ஒரு தோழி பலமுகம்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி

 

பொழுதுபோக்கு

இணையத்தில் எழுதுவது, புத்தகங்கள் படிப்பது. அவ்வப்போது கேண்டி க்ரஷ் விளையாடுவது, மற்றவர்கள் எழுதும் கதை, கட்டுரைகளைப் படித்து கருத்துத் தெரிவிப்பது. தொலைக்காட்சியில் நேஷனல் ஜியாக்ரபி சானலில் வரும் ‘ஸ்டோரி ஆப் காட்’ ரொம்பவும் பிடித்த நிகழ்ச்சி. தவறாமல் பார்ப்பேன்.

 

இயற்கை உங்கள் பார்வையில்…

முழுக்க முழுக்க நகரத்தில் வளர்ந்ததால் இயற்கையுடன் அத்தனை நெருக்கம் இல்லை. ஆனால் தும்கூரில் இருந்த இரு வருடங்களில் வீட்டில் நிறைய செடிகள் வளர்த்தேன். என் தோட்டத்தைப் பார்ப்பவர்கள் ‘உங்களுக்கு பசுமை விரல்கள்’ என்பார்கள். தும்கூரை விட்டு வரும்போது அப்போதுதான் படரத் துவங்கிய மல்லிகைக்கொடியை கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டே வந்தேன். நான் ஆசிரியை ஆக இருந்த பள்ளி தோட்டத்தின் நடுவே இருந்தது. தோட்டத்தைச் சுற்றி குழந்தைகளை தினமும் ‘பசுமை நடை’க்கு அழைத்துப் போவதை விரும்பிச் செய்தேன்.

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை வாழ்ந்தால் இயற்கையின் சீற்றத்தை அனுபவிக்க வேண்டியிருக்காது.

சமூகம் உங்கள் பார்வையில்…

நாமெல்லோரும் சேர்ந்ததுதான் சமூகம். அது நன்றாக இருக்க நாம் ஒவ்வொருவரும் நமது கடமைகளை சரிவரச் செய்யவேண்டும். நமது ஆரோக்கியத்தை பேணுவது கூட நமது சமூகக் கடமையே. நாம் சுகமாக வாழ பலவற்றைக் கொடுக்கும் இந்த சமூகத்திற்கு நாம் திருப்பி செய்யவேண்டிய கைம்மாறு ஒரு நல்ல மனிதனாக இருப்பது. நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்வது. நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பது. இந்த சமூகம் மேலும் மேலும் வளர நம் முழு ஒத்துழைப்பைக் கொடுப்பது.

 

மனிதர்கள்

அடுத்தவரிடம் இருக்கும் நிறைகளை மட்டும் பார்த்து,  நம்மிடம் குறைகள் இருப்பது போலவே அடுத்தவர்களிடமும் குறைகள் இருக்கும் என்பதை உணர்ந்தால் எல்லோருமே நல்லவர்களாக இருக்கலாம். என் அம்மா அடிக்கடி சொல்லும் சொலவடை ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பது. இன்றுவரை அப்படித்தான் நடந்து வருகிறேன். வெள்ளம் வரும்போது மட்டுமே மனிதத்தைக் காட்டவேண்டும் என்பதில்லை. எல்லா நாட்களிலும் மனிதராக இருக்கலாம்,  தப்பில்லையே!

 

பிறந்த ஊர், சொந்தங்கள்

பிறந்த ஊர் ஸ்ரீரங்கம் என்பதில் மிகுந்த பெருமிதம் எனக்கு. வளர்ந்தது, படித்தது, திருமணம் எல்லாம் சென்னையில் தான். புகுந்த வீடு திருக்கண்ணபுரம் என்பதிலும் பெருமையே. இரண்டு ஊர்களுக்கும் பலமுறை சென்று வந்திருக்கிறேன். திரும்பத்திரும்ப அந்த ஊர்களுக்குப் போகவேண்டும் என்றே தோன்றும். எனது வேர்கள் இந்த ஊர்களில் இருப்பதாலோ என்னவோ. சொந்தங்கள் சென்னையிலும், பெங்களூரிலும் இருக்கிறார்கள்.

