சிரித்துச் சிரித்து…..

smile

 

நீங்க தினமும் வாக்கிங் போவீங்களா? அங்கு உங்களைப் போலவே வாக்கிங் போறவங்களைப் பார்த்து புன்னகை செய்வீர்களா? அதுவும் முதல் முறை? அதெப்படி புன்னகை செய்யமுடியும்? அவங்க யாருன்னே எனக்குத் தெரியாதே அப்படீன்னு சொல்றீங்களா? நீங்க சொல்றது சரிதான். முன்பின் தெரியாதவங்களைப் பார்த்து எப்படி புன்னகைப்பது? நான் கூட உங்கள மாதிரி தான் இருந்தேன். பலவருடங்களுக்கு முன். இப்போது என்ன என்று கேட்கிறீர்களா? இப்போதெல்லாம் வாக்கிங் போகும்போது எதிரில் வருபவர்களைப் பார்த்து சிரிக்காவிட்டாலும் முகத்தில் ஒரு தோழமை பாவனையை காண்பிக்கிறேன். அவர்களும் பாசிடிவ் ஆக முகத்தை வைத்துக் கொண்டால் உடனே சிரிப்பேன். இரண்டாம் முறை பார்த்தால் கைகளைக் கூப்பி ‘நமஸ்தே’, ‘நமஸ்கார’ – சிலசமயம் நான் தமிழ் என்று தெரிந்து சிலர் ‘வணக்கம்’ என்பார்கள் – நானும் வணக்கம் என்று சொல்லிச் சிரிக்கிறேன். இந்த அற்புதமான மன மாற்றத்திற்குக் காரணம் டாக்டர் ஆர்த்தி.

 

பலவருடங்களுக்கு முன் குதிகாலில் வலி தாங்க முடியாமல் இருந்தபோது ராமகிருஷ்ணா நர்சிங் ஹோமில் பிசியோதெரபி செய்துகொள்ளச் சொல்லி என் மருத்துவர் யோசனை சொன்னார். முதல்நாள். முதலிலேயே பணம் கட்டிவிட்டு (பிசியோதெரபிக்குத்தான்) மாடிக்குச் சென்றேன். அங்குதான் பிசியோதெரபி அறை இருப்பதாக ரிசப்ஷனிஸ்ட் சொன்னார். பிசியோதெரபி என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறையை நோக்கி நடந்தேன். அந்த அறையின் வாசலில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் முகம் மலரச் சிரித்தார். எனக்கோ குழப்பம். யாரைப் பார்த்து சிரிக்கிறார்? அப்போதெல்லாம் நானும் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிக்க மாட்டேன். என் பின்னால் யாரோ அவருக்குத் தெரிந்தவர் வந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவரைப் பார்த்துத்தான் சிரிக்கிறார் என்று நினைத்துப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. என் குழப்பம் இன்னும் அதிகமாகியது. மறுபடியும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

 

‘ஏன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்து நான் சிரிக்கக் கூடாதா? முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து நீ சிரிக்கமாட்டாயா? சிரித்தால் என்ன? உன்னை நான் முழுங்கிவிடுவேனா? இல்லை உன் சொத்து குறைந்துவிடுமா? வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடுமா?’, படபடவென்று பொரிந்தார் அந்தப் பெண்.

‘ஸாரி, நான் இப்போதான் முதல் முறை வருகிறேன்………’

‘ஸோ வாட்?’

‘………….?’

‘சிரிப்பதற்கு உனக்கு என்னைத் தெரிந்திருக்க வேண்டுமா? நீ ஒரு மனுஷி; நான் ஒரு மனுஷி. இந்த ஒரு காரணம் போதாதா? ஊரு, பேரு எல்லாம் தெரிந்திருந்தால்தான் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க வேண்டுமா?…….’ இந்த முறை பட்டாசு மாதிரி பொரிந்து தள்ளிவிட்டு, ‘ஊம்?’ என்ற உறுமலுடன் நிறுத்தினார் அந்தப் பெண்மணி (பெண்புலி?)

 

எனக்கு ஒரு விஷயம் அவரிடம் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை பொரிந்த போதும், அவரது முகத்திலிருந்த சிரிப்பு மாறவேயில்லை. இப்படி ஒருவர் இருப்பாரா? அவர் சொல்வது எத்தனை நிஜம். நாமாகவே முன் வந்து சிரிக்காமல் போனாலும், ஒருவர் நம்மைப் பார்த்து சிரித்த பின் நாம் அவரைப் பார்த்து சிரிக்கலாமே.

