குற்ற உணர்ச்சி தேவையா?

 

1.8.2016 இதழ் குங்குமம் தோழியில் வந்த கட்டுரை.

குங்குமம் தோழி

‘இந்திரா நூயி இப்படிப்பொதுவெளியில் தன்னுடைய குற்ற உணர்ச்சியைக் கொட்டி இருக்க வேண்டாம். ஒரு தாயாகவும், மனைவியாகவும் தான் தன் கடமையைச் சரிவரச் செய்யவில்லையோ என்கிற இவரது புலம்பல் நம்மை பழைய காலத்திற்கே அழைத்துச் செல்லுகிறது. இது தேவையில்லாதது. பெண்கள் தங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். முடியாததைப் பற்றிப் பன்னப்பன்ன பேசுவதை விட்டுவிடவேண்டும்!’

 

இந்திரா நூயியின் பேட்டி பல பெண்களுக்கு ரொம்பவும் சங்கடத்தை விளைவித்தது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண், பெப்சிகோவின் CEO, இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பவர் இப்படிப்பெசலாமா? ‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல வளைந்து கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் குற்ற உணர்ச்சியிலேயே சாக நேரிடும். நாம் அப்படி ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்!’ என்று சொல்லியிருக்க வேண்டாம்.

 

அவரது இந்த வெளிப்படையான பேச்சு பலரையும், குறிப்பாக பெண்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. வளைந்து கொடுப்பது பற்றி சொல்லட்டும் ஆனால் குற்ற உணர்ச்சி எதற்கு? அதுவும் அத்தனை உயர் பதவியிலிருப்பவர் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டதைப்போலவும், அதற்காகத் தனக்குத்தானே சவுக்கடி கொடுத்துக் கொள்வதைப்போல ஏனிந்தப் பேச்சு?

 

பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள் என்று வரும்போது, எதற்காக இப்படி குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கிறார்கள்? ஒரு ஆண் தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதற்காகவோ, அல்லது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் வேலைகளை சரிவரச் செய்ய முடியவில்லை என்றாலோ இப்படி குற்ற உணர்ச்சியில் தடுமாறுவதாகச் சொல்லுகிறார்களா? இல்லையே! பின் ஏன் பெண்கள் மட்டும் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல இந்தக் குற்றஉணர்வை சொல்லிக் கொள்ளுகிறார்கள்? எல்லோருக்காகவும், எல்லா இடத்திலும், எல்லாமாகவும் இருப்பது என்பது சாத்தியமில்லாத செயல். இடத்திற்குத் தகுந்தாற்போல வளைந்து போக வேண்டியிருக்கும். ஆனால் அதற்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இதனால் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகிறது.

 

அலுவலகம்-வீடு இரண்டிற்கும் சமமான இடம் கொடுக்கத்தான் பெண்கள் நினைக்கிறார்கள். வீட்டிற்குத்தான் முதலிடம் என்று எல்லாப் பெண்களுக்குமே புரிந்திருக்கிறது. ஆனால் சிலசமயங்களில் ஒன்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது என்ன செய்யமுடியும்?  குறைந்த பட்சம் குற்ற உணர்ச்சியைத் தவிர்க்கலாம். சிலசமயங்களில் இரண்டிலும் உச்சகட்ட சூழ்நிலைகள் ஏற்படலாம். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் அல்லது எதை முதலில் செய்து முடிக்கவேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த சமயத்தில் அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்க தயங்காதீர்கள். இங்கு உணர்வு பூர்வமான முடிவுகள் தேவையில்லை. ஒருவேளை நீங்கள் உங்கள் அலுவலகப் பணிக்கு முதலிடம் கொடுத்து குடும்பப் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டி வந்தால், அதற்காகக் குற்ற உணர்ச்சி கொள்ளாதீர்கள். முதலில் குடும்பத்தைக் கவனித்திருக்க வேண்டுமோ என்று மனதிற்குள் புழுங்காதீர்கள். இந்த மனப்புழுக்கம் உங்களின் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

 

இந்திரா நூயியின் அம்மா சொல்லுகிறார்: ‘நீ பெப்சிகோவின் தலைவராக இருக்கலாம். முதலில் நீ ஒரு மனைவி, மகள், மருமகள், அம்மா. எல்லாம் கலந்த கலவை நீ. உன் தலையில் இருக்கும் கிரீடத்தை வெளியில் கழற்றிவிட்டு விட்டு வா!’ இது சற்று பழமைவாதம் போல தெரிந்தாலும், இது மிகவும் உண்மை. ஒரே சமயத்தில் எல்லாமாகவும் இருப்பதற்கு முயற்சி செய்து குற்ற உணர்ச்சியில் இறந்து போகாமல் இருக்கலாம். இந்திராவின் அம்மா சொல்வதுபோல தலையில் இருக்கும் கிரீடத்தை – அது தங்கமோ, வைரமோ, தகரமோ, முள்ளோ – வெளியில் விட்டுவிடுவது நல்லது. ஆண்களுக்கும் இதே வார்த்தைதான். வீட்டிற்கு வந்துவிட்டால் வீடு தான் முக்கியம். வீட்டில் வந்து அலுவலகத்தைப் பற்றி எண்ணிக்கொண்டு ‘இன்னும் கொஞ்சநேரம் இருந்து வேலைகளை முடித்துவிட்டு வந்திருக்கலாம் என்றோ, அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வீட்டைப் பற்றி எண்ணுவதோ – தேவையில்லாதது. இரண்டு இடங்களிலும் இதனால் உபயோகம் இல்லை. உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும் இந்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்.