 

நேர நிர்வாகம்

முதலில் இல்லத்தரசி. அதனால் வீட்டு வேலைகளை கவனித்துவிட்டுத்தான் கணணி முன் உட்காருவது. முதலில் நான் எழுத வேண்டியதை எழுதிவிட்டு பிறகுதான் இணையத்திற்கு  வருவேன். அதேபோல ஒரு விஷயத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் முதலில் எல்லா தகவல்களையும் சேகரித்து என்ன என்ன விஷயங்களைச் சொல்லவேண்டும் என்று தீர்மானம் செய்து அவைகளை எழுதிவிடுவேன். இதனால் கடைசி நிமிட அவசரங்களை தவிர்த்து விடுவேன். சிலசமயங்களில் திட்டம் போட்டபடி நடக்காது. அதற்காக ரொம்பவும் டென்ஷன் ஆக மாட்டேன்.

 

சமையல்

திருமணத்திற்குப் பின்தான் சமையல்கட்டிற்குள் நுழைந்தது. மாமியார்தான் குரு. ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இதை எடு, அதை எடு என்பார்.  இது இத்தனை போடு, அது அத்தனை போடு என்று கையிலேயே அளவு காட்டிக்காட்டி சொல்லிக்கொடுத்ததால் இன்றைக்கும் எனக்கு ஸ்பூன் அளவு சொல்லத்தெரியாது. உப்பு எவ்வளவு போடவேண்டும் என்றால் கண்திட்டம் போடு என்பார்! ஒன்றும் புரியாது. ஏதோ போடுவேன். சரியாக இருக்கும். இப்படித்தான் சமையல் கற்றுக்கொண்டது. சமையல் குறிப்பு எழுதுவதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.

 

பிற கலை

ஒருகாலத்தில் நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். ‘பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியும் குந்தவையும் தான் என் ஓவியப் பெண்கள். அதுவும் வினுவின் படங்களைப் பார்த்து நிறைய வரைந்திருக்கிறேன். க்ராஸ் ஸ்டிச் போடுவது ரொம்பவும் பிடித்த வேலை. அந்த காலத்து கிராஃப் தாளில் நானாகவே நிறைய டிசைன்கள் வரைந்து வைத்திருப்பேன். கோலம் போடுவது மிகவும் பிடிக்கும். புள்ளிக்கோலங்களை விட எனது கற்பனைக்குத் தோன்றியபடி போடுவது பிடிக்கும். புள்ளிக்கோலங்கள் என்றால் புள்ளிகளுக்குள் அடக்கவேண்டும். கற்பனை என்றால் அப்படியில்லையே!

Office / work

திருமணத்திற்கு முன் ஸ்டெனோ-டைபிஸ்ட். திருமணம் ஆகி 25 ஆண்டுகளுக்குப் பின் ஸ்போக்கன் இங்க்லீஷ் ட்ரையினர். வெளியில் போய் வேலை செய்வது அவ்வளவாகப் பிடிக்காத விஷயம். அதனால் வேலைக்குப் போகவில்லை என்ற வருத்தம் கிடையாது.

 

கடந்து வந்த பாதை எப்படி இருக்கிறது?

திருமணத்திற்கு முன் அப்பா. திருமணம் ஆனபின் கணவர், நான் நம்பும் அரங்கன் இவர்களின் துணையோடு இத்தனை வருடங்களைக் கழித்துவிட்டேன். பள்ளம் மேடு நிறைந்த வாழ்க்கைதான் சுவாரஸ்யம், இல்லையா? ஒவ்வொருசமயம் திரும்பிப்பார்க்கும்போது இத்தனை இடர்களைக் கடந்து வந்திருக்கிறோமா என்று வியப்பாக இருக்கும். கொந்தளிக்கும் கடல்தான் ஒரு நல்ல மாலுமியை உருவாக்கும் என்பார்கள். நானும் இத்தனை வருடங்களில் நல்ல மாலுமி ஆகியிருக்கிறேன்.