 

‘ரொம்ப அப்செட் ஆகிவிட்டாயோ?’

 

‘இல்லையில்லை. நீங்க சொன்னதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்….’ என்று முதல்முறையாக என் முகத்தில் சிரிப்புடன் சொன்னேன். ‘அப்பாடி! இப்பவாவது சிரித்தாயே!’

 

‘நான் டாக்டர் ஆர்த்தி, பிசியோதெரபிஸ்ட்’ என்றபடியே கையை நீட்டினார். சிரிப்பு அவரது முகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தது. பிறக்கும்போதே இப்படிச் சிரித்துக் கொண்டேதான் பிறந்தாரோ என்று நினைக்கும்படி முகத்தில் நிரந்தரமாக இருந்தது அந்தச் சிரிப்பு.

 

பலவருடங்களுக்குப் பின் அவரை மறுபடி சந்தித்தபோது நான் அவரைப் பார்த்து சிரித்தேன் ரொம்பவும் தோழமையுடன் – அவர் சிரிப்பதற்கு முன்பாகவே! இளமையாகவே இருந்தார் – முகத்தில் அதே சிரிப்பு. இந்தச் சிரிப்பு தான் அவரது இளமையின் ரகசியமோ?

‘நீ ஏற்கனவே இங்கு வந்திருக்கிறாயா?’ என்றார். ‘ஓ! முதல் தடவை வந்திருந்தபோது உங்களைப் பார்த்து சிரிக்காததற்கு உங்களிடமிருந்தும் ‘திட்டு’ம் வாங்கியிருக்கிறேன்!’ என்றேன்.

‘ஓ! ரொம்பவும் கடுமையாக நடந்துகொண்டேனா? ஸாரி’

‘இல்லை. நான் ஒரு மிகப்பெரிய பாடத்தை அன்று கற்றுக்கொண்டேன்’ என்றேன்.

அன்றிலிருந்து எப்போது வாக்கிங் போனாலும் எதிரில் வருபவர்களைப்  பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! அதற்காகவே காத்திருந்தது போல பலரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிலர் சிரிக்காமலும் போனார்கள்.

 

நான் வாக்கிங் போகும் பூங்காவில் லாபிங் க்ளப் (laughing club) அங்கத்தினர்கள் நிறையப் பேர் வருவார்கள். தினமும் இவளும் வருகிறாளே, கொஞ்சம் புன்னகையாவது புரியலாம் என்று ஒருநாளாவது யாராவது என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்று நினைத்து நினைத்து நான் ஏமாந்ததுதான் மிச்சம். ஆகாயத்தைப் பார்த்து, மரத்தைப் பார்த்து ‘ஹா….ஹா….’ என்கிறவர்கள் உடலும் உயிருமாக இருக்கும் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்!!  இதுவும் ஒரு பாடம் தான், இல்லையா?

 

பல்வேறு இடங்களில் இருந்தாலும் என் வாக்கிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கூடவே புன்னகையும். சமீபத்தில் நாங்கள் குடியேறிய பகுதியில் எங்கள் வளாகத்தின் உள்ளேயே கட்டிடங்களைச் சுற்றி மிக நீண்ட வாக்கிங் டிராக்.  டிராபிக் பற்றிக் கவலைப்படாமல் எத்தனை நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். சிரிப்புப் பரிமாறல்களை இங்கும் தொடருகிறேன். நிறைய அனுபவங்கள். ஒரு சாம்பிள் இதோ:

 

‘வாக்கிங் போறீங்களா?’

பார்த்தால் எப்படித் தெரிகிறது? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தேன்.

கிட்டத்தட்ட என் வயதில் ஒரு பெண்மணி. என் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டார். முகத்தில் சட்டென்று ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ‘ஆமாம்’.

கேட்டாரே இரண்டாவதாக ஒரு  கேள்வி: ‘உங்களுக்கு சுகரா? அதான் தினமும் இப்படி நடக்கறீங்களா?’

