புதுயுகப் பெண்கள்

குங்குமம் தோழி ஜூலை 1 ஆம் தேதி இதழில் வந்த என் கட்டுரை.

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3265&id1=62&issue=20160701

 

 யாரிந்த புதுயுகப் பெண்கள்?

‘திருமணமானவர்கள் ஆனால் அம்மாக்கள் இல்லை; தனியாக இருக்கிறார்கள் ஆனால் தனிமையில் இல்லை. இந்தியப் பெண்களில் சிலர் தங்களது தொழில் வாழ்க்கையில் மேலே மேலே செல்ல விரும்புகிறார்கள். அதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயோ, அல்லது திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமலேயோ இருக்கவும் தங்களை தயார் செய்துகொள்ளுகிறார்கள்’ என்று புதுயுகப் பெண்களைப் பற்றி தனது பார்வையைச் சொல்லுகிறார், ஃபிலிம்ஃபேர் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர், திருமதி விமலா பாட்டில்.

 

இவர்களின் அடையாளம் என்னென்ன?

வங்கிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் போன்றவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள். கலைஞர்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றின் இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள்,எழுத்தாளர்கள், இசை அமைப்பாளர்கள், ஒலிப் பொறியாளர்கள், எடிட்டிங் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள், அரசியல் கட்சிகளை வழிநடத்திச் செல்பவர்கள்; இவை  மட்டுமல்ல;  இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள்; கூடவே விளையாட்டு வீராங்கனைகள்.

 

இவர்கள் சுதந்திரமானவர்கள்

லட்சியவாதிகளான இந்தப் பெண்களுக்கு வெற்றிப்படிக்கட்டில் ஏற அவர்களுக்கென இடம் தேவைப்படுகிறது. எந்த ஊருக்கு வேண்டுமானாலும் இடம் பெயர இவர்கள் தயாராக இருக்க வேண்டும். பலவிதமான மக்களையும் கலாச்சாரங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு வேண்டும். தாங்கள் எடுக்கும் முடிவுகளால் யார் பாதிக்கப்படுவார்கள், யார் தன்னைப் பற்றி கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் சுயமான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் வேண்டும். சில தைரியமான, மனஉறுதியுள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். ஆனால் குழந்தைக்கு ‘நோ’ சொல்லிவிடுகிறார்கள். சிலர் தங்களது வெற்றிக்கும், புகழுக்கும் விலையாக திருமணத்தையே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

 

டாக்டர் இஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 35 வயது, திருமணமானவர். ஆனால் குழந்தைகள் இல்லை. அவராகவே வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனை ஒன்றில் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வரும் புற்றுநோய் இலாகாவின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர். இந்தப் பதவிக்கு வர அரும்பாடு பட்டிருக்கிறார். அவரது துறையில் மிகச்சிறந்த வல்லுநர் என்று பெயரெடுத்தவர். ஒருநாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார். தனது ஒவ்வொரு நோயாளியுடனும் அவர்களது குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் பழகுகிறார்.

 

‘என் கணவரை நான் பார்ப்பது மிக மிக அரிது. அவர் ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர். தனது துறையில் உருவாகும் புதுப்புது தொழில்நுட்பங்களை பற்றி விளக்க அவர் உலகம் முழுக்க பயணம் செய்து கொண்டிருப்பார். நாங்கள் இருவரும் அவரவர் பணியில் மும்முரமாக இருக்கிறோம். அதனால் எப்போது நாங்கள் சந்தித்தாலும் அதை ஒரு மிகப்பெரிய விழாவாக நினைத்துக் கொண்டாடுவோம். வாரக் கடைசியில் எங்காவது சின்ன டூர் போய்விட்டு வருவோம். இந்திய அளவுகோலின்படி எனக்கு லேட்-மாரேஜ். நிதானமாக எனக்குத் தகுந்த துணைவரைத் தேடினேன். அதிஷ்டவசமாக ஆஷிஷ்-ஐ எனது வேலை இடத்திலேயே சந்தித்தேன். நாங்கள் இருவரும் எங்களது கனவுகளை எந்தவிதத் தடையுமில்லாமல் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்தோம். எந்தவிதமான பொறுப்புகளும் எங்களை கட்டிப்போடக் கூடாது; தினசரி வேலைகள் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எங்களிடையே இருப்பது பரஸ்பர அன்பும், புரிதலும், தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்ற உறுதிமொழியும். அவ்வளவே!’ என்று சொல்லுகிறார் இஷா.