 

நம் எல்லோருக்கும் அடிமனதில் இது போன்ற குற்ற உணர்ச்சி வேர்விட்டு இருக்கிறது. மனஉறுதியுடன்  இந்த எண்ணத்தைக் அடியோடு பிடுங்கி எறியவேண்டும். நாம் செய்யும் சில மதச் சடங்குகள் கூட இப்படிப்பட்டவைதான். நாம் செய்த தவறுக்கு நாம் வலியை அனுபவிக்க வேண்டும் என்று நமக்கு நாமே வலியை ஏற்படுத்திக் கொண்டு வலியினால் நமது உடலையும், மனதையும் பரிசுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும், வலியின் மூலம் நம் பாபத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறோம். நிஜத்தில் அது உண்மையா?

 

நாம் செய்யும் தவறுகளுக்கும், நமது தோல்விகளுக்கும் நம்மை நாம் தண்டித்துக் கொள்ளும் பழக்கத்தை தவறு என்கிறது புதிய உளவியல் ஆராய்ச்சி. சுய-இரங்கல் – சரியாகப் படியுங்கள் சுய பச்சாத்தாபம், கழிவிரக்கம்  அல்ல – மற்றவர்களைப் பார்த்து அவர்களது நிலை கண்டு இரங்குகிறோம் அல்லவா? அதே போல நம் மேல் நாமே இரங்கவேண்டும் என்கிறது இந்த ஆராய்ச்சி. நமது ஏற்றத்தாழ்வுகளை மனதார ஏற்றுக்கொள்வது நமது உடல், மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதனால் படபடப்பு, மனஅழுத்தம் குறையும் என்று டாக்டர் கிறிஸ்டின் நெஃப் தனது ‘சுய-இரங்கல்’ என்ற தமது  புத்தகத்தில் கூறுகிறார். நமது தவறுகளை ஒப்புக்கொள்ளுதல் நம்மை மேலும் புத்திசாலிகள் ஆகவும், மேலும் ஆரோக்கியமானவர்கள் ஆகவும், மேலும் சந்தோஷமானவர்களாகவும் ஆக்குகிறது என்கிறார் அலினா டூஜெண் தனது ‘பெட்டர் பை மிஸ்டேக்ஸ்’ என்ற புத்தகத்தில்.

 

‘எதற்காக இந்த குற்றஉணர்வு? ஏன் தன் சுயத்தைத் தியாகம் செய்துவிட்டு ஒரு குற்றஉணர்வுடன் வாழுதல்? இப்படிச் செய்வது பாலியல் சார்ந்த ஒரு உணர்வாக இருக்கிறது. பெண்களை மட்டுமே பிடித்தாட்டும் இந்த உணர்வுகளிலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும். குற்றஉணர்வு எந்தவிதத்திலும் உங்களுக்கு ஆறுதல் தராது. இது நம்மை பின்னுக்கு இழுக்கிறது. இதை விட்டுவிட்டு முன்னேறுங்கள், பெண்களே!’ என்கிறார் அபர்ணா பாத்ரா, வில்லியம் கிராண்ட் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி.

 

ஒருமுறை நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்ற முடிவு எடுத்தபின் அதற்காக வருத்தப்படக் கூடாது. ஒரே ஒரு இந்திரா நூயி தான் இந்த உலகத்தில் இருக்க முடியும், பிறகு எதற்கு குற்றஉணர்வு?

 

நமது வாழ்க்கையை  குற்றங்குறைகளோடு வாழக் கற்றுக்கொள்வோம்!

 

முதல் பகுதி: இந்திரா நூயி பேட்டி:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடித்துப்பாடும் பாடகி…..

 

(முதல் பாதி ஏற்கனவே வலைச்சரத்தில் எழுதியது தான்) அங்கு படித்தவர்கள் ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த பகுதியைப் படிக்கலாம்!)

நாங்கள் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு தம்பதி. சித்ரா, தாசரதி என்று. சித்ரா நன்றாகப் பாடுவாள். (அவளே அடிக்கடி சொல்லிக்கொள்ளுவாள்!) அதனாலேயே தாசரதி பாடுபவர்களைக் கிண்டல் அடிப்பார். ரொம்பவும் உற்சாகமான தம்பதி. இருவரும் ஒருவரையொருவர் சீண்டி கொள்வது ரசிக்கும்படி இருக்கும். ஒருமுறை அப்போது மிகவும் பிரபலமாக இருந்த – அவ்வப்போது சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த பாடகரின் கச்சேரி தூரதர்ஷனில் ஒளிபரப்பானது. சித்ரா அவரது விசிறி. அவர்கள் வீட்டில் அப்போது தொலைக்காட்சி வந்திருக்கவில்லை. அதனால் நான் சித்ராவை எங்கள் வீட்டிற்கு வந்து கேட்குமாறு அழைத்திருந்தேன். தாசரதியும் கூடவே வந்தார்.

 

கச்சேரி ஆரம்பித்தது. அந்த காலத்தில் அவரது கச்சேரி கேட்டிருப்பவர்களுக்கு அவர் பாடும்போது செய்யும் சேட்டைகள் நன்றாகவே தெரியும். பின்னால் தம்பூரா போடும் பெண்ணைப் பார்த்து வழி…ஸாரி…சிரிப்பார். அவர் கூடவே வரும் அவரது மனைவியும் மேடையில் அமர்ந்திருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பார். அவரது பாட்டை விட இதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். சித்ராவின் பிள்ளை ரொம்பவும் சின்னவன் – கேள்வி கேட்பதில் மன்னன். கேள்வி கேட்டு நம்மைத் துளைத்து விடுவான். கச்சேரி ஆரம்பித்தவுடன் இவனது கேள்விக் கணைகளும் பறக்க ஆரம்பித்தன.