 

அடப்பாவமே! சுகர் இருந்தால் தான் நடக்கணுமா? நம் ஊரில் குண்டாக இருப்பவர்கள் தான் ஜிம் போகணும். சுகர் இருந்தால் தான் நடக்கணும். BP இருந்தால் தான் உப்பு குறைச்சலாக சாப்பிடணும்.

 

ஆரோக்கியமாக இருக்க எல்லோருமே இந்த மூன்றையும் செய்யலாம்!

smile

17 thoughts on “சிரித்துச் சிரித்து…..

 1. நல்ல அனுபவம். நல்ல அறிவுரை. நல்ல பகிர்வு.

  சில வருடங்களுக்கு முன்னால்வரை என் முகத்தில் எப்போதும் புன்னகை வழியும். உதடுகளில் ஏதாவது ஒரு பாடல் இருக்கும்.

  எப்போது மாறினேன் என்று தெரியாமல் புன்னகையைத் தொலைத்திருந்தேன். பாடலையும் கைவிட்டிருந்தேன்.

  சமீபத்தில் இதை நானே உணர்ந்து மறுபடி சீரமைக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறேன். முழுவதும் வெற்றி பெற முடியவில்லை. காரணங்களையும் புரிந்து கொண்டேன். தவறுதான். புன்னகையும் நட்பும் நமக்கு நல்லது. இன்னமும் வேகமாக உற்சாகமாக முயற்சிக்கிறேன்.​

  1. வாங்க ஸ்ரீராம்,
   நான் எழுதியதற்கான பலன் கிடைத்துவிட்டது!
   வருகைக்கும், மனமாற்றத்திற்கும் நன்றியும், நல்வாழ்த்துகளும்.

 2. ஆமாம் அக்கா நாம் சிரிக்கும் போது, புசிரிப்பை உதிர்க்கும் போது நம் முகத்தின் தசைகள் விரிந்து மூளைக்கு நல்ல செய்தி அனுப்புமாம்…அப்போ நம் மூளை ஃப்ரெஷ் ஆகி புத்துணர்ச்சி பெறுமாம்…அன்பு என்பதும் பரவும்…நல்ல மணம் பரவும்…

  நான் யாரைப் பார்த்தாலும் புன் சிரிப்பு…அப்புறம் ஹை…குட்மார்னிங்க்…நல்லாருக்கீங்களா, எங்க உங்க ஃப்ரென்ட் காணும்….ரொம்ப நாளாச்சே பார்த்து…எப்படி இருக்கீங்க..இப்படி ஏதேனும் கேட்பது வழக்கம்…விவரம் அறிந்த நாளிலிருந்து…

  ரொம்ப நல்ல விஷயம் அக்கா …தொடருங்கள் அக்கா..மீண்டெடுங்கள் உங்களின் பழைய புன்னகையை…நல்ல அனுபவம் உங்களது அனுபவம்…நல்ல கட்டுரை அக்கா…மிக்க நன்றி…

  கீதா

  1. வாங்க கீதா,
   நீங்களும் என்னைப் போல என்று அறிவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடருங்கள் புன்சிரிப்புப் பரிமாறலை.
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

 3. இந்த விஷயத்தில் நாம் இந்தியர்கள் கொஞ்சம் சீரியஸ் டைப் தான். அதே அம்பேரிக்காவிலோ மற்ற வெளிநாடுகளிலோ தெரியுமோ தெரியாதோ கையை ஆட்டி ஹெலோ சொல்லி விட்டு ஹவ் டூ யூ டூ என்றும் கேட்பார்கள்.. நமக்கெல்லாம், அதுவும் எனக்கெல்லாம் இதைப் பழக எத்தனையோ வருஷங்கள் வேணும். 🙂

  1. நல்ல சஜஷன்தான் .இருப்பினும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் புன்னகைக்கிறேன் abayaaruna.blogspot.in

   1. வாங்க அருணா,
    ஹா……ஹா……ஹா…. நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன். வயதாக ஆக சற்று மாறிவிட்டேன் என்று சொல்லவேண்டும்.
    வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி.

