‘சீதை ராமனை மன்னித்தாள்’

எங்கள் ப்ளாக் தளத்தில் வந்திருக்கும் எனது கதை இது.

 

‘சீதை ராமனை மன்னித்தாள்’

‘இதுதான் கதையின் தலைப்பா?’ பாட்டி தொலைக்காட்சியிலிருந்து கண்களைத் திருப்பாமலேயே கேட்டாள்.

‘இல்லையில்லை. கதையின் கடைசி வரி இப்படி இருக்க வேண்டுமாம். ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று.

‘யார் கதை எழுதச் சொல்லியிருக்கா?’

‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் தான்!

‘ஓ! கேட்டு வாங்கிப் போட்ட கதையெல்லாம் முடிஞ்சு போச்சா? இப்போ கடைசி வரி கொடுத்து எழுதச் சொல்றாரா?’

‘இது அவரோட அப்பா சொன்னதாம். உறவுகளுக்கு இடையில்  போட்டி வைக்க ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று கடைசி வரி அமையும்படி எழுதச் சொன்னாராம். ஸ்ரீராம் சொல்லாமலேயே விட்டுட்டார். இப்போ சக வலைப்பதிவாளர்களுக்குச் சொல்லி எழுதச் சொல்லியிருக்கிறார்….’

‘………..’

‘என்ன பாட்டி! பதிலே இல்ல. நீ ஏதானும் எழுதலாம்னு யோசிக்கிறயா?’

‘அதெல்லாம் இல்லை’ தொலைக்காட்சியை நிறுத்தி விட்டுப் பாட்டி தொடர்ந்தாள்: ‘எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. இதிலே எந்த சீதை எந்த ராமனை மன்னித்தாள் என்று எந்தக் கதையை எழுதறது?’

‘அப்படியெல்லாம் இல்லை. சில சீதைகள் சில ராமன்களை மன்னிப்பதே இல்லை, தெரியுமா?’

‘யாரைச் சொல்ற?’

‘பெங்களூருல நம்மாத்துக்கு எதிர்ல ஒரு தாத்தா இருந்தாரே, நாங்க கூட அவருக்கு ‘டான்ஸிங்’ தாத்தா என்று செல்லப் பெயர் வைத்திருந்தோமே, நினைவிருக்கா? அவர் நடக்கும்போது உடம்பு முழுக்க ஆடும்.  ஏதோ ஆக்சிடெண்டு ஆகி அப்படி ஆயிட்டார்னு சொல்லுவா. அந்த பாட்டி அதான் அவரோட வைஃப் அவரோட பேசவே மாட்டாளாம். அவரோட பேசறத நிறுத்தி பல வருஷங்கள் ஆயிடுத்தாம். அந்தப் பாட்டியோட மாட்டுப்பெண் எங்க அம்மாவோட பேசும்போது ஒரு தடவ சொன்னாளாம்…. அவருக்கு முன்னாடி அந்தப் பாட்டி போயிட்டா. அதனால அந்த பாட்டி அவரை மன்னிக்கவேயில்லை அப்படீன்னுதானே அர்த்தம்?’

‘அந்தப் பாட்டிக்கு ‘சுமங்கலி’ன்னு பேர் வாங்கிக் கொடுத்த தாத்தாவை அந்தப் பாட்டி இப்போ நிச்சயம் மன்னிச்சிருப்பா… அத விடு. நீ எப்போ உன் ராமனை மன்னிக்கப் போற?’

‘பாட்டீ……!’

‘நீ வந்து ஒருமாசத்துக்கு மேல ஆறது. இதுவரைக்கும் ஒரு வார்த்தை நீ அவனைப் பத்திப் பேசல. கல்யாணத்துக்கு முன்னால எப்பவும் கைபேசியும் காதுமா இருப்ப. கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் ஆகல. இப்ப அவனோட பேசறதையே நிறுத்திட்டயா? எத்தனை நாளுக்கு இங்க அம்மாவாத்துல இருப்ப? என்ன ஆடம்பரம், என்ன பகட்டு. உன் கல்யாணத்த தான் சொல்றேன். அதுக்கு அர்த்தமே இல்லையா? அத்தனை செலவழித்து நீ ஆசைப்பட்டவனையே உனக்கு பண்ணி வைச்சாளே, உன் அம்மா அப்பா – அவாளுக்கு நீ கொடுக்கற மரியாதை என்ன?’

‘……………………….’

‘என்ன பேச்சையே காணும்? உம்….’

‘என்ன பதில் சொல்றது….?’ முணுமுணுப்பு மட்டும் கேட்டது பேத்தியிடமிருந்து.

