கார்டூனிஸ்ட் திரு பால் பெர்னாண்டஸ்-இன் ஓவியங்கள் பெங்களூரின் அந்த நாளைய வாழ்வைச் சுற்றியே இருக்கின்றன. இந்தியாவைச் சேர்ந்த இவர் 60,70 களில் பெங்களூரில் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை தனது வாட்டர் கலர் கார்ட்டூன்கள் மூலம் சொல்லுகிறார்.
இந்த தொடர் சித்திரங்களில் அவர் பெங்களூரின் பிரபல இடங்களையும் தனது மூதாதையர்களின் வீட்டையும் வரைந்திருக்கிறார்.
‘பத்து வருடங்களுக்கு முன் எங்கள் பழைய வீடு எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. அந்த வீடு மிகப்பெரியது. அழகான தோட்டங்களுடன் 40 பழமரங்களுடன் இருந்தது.
வீடு தரைமட்டமானவுடன் எனக்கு இந்த நகரம் எப்படி மாறியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் நான் வளர்ந்த இந்த நகரத்தை – என் நினைவில் இருக்கும், எனக்குப்பிடித்த, நான் ஆசை ஆசையாகச் சுற்றி வந்த பல இடங்களையும் வரைய ஆரம்பித்தேன்.
இதன் விளைவு 75 ஓவியங்களும், வரைபடங்களும். முழுமையாக அந்த நாட்களின் நினைவுகளுடன் வரைந்தவை இவை’ என்கிறார்.
தி பெங்களூர் க்ளப் – பிரிட்டிஷ் கட்டிடக்கலைக்கு ஒரு மாதிரி. இன்னும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 1868 ஆம் ஆண்டு சில பிரிட்டிஷ் அதிகாரிகளால் நிறுவப்பட்ட இந்த க்ளப்பில் நிறைய சிறப்பு அங்கத்தினர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பழைய இங்கிலாந்து பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில். இவர் கொடுக்காது போன பில் ரூ 13 (20 சென்ட்ஸ், 14 பென்ஸ்) இன்னும் பாக்கி இருக்கிறது. பிரபல படத்தயாரிப்பாளர் திரு டேவிட் லீன் கடும் விமரிசனத்திற்கு ஆளான தனது பாசேஜ் டு இந்தியா (Passage to India) திரைப்படத்தின் சில பகுதிகளை இந்த க்ளப்பில் எடுத்தார். ‘இன்னும் இயங்கி வரும் இந்த க்ளப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்த அங்கத்தினர்கள் இன்னும் இருக்கிறார்கள்’ என்கிறார் திரு பெர்னாண்டஸ்.
அந்தக்காலத்தில் மக்கள் சலூனுக்குப் போகமாட்டார்கள். பதிலாக முடிதிருத்துபவர் வீடுகளுக்கு வருவார். ஒரு சைக்கிளில் தனது கருவிகளை (தலைமுடி வெட்டத்தான்!) ஒரு துணிப்பையில் எடுத்துக்கொண்டு வருவார். வீட்டின் மரத்தடியில் ஒரு நாற்காலி போடப்பட்டு வீட்டில் இருக்கும் சிறுவர், சிறுமியர், ஆண்கள் எல்லோரும் தலைமுடி வெட்டிக்கொள்ள வரிசையில் நிற்பார்கள்.
‘இதில் ஒரு சங்கடம் என்னவென்றால் அவருக்கு தலைமுடி வெட்ட ஒரே ஒரு ஸ்டைல் தான் தெரியும். எல்லோருடைய தலையையும் – சாரி தலைமுடியையும் அதே ஸ்டைலில் வெட்டிவிடுவார். என் சகோதரிகள் அவரிடம் சர்வதேச பத்திரிகைகளில் வரும் புதுப்புது வகையான முடி அலங்காரங்களை காட்டி அதுபோல வெட்டச் சொல்வார்கள். அவர்களது ஆசை ஒருநாளும் நிறைவேறாது’
‘70களில் நாங்க ஹிப்பி ஸ்டைலில் முடியை நீளமாக வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். பாவம் அவர், ‘இது எனது வியாபாரத்திற்கு நல்லதல்ல என்று வருத்தப்படுவார்!’ என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் பெர்னாண்டஸ்.