 

பாரம்பரியத்தை மாற்ற வந்தவர்கள்

இந்திய பாரம்பரிய வழக்கமான ‘படிப்பு, கல்யாணம், குழந்தை, வயதாவது’ என்ற வட்டத்தை உடைத்தவர்களில் இஷா, ஆஷிஷ் இருவரும் ஒரு சின்ன உதாரணம் தான். புதுயுக இந்திய ஆண்களும் பெண்களும் ஒரு புது வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள். இவர்களைப் போன்ற புதுயுக தொழில்துறை வல்லுனர்கள், தொழில் முனைவோர்களின் பன்ச்லைன் என்ன தெரியுமா? DINK அதாவது டபிள் இன்கம் – நோ கிட்ஸ் (Double income, No kids) அல்லது தனியாகவே இருந்து விடுவது. இதன் காரணமாக பல பெண்கள் தங்கள் கருத்திற்கு ஒத்துப் போகும் துணைவர் கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இப்படிச் செய்வதன் மூலம், இந்தியப் பாரம்பரியத்தின் மிகவும் வலிமையான, பழமையான ஒரு கருத்தை – அதாவது பெண் என்பவள் இல்லத்தரசியாகவும், நல்ல அம்மாக்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் வீட்டிற்குள் வைத்து பூஜிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை – தலைகீழாக மாற்ற நினைக்கிறார்கள்.

 

குடும்பம் நடத்துவதிலுள்ள சிக்கல்களினால் இப்போது திருமணம் என்பது ஒரு சுலபமான பந்தமாக இருப்பதில்லை. குடும்பத்தை நடத்த, எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய மிகவும் பாடுபட வேண்டியிருக்கிறது. அதுவும் இன்றைய பெண்கள் ஆண்களுடன் சரிசமமாக வேலைத்திறனை வெளிப்படுத்தும் நேரத்தில் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. உண்மையில் திருமணம், தாய்மை போன்ற பொறுப்புகள் பெண்களை நிறைய இழப்பிற்கு ஆளாக்குகின்றன.

 

கணவன் மனைவி இருவருமே ரொம்பவும் வெற்றிகரமான தொழில்துறை வல்லுனர்களாக இருந்துவிட்டால், பெண்கள் கண்ணுக்குத் தெரியாத உள்ளுறை அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஏனெனில் இந்திய ஆண், ‘ஆண்தான் குடும்பத்தலைவன்;  பெண்டாட்டியின் கீழ் அவன்  இருக்கக்கூடாது’ என்ற மனோபாவத்தில் வளர்க்கப்பட்டவன். ‘இவளது கணவன்’ என்று அறியப்பட அவன் விரும்புவதில்லை. அதனால் வீட்டை நடத்துவதிலோ, குழந்தைகளை வளர்ப்பதிலோ அவனது பங்கு பூஜ்யம் தான். எவ்வளவுதான் பெண்கள் வெகு சாமர்த்தியமாக குடும்பம், அலுவலகம் என்று இரட்டைக் குதிரை மேல் சவாரி செய்தாலும், வீட்டில் மகிழ்ச்சி இருப்பதில்லை.

 

திருமணம் ஒரு தடை

‘சந்தோஷமான திருமணம் என்பது மிகமிக குறைவு’, என்கிறார் தகவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் ஒரு பெண். ‘அலுவலகத்தில் நாளுக்குநாள் அதிகமாகும் மனஅழுத்தம், வீடுகளில் கணவன் மனைவியரிடையே தன்முனைப்பால் (Ego) வரும் சச்சரவு. அதனால் திருமணம், குழந்தைகள் இவைகளை ஒத்துக்கொள்ள பெண்கள்  மிகவும் யோசிக்கிறார்கள்’ என்கிறார் இவர்.

 

கிரண் மஜூம்தார் போன்ற உயர்பதவி வகிக்கும் பெண்கள் கூட இதை ஒப்புக்கொள்ளுகிறார்கள். ‘இந்தியக் கணவர்கள் வெற்றி பெறும் மனைவியை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அதனால் தான் நான் ஒரு வெளிநாட்டுக்காரரை (ஜான் ஷா) மணந்தேன்’ என்கிறார் கிரண். போர்ப்ஸ் பத்திரிக்கையின் ‘உலகின் 100 வலிமையான பெண்கள்’ லிஸ்டில் பல வருடங்கள் இருந்தவர் இவர். இந்தியன் வணிகப்பள்ளி,  மற்றும் ஹைதராபாத்தின் இந்திய தொழில்நுட்ப கழகம் இவற்றின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றுபவர். பெண்கள் எத்தனைதான் முன்னேறினாலும், ஆண்களில் சிலர் மட்டுமே தனது மனைவி வெற்றிபெறுவதை ஏற்றுக்கொண்டும், அதை பாராட்டவும் செய்கிறார்கள். தன் மனைவி தன்னைவிட வெற்றிகரமானவளாகவோ, பிரபலமானவளாகவோ அல்லது தன்னை விட அதிகம் சம்பாதித்தாலோ முக்கால்வாசி ஆண்கள் அவளது வாழ்க்கையை உண்டு இல்லை என்று செய்துவிடுகிறார்கள்.

