Uncategorized

குற்ற உணர்ச்சி தேவையா?

 

1.8.2016 இதழ் குங்குமம் தோழியில் வந்த கட்டுரை.

குங்குமம் தோழி

‘இந்திரா நூயி இப்படிப்பொதுவெளியில் தன்னுடைய குற்ற உணர்ச்சியைக் கொட்டி இருக்க வேண்டாம். ஒரு தாயாகவும், மனைவியாகவும் தான் தன் கடமையைச் சரிவரச் செய்யவில்லையோ என்கிற இவரது புலம்பல் நம்மை பழைய காலத்திற்கே அழைத்துச் செல்லுகிறது. இது தேவையில்லாதது. பெண்கள் தங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். முடியாததைப் பற்றிப் பன்னப்பன்ன பேசுவதை விட்டுவிடவேண்டும்!’

 

இந்திரா நூயியின் பேட்டி பல பெண்களுக்கு ரொம்பவும் சங்கடத்தை விளைவித்தது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண், பெப்சிகோவின் CEO, இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பவர் இப்படிப்பெசலாமா? ‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல வளைந்து கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் குற்ற உணர்ச்சியிலேயே சாக நேரிடும். நாம் அப்படி ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்!’ என்று சொல்லியிருக்க வேண்டாம்.

 

அவரது இந்த வெளிப்படையான பேச்சு பலரையும், குறிப்பாக பெண்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. வளைந்து கொடுப்பது பற்றி சொல்லட்டும் ஆனால் குற்ற உணர்ச்சி எதற்கு? அதுவும் அத்தனை உயர் பதவியிலிருப்பவர் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டதைப்போலவும், அதற்காகத் தனக்குத்தானே சவுக்கடி கொடுத்துக் கொள்வதைப்போல ஏனிந்தப் பேச்சு?

 

பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள் என்று வரும்போது, எதற்காக இப்படி குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கிறார்கள்? ஒரு ஆண் தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதற்காகவோ, அல்லது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் வேலைகளை சரிவரச் செய்ய முடியவில்லை என்றாலோ இப்படி குற்ற உணர்ச்சியில் தடுமாறுவதாகச் சொல்லுகிறார்களா? இல்லையே! பின் ஏன் பெண்கள் மட்டும் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல இந்தக் குற்றஉணர்வை சொல்லிக் கொள்ளுகிறார்கள்? எல்லோருக்காகவும், எல்லா இடத்திலும், எல்லாமாகவும் இருப்பது என்பது சாத்தியமில்லாத செயல். இடத்திற்குத் தகுந்தாற்போல வளைந்து போக வேண்டியிருக்கும். ஆனால் அதற்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இதனால் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகிறது.

 

அலுவலகம்-வீடு இரண்டிற்கும் சமமான இடம் கொடுக்கத்தான் பெண்கள் நினைக்கிறார்கள். வீட்டிற்குத்தான் முதலிடம் என்று எல்லாப் பெண்களுக்குமே புரிந்திருக்கிறது. ஆனால் சிலசமயங்களில் ஒன்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது என்ன செய்யமுடியும்?  குறைந்த பட்சம் குற்ற உணர்ச்சியைத் தவிர்க்கலாம். சிலசமயங்களில் இரண்டிலும் உச்சகட்ட சூழ்நிலைகள் ஏற்படலாம். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் அல்லது எதை முதலில் செய்து முடிக்கவேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த சமயத்தில் அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்க தயங்காதீர்கள். இங்கு உணர்வு பூர்வமான முடிவுகள் தேவையில்லை. ஒருவேளை நீங்கள் உங்கள் அலுவலகப் பணிக்கு முதலிடம் கொடுத்து குடும்பப் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டி வந்தால், அதற்காகக் குற்ற உணர்ச்சி கொள்ளாதீர்கள். முதலில் குடும்பத்தைக் கவனித்திருக்க வேண்டுமோ என்று மனதிற்குள் புழுங்காதீர்கள். இந்த மனப்புழுக்கம் உங்களின் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

 

இந்திரா நூயியின் அம்மா சொல்லுகிறார்: ‘நீ பெப்சிகோவின் தலைவராக இருக்கலாம். முதலில் நீ ஒரு மனைவி, மகள், மருமகள், அம்மா. எல்லாம் கலந்த கலவை நீ. உன் தலையில் இருக்கும் கிரீடத்தை வெளியில் கழற்றிவிட்டு விட்டு வா!’ இது சற்று பழமைவாதம் போல தெரிந்தாலும், இது மிகவும் உண்மை. ஒரே சமயத்தில் எல்லாமாகவும் இருப்பதற்கு முயற்சி செய்து குற்ற உணர்ச்சியில் இறந்து போகாமல் இருக்கலாம். இந்திராவின் அம்மா சொல்வதுபோல தலையில் இருக்கும் கிரீடத்தை – அது தங்கமோ, வைரமோ, தகரமோ, முள்ளோ – வெளியில் விட்டுவிடுவது நல்லது. ஆண்களுக்கும் இதே வார்த்தைதான். வீட்டிற்கு வந்துவிட்டால் வீடு தான் முக்கியம். வீட்டில் வந்து அலுவலகத்தைப் பற்றி எண்ணிக்கொண்டு ‘இன்னும் கொஞ்சநேரம் இருந்து வேலைகளை முடித்துவிட்டு வந்திருக்கலாம் என்றோ, அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வீட்டைப் பற்றி எண்ணுவதோ – தேவையில்லாதது. இரண்டு இடங்களிலும் இதனால் உபயோகம் இல்லை. உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும் இந்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்.