 

‘ஏன் இந்த மாமா இப்படி திரும்பித் திரும்பிப் பார்த்து சிரிக்கறா?’

சித்ரா அவனை சமாளிக்க தயாராகவே வந்திருந்தாள். ‘அந்தப் பொண்ணு சரியா தம்பூரி போடறாளா இல்லையானு பார்க்கத்தான்….’

‘எதுக்கு சிரிக்கணும்?’

‘ப்ரெண்ட்லியா சிரிக்கறா…’

தூரதர்ஷன் காமிராமேனுக்கு அன்று செம மூடு போலிருக்கு. பாடகரையும் அந்த தம்பூரா பெண்ணையும் மாற்றி மாற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பாடகரின் மனைவியையும் அவ்வப்போது காண்பிக்கத் தவறவில்லை. கச்சேரியை விட இது தாசரதிக்கு பிடித்திருந்தது.

சித்ராவின் பிள்ளை விடாமல் கேட்டான்: ‘அந்த மாமா மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? வாய ஏன் இப்படி கோணிக்கறார்?’

சித்ரா பதில் சொல்வதற்குள் குறுக்கே பாய்ந்தார் தாசரதி. ‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான் இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா…!

 

உண்மையிலேயே பாடகரின் மூஞ்சி சிரிக்கறாரா அழறாரா என்றே தெரியவில்லை. ‘ழ……ழ……’ என்று வேறு வார்த்தைகளை முழுங்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ‘சுப்புடு’ தான் சங்கீத கச்சேரிகளுக்கு விமரிசனம் எழுதுவார். விமரிசனம் என்றால் அப்படி இப்படி இல்லை. கிழித்து தோரணம் கட்டிவிடுவார். இந்த பாடகர் சுப்புடு வாயால் நிறைய குட்டு வாங்கியவர். இருவருக்கும் பத்திரிகைகளில் வாக்குவாதமும் நடக்கும். தியாகராஜரின் கிருதிகளில் தவறு இருக்கிறது என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார் பாருங்கள்! விறுவிறு நாவல் போல பத்திரிக்கைகள் இந்தச் செய்தியை போட்டுத் தள்ளின.

 

சுப்புடு சங்கீதம் மட்டுமில்லை நாட்டியக் கச்சேரிகளைப் பார்த்தும் விமரிசிப்பார். நம்மூரில் பிறந்து ஹிந்தி சினிமாவில் கொடி நாட்டிய தாரகை ஒருவரின் நாட்டியத்திற்கு சுப்புடு எழுதியிருந்தார்: ‘நந்தனாரின் ‘வருகலாமோ?’ பாட்டிற்கு இந்தப் பெண் செய்த அபிநயம் ‘காலிங் பெல்லை அழுத்தி ‘மே ஐ கமின்?’ என்று கேட்பதுபோல இருந்தது’ என்று.

 

என் அக்கா ஒருமுறை அடையாறு அனந்தபத்மநாபஸ்வாமி கோவில் ஒரு கச்சேரிக்கு அழைத்துப் போயிருந்தாள். ‘மிக மிக நன்றாகப் பாடும் பாடகி இவர். நீ நிச்சயம் கேட்க வேண்டும்’ என்று என் அக்கா பீடிகை வேறு நிறையப் போட்டிருந்தாள். அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் சென்றேன். அன்றென்னவோ அந்தப் பாடகி ‘துக்கடா’ மூடில் இருந்தார். ஆரம்பத்திலிருந்தே கனராகங்களை எடுத்து ஆலாபனை செய்து உருப்படியாகக் கிருதிகள் எதையும் பாடவில்லை. இரண்டு மூன்று பாடல்கள் பாடுவதற்குள் நேயர் விருப்பம் – காகிதச் சீட்டுகள் அவருக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். பாடகியும் அதற்காகவே காத்திருந்தது போல முகமெல்லாம் மலர்ந்து ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார்.

 

சரி, நல்லதாக ஏதாவது பாட்டு வரும் என்று நாங்களும் சிறிது சந்தோஷத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தோம். பாடகியும் நிமிர்ந்து உட்கார்ந்து பாட ஆரம்பித்தார்: ‘விஷமக்காரக் கண்ணன்…..!’

பளார்!

திடுக்கிட்டுப் போய் பாடகியைப் பார்த்தேன். நல்லகாலம்! பக்கத்திலிருக்கும் (பக்கவாத்தியாக்காரர்கள்!) யாரையும் அடிக்கவில்லை. தன் தொடையில்தான் அறைந்து கொண்டார். என்னவொரு பளார்! இவர் அடித்த அடியில் கச்சேரியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் திடுக்கென விழித்துக்கொண்டனர். யார், யார் அடி வாங்கினார்கள்? என்று கதி கலங்கி இங்கும் அங்கும் பரபரக்கப் பார்த்தனர். என்ன எது என்று அறிவதற்குமுன் பாடகி மறுபடி கையை ஓங்கிக்கொண்டு ‘ன்ன்ன்னன்ன்ன்….  விஷமக்காரக் கண்ணன்….’என்று மறுபடியும் ஆரம்பித்து இன்னொரு பளார்! என்னமா அறையறேன் பாருங்கள் என்பது போல ரசிகர்களைப் பார்த்து முகமும் கண்களும் மின்னச் சிரித்தார். கைகளில் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை அடுக்கிக் கொண்டிருந்த தங்க வளையல்களை ஒதுக்கிக் கொண்டு மறுபடி கையை ஓங்கினார். ரசிகர்கள் எல்லோரும் சட்டென்று தங்கள் மேல் அடி (அறை) விழாமல் ஒதுங்கினார்கள் உட்கார்ந்திருந்த சீட்டுகளிலேயே!