 

சினிமா

திருமணத்திற்கு முன் சினிமா என்றாலே அப்பாவிற்குப் பிடிக்காது. அதுவும் எம்ஜிஆர் சினிமா பார்க்க அனுமதி கிடைக்கவே கிடைக்காது. திருமணம் ஆனபின் தான் ‘நான் எங்க வீட்டுப்பிள்ளை’ படமே பார்த்தேன்! இப்போதும் அதிகம் பார்ப்பது இல்லை. மலையாளப் படங்கள் பார்ப்பேன். பெங்களூரு வந்தபின் கன்னடப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். திரையரங்கில் பார்ப்பது ரொம்பவும் அபூர்வம். பார்த்து ரசித்த படங்களை விட ஏன் பார்த்தோம் என்று நொந்து கொண்டது அதிகம். சமீபத்தில் இறுதிச்சுற்று, சேதுபதி பார்த்தேன். சேதுபதி அதிகம் பிடித்திருந்தது.

 

உடல் நலம்- மன நலம்

மனநலம் நன்றாக இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதை நம்புபவள் நான். மனதை கூடியவரை அலைபாயாமல் பார்த்துக் கொள்வேன். கஷ்டம் தான். மனஅழுத்தம் அதிகரிக்கும்போது அழுதுவிடுவேன். அழுகையுடன் அழுத்தமும் கரைந்துவிடும். எழுதுவது என்னுடைய அழுத்தங்களைக் குறைக்கிறது.  சந்தோஷமோ, துக்கமோ எழுதுவது எனக்கு வடிகால்.

 

நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தவை

என்னை எழுத்தாளராக அடையாளம் காட்டிய எனது முதல் கதை ‘அத்தையும் ராகி முத்தையும்’, இணையத்தில் நான் எழுதிய முதல் கட்டுரை ‘நானும் என் ஸ்னுஷாவும்’.

அதேபோல நான்குபெண்கள் இணையதளத்தில் எழுதிய ‘செல்வகளஞ்சியமே’ என்ற குழந்தைகள் வளர்ப்புத் தொடர். நூறு பகுதிகள் எழுதியிருக்கிறேன். அதே தளத்தில் எழுதிய மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ தொடரும். இரண்டையும் எழுத நிறைய புத்தகங்கள், இணைய தளங்கள் என்று தேடித்தேடிப் படித்தேன். கடுமையான உழைப்பிற்குப் பின் வரும் வெற்றி இனிமைதானே!

 

இசை

ஒருகாலத்தில் வீணை, வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டு ஜூனியர் பரிட்சையும் பாஸ் செய்தேன். இப்போது பாடுவதில்லை. ஆனால் இசையை ரசிக்கப் பிடிக்கும். பி.லீலா குரல் மிகவும் பிடிக்கும். பி.சுசீலாவின் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்’, ‘சொன்னது நீதானா?’ முதலிய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதது. இந்தத் தலைமுறை பாடகிகளில் சைந்தவியின் குரல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

 

பிடித்த ஆளுமைகள்

எம்.எஸ். அவர்களை ரொம்பவும் பிடிக்கும். அந்தக்காலத்தில் அவருக்கு பக்கவாத்தியம் வாசிக்கக் ஆண்கள் முன்வரமாட்டார்கள். திரு சதாசிவத்தைத் திருமணம் செய்துகொண்டு மடிசார் கட்டிக்கொண்டு காஞ்சி மடத்திற்குச் சென்றபோது மகாபெரியவர் எம்.எஸ். ஐ பார்க்க முதலில் மறுத்துவிட்டார் என்று படித்தபோது மனம் நொந்து போனேன். தன்னை எதிர்த்த அத்தனை பேர்களையும் தனது இசை என்னும் தவத்தால் வெற்றி கொண்டவர். தனக்கு நேர்ந்த அவமானங்கள் எதையும் அவர் எந்த பேட்டியிலும் சொன்னது கிடையாது. என்ன ஒரு மனவலிமை மிக்க பெண்மணி இவர்! தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய இசையை நமக்கென விட்டுச் சென்ற அவரை போல இன்னொருவர் இனி பிறக்கமுடியாது.

இப்போது திருமதி ஸ்ம்ருதி இரானி. தங்குதடையின்றிப் பேசும் ஆங்கிலம் அவரது பலம். எதிராளிகள் அவர் எதிரில் நிற்பதற்கே பயப்படுகிறார்களே!

 

பிடித்த பெண்கள் – குடும்பத்தில், வெளியில்

சிறுவயதில் கணவரை இழந்து தனித்து நின்று வாழ்க்கையின் சவால்களை ஏற்று சமீபத்தில் மறைந்த என் அக்கா ரமா. புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொடுத்த, 88 வயதிலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறையாத என் அம்மா.

