Women

‘பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது!

 குங்குமம் தோழி 15.7.2016 இதழில் வெளிவந்த கட்டுரை

 kungmam 16.7.16

சென்ற பகுதியில் திருமணம் வேண்டும் ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெண்களைப் பார்த்தோம். இந்தப்பகுதியில் நீங்கள் சந்திக்கப்போவது ஒரு வித்தியாசமான பெண்மணி:

 

‘என் பெண்களைக் கேட்டீர்களானால் என்னை ஒரு நல்ல அம்மாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’

இப்படிச் சொன்னது ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்திருந்தால் நான் இதை இங்கு எழுதியே இருக்கமாட்டேன். அது ஒரு செய்தியாகவே ஆகி இருக்காது. சொன்னது உலகில் உள்ள – முக்கியமாக இந்தியாவில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பொறாமை கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்மணி! போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் 13 ஆம் இடத்தைப் பிடித்தவரும், உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின் உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி! அவர் இப்படிச் சொன்னார் என்றால் உலகமே கவனிக்காதோ? ஆம் கவனித்தது! உலகின் அத்தனை பகுதியிலிருந்தும் இவர் இப்படிச் சொன்னது குறித்து வாதங்கள், விவாதங்கள் என்று ஒரே அல்லோலகல்லோலம் தான்!

 

இத்துடன் இவர் நிற்கவில்லை. தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். கீழே அவர் சொன்னது:

 

‘14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எப்போதும் நான் வெகு நேரம் வேலை செய்பவள். ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவே என் மேலதிகாரி என்னைக் கூப்பிட்டார். அப்போது மணி இரவு 9.30. ‘இந்திரா, உன்னை நமது நிறுவனத்தின் பிரெசிடென்ட் என்று அறிவிக்கப் போகிறேன். இயக்குனர் குழுவில் நீயும் இருக்கப் போகிறாய்’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை – என்னுடைய பின்னணி, எனது பயணத்தின் ஆரம்பக் கட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது – உலகின் மிகச் சிறந்த ஒரு அமெரிக்கா நிறுவனத்தின் ப்ரெசிடென்ட், இயக்குனர் குழுவில் இடம் என்பது எனக்குக் கிடைத்திருக்கும் தனிச்சிறப்பு என்று நினைத்தேன்.

 

சாதாரண நாட்களில் அலுவலகத்திலேயே இருந்து நடுநிசி வரை வேலை செய்பவள் அன்று வீட்டிற்கு சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை என் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். பத்து மணிக்கு வீட்டை அடைந்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பினால் என் அம்மா மாடிப்படிகளின் உச்சியில் நின்றுக்கொண்டிருந்தார். ‘அம்மா! உனக்கு ஒரு நல்ல செய்தி!’ என்றேன்.

 

‘நல்ல செய்தி கொஞ்சநேரம் காத்திருக்கட்டும்! வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வர முடியுமா?’ என்றார்.

நான் கார் நிறுத்துமிடத்தைப் பார்த்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

‘எத்தனை மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தார்?’ நான் கேட்டேன்.

‘8 மணிக்கு!’

‘அவரை வாங்கிக் கொண்டு வரச் சொல்வது தானே?’

‘அவர் ரொம்ப சோர்வாக இருந்தார்!’

‘சரி சரி. நம் வீட்டில் இரண்டு பணியாட்கள் இருக்கிறார்களே!’

‘அவர்களிடம் சொல்ல நான் மறந்துவிட்டேன்!’

‘………………..!’

‘போய் பால் வாங்கிக் கொண்டு வா! அவ்வளவுதான்!’

ஒரு கடமை தவறாத மகளாக நான் வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வந்தேன்.

 

வீட்டிற்குள் சென்று சமையலறை மேடை மேல் பால் பாக்கட்டை ‘பொத்’ என்று வைத்தேன். ‘நான் உனக்காக ஒரு பெரிய செய்தி கொண்டுவந்தேன். எங்கள் நிறுவன இயக்குனர் குழுவில் நான் தலைவராகப் பதவியேற்கப் போகிறேன். நீ என்னவென்றால் ‘போய் பால் வாங்கிக் கொண்டு வா’ என்கிறாய்! என்ன அம்மா நீ?’ பொரிந்து தள்ளினேன்.

 

என் அம்மா அமைதியாகச் சொன்னார்: ‘சில விஷயங்களை நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீ பெப்ஸிகோ வின் தலைவராக இருக்கலாம். இயக்குனர் குழுவில் இருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், நீ ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு தாய். இவை எல்லாம் கலந்த ஒரு கலவை நீ. அந்த இடத்தை வேறு யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பாழாய்ப்போன அலுவலகக் கிரீடத்தை கார் நிறுத்தத்திலேயே விட்டுவிட்டு வா! அதை வீட்டினுள் கொண்டு வராதே! நான் அந்த மாதிரி கிரீடங்களைப் பார்த்ததே இல்லை!’