 

நம் எல்லோருக்கும் அடிமனதில் இது போன்ற குற்ற உணர்ச்சி வேர்விட்டு இருக்கிறது. மனஉறுதியுடன்  இந்த எண்ணத்தைக் அடியோடு பிடுங்கி எறியவேண்டும். நாம் செய்யும் சில மதச் சடங்குகள் கூட இப்படிப்பட்டவைதான். நாம் செய்த தவறுக்கு நாம் வலியை அனுபவிக்க வேண்டும் என்று நமக்கு நாமே வலியை ஏற்படுத்திக் கொண்டு வலியினால் நமது உடலையும், மனதையும் பரிசுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும், வலியின் மூலம் நம் பாபத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறோம். நிஜத்தில் அது உண்மையா?

 

நாம் செய்யும் தவறுகளுக்கும், நமது தோல்விகளுக்கும் நம்மை நாம் தண்டித்துக் கொள்ளும் பழக்கத்தை தவறு என்கிறது புதிய உளவியல் ஆராய்ச்சி. சுய-இரங்கல் – சரியாகப் படியுங்கள் சுய பச்சாத்தாபம், கழிவிரக்கம்  அல்ல – மற்றவர்களைப் பார்த்து அவர்களது நிலை கண்டு இரங்குகிறோம் அல்லவா? அதே போல நம் மேல் நாமே இரங்கவேண்டும் என்கிறது இந்த ஆராய்ச்சி. நமது ஏற்றத்தாழ்வுகளை மனதார ஏற்றுக்கொள்வது நமது உடல், மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதனால் படபடப்பு, மனஅழுத்தம் குறையும் என்று டாக்டர் கிறிஸ்டின் நெஃப் தனது ‘சுய-இரங்கல்’ என்ற தமது  புத்தகத்தில் கூறுகிறார். நமது தவறுகளை ஒப்புக்கொள்ளுதல் நம்மை மேலும் புத்திசாலிகள் ஆகவும், மேலும் ஆரோக்கியமானவர்கள் ஆகவும், மேலும் சந்தோஷமானவர்களாகவும் ஆக்குகிறது என்கிறார் அலினா டூஜெண் தனது ‘பெட்டர் பை மிஸ்டேக்ஸ்’ என்ற புத்தகத்தில்.

 

‘எதற்காக இந்த குற்றஉணர்வு? ஏன் தன் சுயத்தைத் தியாகம் செய்துவிட்டு ஒரு குற்றஉணர்வுடன் வாழுதல்? இப்படிச் செய்வது பாலியல் சார்ந்த ஒரு உணர்வாக இருக்கிறது. பெண்களை மட்டுமே பிடித்தாட்டும் இந்த உணர்வுகளிலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும். குற்றஉணர்வு எந்தவிதத்திலும் உங்களுக்கு ஆறுதல் தராது. இது நம்மை பின்னுக்கு இழுக்கிறது. இதை விட்டுவிட்டு முன்னேறுங்கள், பெண்களே!’ என்கிறார் அபர்ணா பாத்ரா, வில்லியம் கிராண்ட் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி.

 

ஒருமுறை நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்ற முடிவு எடுத்தபின் அதற்காக வருத்தப்படக் கூடாது. ஒரே ஒரு இந்திரா நூயி தான் இந்த உலகத்தில் இருக்க முடியும், பிறகு எதற்கு குற்றஉணர்வு?

 

நமது வாழ்க்கையை  குற்றங்குறைகளோடு வாழக் கற்றுக்கொள்வோம்!

 

முதல் பகுதி: இந்திரா நூயி பேட்டி:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

8 thoughts on “குற்ற உணர்ச்சி தேவையா?

  1. நமது வாழ்க்கையை குற்றங்குறைகளோடு வாழக் கற்றுக்கொள்வோம்!//

    accept people as they are! என்பது போல் நம்மை நாமே ஏற்றுக் கொளல் என்று சொல்லலாம் இல்லையா..

    //நமது தவறுகளை ஒப்புக்கொள்ளுதல் நம்மை மேலும் புத்திசாலிகள் ஆகவும், மேலும் ஆரோக்கியமானவர்கள் ஆகவும், மேலும் சந்தோஷமானவர்களாகவும் ஆக்குகிறது//

    அருமையான கருத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s