எனது ஆங்கில வகுப்புகள்

 

நான் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தபோது எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே புரியாது. ஒவ்வொரு நிலைக்கும் எங்கள் நிறுவனம் வடிவமைத்த புத்தகங்கள் இருக்கும். ஆனால் அடிப்படை நிலைக்கு வாக்கியங்கள் அமைக்கச் சொல்லித்தர வேண்டும். சின்னச்சின்ன வாக்கியங்கள்தான். அதிலும் நிறைய சந்தேகங்கள் வரும். உதாரணத்திற்கு ‘I am go to school’ என்பார்கள். அல்லது ‘I am headache’ (எனக்குத் தலைவலி என்பதற்கு!) என்பார்கள். இந்த வாக்கியங்கள் தவறு என்றால் ஏன் என்று சொல்லி அதை அவர்களுக்குப் புரிய வைத்து பிறகு சரியாக வாக்கியங்கள் அமைக்க சொல்லித்தர வேண்டும்.

 

எங்களுக்குக் கொடுக்கப்படும் புத்தகத்தில் இதெல்லாம் இருக்காது. எங்களது புரிதல் என்னவென்றால் அடிப்படை வகுப்புகளுக்கு வருபவர்களுக்கும் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரியும் என்பது. அதாவது am, is, are முதலியவற்றை பயன்படுத்தவாவது  தெரியும் என்று. ஆனால் சிலருக்கு அதிலேயே சந்தேகம் என்றால் ஆசிரியரின் பாடு திண்டாட்டம் தான். வகுப்பு மிகவும் நிதானமாகிவிடும். சிலர் இவர்களை விட கொஞ்சம் பரவாயில்லை போல இருப்பார்கள். அவர்களுக்கு வகுப்பு நிதானமாகி விடுவதை பொறுக்கமுடியாது. இந்த இரு வகையினரையும் சமாளிக்க வேண்டும். இந்த அடிப்படைகளை விளக்கும் வகையில் புத்தகம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன்.

 

எங்களிடம் வரும் மாணவர்கள் பற்றியும் இங்கு சொல்லவேண்டும். வரும்போதே எத்தனை நாட்களில் ஆங்கிலம் பேச வரும் என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு நிலையும் 24 வகுப்புகள் என்று வைத்திருந்தோம். ஆசிரியர் ஏதோ மாயமந்திரம் செய்து பேச வைத்துவிடுவார் என்ற நினைப்பில் வருபவர்கள் தான் முக்கால்வாசி. அவர்களது புரிதல், அவர்களது முயற்சி மிகவும் முக்கியம் என்பதை முதல்நாளே முதல் வகுப்பிலேயே ஆணி அடித்தாற்போல சொல்லிவிடுவேன். பொதுவாக மாணவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் புத்தகத்தில் 24 பாடங்கள் இருக்கும். அந்த 24 பாடங்களை நான் நடத்தி முடித்துவிட்டால் அவர்களுக்கு ஆங்கிலம் பேச வந்துவிடும் என்ற நினைப்புடன் வகுப்பிற்குள் வந்தவுடன் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொள்வார்கள். கூடவே ஒரு நோட்புக், பேனா. நான் கரும்பலகையில் என்ன எழுதினாலும் அப்படியே காப்பி பண்ணி எழுதிக் கொள்ளத் தயார் நிலையில்.

 

முதல் நாள் மாணவர்கள் என்னை சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவளால் நமக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முடியுமா? நிறைய பேருக்கு எனக்கு ஆங்கிலம் வருமா என்றே சந்தேகம் வரும்! உங்கள் காலத்தில் ஆங்கிலம் மீடியம் உண்டா? நீங்கள் ஆங்கில மீடியத்தில் படித்தவரா? ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரா? என்றால் கேள்விக் கணைகள் என்னை நோக்கி பறந்து வரும். எல்லாமே உடைந்த  ஆங்கிலத்தில்தான்! அவற்றையெல்லாம் சமாளித்து அவர்களுக்கு ஒருவாறு நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘வாருங்கள், உங்களுடன் நானும் கற்கிறேன்’ என்று சொல்லி, அவர்களை கற்பதற்குத் தயார் படுத்துவது என்பது…………..உஸ்………………….. அப்பாடா! (நெற்றி வியர்வை நிலத்தில் விழும்!)

 

அதற்குப் பிறகு அவர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள பல கேள்விகளைக் கேட்பேன். முதல்நாள் யாரும் யாருடனும் பேச மாட்டார்கள். நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் நம்மைவிட அதிகம் தெரிந்திருப்பவர் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் ஓடும்! அவரவர்கள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் தான் எல்லோரும் ஒரே படகில் பிரயாணிக்கும் பயணிகள் என்று புரிய வரும். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் இந்த நிலை வர. பிறகு நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ‘மேடம்! 24 பாடங்களையும் முடித்து விடுவீர்களா?’ என்ற கேள்வி வரும். ஒவ்வொரு நிலைக்கும் 24 வகுப்புகள் தான். அறிமுகம், சந்தேக நிவர்த்தி என்று நான் பாடத்தை துவங்கும் போது மீதி இருபது அல்லது இருப்பத்தியொரு வகுப்புகள் தான் பாக்கி இருக்கும்.

 

அப்போதுதான் சொல்லுவேன்: ‘நான் இரண்டே நாட்களில் எல்லாப் பாடங்களையும் முடித்து விடுவேன். உங்களால் புரிந்து கொள்ளமுடியுமா? இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் ஆங்கிலம் பேச வரும் என்று நினைக்காதீர்கள். வராது…..!’ பாவம்! ‘திக்’கென்று இருக்கும் அவர்களுக்கு! ‘நான் சொல்லித் தருவதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னை ஆயிரம் கேள்விகள் தினமும் கேட்கலாம். எல்லாவற்றிற்கும் என்னிடம் விடை இருக்காது. எனக்குத் தெரியாதவற்றிற்கு பதில் தெரிந்துகொண்டு வந்து உங்களுக்குச் சொல்லுவேன். அதுவரை பொறுமை வேண்டும்….! உங்களுடைய உழைப்பு, புரிதல் இந்தக் கற்றலுக்கு மிகவும் முக்கியம்…! ஆசிரியர் சொல்லிக்கொடுப்பார். நமக்கு இதில் பங்கு இல்லை என்று வராதீர்கள். உங்கள் பங்குதான் இதில் மிகவும் முக்கியம். நீங்கள் ஆர்வம் காட்டினால்தான் என்னால் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்’ என்று சொல்லுவேன்.

 

இப்போது ஓரளவிற்கு என் வகுப்புகள் பற்றி இந்தப் பதிவினைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடருவோம்