புதிய வருடம் 2018

புள்ளேறும் கள்வன்

பெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் நான் ரசித்த ‘புள்ளேறும் கள்வன்’

—————————-

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஒவ்வொரு வருடமும் வருகிறது. வந்த சுவடே தெரியாமல் சென்று விடுகிறது.  ‘இந்த வருடம் சீக்கிரம் போய்விட்டது, இல்லை?’ என்று நாமும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஒரே மாதிரி.

அதேபோல எல்லோரும் தவறாமல் செய்வது கடந்து போன வருடத்தை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது. கடந்து போன நான்கு வருடங்களை திரும்பிப் பார்க்காமல் இருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. அலைச்சல், மருத்துவமனை, மன உளைச்சல், அக்காவின் இழப்பு என்று இந்த நான்கு வருடங்கள் ரொம்பவும் என்னை அலைக்கழித்து விட்டன. ஒரு பள்ளத்தைக் கடந்தாகிவிட்டது அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள் அடுத்தது என்னை தள்ளிவிட தயாராக இருக்கும். இத்தனைக்கும்  நடுவில் ஓர் புத்தகம் எழுதி முடித்திருக்கிறேன். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அல்லது வெகு விரைவில் வெளி வரும் என்று நம்புகிறேன்.

பட்ட துன்பங்களை எல்லாம்  மறக்கும்படியாக 2017 இல் பேத்தி பிறந்திருக்கிறாள்.

அவளைப் பார்த்துக்கொண்டு, அவளுடன் விளையாடிக் கொண்டு இனி அவள் மட்டுமே  எங்கள் வாழ்க்கையாக,  இந்த வருடமும் இனி வரும் வருடங்களும்  இனியதாக, நிம்மதியாக செல்லும் என்ற நம்பிக்கையுடன் இந்த 2018 ஆம் ஆண்டை வரவேற்கிறேன்.

மிகவும் ஆசையுடன் வலைத்தளம் தொடங்கி எழுத ஆரம்பித்த நான் கடந்த சில வருடங்களாக எழுதுவதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டேன்.  வாரத்திற்கு  ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை மட்டும் இந்தப் புதிய வருடத்தில் எடுத்துள்ளேன். நான் தொடர்ந்து வராத போதும், நான் எப்போதோ ஒருமுறை போடும் பதிவிற்கு தவறாமல் வந்து கருத்துரை சொன்ன எனது பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எழுதிக் கொண்டிருந்ததைவிட எழுதாமல் இருக்கும் இந்த சமயத்தில் நிறையப்பேர்கள் வந்து நான் எழுதிய பதிவுகளைப் படித்துக் கொண்டிருப்பது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எழுதுவதை விட்டுவிடலாமா என்று கூட சிலசமயம் தோன்றும். ஆனால் எழுதும் போது கிடைக்கும் சந்தோஷம் மறுபடி மறுபடி எழுதத் தூண்டுகிறது.

 

முடிக்கும் முன் நான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு உண்மை நிகழ்வு:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றியது:

ஐன்ஸ்டீன் பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று தனது ரிலடிவ் ஆப் தியரி பற்றி விரிவுரைகள் நடத்திக் கொண்டிருந்த சமயம். ஒரு முறை ஒரு பல்கலைக் கழகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது காரோட்டி சொன்னார்: ‘இந்த விரிவுரையை நான் முப்பது தடவைகளுக்கு மேல் கேட்டிருக்கிறேன். எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது உங்கள் தியரி. உங்களுக்கு பதிலாக நானே இதைப் பேசிவிடுவேன்’ என்றார்.

‘அப்படியா? சரி, உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். இன்று நான் போகும் பள்ளியில் அவர்கள் என்னை இதற்கு முன் பார்த்ததில்லை. அதனால் அங்கு போனவுடன் உங்கள் தொப்பியை நான் அணிந்து கொள்ளுகிறேன். நீங்கள் உங்களை ஐன்ஸ்டீன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுங்கள்’ என்றார் ஐன்ஸ்டீன்.

மேடையில் ஐன்ஸ்டீனின் காரோட்டி மிகப்பிரமாதமாகப் பேசினார், ஒரு தவறு கூட இல்லாமல். பேசிமுடித்து விட்டு மேடையை விட்டு இறங்கும்போது ஒரு பேராசிரியர் எழுந்திருந்து அவரை நிறுத்தி மிகவும் கடினமான கேள்வி ஒன்றைக் கேட்டார். உண்மையில் அந்த கேள்வி விஷய ஞானம் வேண்டி கேட்கப்பட்ட கேள்வியில்லை. மாறாக ஐன்ஸ்டீனை சங்கடப்படுத்துவதற்காக கேட்கப்பட்ட கேள்வி.

காரோட்டி முதலில் திகைத்தாலும் சட்டென்று ஒரு யோசனை பளிச்சிட்டது அவருக்கு. ‘நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை மிகவும் எளிமையானது. நீங்கள் என்னை அந்தக் கேள்வி கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. எத்தனை எளிமையான விடை இந்தக் கேள்விக்கு என்று உங்களுக்கு புரிய வைக்க எனது காரோட்டியை இப்போது கூப்பிட்டு இந்த கேள்விக்கான விடையை சொல்லச் சொல்லுகிறேன்!’ என்றார்.

ஐன்ஸ்டீன் எழுந்திருந்து வந்து அந்த பதிலை எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் விளக்கினார்!

நீதி: நீங்கள் எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் உங்களைவிட தகுதியில் கீழே இருக்கும் ஒருவர் உங்களைவிட அறிவாளியாக இருக்கக்கூடும்.

