மறக்கமுடியாத மாணவர்கள்!

 

interviewமறக்க முடியாத மாணவர்கள் என்றால் நிறைய பேர்கள் நினைவிற்கு வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மாதிரி. வயது வித்தியாசம் வேறு; சிலர் மிகவும் சீரியஸ் ஆக கற்றுக்கொள்ள வருவார்கள். சிலர் ‘டேக் இட் ஈசி’ பாலிசியுடன் வருவார்கள். வகுப்பறையை கலகலவென்று ஆக்குபவர்கள்; தங்களது கஷ்டங்களைச் சொல்லி எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்துபவர்கள்; குழந்தைகள் ஆங்கிலக் கல்வி கற்கும்போது தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லையே என்று வருந்தும் இளம் அன்னைமார்கள்; ஆசிரியர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், என்று பலவிதமான மனிதர்கள்.

 

ஒவ்வொரு வகுப்பிலும். மனிதர்களைக் கையாளுவது எப்படி என்பதை எங்களைப் போன்ற ஆசிரியர்கள் முதலில் கற்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் வருவார்கள். அதை நான் பூர்த்தி செய்தால்தான் எனக்கு நல்ல பெயர் வரும். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும், வகுப்பு பற்றி,  ஆசிரியரைப் பற்றி மாணவர்கள் (feedback) எழுதிக் கொடுக்க வேண்டும். அதற்கென்றே சில கேள்விகளுடன் ஒரு படிவம் கொடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும். சில மாணவர்களுக்கு – அடிப்படை வகுப்பில் சேருபவர்களுக்கு அதைப் படித்து பதில் எழுதுவதே  கஷ்டமாக இருக்கும். நீளமான வாக்கியங்கள் எழுத வேண்டாம். எஸ், நோ அல்லது டிக் செய்ய வேண்டிய கேள்விகள் தான் இருக்கும். என்ன வேடிக்கை என்றால் ஆரம்பநிலை மாணவர்களுக்கு கேள்விகளை நான் படித்து பதில்களையும் நான் படித்து விளக்கவேண்டும். அப்போது ஒரு மாணவர் சொன்னார்: ‘மேடம்! எது பெஸ்ட் பதிலோ அதை நீங்களே டிக் செய்துவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் பெஸ்ட் டீச்சர்!’ என்று!

 

ஆங்கிலம் ஒரு கிறுக்கு மொழி என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும். அதுவும் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசும்போது I eat என்பது he, she, it போன்றவற்றுடன் சொல்லும்போது he eats, she eats, it eats என்று மாறும் இல்லையா? அடிப்படை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இதைப்புரிய வைப்பதற்குள் எனக்கு கண்களில் நீர் இல்லையில்லை ரத்தமே வந்துவிடும். ஒருமுறை இதை விளக்கிவிட்டு ஒரு பெண்ணிடம் கேட்டேன். I eat, but my father……..? அவளுக்கு நான் கேட்பதே புரியவில்லை. மறுமுறை (பலமுறை!) விளக்கிவிட்டு பதில் சொல் என்றேன். கடைசியில் நானே சொன்னேன்: My father eats என்றேன். அவள் ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு கன்னட மொழியில் சொன்னாள்: நீங்க சொல்றது சரி மேடம். அப்பா பெரியவங்க. நிறைய சாப்பிடுவாங்க(!!!!????) அதனால ‘s’ சேர்த்துக்கொண்டு eats என்று சொல்லவேண்டும்!’ எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!

 

டாக்டர்கள் (என்னிடம் நான்கு டாக்டர்கள் ஆங்கிலம் கற்க வந்தனர்!), எம்.டெக்., எம்பிஏ படித்தவர்கள், பள்ளியில் ஆசிரியர் ஆக இருப்பவர்கள் என்று பலவித மாணவர்களை என் ஆசிரிய வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். படிப்பில் மிகச் சிறப்பாக மதிப்பெண்கள் எடுத்து நல்ல நிறுவனத்தில் வேலையும் ஆகியிருக்கும். ஆனால் ஆங்கிலம் பேச வராது. மைக்கோ-பாஷ் நிறுவனத்திலிருந்து ஒருவர் ஆங்கிலம் கற்க வந்திருந்தார். ‘என் சப்ஜெக்டில் என்ன கேட்டாலும் பதில் சொல்லுவேன். அதில் அவர்கள் மகிழ்ந்து போய் இன்னிக்கு சாயங்காலம் பார்ட்டிக்கு வரயா?’ என்றால் அப்படியே ஒதுங்கிவிடுவேன். பார்ட்டியில் ஆங்கிலத்திலில் பேச வேண்டுமே, அதனால்!’ என்றபோது மிகவும் வியப்பாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை கஷ்டமா என்று. தினசரி விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது என்பது அவர்களுக்குக் கடினமான விஷயம். இதைப்போல பல மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலசமயங்களில் நான் அவர்களிடம் வேடிக்கையாகச் சொல்லுவேன்: ‘பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலம் கற்காதீர்கள். நீங்கள் கற்றுக்கொண்டால் நான் எப்படிப் பிழைப்பது?’

 

மறக்கமுடியாத மாணவர்களில் சுரேந்திராவைப் பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். அவர் என் வகுப்பில் நுழைந்தவுடன் ஒருநிமிடம் நான் பயந்துபோனேன். அவரது வாட்டசாட்டமான உருவம் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. அப்போது வகுப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதனால் மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லை. நான் மட்டும் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் உருவத்திற்கும் அவரது பணிவிற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது. அவரது பிரச்னையை அவர் சொல்லாமலேயே நான் முதல் வகுப்பிலேயே தீர்த்து வைத்தேன். அதனால் என்னுடன் பலநாட்கள் சிநேகிதம் போல பேசத்தொடங்கி விட்டார். அவரது பிரச்னை இதுதான்: அவரது நண்பர் இவருக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நண்பரிடம் உன் கூட வந்திருக்கும் நபரின் பெயர் என்ன என்று எப்படிக் கேட்பது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்றைய வகுப்பில் அதுதான் பயிற்சியாக நான் வைத்திருந்தேன். அவருக்கும் அது தெரியாது;  எனக்கும் இதுதான் அவரது பிரச்னை என்று தெரியாது.

 

ஆரம்பத்தில் his, her என்று சொல்லிக்கொடுத்துவிட்டு நடைமுறைப் பயிற்சிக்கு இருவரைக் கூப்பிட்டேன். மூன்றாமவராக சுரேந்திரா எழுந்து வந்தார். நான் அவரிடம் இரண்டு நபரில் ஒருவரைக் காட்டி அவர் பெயர் என்ன என்று கேளுங்கள் என்றேன். அவர் உடனே, ‘what’s your name?’ என்றார். அந்த நபர்  பதில் சொன்னவுடன் அவரிடமே அவருடன் கூட இருக்கும் நபரின் பெயரைக் கேளுங்கள் என்றேன். சுரேந்திரா நேரடியாக இரண்டாம் நபரைப் பார்த்து, ‘what’s your name?’ என்றார். நான் உடனே ‘அப்படியில்லை; இவரிடம் அவரது பெயரைக் கேளுங்கள்’ என்றேன். ‘I don’t know, madam’ என்றார். ‘இப்போதுதானே சொல்லிக்கொடுத்தேன் ‘his’ என்ற வார்த்தையை. what is his name?’ என்று கேளுங்கள். அவ்வளவுதான்’ என்றேன்.

 

சுரேந்திரா கிட்டத்தட்ட அழும்நிலைக்கு வந்திருந்தார். ‘மேடம் நீங்கள் என்னவோ அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு இதுவரை இந்த உபயோகம் தெரியாது. நீங்கள் எனக்கு இன்று இதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். கண்ணைத் திறந்திருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய உபகாரம்!’ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். சின்னச்சின்ன விஷயங்கள் கூட அவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்று அன்று புரிந்துகொண்டேன்.

தொடரலாம்……