உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்புவோம், வாருங்கள்!

 

 

twins 1

படம் உதவி, நன்றி: கூகிள்

 

 

போனவாரம் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் அந்தப் பெண். ஒரு ஆண், ஒரு பெண் என்று நான்கு வயதிலும் 2 வயதிலுமாக இரண்டு குழந்தைகள். என்னை மிகவும் கவர்ந்தது அந்த இரண்டாவது குழந்தை – பெண் குழந்தை. ஏற்கனவே பார்த்திருந்ததால் தயக்கம் இல்லாமல் என்னிடம் வந்தது. சென்ற முறை பார்த்திருந்த போது அதற்கு ஒரு பாட்டு –

‘பரங்கிக்காய பறிச்சு

பட்டையெல்லாம் சீவி,

பொடிப்பொடியா நறுக்கி,

உப்பு காரம் போட்டு

இம்(ன்)பமாகத் திம்(ன்)போம்.

இன்னும் கொஞ்சம் கேட்போம்,

குடுத்தா சிரிப்போம்;

குடுக்காட்டி அழுவோம்!’

– அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்திருந்தேன். என்னைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து தனது சின்னக்கைகளால் அந்த பாட்டிற்கு அபிநயம் செய்ய  ஆரம்பித்தது. அப்படியே அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டேன். அது இப்போது புதிதாக ஒருபாட்டைப் பாடக் கற்றுக்கொண்டுள்ளது. ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாட்டு.

 

மழலையில் அது பாடும்போது வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை. ‘ல்லோ….ல்லோ’ மட்டும் நன்றாகக் கேட்டது. குழந்தையின் குரலில் பிடிக்காத பாட்டும் பிடித்ததாயிற்று. தேன் போல இனிக்கும் குரலில் வார்த்தைகளை முழுங்கி முழுங்கி, வாயில் ஜொள்ளு வழிய அது பாடியது ‘குழலினிது யாழினிது’ என்ற குறளை நினைவிற்குக் கொண்டு வந்தது.

 

துளிக்கூட தயக்கம் இல்லாமல் எல்லோருடன் பழகியது. வாய் ஏதோ ஒரு பாட்டை பொரிந்து கொண்டே இருந்தது. ஏ,பி,ஸி,டி., பாபா ப்ளாக் ஷீப், என்று வீட்டைச் சுற்றிச்சுற்றி பாடியபடியே வளைய வந்து கொண்டிருந்தது. வீடே கலகலவென்று எங்கெங்கும் குழந்தையின் காலடி பட்டு மணத்துக் கொண்டிருந்தது. ‘காலைல எழுந்து வரும்போதே பாடிக்கொண்டே தான் வருவாள்’ என்று குழந்தையின் அம்மா சொன்னாள். என்ன ஒரு கொடுப்பினை! என்ன தவம் செய்தனை அம்மா என்று பாட வேண்டும் போல இருந்தது.

 

நாங்கள் சாப்பிடும்போது என் அருகிலேயே உட்கார்ந்து கொண்டது அந்தக் குழந்தை. என் தட்டிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து எடுத்து வாயில் வைத்துக் கொண்டது. வாயில் போனது கொஞ்சம், என்றால் கையிலிருந்து விழுந்தது நிறைய. ‘பாட்டி சாப்பிட்டும், தொந்தரவு செய்யாதே!’ என்ற அதனுடைய அம்மாவின் அதட்டலை அது கண்டுகொள்ளவேயில்லை. அம்மா பரிமாற வரும்போது முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல பாவ்லா காட்டும். அம்மா அந்தப்பக்கம் போனவுடன் குறும்பு சிரிப்புடன், கண்கள் மின்ன என் தட்டிலிருந்து எடுத்ததைத் திரும்பவும் தட்டிலேயே போடும். இப்படியாக எடுப்பதும், போடுவதுமாக –  அன்றைக்கு நான் சாப்பிட்டது சிறுகை அளாவிய கூழ்!

 