 

பாடகர்கள் பாட்டில் ஒன்ற வேண்டும் என்பது சரியான விஷயம். ஆனால் இப்படியா?

 

ஒருவழியாக கடைசிச் சரணத்திற்கு வந்தார் பாடகி.

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அழைப்பான் (கண்ணன்)

பாடகி தன்  வலது கண் அருகில் தன் வலது கையைக் கொண்டுபோய்  விரல்களை மடக்கி நீட்டி, எல்லோரையும் கூப்பிட்டார்!)

மூகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான் (பளார்! பளார்!)

எனக்கது  தெரியாதென்றால் (ஆஆஆஆஆ …. என்று மெதுவாக இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசைந்தார் பாடகி!)

நெக்குருக கிள்ளிவிட்டு (சபையில் உட்கார்ந்திருந்தவர்களைக் கையை நீட்டிக் கிள்ளினார்! – செம கிள்ளு!)

விக்கி விக்கி அழும்போது இது தாண்டி முகாரி என்பான் (பாடகியும் அழுதார்!)

 

அன்று நிச்சயம் அத்தனை ரசிகர்களும் அறை, கிள்ளு எல்லாம் வாங்கியிருப்பார்கள் – அத்தனை ரியலிஸ்டிக் ஆகப் பாடி, அபிநயம் பிடித்து ரசிகர்களை அறைந்து…அமர்க்களப் படுத்திவிட்டார் அந்தப் பாடகி!)

 

கண்ணன் இன்னொருமுறை விஷமம் செய்வானா?

 

 

அடுத்த பகுதியில் (எப்போது என்று கேட்காதீர்கள், ப்ளீஸ்!) அடிச்சு துவைத்துப் போட்டு…)

 

 

 

இந்திய தேசியக்கொடி உருவான வரலாறு..!

 

NATIONAL FLAG.jpg4

 

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது.

 

1904ஆம்ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூறப் பட்டது.

 

கோல்கத்தாவில் பார்சிபாகன் சதுக்கத்தில் 1906 ம்ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது  சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக பச்சைநிறம் மேல் பகுதியிலும், இளஞ் சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டதாக அமைந்திருந்தது.

 

பச்சைநிறம் இசுலாமியத்தைக் குறிப்பதாகவும், இளஞ்சிவப்புநிறம் இந்துத்துவத்தையும் புத்தமதத்தையும் குறிப்பதாகவும்அமைந்தன.

 

அக்கொடியின் பச்சை பட்டைகளில் வெண்தாமரை மலர்கள், வந்தேமாதரம் என்ற வார்த்தைகள், கதிர்வீசும் ஆதவன், பிறைசந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய இடம் பெற்றிருந்தன.  ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களைக் குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டிருந்தது அந்தக் கொடி.

 

நடுபாகத்தில், தேவநாகிரி எழுத்துருவில், வந்தேமாதரம் என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது. அடிபாகத்தின் கொடிக்கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறை நிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டிருந்தது.

 

பின்னர், 1907 ல்அந்தக்கொடியில் சிலமாற்றங்கள் செய்யப்பட்டது. 8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக, வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு, பிக்காய்ஜிரஸ்டோம் ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ்நகரில் 1907 ம்ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.

 

1917 ம்ஆண்டு மீண்டும் தேசியகொடி 3ஆம்  முறையாக மாற்றப்பட்டது.  சிவப்புநிற பட்டை (5) பச்சைநிற பட்டை (4 ), அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடதுபுறம் சிறிய அளவு யூனியன் ஜாக் கொடியும், வலதுபுறம் பிறைச்சந்திரனுடன் கூடிய நட்சத்திரமும், நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இக்கொடி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

 

பின்னர் 1921 ம்ஆண்டு விஜயவாடாவில் இந்திய தேசியகாங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது, பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி, பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார்.

 

இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது. ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை.  1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் (G)கதையை  உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.

 

இதனைதொடர்ந்து, ஏப்ரல் 2, 1931ல் காங்கிரசு ஆட்சிக்குழு அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக்குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவிநிறமும் அதில்சக்கரமும் இருக்குமாறு மாற்றி –யமைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை. பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தைகொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செழுமைக்கெனவும் பொருளுணரப்பட்டன.

 

அதேசமயம், ஆசாத்ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில்கொண்ட ஒரு கொடியை இந்திய தேசியப்படை பயன்படுத்தியது. சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மாகாந்தியின் அகிம்சைவழிகளுக்கு நேர் எதிர்மாறான சுபாசுசந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, சுபாஷ் சந்திரபோஸின்  இந்திய தேசியப்படை பயன்படுத்திய இந்தக் கொடி தேசியக் கொடியாக இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் ஏற்றப்பட்டது.

 

விடுதலைக்குச் சிலநாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக்கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோகசக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. அடர்காவி, அடர்பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும், மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக்கால்களும் கொண்ட ஓர் அசோகச்சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது.

 

இதை 22 – 07 – 1947 ல் இந்திய அரசியல் நிர்ணயசபை கூடி  புது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம்ஆண்டு ஆகஸ்ட் 15 ம்தேதி ஏற்றப்பட்டது.