 

இவர்கள் வேண்டுவது அங்கீகாரம்

‘ஒத்துழைக்கும் கணவன் ஒரு பெண்ணிற்கு கிடைத்தால், அது மிகப்பெரிய சொத்து,’ என்கிறார் ஒரு உள்அலங்கார வல்லுநர் லலிதா வைத்யா. ‘ஆனால் அந்த மனைவி தன் வேலையில் மும்முரமாகவோ, சந்தோஷமாகவோ இருந்துவிட்டால், அந்தக் கணவனுக்குக் கூட பிடிக்காமல் போகலாம்’. சில கணவன்மார்கள் பெண்டாட்டிகளை எப்போதும் பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்கள். தன் அலுவலக நண்பர்களுடன் சிரித்துப் பேசினாலோ, அல்லது வெளியிடங்களுக்குச் சென்று வந்தாலோ பிடிக்காது. இப்போதெல்லாம் பெண்கள் இந்த மாதிரி கணவர்களை அதிகம் கெஞ்ச விரும்புவதில்லை. தங்களது சொந்த வாழ்க்கை, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகளை தாங்களே முடிவு செய்துகொள்ளக் கனவு காண்கிறார்கள். பொருளாதாரச் சுதந்திரம், தங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் இவையே அவர்கள் வேண்டுவது. இந்த அங்கீகாரம் அவர்களுக்கு அமிர்தம் போல. ஏனெனில்  மிகக் கடுமையாக விமரிசிப்பவர்களும், இவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்களுக்கும், இந்தப் பெண்கள் தங்களது சொந்த முயற்சியிலும், திறமையிலுமே முன்னுக்கு வந்தார்கள் என்பதை இந்த அங்கீகாரம் புரிய வைக்கும். சமுதாயமும் இந்தப் புதுயுகப் பெண்களை ஏற்றுக்கொள்ள மாறிக்கொண்டு வருகிறது. புதுப்புது வணிக இணைப்புகள், வணிக சமூகங்கள், பல தொழில்துறை நிறுவனங்கள் போன்றவை முக்கியப் பொறுப்புகளில் பெண்களின்  தலைமையை ஏற்றுகொள்ளுகின்றன.

 

இடைவெளி அவசியம்

அந்தரங்கம் புனிதமானது என்பதே இன்றைய தேசியகீதம். கணவன் மனைவி என்றாலும் இடைவெளி அவசியம். அதுமட்டுமல்ல. திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்வது, திருமணம் இல்லாமல் ஒரு ஆணைத் துணையாக ஏற்றுக் கொள்வது இவையெல்லாம் இப்போது பெண்கள் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் விஷயங்களாகிவிட்டன. பெண்ணின் இயற்கை உந்துதல்களை அவள் திருமணம் என்னும் பந்தத்திற்குள் நுழையாமலேயே பூர்த்தி செய்து கொள்ளலாம். அவளை புரிந்துகொள்ளும் ஒரு ஆடவனுடன் இருவருக்கும் ஒத்துப்போகும் உறவுடன் வாழலாம். அவனிடமிருந்து மரியாதை, காதல், ஆதரவு இவைமட்டுமின்றி பாலியல் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில் இந்த உறவுகள் மிகக் குறைவான பொறுப்புக்களுடன் வருகின்றன.

 

மாறிவரும் இந்தியப் பெண்கள்

ஒருகாலத்தில் இந்தியப் பெண்கள் – இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் – நல்ல இல்லத்தரசிகளாக இருப்பதில் பெருமை அடைபவர்களாக அறியப்பட்டிருந்தனர். மிகச்சிறந்த இல்லத்தரசிகளாகவும், நல்ல அம்மாக்களாகவும் புகழப்பட்டவர்கள். ஆனால் இந்தப் புதுயுகப் பெண்கள் பல உச்சங்களைத் தொடவேண்டும் என்ற முனைப்புடன் தங்களின் பழைய இடங்களை விட்டுவிட்டு புதுப்புது இடங்களைத் தேடி பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆணைப்போலவே தங்கள் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர் இந்தப் புதுயுகப்பெண்கள். எந்த வேலையானாலும், அது எந்த இடத்தில் இருந்தாலும் தங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எது சரி எது மதிப்பை கொடுக்கும் என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்.

 

நவீன சமுதாயம் இந்தப் பேரார்வப் பெண்களை கட்டுப்படுத்துவது கடினம். எந்தப் பொறுப்பும் இல்லாமல் இருப்பது, யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாதது போன்றவைகளுக்காக இந்தப் பெண்கள் கொடுக்கப் போகும் விலையும் அதிகம் தான். புதுயுகப் பெண்கள் இந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொண்டு வருகிறார்கள். தனிமையுணர்வு, தாய்மை உணர்வுகள், ஒரு ஆணின் துணை இல்லாமல் வாழ்க்கை முழுமையடையவில்லை என்கிற உணர்வுகள் எல்லாமே அவரவர்  மனநிலையைப் பொறுத்தது. தங்கள் வாழ்க்கைமுறையை முழுவதுமாக மாற்றிக்கொள்வதன் மூலம் இந்த உணர்வுகளைக் கடந்துவிடலாம் என்று புதுயுகப் பெண்கள் நம்புகிறார்கள். உயர்பதவி வகிக்கும் சில பெண்கள் இதை நிரூபித்தும் இருக்கிறார்கள்.

 

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. தொடர்ந்து பார்ப்போம்.