பிரிட்டிஷ் கவுன்சில் கட்டிடத்தின் கீழே இருந்த கோஷி’ஸ் பார் & ரெஸ்டாரண்ட் ரொம்பவும் பிரபலமான இடம். கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரிகள் காபிக்காகவும், பானத்திற்காகவும் வருவார்கள். 1980 ஆம் ஆண்டு இந்தியா வந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் இந்த கோஷி’ஸ் ரெஸ்டாரண்ட்டிற்கு காபி சாப்பிட வந்திருந்தார்.
‘இந்த ரயில்வே கிராஸிங் என்னுடைய இப்போதைய வீட்டிலிருந்து அரைக் கிலோமீட்டர் தான்’ என்கிறார் பெர்னாண்டஸ். 1960, 70 களில் அன்றைய மதாராசிலிருந்து பெங்களூர் வரும் ரயில் தினமும் இந்த லெவல் கிராஸிங் வழியாகப் போகும். கதவுகள் பத்து நிமிடங்கள் மூடப்படும். நாங்கள் இந்த கதவருகில் நின்று கொண்டிருந்தால் ரயில் பயணிகளுக்கு கை அசைப்போம். அவர்களும் எங்களுக்குக் கை அசைப்பார்கள்.
’70 களில் பிரிகேட் ரோடு (Brigade Road) சரித்திரப் புகழ் வாய்ந்த இடம். இந்த நகரத்தில் இருக்கும் நவநாகரீக மனிதர்கள் மாலைவேளைகளில் அங்கு வேடிக்கைகாக போவார்கள். ஒரு இந்திய-அமெரிக்க தம்பதி ஒரு உணவகம் அமைத்து அதில் ஆப்பிள்-பை, வாபில்ஸ் (waffles) முதலியவற்றை பெங்களூர் மக்களுக்கு அறிமுகம் செய்தனர். இரண்டு மூன்று பின்பால் (pinball) இயந்திரங்கள் இருக்கும் அங்கே. இசையில் நாட்டம் உள்ளவர்கள் தங்கள் கிடார்களுடன் அங்கு வந்து உலவிக்கொண்டிருப்பார்கள். அங்கு சவப்பெட்டி செய்பவர் ஒருவரும் இருப்பார்.
இப்போது எல்லாம் போய்விட்டது. பெரிய பெரிய மால்கள் வந்துவிட்டன.
கார்டூனிஸ்ட் திரு பெர்னாண்டஸ் அவர்களின் பரந்துவிரிந்த வீடு மரங்களாலும், பறவைகளாலும், நாய்களாலும் நிறைந்திருக்கும். இந்தப்படத்தில் நாம் பார்ப்பது வீட்டின் ஒரு மூலை.
வீட்டில் இருக்கும் ஆண்கள் மதிய சாப்பாடு நன்றாக சாப்பிட்டுவிட்டு தோட்டத்தில் ஒரு சின்ன தூக்கம் போடுவார்கள். அது ஆண்களின் இடம். வீட்டுப் பெண்கள் அங்கு வந்து உட்காரவே கூடாது. ஒரு பெண் அப்படி வந்து உட்காருவது கௌரவமான செயல் அல்ல என்று எனக்கு சொல்லப்பட்டது.
பிளாஸா திரைஅரங்கம் பெங்களூரின் மிகவும் முக்கியமான ஒரு இடம். இங்குதான் ஹாலிவுட் படங்கள் திரையிடப்படும். இந்தத் திரைஅரங்கை நினைவு படுத்தும் கதை இது: ஒருமுறை எனது அத்தை ஒருவர் இங்கு வந்து ‘கான் வித் த வின்ட்’ (Gone with the wind) படம் பார்த்தார். படம் பார்த்து முடித்துவிட்டு அவர் வெளியே வந்தபோது அவரது காரின் நான்கு டயர்களும் திருட்டுப் போய்விட்டிருந்தன. ‘அவைகள் காற்றோடு போய்விட்டன!’ என்கிறார் பெர்னாண்டஸ்.
1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ரஸ்ஸல் மார்கெட் கட்டிடம். பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட இதற்கு கட்டிடப் பொறியாளர் டி.பி. ரஸ்ஸல் பெயர் இடப்பட்டது.
இது இன்னமும் இயங்கி வருகிறது. மிகவும் கூட்டம் நிறைந்ததும், ஜனங்களின் நெருக்கமான நடமாட்டத்தால் குழப்பம் மிகுந்தும் ஆச்சர்யமாக இருக்கும் இங்கு கிடைக்காத பொருட்களே கிடையாது. உங்கள் தேவைகள் அனைத்தையும் இங்கு வாங்கலாம்.
நன்றி: மண்டயம் குழும மின்னஞ்சல்
இந்தப்படங்களையும், இந்த இடங்களைப் பற்றி திரு பெர்னாண்டஸ் சொல்லியிருப்பதையும் படித்தவுடன் என்னுடைய மலரும் நினைவுகளையும் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. அடுத்த பதிவில் எழுதுகிறேன்.