இசை · Uncategorized

அடித்துப்பாடும் பாடகி…..

 

(முதல் பாதி ஏற்கனவே வலைச்சரத்தில் எழுதியது தான்) அங்கு படித்தவர்கள் ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த பகுதியைப் படிக்கலாம்!)

நாங்கள் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு தம்பதி. சித்ரா, தாசரதி என்று. சித்ரா நன்றாகப் பாடுவாள். (அவளே அடிக்கடி சொல்லிக்கொள்ளுவாள்!) அதனாலேயே தாசரதி பாடுபவர்களைக் கிண்டல் அடிப்பார். ரொம்பவும் உற்சாகமான தம்பதி. இருவரும் ஒருவரையொருவர் சீண்டி கொள்வது ரசிக்கும்படி இருக்கும். ஒருமுறை அப்போது மிகவும் பிரபலமாக இருந்த – அவ்வப்போது சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த பாடகரின் கச்சேரி தூரதர்ஷனில் ஒளிபரப்பானது. சித்ரா அவரது விசிறி. அவர்கள் வீட்டில் அப்போது தொலைக்காட்சி வந்திருக்கவில்லை. அதனால் நான் சித்ராவை எங்கள் வீட்டிற்கு வந்து கேட்குமாறு அழைத்திருந்தேன். தாசரதியும் கூடவே வந்தார்.

 

கச்சேரி ஆரம்பித்தது. அந்த காலத்தில் அவரது கச்சேரி கேட்டிருப்பவர்களுக்கு அவர் பாடும்போது செய்யும் சேட்டைகள் நன்றாகவே தெரியும். பின்னால் தம்பூரா போடும் பெண்ணைப் பார்த்து வழி…ஸாரி…சிரிப்பார். அவர் கூடவே வரும் அவரது மனைவியும் மேடையில் அமர்ந்திருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பார். அவரது பாட்டை விட இதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். சித்ராவின் பிள்ளை ரொம்பவும் சின்னவன் – கேள்வி கேட்பதில் மன்னன். கேள்வி கேட்டு நம்மைத் துளைத்து விடுவான். கச்சேரி ஆரம்பித்தவுடன் இவனது கேள்விக் கணைகளும் பறக்க ஆரம்பித்தன.

 

‘ஏன் இந்த மாமா இப்படி திரும்பித் திரும்பிப் பார்த்து சிரிக்கறா?’

சித்ரா அவனை சமாளிக்க தயாராகவே வந்திருந்தாள். ‘அந்தப் பொண்ணு சரியா தம்பூரி போடறாளா இல்லையானு பார்க்கத்தான்….’

‘எதுக்கு சிரிக்கணும்?’

‘ப்ரெண்ட்லியா சிரிக்கறா…’

தூரதர்ஷன் காமிராமேனுக்கு அன்று செம மூடு போலிருக்கு. பாடகரையும் அந்த தம்பூரா பெண்ணையும் மாற்றி மாற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பாடகரின் மனைவியையும் அவ்வப்போது காண்பிக்கத் தவறவில்லை. கச்சேரியை விட இது தாசரதிக்கு பிடித்திருந்தது.

சித்ராவின் பிள்ளை விடாமல் கேட்டான்: ‘அந்த மாமா மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? வாய ஏன் இப்படி கோணிக்கறார்?’

சித்ரா பதில் சொல்வதற்குள் குறுக்கே பாய்ந்தார் தாசரதி. ‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான் இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா…!

 

உண்மையிலேயே பாடகரின் மூஞ்சி சிரிக்கறாரா அழறாரா என்றே தெரியவில்லை. ‘ழ……ழ……’ என்று வேறு வார்த்தைகளை முழுங்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ‘சுப்புடு’ தான் சங்கீத கச்சேரிகளுக்கு விமரிசனம் எழுதுவார். விமரிசனம் என்றால் அப்படி இப்படி இல்லை. கிழித்து தோரணம் கட்டிவிடுவார். இந்த பாடகர் சுப்புடு வாயால் நிறைய குட்டு வாங்கியவர். இருவருக்கும் பத்திரிகைகளில் வாக்குவாதமும் நடக்கும். தியாகராஜரின் கிருதிகளில் தவறு இருக்கிறது என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார் பாருங்கள்! விறுவிறு நாவல் போல பத்திரிக்கைகள் இந்தச் செய்தியை போட்டுத் தள்ளின.

