நான் ஒரு மனுஷியாக….

ஜூன் 1 ஆம் தேதி குங்குமம் தோழி இதழில் வந்த என்னைப்பற்றிய கட்டுரை: (எடிட் செய்யாதது) குங்குமம் தோழி புத்தகம் படிக்காதவர்களுக்காக இங்கே:

http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3175&id1=85&issue=20160601

 

kungumam star thozhi

 

நமக்குக் கிடைத்திருக்கும் நல்லவைகளை நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவது, அடுத்தவர்களுக்காக இரங்குவது, அவர்களின் நிலைமை தெரிந்து உதவுவது, மற்றவர்களை நம் சொற்களால் துன்பப்படுத்தாமல் இருப்பது, யாருக்கும் உபத்திரவம் இல்லாமல் இருப்பது இவை ஒரு நல்ல மனுஷியின் அடையாளங்கள். எனக்கும் இவையே அடையாளங்கள்.

 

தாயாக…

சாதாரண இல்லத்தரசியாக பெங்களூரு வந்த நான் வேறு வேறு வேலை வாய்ப்புகள் கிடைத்தபோது எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அவற்றை சிறப்பாகவும் செய்தேன். குழந்தைகளுடன் சேர்ந்து கன்னடம் படித்தேன். என் பெண் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது நான் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தேர்வு எழுதினேன். என் கணவர் சொந்தமாக ஒரு தொழிற்சாலை ஆரம்பித்த போது அதற்குத்தேவையான பயிற்சிகளை எடுத்து, எங்கள் தொழிற்சாலையில் இருந்த பெண்களுக்கு அதை சொல்லிக்கொடுத்தேன். தொழிற்சாலைக்குத் தேவையான ஸ்க்ரீன்-பிரிண்டிங், சால்டரிங் ஆகியவைகளையும் கற்றேன். என் கணவரின் முயற்சிகள் அத்தனைக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறேன். இந்த நிகழ்வுகள் எல்லாமே எனது நாற்பது வயதிற்கு மேல் நடந்தவை. என் பெண், என் பிள்ளை இருவருக்குமே நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை அதிகம். சமூகத்தில் என் குழந்தைகளை நல்ல மனிதர்களாக, சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 

தோழியாக…

என் சிறுவயதுத் தோழிகள் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த ஒன்று போதும், நான் நல்ல தோழி என்று சொல்ல. எனது மாணவர்கள் என் பிறந்தநாள், ஆசிரியர் தினம் என்றால் வாழ்த்துக்கள் அனுப்புகிறார்கள் அதனால் அவர்களுக்கும் நான் தோழியாகவே இருக்கிறேன். பேரன்களுக்கும் – அவர்களுடன் சேர்ந்து கார்ட்டூன் பார்ப்பதிலிருந்து விஞ்ஞானப்பாட ஓவியங்கள் வரைந்து கொடுப்பது வரை – பாட்டி என்ற பெயரில்  தோழியாகவே இருக்கிறேன்.

 

பள்ளியும் ஆசிரியர்களும்,  பள்ளி போதித்தது…

 

பள்ளி என்றவுடன் நினைவிற்கு வருவது புரசைவாக்கம் லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தான். தலைமையாசிரியர் திருமதி ஷாந்தா மிகவும் கம்பீரமான தோற்றம் கொண்டவர். படு கண்டிப்பு. ஆனாலும் இனிமையானவர். எப்போதுமே உடல் ஒரு வண்ணத்திலும் அகலமான பார்டர் வேறு வண்ணத்திலும் இருக்கும் பூக்கள் இல்லாத புடவைகளைத் தான் கட்டுவார். தினமும் அவர் பள்ளிவளாகத்தின் உள்ளே வருவதைப்பார்க்கக் காத்திருப்போம். அத்தனை நேரம் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மாணவிகள் எல்லோரும் அமைதியாகிவிடுவோம் அவரைப் பார்த்தவுடனே. அவர் அணிந்திருக்கும் கண்ணாடி வெயில் பட்டவுடன் குளுகுளு கண்ணாடியாக மாறும் அதிசயத்தை வாய்மூடாமல் பார்த்துக் கொண்டிருப்போம். பிற்காலத்தில் நான் கண்ணாடி அணியும் சந்தர்ப்பம் வாய்த்தபோது மருத்துவரிடம் சொல்லி எனக்கும் tinted glasses வேண்டும் என்று வாங்கிக்கொண்டேன். அணிந்தவுடனே நானும் எங்கள் சாந்தா டீச்சர் மாதிரி ஆகிவிட்ட ஒரு உணர்வு. அத்தனை தூரம் அவர் என்னை பாதித்திருக்கிறார். இன்று நான் பேசும் ஆங்கிலத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அவர்தான். நீதி போதனை வகுப்பில் இராமாயணம், மகாபாரதக்கதைகள் நிறைய சொல்வார். லீலாவதி டீச்சர், சர்மா ஸார், மேரி ஸ்டீபன் டீச்சர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். எல்லோருமே என் வாழ்க்கையை நல்வழிப்படுத்தியவர்கள்.