  2. வாங்க கீதா,
   டாக்டர் ஆர்த்தி அதையே தான் சொன்னார்: வட இந்தியர்கள் சட்டென்று சிரிப்பார்கள், தென்னிந்தியர்கள் தான் சிரிக்க ரொம்பவும் யோசிக்கிறோம் என்று. நான் அதை ஒத்துக்கொள்ளவில்லை. நாங்களும் equally சிரிப்பவர்கள்தான் என்று சாதித்தேன் அன்று. பாதிப்பேர் என்னைப் போல பார்த்தவுடன் சிரித்தாலும், நிறையப்பேர் ‘இவ எதுக்கு நம்மளைப் பார்த்து சிரிக்கிறா?’ என்ற ஒரு சின்ன தயக்கத்துடனேயே கடந்து செல்லுவார்கள்!
   வருகைக்கும், அனுபவப் பகிர்விற்கும் நன்றி.

 4. புன்னகையோடு கூடிய முகம் நல்லதுதான். மற்றவர்கள் எல்லோருக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது. இந்த சஜஷனும் வயதைப் பொருத்தது என்று நினைக்கிறேன்.

  ஆனா இயல்பாகவே என்னிடம் புன்னகைக்கும் முகம் கிடையாது. எப்போதும் சீரியசாகத்தான் இருப்பேன். என் பெண்தான், என்னை படம் எடுக்கும்போது, ‘சிரிங்கோ சிரிங்கோ’ என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

  என் பாஸ் (இது ஸ்ரீராம் சொல்ற அர்த்தத்தில் இல்லை. ஆபீஸ் பாஸ்), எப்போதும் கலங்காத சிரித்த முகம். கடந்த இரண்டு வருடங்களாக களேபரமாக இருக்கும் சூழலிலும் சிரித்த முகம். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

  1. வாங்க நெல்லைத் தமிழன்,
   போட்டீங்களே ஒரு போடு! வயதாகிவிட்டது அதனால் உங்களால் சிரிக்க முடிகிறது என்கிறீர்களா? ஒருவிதத்தில் சரி என்றே சொல்லவேண்டும். வயதும் ஒரு காரணம் நான் எல்லோரைப் பார்த்து சிரிப்பதற்கு என்றும் சொல்லலாம். சின்ன வயதிலிருந்தே நான் இப்படித்தான் சுலபமாக எல்லோரிடமும் சிரித்துப் பேசுவேன். அன்று எனது குதிகால் வலி என்னை சிரிக்கவிடாமல் படுத்தியது. மூன்று ஊசிகள் போட்டுக்கொண்டும் வலி குறையாதது என் மனநிலையை பாதித்திருந்தது.
   நீங்கள் சொல்வது போல எல்லோராலும் இப்படி இருக்கமுடியாது.
   கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ளுங்கள் உங்கள் சுபாவத்தை. பெண் எடுத்த படம் இருந்தால் போடுங்களேன்.

   வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி.

 5. பயனுள்ள, நாம் கடைபிடிக்கவேண்டிய ஒன்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  1. வாங்க ஜம்புலிங்கம் ஐயா,
   உங்கள் பதிவுகளை ரீடரில் (Reader) படித்துவிடுகிறேன். கூடிய விரைவில் உங்கள் தளத்திற்கு வந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

 6. மிக நீண்ட இடைவெளீக்குப் பிறகு ஒரு நல்ல பதிவு ரஞ்சனி புன்னகையும் சிரிப்பும் உடலுக்கும் உள்ளத்திர்கும் நல்லதுதான் அவர்கள் சிரிக்காவிட்டாலும் நாம் தான் சிரித்து வைப்போமே அதில் என்ன தவறு நல்ல பகிர்வு பாராட்டுக்கள்

  1. வாங்க விஜயா,
   அதானே! சிரிப்பதில் என்ன தவறு?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

 7. தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ, புன்னகை சிந்துவதில் தவறில்லை. நல்ல விஷயம் தான்… நான் சில முறை முயற்சித்து பிறகு விட்டு விட்டேன். தொடர வேண்டும்.

 8. Naan indrum serious aaga dhaan irukkiren. Kitta thatta 10 varudangalaga walking pogiren anaal oru friend kooda enakku illai enbadhu varuthaththirkkuriya vishayam. Un suggestion ai try seigiren, Ranjani.

 9. வணக்கம் !

  பங்கயம் பூத்துக் கங்கை
  ….பசுமையும் கொள்ளல் போல!
  மங்கலம் பெருகி மக்கள்
  ….மகிழ்வினால் நிறைந்து துள்ள !
  எங்கிலும் அமைதி வேண்டி
  …இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
  பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
  …பொலிவுற வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s