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஐயையோ ஆதார்!

 

வருடம் 2020

இடம் பீட்ஸா ஹட்

‘கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்……. கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்…….’

விடாமல் அடிக்கும் தொலைபேசியை எடுக்கிறார் அங்கிருக்கும் பெண்மணி.

பெ: ஹலோ…. பீட்ஸா ஹட்..!

வாடிக்கையாளர்: பீட்ஸா தேவை

பெ: பன்முறை பயன்பாட்டு ஆதார் அட்டையின் எண் கொடுங்கள், ஸார்.

வா: ஒரு நிமிடம் ….ஆங்…….என்னுடைய எண்:8898135102049998-45-54610

பெ: ஓகே ஸார். உங்கள் பெயர் மிஸ்டர் ஐயர். பெங்களூர் பனஷங்கரியிலிருந்து கூப்பிடுகிறீர்கள். வீட்டுத் தொலைபேசி எண்:…….அலுவலக எண்:… கைபேசி எண்:….. இப்போது வீட்டுத் தொலைபேசியிலிருந்து கூப்பிடுகிறீர்கள்.

வா: அட! ஆச்சரியமாயிருக்கே! எப்படி எனது எல்லா தொலைபேசி எண்களும் கிடைத்தன?

பெ: உங்கள் ஆதார் அட்டை எங்கள் கணனியின் தொடர்பில்  இருக்கிறது  ஸார்!

வா: ஓ! அப்படியா? குட்! இப்போது எனக்கு Seafood pizza வேண்டும்.

பெ: உங்களுக்கு இந்த பீட்ஸா சரிப்படாது, ஸார்!

வா: எப்படிச் சொல்லுகிறீர்கள்?

பெ: உங்களின் மருத்துவ அறிக்கைப்படி உங்களுக்கு மிக உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு இருக்கிறது.

வா: வேறு என்ன சிபாரிசு செய்கிறீர்கள்?

பெ: எங்களது ‘குறைந்த கொழுப்பு ஹாகீன் மீ’ பீட்ஸா  சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.

வா: அதெப்படி நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?

பெ: நேற்று நீங்கள் தேசிய நூலகத்திலிருந்து ‘குறைந்த கொழுப்பு சத்து கொண்ட ஹாகீன் மீ உணவுப்பொருட்கள் செய்வது எப்படி?’ என்ற புத்தகத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!

வா: அதுவும் தெரிந்துவிட்டதா? சரி ஃபேமிலி சைஸ் பீட்ஸா மூன்று கொடுங்கள்.

பெ: 10 பேர்கள் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு இந்த அளவு சரியாக இருக்கும் ஸார்! உங்கள் பில் தொகை ரூ. 2450/-

வா: கிரெடிட் கார்டில் பணம் கொடுக்கலாமா?

பெ: மன்னிக்கவும் ஸார். உங்கள் கடன் அட்டையில் அளவுக்கு அதிகமாக கடன் எடுத்திருக்கிறீர்கள். போன அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,51,758/- பாக்கி வைத்திருக்கிறீர்கள். இதில் கடன் கட்டத் தவறியதற்கான  தாமதத்தொகையை சேர்க்கவில்லை.

வா: ஓ! அப்போ பக்கத்திலிருக்கும் ATM போய் பணம் வாங்கி வருகிறேன்.

பெ: அதுவும் சாத்தியமில்லை, ஸார்! உங்களது  கணக்கு அறிக்கைப்படி, நீங்கள் இனிமேல் ATM-இல்  பணம் எடுக்க முடியாது. அங்கும் அதிகப்படியான பணத்தை எடுத்துவிட்டீர்கள்.

வா: பரவாயில்லை. பீட்ஸாக்களை அனுப்புங்கள். என்னிடம் பணம் இருக்கிறது. எத்தனை நேரம் ஆகும்?

பெ:45 நிமிடங்கள் ஆகும் ஸார். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றுக் கொண்டு போகலாம்.

வா: (அதிர்ச்சியாக) என்ன! மோட்டார் சைக்கிளா?

பெ: எங்களிடம் இருக்கும் விவரங்களின்படி உங்களிடம் 1123 என்ற எண்ணுள்ள மோட்டார் சைக்கிள் இருக்கிறது, ஸார்!

வா: ??????(ம்ம்ம்ம்ம்ம்ம் …இவங்களுக்கு என் மோட்டார் சைக்கிள் நம்பர் கூடத் தெரியமா?)

பெ: வேறு ஏதாவது வேண்டுமா ஸார்?

வா: ஒன்றுமில்லை…. இந்த பீட்ஸாக்களுடன் இலவசமாக  3 கோலா பாட்டில்கள் அனுப்பிவிடுவீர்கள், இல்லையா?

பெ: வழக்கமாக எல்லோருக்கும் அனுப்புவோம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அனுப்ப இயலாது ஸார்!

வாடிக்கையாளர் கோவம் தலைக்கேற கன்னாபின்னா வென்று திட்டுகிறார்.

பெ: உங்களை எச்சரிக்கிறேன் ஸார்!  2007 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி ஒரு காவல்துறை அதிகாரியை இதேபோல கன்னாபின்னாவென்று பேசியதற்காக 2 மாதங்கள் சிறை வாசத்துடன் ரூ 5000/- அபராதம் கட்டினீர்கள். மறக்க வேண்டாம்!

 

வாடிக்கையாளர் மயங்கி விழுகிறார்!

 

இந்தியா முன்னேற்றப்பாதையில்…….!