தீபம் பத்திரிக்கை

கோயிந்தா! கோயிந்தா!

ஜூலை 20, 2016 தீபம் ஆன்மீக இதழில் வெளிவந்துள்ள என் கதை:

விண்ணக வாழ்வை வெறுத்து ‘மனதிற்கு இனிமையாக இருப்பவற்றுள் இனிமையாக இருக்கும்’ திருமால் ஆசையாக வந்து அவதரித்த இடம் திருப்பதி. அங்கிருக்கும் ஸ்வாமி புஷ்கரிணியில் ஒரு சமயம் மகாவித்வான் ஒருவர் ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். மகா பண்டிதர் அவர். நிறையப் படித்தவர். வேதங்களையும், சாஸ்த்திரங்களையும் கரைத்துக் குடித்தவர். வாய்நிறைய பகவானின் திருநாமங்களைச் சொல்லியவாறே திருக்குளத்தில் மூழ்கி எழுந்து கொண்டிருந்தார்.

 

பக்கத்தில் ஒரு பாகவதர். அவரைப் பார்த்தாலே அதிகம் படித்திராதவர் என்று புரிந்தது. வெகுதூரம் நடந்து வந்து திருமலையப்பனை சேவிக்க வந்திருப்பவர் போல இருந்தது. அவரும் நம் மகாவித்துவானைப் போல திருக்குளத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து நீராடிக் கொண்டிருந்தார். ஒவ்வொருமுறை நீரில் அமிழ்ந்து எழும்போதும், ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று உரக்கப் பெருமாளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். நம் மகாவித்துவானுக்கோ பாகவதர் சொல்லும் ‘கோயிந்தா’ என்ற சொல்லே பிடிக்கவில்லை. ‘கோவிந்தன் என்பது என்ன அழகான பெயர்! அதைக்கூட சரியாக உச்சரிக்க வரவில்லை இவருக்கு! பெருமாள் சேவிக்க வந்துவிட்டார்!’ என்று மனதிற்குள் கோவம் கோவமாக வந்தது. ஆனால் யாரோ என்னவோ நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம். பெருமாளை சேவிக்க வந்தவிடத்தில் எதற்கு வீண்வம்பு என்று நினைத்து சும்மாயிருந்துவிட்டார்.

 

நீராடிவிட்டுக் கரையேறினார் மகாவித்துவான். கரையில் வந்தும் பாகவதரின் ‘கோயிந்தா’ கேட்டுக்கொண்டே இருந்தது. மகாவித்துவான் உடை உடுத்துக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு படியில் அமர்ந்து கொண்டார். அவர் உள்ளத்தில் ‘எப்படியாவது இந்த பாகவதருக்கு ‘கோவிந்தா’ என்று சரியான உச்சரிப்பைச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் அந்த பாகவதர் நீராடி முடித்து கரைக்கு வரட்டும் என்று காத்திருந்தார்.

நீராடி முடித்த பாகவதர் கரையேறி வேறு உடை தரித்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஒவ்வொரு வேலைக்கு இடையிலும் ‘கோயிந்தா, கோயிந்தா’ என்றார். மகாவித்துவானுக்குப் பொறுக்க முடியவில்லை. ‘இந்தாப்பா…!’ என்று பாகவதரைக் கூப்பிட எத்தனித்தவர் அவர் ஏதோ பெருமாளுடன் பேசுவதைப் பார்த்து நிறுத்தினார். பாகவதர் திருப்பதி கோவிலின் கோபுரத்தைப் பார்த்து நின்று கொண்டு கைகூப்பியவாறே சொன்னார்: ‘கோயிந்தா, ஒண்ணுமே இல்லாம இருந்த என்னை ஒரு உருப்படியான ஆளாக ஆக்கியது நீதான். கோயிந்தா! கையிலே ஒரு தம்படி இல்லாம வியாபாரம் ஆரம்பிச்ச என்னை இன்னிக்கு ஒரு லட்சாதிபதி ஆக்கியிருக்கிறாய். கோயிந்தா, நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், செல்வம் என்று எனக்கு ஒரு குறையும் நீ வைக்கவில்லை கோயிந்தா! என்ன உன் கருணை! இந்த கோயிந்தா என்கிற பெயரைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது, கோயிந்தா! அழுகை வந்தாலும் கோயிந்தா, சந்தோஷம் வந்தாலும் கோயிந்தா! என்னைக்கு இருந்தாலும் நான், உன் பக்தனாகவே இருக்க வேண்டும் கோயிந்தா, கோயிந்தா, கோயிந்தா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை மறக்காத மனம் கொடு கோயிந்தா!’

 

பாகவதரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மகாவித்துவானை உலுக்கி விட்டுவிட்டன. ‘குறை ஒன்றுமில்லாத கோவிந்தா! உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாமாட் செய்வோம்!’ என்ற ஆண்டாளின் திருவாக்கை எத்தனை எளிமையாக சொல்லிவிட்டார் இந்த பாகவதர்! நாம் தினம்தினம் சொல்லும் ஆயிரம் நாமாக்களை விட இந்த ஒரு கோயிந்தா போதுமே! இதைக்கேட்டு பெருமாள் உள்ளம் குளிரவேதானே இவருக்கு இத்தனை கருணை செய்திருக்கிறார்! இது புரியாமல் அவரைத் திருத்த நினைத்தேனே! திருந்த வேண்டியவன் நானல்லவோ?’ என்று மனதிற்கு நினைத்துக் கொண்டு ‘கோயிந்தா! கோயிந்தா!’ என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

 

 

Advertisements

13 thoughts on “கோயிந்தா! கோயிந்தா!

  1. நல்ல கதை…உண்மையான பக்தி நம் மனதில்தான் இருக்கிறது. இறைவனின் மீது வைத்திருக்கும் சரணாகதியில் தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் கதை..வாழ்த்துகள்

    1. வாங்க கீதா!
      அதே கான்செப்ட் தான். படாடோபத்தை விட எளிமையான பக்தியின் வெளிப்பாடு தான் இறைவனுக்கு உகந்தது என்பதைச் சொல்லும் கதை.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  2. அருமையாக இருந்தது. திருப்பதி ஏழுமலையானுக்கொரு கோயிந்தம் போடுடா கோயிந்தா கோஓஓஓஓஓஓஓஓஓஓஓயிந்தா. பாமரர்கள் சொல்லிக்கொண்டே வருவது ஞாபகம் வந்தது. நாமும் சொல்வோம் கோயிந்தா கோஓஓஓயிந்தா. அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s