Uncategorized

‘உங்களை கிட்னாப் பண்ணப்போறேன்!’

Image result for teacher;s day images

 

இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி: தனக்கு ஆங்கிலம் சொல்லித் தரவேண்டும் என்பதற்காக சீனநாட்டிற்கு சுற்றுலா வந்த ஒரு சிறுவனை வடகொரிய அதிபர் கிம் கிட்னாப் செய்திருக்கிறார் என்று. 12 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து மேற்கு சீனாவிற்கு வந்த டேவிட் ஸ்நெட்டன் (David Sneddon) திடீரென மாயமாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 24. ப்ரிகம் யங் யுனிவர்சிட்டி மாணவரான டேவிட், ஜின்ஷா நதி அருகே  ட்ரெக்கிங் போனபோது நதியில் விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

 

சென்ற வாரம் ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று டேவிட் வடகொரியாவில் வசிக்கிறார் என்றும், அவர் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்றும், அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது. வடகொரிய அதிகாரியும் இதை உறுதி செய்திருக்கிறார். அப்போது வடகொரியாவின் எதிர்கால வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த திரு கிம்-ஜோங்-உன்-னிற்கு ஆங்கிலம் சொல்லித்தர கொரிய மொழியிலும் சரளமாகப் பேசக்கூடிய டேவிட்டை கடத்திச் சென்றதாக இப்போது தெரிய வந்திருக்கிறது.

 

சரி, இப்போது நான் இதை ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? இந்த செய்தி என்னுள் ஒரு பழைய நினைவை கிளப்பிவிட்டு விட்டது. நான் ஒரு நிறுவனத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன் அப்போது. அந்த நிறுவனம் ஜிகினி என்ற இடத்தில் இருந்தது. தினமும் அவர்களது பேருந்து எங்கள் வீட்டருகே வரும். எனது வகுப்புகள் முடிந்தவுடன் திரும்பவும் என் வீட்டருகே கொண்டு வந்து விட்டுவிட்டுப் போகும். என்னிடம் ஆங்கிலம் கற்பவர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். சிலர் மதிய நேரங்களில் வேலைக்கு வருவார்கள். அவர்கள் என்னுடைனேயே அந்தப் பேருந்தில் வருவார்கள். யார் என் பக்கத்தில் உட்கார்ந்து வருவது என்று அவர்களுக்குள் போட்டி நடக்கும். ஏன் என் பக்கத்தில்? ஒருமணி நேரத்துக்கும் மேலான அந்தப் பயணம் முழுவதும் என்னுடன் ஆங்கிலத்தில் பேசலாமே! அதற்குத்தான் இந்தப் போட்டி. நான் ஏறுவதற்கு முன்பே எனக்கு என ஒரு இருக்கை உறுதி செய்துவிடுவார்கள். முதல்நாள் என் பக்கத்தில் உட்கார்ந்தவர் அடுத்தநாள் என் அருகே உட்காரக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அக்கம் பக்கத்து இருக்கைகளில் இருப்பவர்கள் எழுந்து நின்று கொண்டு என் பக்கத்தில் இருப்பவருடன் நான் என்ன பேசுகிறேன் என்று கவனித்துக் கொண்டே வருவார்கள். அவர்களும் எங்கள் உரையாடலில் கலந்து கொள்வார்கள். வகுப்பு முடிந்து திரும்ப வரும்போதும் இதே நிலை தொடரும். அப்போது காலை வேளை பணி முடிந்து திரும்புபவர்கள் என்னுடன் வருவார்கள். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஷிப்ட் மாறும். அப்போது என்னுடன் பயணிப்பவர்களும் மாறுவார்கள்.

 

ஒருமுறை விஜயலட்சுமி என்ற பெண் என் பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தாள். நான் அவளிடம் இன்று எப்படி இருந்தது உன்னுடைய நாள் என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வந்தேன். பதில் சொல்லிக்கொண்டு வந்தவள் என்னைப்பார்த்து ‘ஐ ஆம் கோயிங் டு கிட்னாப் யூ!’ என்றாள் திடீரென்று. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘எதற்கு?’ என்றேன். ‘உங்களை கடத்திக்கிட்டுப் போயி என்னோட வீட்டுல ஆறு மாசம் வச்சுக்கபோறேன். நீங்க எங்கிட்ட எப்பவும் ஆங்கிலத்திலேயே பேசணும். எனக்கு நல்லா ஆங்கிலம் வந்தவுடனே உங்கள விட்டுடுவேன்!’ என்றாள். நான் சிரித்துக்கொண்டே, ‘நீ ஆங்கிலம் பேச என்னை எதுக்குக் கடத்திக் கொண்டு போகணும்? என் வகுப்புக்குத் தவறாமல் வா, கத்துக்கலாம்!’ என்றேன். ‘ஊஹூம்! வகுப்புல நிறையப்பேர் இருக்காங்க. நீங்க எல்லோரையும் கவனிக்கணும். எங்க வீடுன்னா என்னை மட்டும்தான் கவனிப்பீங்க, அதுக்குத்தான்!’

 

நல்லவேளை அதுபோல ஒன்றும் நடக்கவில்லை! ஒவ்வொரு மாணவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஒவ்வொரு திட்டம் வைத்திருப்பார்கள் இந்தப் பெண் போல. ஒரு மாணவர் எப்போதும் எனக்கு நேர் எதிரில் உட்கார்ந்துகொள்வார். என்னை நேராகப் பார்த்தால்தான் அவருக்கு நான் சொல்லித்தருவது தலையில் ஏறுகிறது என்பார்! நான் சிலசமயங்களில் கரும்பலகையில் எழுதுவதற்காக ஒரு ஓரத்திற்குப் போனால் அவரும் தனது நாற்காலியை அந்த ஓரத்திற்கு மாற்றிக்கொள்வார்!