சாப்பிட்டு முடித்து சோபாவில் உட்கார்ந்தவுடன் என் முதுகுப் பக்கம் வந்த நின்று என்னைக் கட்டிக்கொண்டு ‘பாட்டி!’ என்றது. மெத்து மெத்தென்ற அதன் சின்ன உடல் தந்த சுகத்தை என்னவென்று சொல்லுவேன்? குழந்தையின் அம்மா அதை சற்று நேரம் தூங்கச் சொன்னாள். அது ‘பாட்டி, பாட்டி…’ என்று என்னைத் தொட்டுக் காண்பித்தது. நான் அந்தக் குழந்தையை அணைத்தவாறே படுத்துக் கொண்டேன். அதன் முதுகில் தட்டிக் கொண்டே ‘ஜோ, ஜோ கண்ணம்மா’ என்று பாடினேன். உடனே அந்தக் குழந்தையும் என்னைத் தட்டி ‘ஜோ ஜோ’ என்று பாட ஆரம்பித்தது. ‘நான் தான் வசுதா, நீதான் பாட்டி, சரியா?’ என்றேன். அந்தக் குழந்தைக்கு ரொம்பவும் குஷியாகிவிட்டது. ‘வசுதா, வசுதா’ என்று என்னைக் கூப்பிட ஆரம்பித்தது. நானும் ‘பாட்டி, பாட்டி, கதை சொல்லு பாட்டி! அப்போதான் தூங்குவேன்’ என்றேன். குழந்தை தன் மழலையில் ஏதேதோ சொல்லிற்று. எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. குழந்தையும் என்னுடன் சிரிக்க ஆரம்பித்தது. நானும் அந்தக் குழந்தையின் உலகத்திற்குள் சென்றுவிட்டேன்.

 

எத்தனை நாளாயிற்று இதுபோல சிரித்து! நாம் எல்லோருமே குழந்தைகளாக இதுபோல ஒருகாலத்தில் கவலை இல்லாமல் சிரித்தவர்கள் தான். வயது ஏற ஏற கவலைகளும், பலவிதமான அலைக்கழிக்கும் எண்ணங்களும் நம்மை இந்தக் குழந்தைத்தனத்தில் இருந்து வேறு உலகத்திற்குக் கடத்தி விடுகின்றன. சிரிக்க மறந்து விடுகிறோம். கோபம் என்பதே நம் குணமாகிவிடுகிறது. குழந்தைத்தனம் நம்மை விட்டு விலகி விடுகிறது. பெரியவர்களாகி விட்டால் சிரிப்பது என்பதே பாவச்செயல் என்று எண்ணத் தொடங்குகிறோம். மன்னிப்பது  மறப்பது இரண்டும் நம் அகராதியிலிருந்து அகன்று விடுகிறது.

 

ஒவ்வொரு பண்டிகை வரும்போதும் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறோம். ‘சின்னவளா இருந்தபோது……’ என்று ஏக்கத்துடன் நம் நினைவலைகளைப் பதிவு செய்கிறோம். அந்த நாட்கள் திரும்ப வராதா என்று ஏங்குகிறோம். அதெல்லாம் ஒரு காலம் என்று வருந்துகிறோம். ஏன் இப்படி? யாராவது சொன்னார்களா, நீ வளர்ந்தவுடன் உனக்குள் இருக்கும் குழந்தையை மறந்துவிடு என்று? அசந்து மறந்து சிரித்து விடாதே என்று யாராவது சொன்னார்களா? சந்தோஷமாக இருக்க எப்போது மறந்தோம்?

 

இன்றைக்கு குழந்தைகள் தினம். நாம் ஏன் இந்த தினத்தை நம்முள் உறங்கிக் கிடக்கும் குழந்தையை எழுப்பும் தினமாக மாற்றக்கூடாது? 24×7 இணையத்துடன் இணைந்திருக்க விரும்பும் நாம் நமது உற்றார் உறவினருடன் இணைந்திருக்க விரும்புவதில்லை. நமக்குள் ஒரு வெறுப்பு வந்து உட்காந்து விட்டது. குழந்தையாக இருந்த போது சீக்கிரம் பெரியவர்கள் ஆக விரும்பினோம். ஆகியும் விட்டோம். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?

 

குழந்தையின் மனதில் இருக்கும் உலகம் எளிமையானது; தூய்மையானது. அந்த உலகத்தில் தேவையில்லாதது நடந்தால் அந்தக் குழந்தை முதலில் அழுதாலும், மறந்து மன்னித்து கடந்து மேலே சென்று விடுகிறது. குழந்தைகள் நமது சிறு வயது நினைவுகளை பலமுறை நினைக்க வைத்து நம்மை மறுபடிஅந்த உலகிற்கு அழைத்துப் போகின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பழைய பகையை, விரோதத்தை மறக்காமல் மனதிற்குள் வைத்திருந்து மனதை எதிர்மறை எண்ணங்களால் நிரப்பி நம்மை நாமே வெறுக்கும் அளவிற்குப் போய்விடுகிறோம்.

 

குழந்தைகளிடம் இருக்கும் அப்பாவித்தனமோ அல்லது எல்லாவற்றையும் கண்டு வியக்கும் சக்தியோ நம்மிடம் குறைந்துவிட்டதால் நாம் இப்படி உம்மணாமூஞ்சிகளாக மாறவில்லை. குழந்தைகளாக இருந்தபோது நம்மிடம் இருந்த ‘தனித்துவம்’ நம்மைவிட்டுப் போனதாலேயே நாம் இப்படி எரிச்சலும், கோபமும் நிறைந்தவர்களாக ஆகிவிட்டோம். சோபா மேலிருந்து குதிக்காதே என்றால் அடுத்த நிமிடம் குதிப்போமே. எங்கே போயிற்று அந்த துணிச்சல்? எங்கிருந்து கற்றோம் இப்படி எல்லாவற்றிற்கும் பயப்பட?