 

இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [ இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் ] தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவு முறை நிர்ணயிக்கப்பட்டது. சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக்அளவு முறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இந்தமுறை மேம்படுத்தப்பட்டது. கொடியின் நீள, அகலம், நிறங்களின்அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப் பற்றியும் விவரிக்கின்றது.

 

கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது. கொடித்துணி, காதி என்கிற கைத்தறித்துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித் துணியாகத்தான் இருக்கவேண்டும்.

 

கொடியின் முக்கிய மூவர்ணபாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிறகம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிறநெசவு, ஆகிய இருவகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.

 

தேசியக்கொடியினை கையாளவும், மரியாதை செய்யவும் உரிய விதிமுறைகள்

 

தனிமனிதர், தனியார் நிறுவனங்கள் தேசியக்கொடியினை, தேசியச்சின்னங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அதற்குரிய மரியாதையுடனும் மதிப்புடனும் பயன்படுத்த தடையில்லை.

 

  • இதன்படி, தேசியக்கொடியினை எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தலாகாது.
  • பிறருக்கு மரியாதை செய்யும்போது தேசியக்கொடியினைத் தாழ்த்திப் பிடித்து வணக்கம் சொல்லுதல் கூடாது.
  • பொது இடத்தில் தேசியக் கொடியினைக்கிழித்தல், எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்
  • எந்த ஒருபொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாக தேசியக்கொடியினைப் பயன்படுத்தலாகாது.

 

(அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் மறைந்தவரின் உடலை, ராணுவ வீரர் இறந்தால் அவரது உடலை தேசியக்கொடி கொண்டு போர்த்துதல் இதில்அடங்காது.)

  • தேசியக்கொடியை, அணியும் உடை, பயன்படுத்தும் கைத்துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக்கூடாது.
  • தேசியக்கொடி மண்ணில்/ தரையில்/ தண்ணீரில் படும்படியாக விடக்கூடாது.
  • தனியார் கல்வி நிலையங்களில், நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும்போது, கிழிந்த, சேதமான நிலையில் இருக்கும் கொடி பயன்படுத்தலாகாது;
  • மிகவும் பிரதானமான இடத்தில் கொடி ஏற்றப்படவேண்டும்;
  • தேசியக்கொடியுடன் பிறகொடிகள் ஏற்றப்படலாகாது.
  • தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பம் மற்றும் அதன் பீடத்தின் மீது மாலைகளோ அல்லது வேறு பொருட்களோ வைக்கலாகாது.
  • தேசியக்கொடியினை காகிதத்தில் செய்து, விருந்தினர் வருகையின் போது மரியாதை நிமித்தம் அசைத்து வரவேற்பு நல்கலாம்.
  • சூரிய உதயத்திற்கு பின்பு தான் தேசியக்கொடி ஏற்றப்படவேண்டும். அது போல சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கி வைக்கப்படவேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில், தேசியக்கொடி முக்கிய தினங்களில் ஏற்றப்படும் போது, கூடி நிற்பவர் கொடிக்கு எதிர்ப்புறம் ஒரே பக்கத்தில் இருக்கவேண்டும்.
  • கொடி ஏற்றப்பட்டுள்ள கம்பத்தினை சூழ்ந்து நிற்கலாகாது.
  • அரசுகட்டடங்களில் பிறநாட்டுக்கொடி அல்லது ஐ.நாவின் கொடியுடன் நமது தேசியக்கொடி ஏற்றப்படும் சந்தர்ப்பங்களில், கட்டடத்தின் எதிரே நின்று கட்டடத்தைப் பார்ப்பவர்களுக்கு அந்தக்கட்டடத்தின் இடது மூலையில் கொடி வருமாறு ஏற்றவேண்டும்.
  • பலநாட்டுக்கொடிகள் ஏற்றப்படவேண்டிய சந்தர்ப்பங்களில் (உதாரணமாகப் பலநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம்) கட்டடத்தில், நமது தேசியக்கொடியே முதலில் ஏற்றப்பட்டு, கடைசியில் இறக்கப்பட வேண்டும்.
  • பிறநாட்டு ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்து அகரவரிசைப்படி கொடிகளின் வரிசை அமைய வேண்டும்.
  • அரசு விருந்தினராக இந்தியாவில் பயணிக்கும் வெளிநாட்டுப் பிரமுகரின் காரில், வலப்புறம் நம் தேசியக்கொடியும், இடப்புறம் அவரது நாட்டுக்கொடியும் பறக்க விடப்படவேண்டும்.

தலைவர்கள் மறைவின்போது:

  • தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படவேண்டும்.
  • குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், பிரதமர் இவர்களது மறைவின்போது நாடெங்கும்;
  • லோக்சபா சபாநாயகர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிஇவர்கள் மறைந்தால் டெல்லிநகரிலும்;
  • மத்தியஅமைச்சர் மறைந்தால் டெல்லி நகரம் மற்றும் அவர் சார்ந்த மாநிலத் தலைநகரிலும்;
  • மத்தியஅரசின் இணைஅமைச்சர்/ துணைஅமைச்சர் மறைந்தால் டெல்லி நகரிலும்;
  • மாநில அரசின் அல்லது யூனியன் பிரதேச‌ கவர்னர் / முதலமைச்சர் / மறைந்தால் அந்தமாநில யூனியன்பிரதேசம் முழுவதும்;
  • மாநில / யூனியன் பிரதேச அமைச்சர் மறைந்தால் அந்தமாநில /யூனியன் பிரதேச தலைநகரத்திலும் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்படவேண்டும்.

