையும் ஒருசேர கவரும் வண்ணம் ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.

 

பெண்கள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்:

பெண்கள் வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவார்கள் – வேலைக்குப் போனாலும், பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சமையலறை. எத்தனை வயதானாலும் சமையல் செய்வதில் அலுப்பு வராது பெண்களுக்கு. ஆனால் காலம் மாறிவிட்டது. எல்லாத் துறைகளிலும் பெண்களும் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்ற பின்னும் தங்கள் நேரத்தை சமையலறைக்கு வெளியே நல்லவிதமாக செலவழிக்க பெண்கள் விரும்புகிறார்கள். சில பெண்கள் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார்கள். சிலர் ஏற்கனவே கைவந்த தையல் கலை, சங்கீதம் போன்றவற்றை மறுபடி பழகத் தொடங்குவார்கள். எதுவாக இருந்தாலும் உற்சாகத்துடன் செய்யவேண்டும்.

 

வேறு என்ன செய்யலாம்?

 

புதிதாக பணி ஓய்வு பெற்றவர்கள் 9 மணியிலிருந்து 5 மணிவரை என்ற பழக்கத்திலிருந்து வேலையே இல்லை நிலைக்கு வரும்போது மிகவும் திணறி விடுகிறார்கள் என்று ஹார்வர்ட் உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

 

பணி ஓய்வுக்குப் பிறகு புதிய ஒரு போழுதுபோக்கையோ, புதியதாக ஒரு விளையாட்டையோ தேர்ந்தெடுத்து செய்யும் ஆண்கள் பல புதிய சாதனைகளைச் செய்கிறார்கள்; மிகவும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள்; தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளுகிறார்கள். தங்கள் வயது, தங்களைப் போன்ற ஆர்வம் உள்ளவர்களுடன் பழகுகிறார்கள். பயிற்சியாளர்களுடன் அல்லது ஆசிரியர்களுடன் விடாமல் பேசிப் பழகி தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்வதுடன் தீவிரப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

 

ஒரே ஒரு விஷயம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை உங்கள் மனதிற்குப் பிடித்ததாகவும், உங்களிடம் இதுவரை மறைந்திருந்த திறமையை வெளிக் கொண்டு வரும்படியாகவும் இருக்க வேண்டும். நாம் செய்யும் வேலையில் இருக்கும் சவால் நமது மூளையை மிகுந்த சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வயதான பிறகு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது இதில் தான். உடலுக்கு உடற்பயிற்சி போல நமது மூளைக்கும் பயிற்சி அவசியம் தேவை.

 

இப்போது புதிதாக ஒரு வழக்கம் பணி ஓய்வு பெற்றவர்களிடைய மிகவும் பிரபலமாகி வருகிறது. அதுதான் ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ (Senior internship). இதையே ரோல் ரிவர்சல் (Role Reversal) என்றும் சொல்லலாம். அது என்ன என்கிறீர்களா?

 

வாருங்கள் 61 வயதான திரு கிருஷ்ணனைச் சந்திக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர் இவர். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, கான்பரென்ஸ் கால்களுக்குக்காக வெகுநேரம் விழித்திருப்பது போன்ற விஷயங்களிலிருந்து பணிஓய்வு விடுதலை கொடுத்தது இவருக்கு. படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். பணிஓய்விற்குப் பிறகு  விருப்பமான புத்தகங்களைப் படித்துக்கொண்டு, நல்ல சங்கீதத்தை ரசித்துக் கொண்டு, அவ்வப்போது சமையலிலும் தன் கைத்திறமையைக் காண்பித்துக் கொண்டு, தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார். இவை எல்லாமே சில மாதங்களில் அலுத்துவிட்டன.

 

என்ன செய்யலாம் என்று அங்கே இங்கே தேடியபோது தான் அவருக்கு இந்த ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ என்பது பற்றித் தெரிய வந்தது. பலரிடம் விசாரித்து அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது பாஸ் 22 வயது இளைஞர்! தனியாக ஒரு அறை; உதவியாளர் என்று வேலை செய்து பழகியவருக்கு தன்னைச் சுற்றி 20 வயது இளைஞர்கள்; அவர்கள் கேட்கும் உரத்த இசை; கையில் டென்னிஸ் பந்தை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசிக் கொள்வது எல்லாமே முதலில் கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தாலும், வெகு விரைவிலேயே அந்த சூழ்நிலைக்குப் பழகிப் போனார்.

 

‘நான் அவர்களை விட அனுபவத்தில் பெரியவன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு வருபவர்கள். எனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களது ஆர்வமும் ஈடுபாடும் என்னை மிகவும் கவர்கிறது’ என்கிறார் கிருஷ்ணன்.

 

‘இவருக்கு என்ன வயது என்று நான் அவரை நேராகச் சந்திக்கும் வரை எனக்குத் தெரியாது’ என்கிறார் இவரது 22 வயது பாஸ் இளைஞர் திரு பாலாஜி நரசிம்மன். திரு கிருஷ்ணனின் பல வருட அனுபவம் இந்தப் புதிய வேலையிலும் அவருக்குக் கை கொடுத்தது. அவருக்குத் தெரிந்த வியாபார நுணுக்கங்களை இளையவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் அவருக்கு மன நிறைவு ஏற்படுகிறது என்கிறார்.