வெளி உலகத்தில் திருமதி காமாட்சி மகாலிங்கம். பிள்ளைகள், பெண்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகி அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்ற நிலையில் எல்லாப் பெண்களுக்கும் வரும் தனிமை உணர்வு தன்னை பாதிக்காமல், ‘சொல்லுகிறேன்’ என்ற வலைத்தளம் ஆரம்பித்து சமையல் குறிப்புகளுடன் தனது அம்மா பற்றிய நினைவுகள், பார்த்த ஊர்கள் என்று தொடர்ந்து எழுதி அசத்தி வரும் 85 வயது இளம்பெண் இவர். மும்பையில் இருக்கும் இவர், வலைத்தளம் மூலம் எனக்குக் கிடைத்த உற்ற நட்பு.

 

 

நகைச்சுவை நிகழ்ச்சிகள் வாழ்க்கையில்

 

ஒருமுறை என் இரண்டு பேரன்களுடன் உட்கார்ந்துகொண்டு ஒரு ஹிந்தி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் ஹீரோ ஹீரோயினை அலக்காகத் தூக்கிகொண்டு சிறிது தூரம் நடந்தார். அதைப்பார்த்த நான் என் பேரன்களிடம் சொன்னேன்: ‘இனிமேல் இவர் ஜிம் போகவே மாட்டாராம்…’ என்று. இருவரும் ஒரே குரலில் ‘ஏன்?’ என்றார்கள் திரையிலிருந்து கண்களை எடுக்காமலேயே. ‘‘இந்த ஹீரோயினையே தூக்கிவிட்டீர்கள். இதைவிட அதிகமான பளு ஜிம்மில் இல்லை’ என்று சொல்லிவிட்டார்களாம்!’ என்றேன் ரொம்பவும் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக் கொண்டு. சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தவர்களுக்கு நான் வேடிக்கை செய்கிறேன் என்று புரிந்து எல்லோருமாகச் சிரித்தோம்.

 

ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்

 

ஃபேஸ்புக்கில் ரொம்பவும் அதிகம் நடமாடுவதில்லை. ஒருகாலத்தில் எழுத்தாளர்கள் என்றால் ஒரு தனி இனம். அவர்களைப் பார்ப்பது, பேசுவது எல்லாமே நடக்காத ஒன்று என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது நிறைய எழுத்தாளர்களுடன் நட்பில் இருக்கிறேன். அதிகம் உரையாடுவதில்லை என்றாலும் அவர்கள் எழுதுவதைப் படித்துவிடுவேன்.- திரு சுதாகர் கஸ்தூரி, திரு அரவிந்தன் நீலகண்டன், திரு சொக்கன், திரு மருதன், திருமதி வித்யா சுப்பிரமணியம் என்று பலர் எழுதுவதை உடனே படிக்க முடிகிறது. நிறைய திறமைகள் நிறைந்த மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது ஃபேஸ்புக் வந்த பிறகு புரிந்தது.

 

அழகென்பது

குழந்தைகளின் கள்ளமற்ற சிரிப்பு.

 

வீடு

எத்தனை ஊர்களுக்குச் சென்றாலும் எத்தனை அழகழகான இடங்களைப் பார்த்தாலும் எவ்வளவு ருசியான உணவுகளை சாப்பிட்டாலும் நம் வீட்டிற்கு வந்து கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்து ரசம் சாதம் சாப்பிடுவது போல வருமா? வீடு என்பது மனதிற்கு நெருக்கமான ஒன்று. வீடு தரும் பாதுகாப்பு விலை மதிக்க முடியாதது.

எழுத்தும் வாசிப்பும்

அம்மாவிடமிருந்து கற்றது. அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். ஒரே சீராக எழுத்துக்கள். சமமான இடைவெளிகளுடன் கோர்வையான வார்த்தைக் கட்டுக்களுடன் அம்மாவின் கடிதங்கள் பொக்கிஷம். என்னுடைய  எழுத்தும் வாசிப்பும் எனக்கு என் அம்மா தந்த சீதனம்.

பின்குறிப்பு:

இதில் நான் சொல்லியிருக்கும் பலவிஷயங்கள் பத்திரிகையில் வெளிவரவில்லை.