 

இதைச் சொன்னவர் யாரென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். திருமதி இந்திரா நூயி CEO, பெப்ஸிகோ!

 

இவர் மேலும் சொல்லுகிறார்:

‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது போல நாம் பாவனை செய்கிறோம். எனக்குத் திருமணம் ஆகி 34 வருடங்கள் ஆகின்றது. எங்களுக்கு இரண்டு பெண்கள். தினமும் நீங்கள் இன்று ஒரு மனைவியாக இருக்கப் போகிறீர்களா, அல்லது அம்மாவாக இருக்கப் போகிறீர்களா என்று முடிவு எடுக்க வேண்டும். காலை நேரத்தில் அந்த முடிவை எடுக்க வேண்டும். இதற்கு பலரின் உதவி தேவை. நாங்கள் இருவரும் எங்கள் குடுக்பத்தினரின் உதவியை நாடினோம். ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்க நாங்கள் இருவரும் மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறோம். ஆனால் நீங்கள் என் பெண்களைக் கேட்டால் நான் ஒரு நல்ல அம்மா என்று அவர்கள் சொல்லுவார்களா தெரியாது. எல்லாவிதத்திலும் அனுசரித்துக் கொண்டு போக நான் முயலுகிறேன்.

 

என்னுடைய பெண்ணின் பள்ளியில் நடந்ததைக் கூறுகிறேன். ஒவ்வொரு புதன்கிழமையும் அவளது பள்ளியில் ‘ வகுப்பறை காபி’ என்ற நிகழ்வு இருக்கும். மாணவர்கள் தங்கள் அம்மாக்களுடன் சேர்ந்து வகுப்பறையில் காபி அருந்துவார்கள். அலுவலகத்திற்குப் போகும் என்னால் காலை 9 மணிக்கு அதுவும் புதன்கிழமை எப்படிப் போக முடியும்? முக்கால்வாசி நேரம் நான் வகுப்பறைக் காபியை மிஸ் பண்ணிவிடுவேன். என் பெண் மாலையில் வீட்டிற்கு வந்து யார் யாருடைய அம்மாக்கள் வந்தார்கள் என்று பெரிய லிஸ்ட் படித்துவிட்டு, ‘நீதான் வரலை’ என்பாள். ஆரம்பத்தில் மனது மிகவும் வலிக்கும், குற்ற உணர்ச்சி கொன்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக சமாளிக்கக் கற்றேன். அவளது கோபத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து யார் யாருடைய அம்மாக்கள் வரவில்லை என்ற பட்டியலைப் பெற்றேன். அடுத்தமுறை அவள் வந்து ‘நீ வரலை, நீதான் வரலை’ என்று சொன்னபோது, ‘மிஸஸ் கமலா வரலை; மிஸஸ் சாந்தி வரலை; நான் மட்டுமே கெட்ட அம்மா இல்லை’ என்றேன்.

 

சமாளிக்க வேண்டும்; ஈடு கொடுக்க வேண்டும். இல்லாவிடில் குற்ற உணர்ச்சியிலேயே மடிய நேரிடும். நமது சொந்த வாழ்க்கை கடியாரமும் தொழில் வாழ்க்கைக் கடியாரமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கிறது. மொத்தமான, முழுமையான முரண்பாடு! நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; தொழில் வாழ்க்கையின் ஆரம்பநிலையைத் தாண்டி நடுக்கட்டத்திற்கு வரும்போது, குழந்தைகள் பதின்ம வயதில் காலடி வைத்திருப்பார்கள்.

 

அதே சமயம் உங்கள் கணவரும் குழந்தையாக மாறியிருப்பார். அவருக்கும் நீங்கள் வேண்டும்! குழந்தைகளுக்கும் நீங்கள் வேண்டும். என்ன செய்ய முடியும்? உங்களுக்கு வயது ஏற ஏற உங்கள் பெற்றோர்களுக்கும் வயது ஏறிக்கொண்டே போகும். அவர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஊஹூம்! பெண்களால் எல்லாவற்றையும் அடையவே முடியாது. எல்லாவற்றையும் சமாளிக்க ஒரே வழி – எல்லோருடனும் ஒத்துப்போவதுதான். உங்களுடன் வேலை செய்பவர்களை பழக்குங்கள். உங்கள் குடும்பத்தை ஓர் நீட்டிக்கப்பட்ட குடும்பமாக மாற்றுங்கள்.

