என் குடும்பம் · Uncategorized

WOW

Image result for chennai marina beach photos

image

It was my last day in the city …….

– ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.

 

நான் இப்போது சொல்லப்போகும் இந்த நிகழ்வு 30 வருடங்களுக்கு முன் நடந்தது. நான் சென்னையை விட்டு வெளியேறி முப்பது வருடங்கள் ஆகிவிட்டதா? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. 1987 ஆம் வருடம் சென்னையை விட்டு கிளம்பினோம்.

 

என்னுடைய பள்ளிப்படிப்பு, முதல் வேலை (கடைசி வேலையும் அதுதான்!) திருமணம், குழந்தைகள் பிறந்தது என்று எல்லாமே சென்னையில் தான். எப்படி நான் வேறு ஒரு இடத்திற்குக் குடிபெயர முடியும்? எனது வேர்கள் பரவி இருப்பது இங்கு அல்லவா? ஏற்கனவே ஒருமுறை நான் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டேன், திருமணம் என்ற பந்தத்தின் மூலம். அதை நான் மிகவும் பெருமையுடன் ஏற்று, நடப்பட்ட இடத்தில் பற்றிப் பரவினேன். அது சென்னைக்குள்ளேயே தான். சென்னையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் சென்றேன் அவ்வளவே. அதுவுமில்லாமல், எல்லாப் பெண்களின் வாழ்விலும் நடப்பது தான் இந்த நாற்று நடும் நிகழ்ச்சி. இதனாலேயே பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குக் குடிபெயரும் பெண் நாட்டுப்(நாற்றுப்)பெண் என்று அழைக்கப்படுகிறாளோ?

 

இத்தனை வருடங்கள் வளர்ந்த இந்த நகரத்தை விட்டுப் போவதென்பது- அதுவும் முதல் முறையாக – மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.  மனமெல்லாம் கனத்தது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குப் போகும் பெண்ணின் மனநிலையில் இருந்தேன் நான். சிறிய வயது – திருமண வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் கூடவே புதிய இடம், புதிய மனிதர்களுடன் வாழப் போகிற புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயமும் கலந்த ஒரு இரண்டுங்கெட்டான் நிலை அப்போது. இப்போது 30 வயதைக் கடந்த,  இரண்டு குழந்தைகள் பெற்ற பொறுப்புள்ள தாய். என்றாலும் புதிய ஊர், புதிய மொழி, புதிய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கவலையுடன் கூடவே சின்ன உற்சாகமும் இருந்தது என்பது தான் உண்மை.

 

குழந்தைகள் இருவரும் தங்கள் தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் புதிய பள்ளி. புதிய தோழர்கள். புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாத எனக்கும் புதிய மொழி அது. எப்படிச் சொல்லித் தரப்போகிறேன்? மிகப்பெரிய சவால் என் முன்னே காத்திருக்கிறது. வாழ்க்கையில் சவால்கள் இருந்தால் தானே சுவாரஸ்யம்?

 

நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டேன். பத்து நாட்களாகவே விருந்து சாப்பாடுதான். அம்மா, அக்கா வழி அனுப்ப வந்திருந்த தம்பியின் குடும்பம் என்று எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டேன்.

 

கடைசியாக அம்மா சொன்ன வார்த்தைகள் இவை: ‘இங்கிருக்கிற பெங்களூருக்குத் தானே போகிறாய். பிருந்தாவன் ரயில் தினமும் பெங்களூருக்கும், சென்னைக்கும் ஓடுகிறது. நினைத்த போது நீயும் வரலாம்; நாங்களும் வரலாம். கவலைப்படாமல் போய்விட்டு வா’.

 

ஏதோ கண்காணாத ஊருக்குப் போவது போல ‘ஸீன்’ போட்டுக் கொண்டிருந்த என்னை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தன இந்த வார்த்தைகள். சட்டென்று என் மனநிலை மாறியது. அட! அதானே! இதோ இருக்கிற பெங்களூரு தான்! சென்னையின் வெயில் இல்லாமல், தண்ணீர் கஷ்டம் இல்லாமல் குளுகுளுவென்று இருக்கப் போகிறது எங்கள் வாழ்க்கை என்று சந்தோஷமாக விமானம் ஏறினேன். முதலில் சில நாட்களுக்கு சென்னையின் நினைவு வந்து கொண்டிருக்கத்தான் செய்தது. வெகு சீக்கிரம் புதிய ஊர் பழகிவிட்டது.