 

இன்னொரு மாணவர் நான் உதாரணம் ஏதாவது கொடுப்பதற்காக ‘he….’ என்று ஆரம்பித்தால் ‘நோ! say ‘she’ என்பார். ‘ஏன் ஒவ்வொருமுறையும் he என்றே உதாரணம் கொடுக்கிறீர்கள்? என்று சண்டைக்கு வருவார்! நான் வேண்டுமென்றே ‘she is an intelligent girl’ என்பேன். அவர் உடனே ‘no! he is an intelligent boy!’ என்பார்!

 

சமீபத்தில் பலவருடங்களுக்குப் பின் எனக்கு தொலைபேசினார் ஒரு மாணவர். எடுத்தவுடனேயே ‘உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல் வைத்துக்கொண்டிருப்பதற்கு நன்றி!’ என்றார். பழைய நினைவுகள் பலவற்றை பகிர்ந்துகொண்டார். ‘வகுப்பு துளிக்கூட போரடிக்காமல் நீங்கள் சொல்லிக்கொடுப்பீர்கள். நிறைய ஜோக் சொல்லுவீர்கள். என் மனைவியிடம் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்’ என்று மூச்சுவிடாமல் பேசினார். எனக்கே பல விஷயங்கள் மறந்துவிட்டன. ஆனால் இவர் பேசும்போது அந்தக்காலத்திற்கே சென்று விட்டேன். நிறைய மாணவர்கள் தங்கள் நண்பர்களையும் என் வகுப்பில் சேரும்படி சொல்லி எங்கள் மையத்திற்கு அனுப்புவார்கள். நான் இப்போது அந்த நிலை வகுப்பு எடுக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் எப்போது எடுக்கிறீர்களோ சொல்லுங்கள், அப்போது வருகிறோம் என்பார்கள். என் பாஸ் ரொம்பவும் ஆச்சரியப்படுவார். ‘என்ன மேஜிக் செய்கிறீர்கள் நீங்கள்?’ என்பார். ரொம்பவும் பெருமையாக இருக்கும்.

 

செப்டம்பர் மாதம் வந்தால் என் மாணவர்கள் என்னை நினைத்துக்கொள்வது போல நானும் அவர்களை நினைத்துக்கொள்ளுகிறேன். வாழ்வில் நிறைய அனுபவங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் ஆசிரியராக இருந்த அந்தக்காலங்கள் உண்மையில் பொற்காலங்கள் தான்.

 

உலகத்தில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கும். அவர்கள் எல்லோருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

Advertisements

14 thoughts on “‘உங்களை கிட்னாப் பண்ணப்போறேன்!’

 1. ஆசிரியர் தினமா? நல்ல வேளை. கிட்நாப் பண்ணாமல் விட்டாள். இப்படியும் சொல்ல ஒரு மாணவி. நல்லாசிரியை விருதை வாங்கிக் கொள்ளுங்கள். உடல் நலம் ஸரியாகியதா? அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   மிகவும் நிதானமாகப் பதில் சொல்லுகிறேன். மன்னிக்கவும்.
   உடல் நலம் தேறி மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்துவிட்டேன்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. இவ்வளவு வருடங்கள் கழிவுத்தும் நினைவு கூர்ந்து தொலைபேசும் மாணவர்களை பெற்றிருப்பதிலிருந்து நீங்கள் எவ்வளவு சுவாரஸ்யமான ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் நினைக்க வைத்து விட்டீர்கள். ஆசிரியர் தின வாழ்த்துகள்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   எல்லா ஆசிரியர்களுமே நம்மை ஏதோ ஒருவகையில் பாதிக்கிறார்கள், இல்லையா?,
   பலமுறை பல ஆசிரியர்களை நான் நினைவு கூறுவேன்.
   தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

 3. அரசு, தனியார் பள்ளிகளில் வேண்டுமானால் நாம் குருகுலத்திற்கு முடிவு கட்டியிருக்கலாம். கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளில் (நீங்கள் செய்திருக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ், விளையாட்டுப் பயிற்சிகள், பல்கலை ஆய்வுப் படிப்புகள்) குருகுலம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
  ஆசிரியர் தின வணக்கங்கள்.
  அன்புடன்
  பாண்டியன்.

  1. வாங்க பாண்டியன்!
   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. (சுதந்திர தின வாழ்த்துக்களும் கிடைக்கப்பெற்றேன்.

   உண்மைதான். இதுமாதிரியான வகுப்புகளில் வழக்கமான ஆசிரியர் மாணவர் உறவு வேறுவிதங்களில் மேம்பட்டு இருக்கிறது. தொடரும் உறவாகிவிடுகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
   தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  1. வாங்க நெல்லைத் தமிழன்!
   எல்லா ஆசிரியர்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைத்திருக்கும். ஆனால் வழக்கமான ஆசிரியர்களுக்கு (பள்ளிகூடங்களில் வேலை செய்பவர்கள்) அலுத்துப் போய்விடுகிறார்கள். வேலை அதிகம் என்று தோன்றுகிறது.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
   உங்களின் முதல் வருகையோ இது? தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  1. வாங்க சந்திரா!
   பல வருடங்களுக்குப் பிறகும் அவர்களை நினைக்க வைக்கிறார்களே, அதுதான் அவர்கள் செய்யும் மாயம்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  1. வாங்க அனு!
   உண்மைதான் அனு. அவர்களிடமிருந்து நான் அதிகம் கற்றிருக்கிறேன். நிறைய எழுதலாம்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s