 

ஆண்கள் மட்டுமல்ல; இதைப்போலப் பெண்களும் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம். திருமதி உன்னிக்கிருஷ்ணன் இதற்கு உதாரணமாக இருக்கிறார். வேலை என்னும் ஓட்டப்பந்தயம் அலுத்து விட்டது அவருக்கு. இரண்டு வருடம் பணியிலிருந்து விலகி இருந்தவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டர் ஆகச் சேர்ந்தார். வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற சலுகை அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. தனது பிள்ளைகள் இருவரையும் தனி ஒருவராக வளர்த்தவர் இவர். டெட் லைன் அழுத்தங்கள், தொலைதூர தொலைபேசி அழைப்புகள், மீட்டிங்குகள் இவை இல்லாமல் நிம்மதியாக வேலை செய்வதாக இவர் சொல்லுகிறார். ‘கணவரைப் பறிகொடுத்தபடியால் நான் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையென்றால் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். இப்போது எனக்குப் பிடித்த வேறு வேலைகளையும் செய்ய எனக்கு நேரம் கிடைக்கிறது. தகவல் தொடர்பு சம்மந்தமாகவே என் வேலை இருந்தபடியால் இந்தப் புது வேலையும் எனக்கு மன நிறைவைக் கொடுக்கிறது’ என்கிறார் இவர்.

 

தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் இவருக்கு. தான் எழுத வேண்டிய விஷயத்திற்காக இணையத்தில் தேடுவதும் இந்த மூன்று மணி நேரத்திற்குள் அமைகிறது. வருமானம்? நிச்சயம் இவர் வாங்கியதை விட பல மடங்கு குறைவுதான். ‘வயதாக ஆக ஓட்டத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்த இன்டர்ன்ஷிப்பில் தினமும் பயணம் செய்ய வேண்டியதில்லை; மன அழுத்தங்கள் இல்லை. கூடவே வருமானமும் வருகிறது. அதனால் எனது பழைய வேலை போய்விட்டதே என்ற வருத்தம் வருவதில்லை’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லுகிறார் கிருஷ்ணன்.

 

இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? ’என்னிடம் இரண்டு மூத்த குடிமகன்கள் ‘இன்டர்ன்’ ஆக இருக்கிறார்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு என்று இவர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டேன். தேவைப்பட்டதால் இந்த கால அளவை நீட்டித்தேன். இவர்களது வேலையைப் பொறுத்து வழக்கமான ஊழியர்களுக்குக் கொடுப்பதை விட 10% – 15% குறைவாகக்கொடுக்கிறேன். எங்களுடையது இப்போது தான் தொடங்கிய ஒரு நிறுவனம். இவர்களது அனுபவம் எங்களுக்கு பலவிதங்களில் உதவுகிறது’ என்கிறார் திரு கிருஷ்ணனின் இளம் பாஸ்.

 

இளம் பாஸ்களின் கீழ் வேலை செய்வது, ‘இன்டர்ன்’ என்று அழைக்கப்படுவது இவையெல்லாம் சில மூத்த குடிமகன்களுக்கு ஆரம்பகாலத்தில் சற்று சங்கடத்தை விளைவிக்கிறது என்ற தனது கருத்தைத் தெரிவிக்கிறார் விசாகா மோகன். ஆனால் வேறு சிலர் தங்களது வயதே தங்களுக்கு மரியாதையை வாங்கிக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்கள். ‘முதலில் கணனியில் வேலை செய்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. சில இளம்வயதுக்காரர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். வயதானவர்கள் வேலை செய்வதற்கும், இந்த இளம் தலைமுறை வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ‘போனால் போகிறது’ என்கிற மனப்பான்மை, எல்லாவற்றையும் ‘லைட்’ ஆக எடுத்துக் கொள்வது, வேலைகளை தள்ளிப் போடுவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்’ என்று சொல்லும் விசாகா தொடர்ந்து கூறுகிறார்.

 

‘பணிஓய்வு பெற்றபின் ரொம்பவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பயனற்றவள் ஆகிவிட்டேனோ என்கிற பதைபதைப்பு. அதனாலேயே நான் முன்பு வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் இப்போது பாதி தான் கிடைக்கிறது என்ற போதிலும் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். நாள் முழுவதும் பிஸியாக இருக்கிறேன். வெளியே போகிறேன்; என்னுடைய பங்கு பாராட்டப்படுகிறது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது’ என்கிறார் விசாகா.

 

மொத்தத்தில் பணிஓய்வு என்பது இத்தனை வருட உழைப்பிற்குப் பின் கிடைத்த அமைதியான வாழ்க்கை என்று சொல்லும்படியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்தபின் சற்று ஆற அமர வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆரம்பியுங்கள். மிகவும் கடுமையான உழைப்பு வேண்டாம். ஒரேயடியான ஓய்வும் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த வேலைகளை, பொழுதுபோக்குகளைச் செய்யவும் நேரம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

 

வாழ்க்கையை ரசித்தபடியே உங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.