 

கூடவே அவ்வப்போது கல்யாணம், சின்னச்சின்ன விசேஷங்கள் என்று அவ்வப்போது சென்னைக்குச் சென்று வந்து என்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறேன்.

 

ஒவ்வொருமுறையும் ‘என்ன வெயில்!, என்ன வியர்வை’ என்று அலுத்துக் கொண்டாலும், சென்னை செல்வது என்பது பிறந்தகம் செல்வது போல இனிக்கத்தான் செய்கிறது. சென்னை போல வருமா என்று பலமுறை சொல்வதும் உண்டு.  எங்கள் ஊர் சென்னை என்று சொல்லிக் கொள்வதில் வரும் சந்தோஷம் மாறவேயில்லை இத்தனை வருடங்களில்.  சென்னையின் மேல் நான் கொண்ட பாசம் இன்றுவரை சற்றும் குறையவில்லை! அதுதான் சென்னையின் விசேஷம் என்று கூடச் சொல்லலாம்.

 

This post is a part of Write Over the Weekend, an initiative for Indian Bloggers by BlogAdda.’

Advertisements

20 thoughts on “WOW

  1. ஒரு ஸ்கூலிலிருந்து வேறு ஸ்கூல் மாறுவது, ஒரு ஏரியா விட்டு வேறு ஏரியா மாறுவது எல்லாமும் இதே போலத்தான். பழைய நினைவுகளா! எங்கே ரொம்ப நாட்களாய் வலைப்பக்கம் காணோம்?

    1. வாங்க ஸ்ரீராம்.
      சம்சார சாகரத்தில் சுனாமி!
      இது Blogadda என்ற தளத்தில் வந்த Write Over the Weekend’ என்ற பகுதிக்காக எழுதியது. இப்படி ஏதாவது ஒரு உந்துதல் இருந்தால் எழுத வருமோ என்னவோ என்று பார்ப்பதற்காக. அங்கு எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். ஆனால் Indian bloggers-க்கான தளம் என்று போட்டிருக்கிறார்கள். நிறையப் பேர்கள் ஹிந்தியில் எழுதுகிறார்கள். ஆனால் தமிழில் எழுதினால் போடுகிறார்களா என்று பார்க்க எழுதிப் போட்டேன். என்னுடையதை அவர்கள் அங்கீகரித்தால் அவர்களது Badge கிடைக்கும் WOW என்று. அங்கீகாரம் கிடைக்குமா, தெரியவில்லை. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நேற்று அந்த தளத்தில் WOW அறிவிப்பைப் பார்த்துவிட்டு எழுதிப் போட்டேன். அவ்வளவுதான்.

      நான் உங்கள் வலைப்பக்கம் வராமலிருந்தும் நீங்கள் வந்து கருத்துரை போட்டதற்கு எனது மனமார்ந்த நன்றி!

    1. வாங்க தனபாலன்!
      வீட்டில் வேலை சற்று அதிகம். அதுதான் வருவதில்லை. இன்றிலிருந்து வரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

      வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

  2. வலை உலகுக்கு மீண்டும் வருகை தந்தமைக்கு வாழ்த்துகள். நானும் முன்னை மாதிரி அடிக்கடி எழுதுவதில்லை எனினும், தினம் இரண்டு மணி நேரமாவது கணினியில் உட்காருகிறேன்.

    சென்னை எனக்குப் பிடிக்காத ஊர்! 🙂 பலருக்கும் “ஜிவாஜி” நடிப்புப் போல “சென்னை”யும் பிடித்த ஊர்! ஆனால் எனக்குச் சென்னையை விட்டு எப்போக் கிளம்புவோம்னு இருக்கும்! ராஜஸ்தான், குஜராத் மாற்றலில் செல்லும்போதும், ஊட்டி(அரவங்காடு) மாற்றலில் செல்லும்போதும் மகிழ்ச்சியுடன் சென்றேன்.