 

பெரியவர்கள் ஆனால் இப்படி இருக்கவேண்டும். அப்படி இருக்கக்கூடாது என்று நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். அவர்கள் என்ன சொல்வார்களோ, இவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று நாலு பேருக்காக வாழ ஆரம்பித்துவிட்டோம். நம்முடைய சந்தோஷங்களை வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.

 

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் வேண்டாம். மறப்போம், மன்னிப்போம். பகைமையை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டாம். வாழ்க்கையின் நல்ல பக்கத்தை, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வரங்களை நினைப்போம்.

 

இந்தக் குழந்தைகள் தினத்தில் நம்மை நம் இறுக்கங்களிலிருந்து தளர்த்திக் கொண்டு நம்முள் நீண்ட காலமாக உறங்கிக் கிடக்கும் அந்தக் ‘குழந்தையை’ எழுப்புவோம், வாருங்கள்!

 

 

 

 

 

18 thoughts on “உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்புவோம், வாருங்கள்!

  1. வாங்க ஸ்ரீராம்!
   உண்மை. நமது குழந்தைத் தனத்தையும் தொலைத்து விடுகிறோம். வருத்தமான உண்மை.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  1. வாங்க ஐயா!
   குழந்தையாகி அப்படியே இருந்துவிட மாட்டோமா என்றும் தோன்றுகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   உங்கள் பின்னூட்டங்கள் தொடர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
   இருமுறை வாசித்து ரசித்ததற்கு நன்றி.

 1. எல்லோரும் ஆசைப்படுவது மீண்டும் குழந்தையாகவே தான் ஆனால் என்ன செய்வது நம்மிடம் time machine இல்லையே மீண்டும் அந்தப் பருவத்துக்கு சென்று விட மிக அருமையான பதிவு ரஞ்சனி பாராட்டுக்கள்

 2. உறங்கிக் கிடக்கும் அந்தக் ‘குழந்தையை’ எழுப்புவோம், வாருங்கள்!

  ….கவிதை…ஒவ்வொரு எழுத்தும் …கருத்தும்…

  இந்த கட்டுரையை படிக்கும் போது மனம் மிக மகிழ்கிறது அம்மா…குழந்தைகள் தினம் என்பது குழந்தைகளுக்காக மட்டும் அல்ல நாமும் அதுப்போல் குழந்தைகள் மனத்தோடு மாற வேண்டும் என்ற புதிய சிந்தனையை ஏற்படுத்துகிறது…

  அருமை..

  1. வாங்க அனு!
   இந்தப் பதிவின் நோக்கத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி!

 3. குழந்தைகளாக மாறிவிட்டால் நல்லது. மனதுக்கு இதமான கட்டுரை.அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   மாற முடியாதே! அதனால் தான் மனது அதற்கு ஏங்குகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. அருமையான பதிவு.
  நீங்கள் சொல்வதை அப்படியே வரி வரி ஒத்துக் கொள்கிறேன்.
  என் கவலைகளிலிருந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றால் என்னுள் இருக்கும் குழந்தைதனம் தான் ரஞ்சனி.
  குழந்தைகளை கண்டால் குழந்தையாகி விடுவேன். முன்பு இருந்த ஊரில் எனக்கு குழந்தை நண்பர்கள் தான் அதிகம்.
  இங்கு குடியிருப்பில் எப்போது குழந்தைகள் வெளியில் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் வீட்டுக்கு வரும் குழந்தைகளுடன் விளையாட அவர்க்ளுக்கு பிடித்த விளையாட்டு சாமான்களை பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறேன் அவர்க்ளுடன் விளையாடி களிப்பேன்.
  பரங்கிகாய் பாட்டு எனக்கு புதுசு குறித்து வைத்துக் கொண்டேன் பாடுவதற்கு.

  1. வாங்க கோமதி.
   இந்தப் பரங்கிக்காய் பாட்டு எங்கள் வீட்டுக் குட்டிகள் எல்லாருக்கும் நான் முதலில் சொல்லிக் கொடுக்கும் பாட்டு. என் மாமி எனக்குக் கற்றுத்தந்தது இந்தப் பாட்டு.
   வருகைக்கும், நீங்கள் இன்னும் உங்களுக்குள் இருக்கும் அந்தக் குழந்தையைப் போற்றிப் பாதுகாத்து வருவதற்கும் மகிழ்ச்சி கோமதி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s