கைகொடுத்த மர்பி!

எனது ஆங்கில வகுப்புகள் – 2  முதல் பகுதி

 

 

ஒரு நாள் என் மாணவி ஒருவர் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். ‘யுரேகா’ என்று கூவலாம் போலிருந்ததது எனக்கு. நான் எந்த மாதிரி புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேனோ, அதே போல ஒரு புத்தகம். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்தப் பெண்ணிடம் ‘இது மிக அருமையான புத்தகம். இதை வைத்துக் கொண்டு நீ நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். அந்தப் புத்தகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் புத்தகம் தான் Raymond Murphy என்பவர் எழுதிய ‘Essential English Grammar’ என்ற புத்தகம். மூன்று நிலைகளில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது. முதல் இரண்டுநிலைகள் ஆசிரியர் இல்லாமலேயே ஆங்கிலம் கற்றுக் கொள்ள உதவும் வகையில் எழுதப் பட்டிருந்தது. அந்த மாணவிக்கு அந்தப் புத்தகத்தின் அருமை புரியவில்லை. எனக்குக் கொடுப்பதற்கும் மனசில்லை.

 

அன்று அந்த வகுப்பை முடித்துவிட்டு நேராக புத்தகக் கடைக்குப் போனேன். ரேமன்ட் மர்பி புத்தகம் என்று கேட்டு முதன்முதலாக இந்தப் புத்தகத்தை வாங்கினேன். மொத்தம் 110 பாடங்கள். ஒவ்வொரு பாடமும் ஒரு பக்கம் மட்டுமே. எதிர்ப்பக்கத்தில் வினாக்கள் இருக்கும். முதல் பாடம் ‘am, is, are’ இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இருக்கும். ஒவ்வொரு வாக்கியத்திலும் ‘am, is, are’ தடிமனான எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இரண்டாவது பாடம் ‘am, is, are’  இவைகளை வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்பது. ‘Am I right?” ‘Are you a student?’ ‘Is he your brother?’ என்பதுபோல. அடுத்த பாடம் ‘am, is, are’ இவைகளுடன் வினைச் சொற்கள் கலந்து ‘ing’ சேர்த்து வாக்கியங்கள் அமைப்பது. I am coming to the class என்பது போல. அடுத்த பாடம் ‘Are you coming to the class?’ என்று கேள்வி கேட்பது. படிப்படியாக பாடங்கள் மிகவும் சுவாரஸ்யமாகப் போகும். ஒரு பக்கம் பாடம். எதிர் பக்கம் வினாக்கள். பாடம் புரிந்தால் சுலபமாக விடைகளை எழுதி விடலாம்.

 

என் மாணவர்களிடம் விடையை எழுதாதீர்கள் என்று சொல்லுவேன். ஏனெனில் அடுத்தமுறை ஏதோ சந்தேகம் வந்து பாடங்களைப் படிக்க வேண்டி வந்தால் மறுபடியும் விடைகளை எழுதுவதன் மூலம் எத்தனை தூரம் பாடங்கள் புரிந்திருக்கிறது என்று பார்க்கலாம், இல்லையா? அதனால் விடைகளை எழுதாதீர்கள். ஒவ்வொருமுறையும் மனதிற்குள் சொல்லிப் பாருங்கள் என்பேன். புத்தகத்தின் கடைசியில் விடைகள் இருக்கும். கடைசி நாளன்றுதான் அதைச் சொல்வேன். உண்மையில் அந்தப் புத்தகத்தின் அட்டையில் with answers என்று போட்டிருக்கும். யாருமே அதைப் பார்க்கமாட்டார்கள் நான் சொல்லும்வரை!

 

என் மாணவர்களிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னேன். அதை ஒரு வழிகாட்டி போல வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கலாம் என்றும் சொன்னேன். அடுத்தநாள் வகுப்பில் முக்கால்வாசி பேர் கையில் அந்தப் புத்தகம் இருந்தது. ஆனால் உண்மையில் அதை உபயோகித்தவர்கள் ரொம்ப ரொம்ப குறைவு. அதிலிருந்து பாடங்கள் நடத்துங்கள் என்பார்கள் சில மாணவர்கள். நம் பாடத்திற்கு சம்மந்தப்பட்டதை மட்டும் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுவேன். ஏனெனில் நாங்கள் கொடுத்திருக்கும் புத்தகத்தை முடிக்க வேண்டுமே!

 

இதைப்படிக்கும் உங்களுக்கு என் வகுப்புகள் ரொம்பவும் சீரியஸ் ஆக இருக்கும் என்று தோன்றக்கூடும். நான் தொடர்ந்து ஆங்கிலப் பாடங்களை நடத்துவேன் என்றும் நினைப்பீர்கள். அதுதான் இல்லை. இதோ ஒரு உதாரணம்:

 

ஒரு சமயம் வினைச்சொற்கள் (come, go, sit,) என்பதை விளக்கி வினைச்சொற்களின் முடிவில் ‘ing’ சேர்க்க வேண்டும் (coming, going, sitting) என்று சொல்லி அப்படிச் சொல்வதன் பொருளையும் விளக்கிக் கொண்டிருந்தேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அப்போது ஏன் ING Vysya Bank என்று சொல்லுகிறார்கள்?’ என்று! இப்படிப் பேசும் மாணவர்களையும் நான் சமாளிக்க வேண்டும். கொஞ்சம் வயதில் மூத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த இளம் வயதினர் அடிக்கும் லூட்டி பிடிக்காது. வகுப்பு முடிந்தபின் வந்து புகார் சொல்வார்கள். இளம் வயதினர் இவர்களை ‘அங்கிள்’ என்று கூப்பிட்டு (அழகன் படத்தில் வருமே, அதுபோல) வெறுப்பேற்றுவார்கள்.

 

மாணவர்கள் என்று சொல்லும்போது எல்லா வயதினரும் என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் இளம் வயதுக்காரர்களிலிருந்து, 20+, 30+………..70+ பாட்டி வரை இந்த வகுப்புகளில் வந்து சேருவார்கள். இளம்வயது மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாடம் சொல்லிக்கொடுத்தால் பிடிக்காது. வகுப்பு நேரமே ஒன்றரை மணி நேரம் தான் தினந்தோறும். வகுப்பிற்குள் வந்தவுடன் பாடம் தொடங்கக்கூடாது. ஏதாவது ஜோக் சொல்லி அல்லது சினிமா பற்றிப் பேசி அவர்களை கற்றுக்கொள்ளும் மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும். சிலநாட்கள் பாடமே நடத்த முடியாது போய்விடும். மாணவர்கள் ஏதோ ஒரு விஷயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள் அது தொடர்ந்து கொண்டே போகும். எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்ற திருப்தியுடன் அன்றைய வகுப்பை முடித்துவிடுவேன். அப்படிப் பேசும்போதே அவர்களை சரியான வாக்கியங்கள் அமைக்கும்படி சொல்லுவேன்.

 

மேல்நிலை வகுப்புகள் எல்லாமே குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து குறிப்பிட்ட நாளில் முடிந்து விடும். அடிப்படை வகுப்புகள் தான் திக்கித்திணறி நடக்கும். அடிப்படையைப் புரிய வைத்தால்தான் மேல்கொண்டு பாடம் நடத்த முடியும். அதனால் அந்த வகுப்புகள் மட்டும் 40 நாட்கள் நடத்தப்படும். அந்த வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதனால் அந்த வகுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டு விடும்.

 

மறக்க முடியாத மாணவர்கள் ….நாளை பார்ப்போம்.