    1. நான் பிறந்ததில் இருந்து அங்கு தான் இருந்தேன். அதனாலேயோ என்னவோ இன்றைக்கும் சென்னை போவதென்றால் சந்தோஷமாக இருக்கும். நீங்கள் நிறைய ஊர்கள் பார்த்திருப்பதினால் சென்னை பிடிக்காமல் போய்விட்டதோ என்னவோ?
      சென்னைக்குப் பிறகு நான் பார்க்கும் இன்னொரு ஊர் பெங்களூரு. வேறு எங்கும் போனதில்லை. ஒப்பிட்டுப் பார்க்கும்போது சென்னை பிடித்த ஊராக ஆகிறது.

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  3. பல பிரபல வலைத்தளங்களோடும் தொடர்பு வைத்துக் கொண்டு விடாமல் முயன்று பதிவுகள் இடுகிறீர்கள். இப்படி ஒரு தளம் இருப்பதை இன்றே அறிந்தேன். 🙂

    1. தொடர்பெல்லாம் இல்லை கீதா. இந்தத் தளத்திலிருந்து ஏதாவது ஒரு notification வந்து கொண்டே இருக்கும். இந்த தடவை தான் சரி எழுதலாமே என்று எழுதி அனுப்பினேன். ஸ்ரீராமிற்கு எழுதிய பதிலையே உங்களுக்கும் சொல்லுகிறேன்.
      இது கிட்டத்தட்ட தமிழ்மணம் போல ஒரு aggregator. நம்முடைய தளத்தையும் இதில் இணைக்கலாம். இதுவரை நான் செய்ததில்லை.
      நீங்களும் எழுதி அனுப்பலாம். ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் எழுதச் சொல்லுகிறார்கள். தினம் எழுதுவது இயலாத காரியம். வாரத்திற்கு ஒருமுறை என்றால் முயலலாம்.

  4. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது பகிர்வு. மகிழ்ச்சி. எனக்கும் ஏனோ சென்னை பிடிப்பதில்லை.

    பழகிய இடத்தை விட்டு வேறு இடத்திற்குப் போவது கடினமான விஷயம் தான்.

    1. வாங்க வெங்கட்!
      தாமதமான பதிலுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்.
      சென்னையின் கடற்கரை எனக்குப் பிடித்தமான ஒன்று. அதேபோல பார்த்தசாரதி பெருமாள் கோயில்.
      பஸ் வசதி, ரயில் வசதி என்று எல்லாவற்றிலும் முதல் இடம் சென்னைக்குத் தான்.
      இன்றைக்கும் பெங்களூரில் வெளியே செல்வது என்றால் எனக்கு யோசனைதான். ஓலா, ஊபர் வந்தபிறகு பரவாயில்லை என்று சொல்லாம்.

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாங்க ஐயா.
      கூடிய சீக்கிரத்தில் தினமும் எழுதத் தொடங்குவேன் என்று நினைக்கிறேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    1. சென்ற வாரம் படிக்க முடியவில்லை, ஸ்ரீராம். ஸாரி.
      இந்த வாரம் அங்கு போய் படித்து காமென்ட் போட்டுவிட்டு உங்களுக்கு இதோ இந்த பதிலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  5. மெட்ராஸுக்கு ஸமானம் எந்த டவுனும் கிடையாது என்று ஆரம்பகால பாட்டு ஞாபகத்திற்கு வந்தது. எங்கும் நம்முடைய பாஷையில் பேசும் ஆட்கள். அது ஒன்றே போதுமே! அன்புடன்

  6. வாங்கோ காமாக்ஷிமா!
    ஆஹா! சரியான பாயிண்ட்!
    சென்னைக்குப் போனாலே வீட்டில் இருக்கும் நினைப்பு. அது போதுமே!
    வருகைக்கும், சூப்பராக ஒரு பாயிண்ட் எடுத்துக் கொடுத்ததற்கும் நன்றி!

  7. அருமையான பதிவு உங்களுடைய இந்த பதிவை படித்த போது என்னுடைய சென்னை வாழ்க்கை மின்னலிட்டது. கல்லூரி படிப்பு மட்டும் தான் சென்னையில், இருந்தாலும் எனக்கு சென்னையின் மீது ஈர்ப்பு அதிகம்.

    சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் எல்லோருக்கும் இருக்கும் மனநிலை என்று மட்டும் புரிகிறது.

    “ஒவ்வொருமுறையும் ‘என்ன வெயில்!, என்ன வியர்வை’ என்று அலுத்துக் கொண்டாலும், சென்னை செல்வது என்பது பிறந்தகம் செல்வது போல இனிக்கத்தான் செய்கிறது”

    நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s