‘கல்யாணம் என்கிறது பீச்சுல, பார்க்குல ஒண்ணா கைகோர்த்து நடக்கறது மட்டுமில்ல. வாழ்க்கையிலேயும் ஒண்ணா நடக்கக் கத்துக்கணும். உனக்குக் கல் தடுக்கினா அவன் அழணும்ன்னு எதிர்பார்க்கறது குழந்தைத்தனம். அதேபோல அவன் ஆபீஸ்லேர்ந்து வரும்போது நீ காப்பியும் கையுமா நிக்கணும்னு அவன் எதிர்பார்க்கறதும் தப்பு. ரெண்டுபேரும் அடுத்த தலைமுறையை வளர்க்கற பொறுப்பை ஏத்துக்க வேண்டியவா. அதை உணர்ந்து அவா அவா வேலையைப் பாருங்கோ. நீ தினமும் சமையல் பண்ணு. உனக்குப் பொறுப்பு வரும். அவனிடம் பையைக் கொடுத்து மளிகை சாமான் வாங்கிண்டு வரச் சொல்லு. அவனுக்கும் பொறுப்பு வரும்’

‘………………..’

‘ராமாயணத்துல ஒரு அழகான காட்சி: வனவாசம் முடிந்து ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ராமன் எல்லோருக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குகிறான். சீதையும் கண்குளிர அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் இருவரையும் கண் நிறைந்து அனுமன் சேவித்துக் கொண்டிருக்கிறான். திவ்ய தம்பதிகள் இல்லையோ! சீதையின் பார்வை அனுமனின் மேல் விழுகிறது. ‘அடடா! இவன் எப்பேர்பட்ட காரியம் செய்திருக்கிறான். அன்று அசோக வனத்தில், நான் விரக்தியின் உச்சியில் என்னை மாய்த்துக் கொள்ள முயன்ற போது இவனல்லவா என் உயிரைக் காப்பாற்றினான். இவனுக்கு என்ன கொடுத்து கைம்மாறு செய்வது? எதைக் கொடுத்தாலும் அது போதாது. ஆனாலும் ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்று எண்ணியவாறே தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை தடவிப் பார்த்தவாறே ராமனை நோக்குகிறாள். ராமனும் அவள் மனதறிந்து புன்னகைக்கிறான். கழுத்திலிருந்த முத்துமாலையை கழற்றி அனுமனிடம் கொடுக்கிறாள் சீதை. அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட மாலையை தனது பற்களால் கடித்துப் பார்க்கிறான் அனுமன். சீதை சிரித்துக் கொண்டே ‘மர்க்கடேச!’ (குரங்கு) என்கிறாள்’.

‘சீதையின் முகக்குறிப்பிலேயே அவளது மனதை அறியும் ராமன் தவறு செய்வானா? சீதை அவனை மன்னிக்கும்படியான சந்தர்ப்பம் வந்திருக்குமா? யோசித்துப் பார். நாமெல்லோரும் நமது சிந்தனைக்கு, தகுதிக்கு ஏற்ப இராமாயணத்தைப் படித்து தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு ராமன் செய்தது தவறு, சீதை பாவம் என்று வாதாடுகிறோம். இது நமது மடத்தனத்தைக் காட்டுகிறது. அவ்வளவுதான்’

‘வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைந்துவிடாது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயம் இருக்கும். ஆண்கள் சிந்திப்பது வேறு. பெண்கள் சிந்திப்பது வேறு. இதைப் புரிந்து கொண்டு இருவரும் ஒன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை. முணுக் என்றால் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நீ என்ன தவறு செய்தாய் என்று முதலில் யோசி. பிறகு அவனைக் குற்றம் சொல்லலாம். பேச்சு வார்த்தையால் தீர்க்க முடியாத பிரச்னைகளே கிடையாது. முதலில் உன் ராமனிடம் நீ பேசு. அவனிடம் போய்ச்சேர். பிறகு அந்த ராமனைப் பற்றியும், சீதையைப் பற்றியும் சிந்திக்கலாம்…. புரிகிறதா?’

 

மனம் நிறைய குழப்பங்கள் இருந்தாலும், பாட்டி சொல்வது சரி என்று புரிய தன் வாழ்க்கையை சரி செய்ய எழுந்தாள் பேத்தி.

 

இந்த சீதையும் தன் ராமனை மன்னிப்பாள் என்று நம்புவோம்!

5 thoughts on “‘சீதை ராமனை மன்னித்தாள்’

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்தமைக்கு சந்தோஷம் மன்னிக்கவே முடியாத பல ராமன்கள் இருக்கிறார்களே அவர்களை என்ன செய்வது? என்றே நீங்கள் சொல்லவில்லையே எப்பவும் சீதைகளே மன்னித்துக்கொண்டிருந்தால் இந்த இராமன்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதே என் கருத்து

  2. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    அருமையான கதையைத் தந்தமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s