ஆயினும் தலைவர்கள் மறைவு, அடக்கம், எரியூட்டும் தினம் இவை குடியரசு தினமான ஜனவரி 26,சுதந்திரதினமானஆகஸ்ட் 15,  தேசப்பிதா காந்தியாரின் பிறந்த தினமான அக்டோபர் 2, தேசிய வாரமான ஏப்ரல் 6 முதல் 13 வரை (ஜாலியன்வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை போற்றும் விதமான தேசியவாரம் இது), மாநில உதயம் கண்ட நாட்கள் போன்றவற்றில் ஏற்பட்டால், மறைந்த தலைவரின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் மட்டுமே தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவேண்டும்.

 

அதுவும் அந்தநாளில் அவரது உடல்தகனத்திற்காக / அடக்கத்திற்காக அந்தக்கட்டடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டபின் மீண்டும் தேசியக்கொடி முழுக்கம்பத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.

 

காலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பு தலைவர்களின் மரணச்செய்தி கிடைக்கப்பெற்றால், உடன் தேசியக்கொடி அரைக்கம்பத்திற்கு இறக்கப்படவேண்டும்.

 

அன்றைக்கு மாலை அடக்கம் / தகனம் நடைபெறாது இருப்பின் மறுநாளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவேண்டும்.

 

மறுநாள் பறக்கவிடப்படும்போது, தேசியத்துக்கம் பின்பற்றப்படும் என தொடர்புடைய அரசு அறிவிக்கும் நிலையில், அந்த நாட்களில், கொடி முழுக்கம்பத்துக்கு ஏற்றப்பட்டு பின்னர் அரைக்கம்பத்துக்கு இறக்கப்படவேண்டும்.

 

அன்று மாலை கொடி இறக்கப்படும்போது அரைக்கம்ப நிலையிலிருந்து இறக்கப்படலாகாது; அரை கம்ப நிலையில் இருந்து, முழுக்கம்ப நிலைக்கு கொடியினை உயர்த்தி ஏற்றி, அதன்பின்னரே இறக்கவேண்டும்.

 

சென்னையில் தமிழகஅரசின் தலைமைச்செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பமே நம்நாட்டில், தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பங்களில் மிக உயர்ந்தது.

 

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

 

தகவல்: திரு அனந்தநாராயணன் – நன்றி!

 

 

 

 

 

சாவியின் விசிறி வாழை

ranjani narayanan

நேற்று ஒரு நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இது:

அன்பு வணக்கம். நலம் என நம்புகிறேன்.

விசிறி வாழை நாவலை ஒரே மூச்சில், படு வேகமாக வாசித்து முடித்தேன்.அலையோசை, குறிஞ்சி மலர் கொடுத்த அதே கனத்தை, ரணத்தை உணர்ந்தேன்.

உங்களுக்கு மிக பிடித்த நாவல் இது தான் என்று அறிவேன். ஏன் என்று காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இதனை பற்றி பதிவு ஏதும் எழுதி ஊள்ளீர்களா? இருந்தால் சுட்டி தரவும்

அன்புடன்,

……………..

என்று முடித்திருந்தார். இந்த நாவலை சிலமுறை படித்திருந்தாலும் பதிவு எதுவும் எழுதியதில்லை.

விசிறி வாழை நாவல் எந்த வருடம் வந்தது என்று நினைவில்லை. ஆனால் விகடனில் தொடராக வந்து கொண்டிருந்தபோதே படித்திருக்கிறேன். அப்போது புரியாத சில விஷயங்கள் இப்போது படிக்கும்போது புரிகிறது. பல வருடங்களுக்குப் பின் இந்த புத்தகத்தின் pdf கிடைத்தது. இதை அனுப்பியவரும் மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பியவர்தான் –  எனது பிறந்த நாளைக்கென்று தனது பரிசாக இந்தக் கதையின் pdf அனுப்பியிருந்தார்.

இந்தக் கதையின் கதாநாயகி பார்வதி முதிர்கன்னி. சிறுவயதிலேயே அம்மா அப்பாவை இழந்து ஒரே அண்ணனின் குழந்தையை (அண்ணா-அண்ணியின் மறைவிற்குப் பிறகு) தன் குழந்தையாக வளர்த்து வருபவள். தான் படித்த கல்லூரியிலேயே வேலைக்கு சேர்ந்து இன்று அதன் பிரின்சிபால் ஆக இருப்பவள். கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டிடத்தை திறந்து வைக்க வரும் சேதுபதியின் மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.

இனி நண்பருக்கு நான் எழுதிய…

View original post 320 more words

‘பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது!

 குங்குமம் தோழி 15.7.2016 இதழில் வெளிவந்த கட்டுரை

 kungmam 16.7.16

சென்ற பகுதியில் திருமணம் வேண்டும் ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெண்களைப் பார்த்தோம். இந்தப்பகுதியில் நீங்கள் சந்திக்கப்போவது ஒரு வித்தியாசமான பெண்மணி:

 

‘என் பெண்களைக் கேட்டீர்களானால் என்னை ஒரு நல்ல அம்மாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’

இப்படிச் சொன்னது ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்திருந்தால் நான் இதை இங்கு எழுதியே இருக்கமாட்டேன். அது ஒரு செய்தியாகவே ஆகி இருக்காது. சொன்னது உலகில் உள்ள – முக்கியமாக இந்தியாவில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பொறாமை கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்மணி! போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் 13 ஆம் இடத்தைப் பிடித்தவரும், உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின் உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி! அவர் இப்படிச் சொன்னார் என்றால் உலகமே கவனிக்காதோ? ஆம் கவனித்தது! உலகின் அத்தனை பகுதியிலிருந்தும் இவர் இப்படிச் சொன்னது குறித்து வாதங்கள், விவாதங்கள் என்று ஒரே அல்லோலகல்லோலம் தான்!