 

சுப்புடு சங்கீதம் மட்டுமில்லை நாட்டியக் கச்சேரிகளைப் பார்த்தும் விமரிசிப்பார். நம்மூரில் பிறந்து ஹிந்தி சினிமாவில் கொடி நாட்டிய தாரகை ஒருவரின் நாட்டியத்திற்கு சுப்புடு எழுதியிருந்தார்: ‘நந்தனாரின் ‘வருகலாமோ?’ பாட்டிற்கு இந்தப் பெண் செய்த அபிநயம் ‘காலிங் பெல்லை அழுத்தி ‘மே ஐ கமின்?’ என்று கேட்பதுபோல இருந்தது’ என்று.

 

என் அக்கா ஒருமுறை அடையாறு அனந்தபத்மநாபஸ்வாமி கோவில் ஒரு கச்சேரிக்கு அழைத்துப் போயிருந்தாள். ‘மிக மிக நன்றாகப் பாடும் பாடகி இவர். நீ நிச்சயம் கேட்க வேண்டும்’ என்று என் அக்கா பீடிகை வேறு நிறையப் போட்டிருந்தாள். அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் சென்றேன். அன்றென்னவோ அந்தப் பாடகி ‘துக்கடா’ மூடில் இருந்தார். ஆரம்பத்திலிருந்தே கனராகங்களை எடுத்து ஆலாபனை செய்து உருப்படியாகக் கிருதிகள் எதையும் பாடவில்லை. இரண்டு மூன்று பாடல்கள் பாடுவதற்குள் நேயர் விருப்பம் – காகிதச் சீட்டுகள் அவருக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். பாடகியும் அதற்காகவே காத்திருந்தது போல முகமெல்லாம் மலர்ந்து ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார்.

 

சரி, நல்லதாக ஏதாவது பாட்டு வரும் என்று நாங்களும் சிறிது சந்தோஷத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தோம். பாடகியும் நிமிர்ந்து உட்கார்ந்து பாட ஆரம்பித்தார்: ‘விஷமக்காரக் கண்ணன்…..!’

பளார்!

திடுக்கிட்டுப் போய் பாடகியைப் பார்த்தேன். நல்லகாலம்! பக்கத்திலிருக்கும் (பக்கவாத்தியாக்காரர்கள்!) யாரையும் அடிக்கவில்லை. தன் தொடையில்தான் அறைந்து கொண்டார். என்னவொரு பளார்! இவர் அடித்த அடியில் கச்சேரியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் திடுக்கென விழித்துக்கொண்டனர். யார், யார் அடி வாங்கினார்கள்? என்று கதி கலங்கி இங்கும் அங்கும் பரபரக்கப் பார்த்தனர். என்ன எது என்று அறிவதற்குமுன் பாடகி மறுபடி கையை ஓங்கிக்கொண்டு ‘ன்ன்ன்னன்ன்ன்….  விஷமக்காரக் கண்ணன்….’என்று மறுபடியும் ஆரம்பித்து இன்னொரு பளார்! என்னமா அறையறேன் பாருங்கள் என்பது போல ரசிகர்களைப் பார்த்து முகமும் கண்களும் மின்னச் சிரித்தார். கைகளில் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை அடுக்கிக் கொண்டிருந்த தங்க வளையல்களை ஒதுக்கிக் கொண்டு மறுபடி கையை ஓங்கினார். ரசிகர்கள் எல்லோரும் சட்டென்று தங்கள் மேல் அடி (அறை) விழாமல் ஒதுங்கினார்கள் உட்கார்ந்திருந்த சீட்டுகளிலேயே!

 

பாடகர்கள் பாட்டில் ஒன்ற வேண்டும் என்பது சரியான விஷயம். ஆனால் இப்படியா?