 

பெப்சியில் இருக்கும்போது நான் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனது குழந்தைகள் சின்னவர்களாக இருந்த போது குறிப்பாக இரண்டாமவள் நான் எங்கிருந்தாலும் – சீனா, ஜப்பான் – எனது ஆபிஸிற்கு போன் செய்வாள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு நான் மிகவும் கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருந்தேன். எனது வரவேற்பாளர் போனை எடுப்பார். ‘நான் என் அம்மாவிடம் பேச வேண்டும்!’ எல்லோருக்கும் தெரியும் அது யார் என்று. ‘என்ன வேண்டும் உனக்கு? ‘எனக்கு கேம்ஸ் விளையாட வேண்டும்’ வரவேற்பாளர் உடனே சில வழக்கமா கேள்விகளைக் கேட்பார் : ‘உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாயா?’ என்பது போல. கேள்விகள் முடிந்தவுடன் ‘சரி, நீ ஒரு அரைமணி நேரம் விளையாடலாம்!’ என்பார்.

 

எனக்கும் செய்தி வரும். ‘டீரா கூப்பிட்டாள். நான் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். அவளுக்கு அரைமணி நேரம் விளையாட அனுமதி கொடுத்திருக்கறேன்’ என்று. இதுதான் அல்லது இப்படித்தான் தடங்கல் இல்லாத குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோருடனும், வீட்டில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் சுமுகமாக இயங்கினால் தான் எல்லாம் நடக்கும். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆக இருப்பது என்பது மூன்று ஆட்கள் செய்யும் முழு நேரப்பணியை ஒருவர் செய்வது. எப்படி எல்லாவற்றிற்கும் நியாயம் செய்ய முடியும்? முடியாது. இவ்வளவையும் சமாளித்துக் கொண்டு போகையில் உங்களை அதிகமாகக் காயப்படுத்துபவர்  உங்கள் துணைவராக இருக்கக்கூடும். என் கணவர் சொல்லுவார்: ‘உன்னுடைய லிஸ்டில் பெப்ஸிகோ, பெப்ஸிகோ, பெப்ஸிகோ, உன் இரண்டு குழந்தைகள், உன் அம்மா பிறகு கடைசி கடைசியாக கீழே நான்…!’ இதை நீங்கள் இரண்டு விதமாகப் பார்க்கலாம் நீங்கள் லிஸ்டில் இருக்கிறீர்களே என்று நினைக்க வேண்டும். புகார் செய்யக் கூடாது!’ இப்படிச் சொல்லித்தான் கணவரை சமாளிக்க வேண்டும்!’

 

இப்படிச் சொல்லியதற்காக இவருக்கு வந்த கண்டனங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

 

 

 

 

 

Advertisements

9 thoughts on “‘பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது!

 1. அருமையான பகிர்வு…

  அந்த நல்ல செய்தி பற்றிய கட்டுரையை வசித்ததுண்டு…

  ஆனால் பள்ளியில் உள்ள நிகழ்வு…விளையாட்டு பற்றியவை புதியது…

  எத்துனை அழகாக சமாளிக்கிறார்….சூப்பர்…

 2. இந்திரா நூயி பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் பள்ளி நிகழ்வு புதிய செய்தி! கணவனின் வருத்தம் குறித்த தகவலும் புதிது! அருமையாகச் சமாளித்திருக்கிறார். ஆனால் அதே சமயம் உண்மையையும் ஒப்புக் கொள்கிறார்.

 3. நல்ல கட்டுரை. ஆனால் யாராலும் எல்லாவற்றையும் அடைய இயலாது. எல்லோர் வாழ்விலும் தோல்வியடைந்த பக்கங்கள் இருக்கும். கங்கை அமரன் ஒரு சமயம் சொல்லியிருப்பார், ‘என் திறமையை வெளி உலகம் பாராட்டும் அதே சமயம், என் மனைவிக்கு அதில் மதிப்பில்லை’ என்று. எல்லோராலும் ஏதாவது ஒன்றில்தான் (ஒரு வேஷத்தில்தான்) வெற்றி பெற இயலும். சிலர் அபூர்வமாக ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் வெற்றி பெற்றிருக்கலாம். எல்லோரிடமும் நல்ல பேர் வாங்குபவன் உபயோகமில்லாதவன்.

 4. வேலையில் பெரிய பதவிகள் வகிப்பவர்கள் பலர் எதிர் நோக்கும் சூழ்நிலை இதபோலத்தான் தர்மசங்கடமாக இருக்கும். என்ன செய்வது எல்லா பொறுப்பையும் எப்படி ஒருவரால் நன்றாக செய்ய முடியும் அதிலும் ஒரு பெண் என்றால் அது இன்னும் சிரமம் தான். வாழ்க்கையே ஒரு சர்க்கஸ் போலத்தான் இருக்கும் அருமையான பகிர்வு

 5. இந்திரா நூயி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த அனுபவம் இப்போதுதான் வாசிக்கிறேன். டெல்லிக்கு ராஜாவானாலும் வரிகள் நினைவுக்கு வருகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s