 

இத்துடன் இவர் நிற்கவில்லை. தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். கீழே அவர் சொன்னது:

 

‘14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எப்போதும் நான் வெகு நேரம் வேலை செய்பவள். ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவே என் மேலதிகாரி என்னைக் கூப்பிட்டார். அப்போது மணி இரவு 9.30. ‘இந்திரா, உன்னை நமது நிறுவனத்தின் பிரெசிடென்ட் என்று அறிவிக்கப் போகிறேன். இயக்குனர் குழுவில் நீயும் இருக்கப் போகிறாய்’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை – என்னுடைய பின்னணி, எனது பயணத்தின் ஆரம்பக் கட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது – உலகின் மிகச் சிறந்த ஒரு அமெரிக்கா நிறுவனத்தின் ப்ரெசிடென்ட், இயக்குனர் குழுவில் இடம் என்பது எனக்குக் கிடைத்திருக்கும் தனிச்சிறப்பு என்று நினைத்தேன்.

 

சாதாரண நாட்களில் அலுவலகத்திலேயே இருந்து நடுநிசி வரை வேலை செய்பவள் அன்று வீட்டிற்கு சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை என் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். பத்து மணிக்கு வீட்டை அடைந்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பினால் என் அம்மா மாடிப்படிகளின் உச்சியில் நின்றுக்கொண்டிருந்தார். ‘அம்மா! உனக்கு ஒரு நல்ல செய்தி!’ என்றேன்.

 

‘நல்ல செய்தி கொஞ்சநேரம் காத்திருக்கட்டும்! வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வர முடியுமா?’ என்றார்.

நான் கார் நிறுத்துமிடத்தைப் பார்த்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

‘எத்தனை மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தார்?’ நான் கேட்டேன்.

‘8 மணிக்கு!’

‘அவரை வாங்கிக் கொண்டு வரச் சொல்வது தானே?’

‘அவர் ரொம்ப சோர்வாக இருந்தார்!’

‘சரி சரி. நம் வீட்டில் இரண்டு பணியாட்கள் இருக்கிறார்களே!’

‘அவர்களிடம் சொல்ல நான் மறந்துவிட்டேன்!’

‘………………..!’

‘போய் பால் வாங்கிக் கொண்டு வா! அவ்வளவுதான்!’

ஒரு கடமை தவறாத மகளாக நான் வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வந்தேன்.

 

வீட்டிற்குள் சென்று சமையலறை மேடை மேல் பால் பாக்கட்டை ‘பொத்’ என்று வைத்தேன். ‘நான் உனக்காக ஒரு பெரிய செய்தி கொண்டுவந்தேன். எங்கள் நிறுவன இயக்குனர் குழுவில் நான் தலைவராகப் பதவியேற்கப் போகிறேன். நீ என்னவென்றால் ‘போய் பால் வாங்கிக் கொண்டு வா’ என்கிறாய்! என்ன அம்மா நீ?’ பொரிந்து தள்ளினேன்.

 

என் அம்மா அமைதியாகச் சொன்னார்: ‘சில விஷயங்களை நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீ பெப்ஸிகோ வின் தலைவராக இருக்கலாம். இயக்குனர் குழுவில் இருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், நீ ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு தாய். இவை எல்லாம் கலந்த ஒரு கலவை நீ. அந்த இடத்தை வேறு யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பாழாய்ப்போன அலுவலகக் கிரீடத்தை கார் நிறுத்தத்திலேயே விட்டுவிட்டு வா! அதை வீட்டினுள் கொண்டு வராதே! நான் அந்த மாதிரி கிரீடங்களைப் பார்த்ததே இல்லை!’

 

இதைச் சொன்னவர் யாரென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். திருமதி இந்திரா நூயி CEO, பெப்ஸிகோ!

 

இவர் மேலும் சொல்லுகிறார்:

‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது போல நாம் பாவனை செய்கிறோம். எனக்குத் திருமணம் ஆகி 34 வருடங்கள் ஆகின்றது. எங்களுக்கு இரண்டு பெண்கள். தினமும் நீங்கள் இன்று ஒரு மனைவியாக இருக்கப் போகிறீர்களா, அல்லது அம்மாவாக இருக்கப் போகிறீர்களா என்று முடிவு எடுக்க வேண்டும். காலை நேரத்தில் அந்த முடிவை எடுக்க வேண்டும். இதற்கு பலரின் உதவி தேவை. நாங்கள் இருவரும் எங்கள் குடுக்பத்தினரின் உதவியை நாடினோம். ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்க நாங்கள் இருவரும் மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறோம். ஆனால் நீங்கள் என் பெண்களைக் கேட்டால் நான் ஒரு நல்ல அம்மா என்று அவர்கள் சொல்லுவார்களா தெரியாது. எல்லாவிதத்திலும் அனுசரித்துக் கொண்டு போக நான் முயலுகிறேன்.