 

ஒருவழியாக கடைசிச் சரணத்திற்கு வந்தார் பாடகி.

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அழைப்பான் (கண்ணன்)

பாடகி தன்  வலது கண் அருகில் தன் வலது கையைக் கொண்டுபோய்  விரல்களை மடக்கி நீட்டி, எல்லோரையும் கூப்பிட்டார்!)

மூகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான் (பளார்! பளார்!)

எனக்கது  தெரியாதென்றால் (ஆஆஆஆஆ …. என்று மெதுவாக இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசைந்தார் பாடகி!)

நெக்குருக கிள்ளிவிட்டு (சபையில் உட்கார்ந்திருந்தவர்களைக் கையை நீட்டிக் கிள்ளினார்! – செம கிள்ளு!)

விக்கி விக்கி அழும்போது இது தாண்டி முகாரி என்பான் (பாடகியும் அழுதார்!)

 

அன்று நிச்சயம் அத்தனை ரசிகர்களும் அறை, கிள்ளு எல்லாம் வாங்கியிருப்பார்கள் – அத்தனை ரியலிஸ்டிக் ஆகப் பாடி, அபிநயம் பிடித்து ரசிகர்களை அறைந்து…அமர்க்களப் படுத்திவிட்டார் அந்தப் பாடகி!)

 

கண்ணன் இன்னொருமுறை விஷமம் செய்வானா?

 

 

அடுத்த பகுதியில் (எப்போது என்று கேட்காதீர்கள், ப்ளீஸ்!) அடிச்சு துவைத்துப் போட்டு…)

 

 

 

Advertisements

8 thoughts on “அடித்துப்பாடும் பாடகி…..

  1. வாங்க ஸ்ரீராம்!
   பதிவின் கடைசியில் ஒரு டிஸ்கி போட்டிருக்க வேண்டுமோ? : இந்தப்பதிவைப் படித்தவுடன் பாடக, பாடகியர் யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல என்று?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 1. பாடகி அருணா சாய்ராம் என்றே எனக்கும் தோன்றியது – ஸ்ரீராமும் அதையே சொல்லி இருக்கிறார்.

  //‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான் இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா…!//

  செம ரகளை!

  1. வாங்க வெங்கட்!

   மேலே ஸ்ரீராமிற்கு சொன்ன பதில் உங்களுக்கும்!
   உண்மையிலேயே இருவரும் சேர்ந்து வந்தால் ரகளையாகத்தான் இருக்கும்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. செமயா எழுதியிருக்கீங்க. ‘நல்லவேளை.. கர்னாடகா கச்சேரில இதெல்லாம் நடந்தது. இந்தமாதிரி சினிமாப் பாடகர்கள் பாட்டோடு ஒன்றிப்பாட ஆரம்பிச்சா, பேசாம ‘நிப்பாட்டு’தான். சில கர்னாடகக் கச்சேரில, கான்ஸ்டிபே… வந்தமாதிரி மூஞ்சியை ரொம்ப மோசமா வச்சிண்டு பாடுகிறார்கள். இன்னும் சிலபேர் இரண்டு கைகளையும் உரலில் இட்லிக்கு மாவாட்டுவதுபோலெல்லாம் செய்வார்கள். பார்க்க, இது பாடற சமாச்சாரமா அல்லது நடிக்கிற பெர்ஃபார்மன்ஸான்னு சந்தேகம் வந்துடும்.

  1. வாங்க நெல்லைத் தமிழன்!
   முதலில் அது கர்நாடக கச்சேரி. நீங்கள் அதை கர்னாடகா என்று மாற்றிவிட்டீர்களே!
   அருணா சாய்ராம் மிக நன்றாகப் பாடக் கூடியவர். ஆனால் இந்தப் பாட்டிற்கு அவர் பிடிக்கும் அபிநயம் eye sore தான்.
   அன்று எங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டோம்.

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 3. வாங்க கீதா!
  முதல் பகுதி மட்டும் வலைச்சரத்தில் படித்திருப்பீர்கள். பிற்பகுதி அப்புறம் எழுதிச் சேர்த்தது.
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s