‘எம்.ஜி. ரோடில் இருக்கும் காபி ஹௌஸ் எங்களது உலகத்தின் மையப்பகுதி என்றே சொல்லவேண்டும். அப்போதே அது மிகவும் பிரபலமான இடம். நிறைய பத்திரிக்கையாளர்கள் வருவார்கள். ருசியான காபி அன்றும் இன்றும் அங்கு கிடைக்கும். அத்துடன் தோசை, ஆம்லெட் இவைகளும் கிடைக்கும். மதிய உணவு வேளையின் போது கூட்டம் அலைமோதும்.
சிலசமயங்களில் பத்திரிக்கையாளர்கள் எங்களது பக்கத்து மேஜையில் உட்கார்ந்துகொண்டு அடுத்தநாளைக்கான தலைப்புச் செய்திகளை அலசுவார்கள். அடுத்த நாள் அந்தத் தலைப்புகளில் செய்தி வரும்போது எங்களுக்கு மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும்’
கமர்ஷியல் ஸ்ட்ரீட் அந்தக்காலத்து ஷாப்பிங் மையம். உடைகள், நகைகள், வீட்டு உபயோக சாமான்கள், செருப்புகள் என்று எல்லாவிதமான பொருட்களும் கிடைக்குமிடம் இது. பொம்மைக்கடைகளும் தையற்கடைகளும் இங்கு நிறைந்து இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் சமயத்தில் என் அம்மா எங்களை இங்கு அழைத்துவந்து எனக்கும் என்னுடன் பிறந்த 9 சகோதர சகோதரிகளுக்கும் ஒரே மாதிரியான துணி வாங்குவார். பிறகு தையற்காரரிடம் அழைத்துப்போவார். அவர் எங்களின் அளவுகளை எடுத்துக்கொண்டு எங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடைகளை தைத்துக் கொடுப்பார்.
கப்பன் பார்க் (Cubbon Park) போலீஸ் ஸ்டேஷன் மிகவும் அழகான கட்டிடம். உண்மையில் இது ஒரு பழைய கால பிரிட்டிஷ் வீடு. 1910 ஆம் வருடம் போலீஸ் ஸ்டேஷன் ஆக மாற்றப் பட்டு இப்போதும் அப்படியே அழகாக இருக்கிறது.
‘60, 70 களில் பெங்களூர் மிகவும் சோம்பேறியான ஊர். குற்றங்கள் இல்லாமல் இருக்கும். எப்போதாவது ஒரு சைக்கிள் திருடு போகும்’ என்கிறார் பெர்னாண்டஸ்.
‘அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளில் ஊர் சுற்றிகொண்டிருப்பேன். அந்தக்கால போலீஸ்காரர்கள் தலையில் பூந்தொட்டி போல ஒரு தொப்பி அணிந்துகொண்டிருப்பார்கள். நாங்கள் போகிற போக்கில் அவர்களைத் தொட்டு, லேசாகத்தட்டி விட்டுவிட்டுப்போவோம். ஒருமுறை நான் அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டேன். என் அம்மா வந்து மன்னிப்புக் கேட்டபின்புதான் என்னை வெளியில் விட்டார்கள்’.
இந்த ஓவியத்தில் இருப்பது திரு பெர்னாண்டஸ் அவர்களின் மூதாதையர்களின் வீடு. அங்கு நிற்பது அவரது சகோதரிகளில் ஒருவர்.
‘என் தங்கை வெகு அழகாக இருப்பாள். இளைஞர்கள் வந்து அவளை பார்த்து ‘விஷ்’ பண்ணிவிட்டுப் போவார்கள். அங்கே என் மாமா அவளது பாதுகாப்பிற்காக கையில் துப்பாக்கியுடன், வாயில் வசவுகளுடன் இந்தப் பையன்களை பயமுறுத்தி விரட்ட சுற்றிக்கொண்டிருப்பார்’.
இன்னும் சில படங்கள் அடுத்த பதிவில்…….
நன்றி: மண்டயம் குழும மின்னஞ்சல்