 

என்னுடைய பெண்ணின் பள்ளியில் நடந்ததைக் கூறுகிறேன். ஒவ்வொரு புதன்கிழமையும் அவளது பள்ளியில் ‘ வகுப்பறை காபி’ என்ற நிகழ்வு இருக்கும். மாணவர்கள் தங்கள் அம்மாக்களுடன் சேர்ந்து வகுப்பறையில் காபி அருந்துவார்கள். அலுவலகத்திற்குப் போகும் என்னால் காலை 9 மணிக்கு அதுவும் புதன்கிழமை எப்படிப் போக முடியும்? முக்கால்வாசி நேரம் நான் வகுப்பறைக் காபியை மிஸ் பண்ணிவிடுவேன். என் பெண் மாலையில் வீட்டிற்கு வந்து யார் யாருடைய அம்மாக்கள் வந்தார்கள் என்று பெரிய லிஸ்ட் படித்துவிட்டு, ‘நீதான் வரலை’ என்பாள். ஆரம்பத்தில் மனது மிகவும் வலிக்கும், குற்ற உணர்ச்சி கொன்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக சமாளிக்கக் கற்றேன். அவளது கோபத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து யார் யாருடைய அம்மாக்கள் வரவில்லை என்ற பட்டியலைப் பெற்றேன். அடுத்தமுறை அவள் வந்து ‘நீ வரலை, நீதான் வரலை’ என்று சொன்னபோது, ‘மிஸஸ் கமலா வரலை; மிஸஸ் சாந்தி வரலை; நான் மட்டுமே கெட்ட அம்மா இல்லை’ என்றேன்.

 

சமாளிக்க வேண்டும்; ஈடு கொடுக்க வேண்டும். இல்லாவிடில் குற்ற உணர்ச்சியிலேயே மடிய நேரிடும். நமது சொந்த வாழ்க்கை கடியாரமும் தொழில் வாழ்க்கைக் கடியாரமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கிறது. மொத்தமான, முழுமையான முரண்பாடு! நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; தொழில் வாழ்க்கையின் ஆரம்பநிலையைத் தாண்டி நடுக்கட்டத்திற்கு வரும்போது, குழந்தைகள் பதின்ம வயதில் காலடி வைத்திருப்பார்கள்.

 

அதே சமயம் உங்கள் கணவரும் குழந்தையாக மாறியிருப்பார். அவருக்கும் நீங்கள் வேண்டும்! குழந்தைகளுக்கும் நீங்கள் வேண்டும். என்ன செய்ய முடியும்? உங்களுக்கு வயது ஏற ஏற உங்கள் பெற்றோர்களுக்கும் வயது ஏறிக்கொண்டே போகும். அவர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஊஹூம்! பெண்களால் எல்லாவற்றையும் அடையவே முடியாது. எல்லாவற்றையும் சமாளிக்க ஒரே வழி – எல்லோருடனும் ஒத்துப்போவதுதான். உங்களுடன் வேலை செய்பவர்களை பழக்குங்கள். உங்கள் குடும்பத்தை ஓர் நீட்டிக்கப்பட்ட குடும்பமாக மாற்றுங்கள்.

 

பெப்சியில் இருக்கும்போது நான் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனது குழந்தைகள் சின்னவர்களாக இருந்த போது குறிப்பாக இரண்டாமவள் நான் எங்கிருந்தாலும் – சீனா, ஜப்பான் – எனது ஆபிஸிற்கு போன் செய்வாள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு நான் மிகவும் கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருந்தேன். எனது வரவேற்பாளர் போனை எடுப்பார். ‘நான் என் அம்மாவிடம் பேச வேண்டும்!’ எல்லோருக்கும் தெரியும் அது யார் என்று. ‘என்ன வேண்டும் உனக்கு? ‘எனக்கு கேம்ஸ் விளையாட வேண்டும்’ வரவேற்பாளர் உடனே சில வழக்கமா கேள்விகளைக் கேட்பார் : ‘உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாயா?’ என்பது போல. கேள்விகள் முடிந்தவுடன் ‘சரி, நீ ஒரு அரைமணி நேரம் விளையாடலாம்!’ என்பார்.

 

எனக்கும் செய்தி வரும். ‘டீரா கூப்பிட்டாள். நான் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். அவளுக்கு அரைமணி நேரம் விளையாட அனுமதி கொடுத்திருக்கறேன்’ என்று. இதுதான் அல்லது இப்படித்தான் தடங்கல் இல்லாத குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோருடனும், வீட்டில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் சுமுகமாக இயங்கினால் தான் எல்லாம் நடக்கும். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆக இருப்பது என்பது மூன்று ஆட்கள் செய்யும் முழு நேரப்பணியை ஒருவர் செய்வது. எப்படி எல்லாவற்றிற்கும் நியாயம் செய்ய முடியும்? முடியாது. இவ்வளவையும் சமாளித்துக் கொண்டு போகையில் உங்களை அதிகமாகக் காயப்படுத்துபவர்  உங்கள் துணைவராக இருக்கக்கூடும். என் கணவர் சொல்லுவார்: ‘உன்னுடைய லிஸ்டில் பெப்ஸிகோ, பெப்ஸிகோ, பெப்ஸிகோ, உன் இரண்டு குழந்தைகள், உன் அம்மா பிறகு கடைசி கடைசியாக கீழே நான்…!’ இதை நீங்கள் இரண்டு விதமாகப் பார்க்கலாம் நீங்கள் லிஸ்டில் இருக்கிறீர்களே என்று நினைக்க வேண்டும். புகார் செய்யக் கூடாது!’ இப்படிச் சொல்லித்தான் கணவரை சமாளிக்க வேண்டும்!’

 

இப்படிச் சொல்லியதற்காக இவருக்கு வந்த கண்டனங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.