 

இப்போது எங்கள் பள்ளியும், பக்கத்தில் இருக்கும் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியும்  அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறப்போகிறது என்ற செய்தி என்னை மிகவும் வருத்தப்பட வைக்கிறது.

ஆ! இன்னொரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே! எனக்கு சீனியராக எங்கள் பள்ளிக்கு அடுத்த கட்டிடத்தில் இருந்த சர் எம்.சி.டி.எம். ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர் உலகநாயகன் கமலஹாசன்!

 

இப்போது வசிக்கும் ஊர் குறித்து…

1987 இல் பெங்களூரு வந்தோம். முதல்முறையாக நான் சென்னையைவிட்டு வெளியே வந்தது பெங்களூருக்குத்தான். ஏதோ வெளிநாட்டிற்குப் போவதுபோல ஒரு பிரமை!

 

கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும்…

 

புது ஊர், புது மனிதர்கள், புதிய மொழி. மிக மிக ஆர்வத்துடன் கன்னட மொழி எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டேன். சில வருடங்கள் கழித்து நாங்கள் தும்கூரில் இருந்தபோது  அங்கு டிவிஎஸ் பள்ளியில் கன்னட ஆசிரியை ஆக பணியாற்ற இது உதவியது. பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும்போது நான் இன்னும் அதிகம் கற்றேன். அதுமட்டுமல்ல; மற்ற வகுப்புகளுக்கு தேவையான பாட சம்மந்தப்பட்ட கன்னடமொழிக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் செய்தேன்.

 

எனது வாழ்வில் இன்னொரு மைல்கல் என்றால் ஆங்கிலம் சொல்லித்தரும் ஆசிரியை ஆக பணியாற்றியதுதான். திருமணம் ஆகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இல்லத்தரசியாக இருந்த நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியாளர் ஆக மாறினேன். ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆங்கிலபேச்சு திறன் வளர உதவினேன். இன்னும் பலர் என்னை நினைவில் வைத்துக்கொண்டு ஆசிரியர் தினத்தன்று வாழ்த்துக்கள் சொல்லுகிறார்கள். எனது மாணாக்கர்களில் வெளிநாட்டு மாணவர்கள் அடக்கம்.

 

மூன்று நிறுவனங்களில் கார்ப்பரேட் பயிற்சியாளர் ஆகவும் இருந்தேன். எப்போதும் ஆங்கிலம் சொல்லித்தரும் என்னை ஒருமுறை ஒரு நிறுவனத்தில் பேச்சு வழக்குக் கன்னடமொழி கற்றுத்தரச் சொன்னார்கள்! கற்றுக்கொடுத்தேன். நான் வேலை செய்து வந்த நிறுவனத்தின் மேலாளர் சொன்னார்: ‘தமிழ் பேசும் ஒருவர் வடமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் யாதவ், ஜாதவ், த்ரிபாதி, முகர்ஜி-களுக்கு கன்னடம் சொல்லித் தருகிறார். இதுவல்லவோ தேசிய ஒருமைப்பாடு!’ என்று.

 

வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டு ஜூனியர் பரீட்சை எழுதி எனது தகுதிகளை வளர்த்துக் கொண்டேன். எனக்கே தெரியாத என்னுள் இருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தது பெங்களூரு என்று சொல்லலாம்.

 

கன்னடம் சரளமாகப் பேசுவதால் இந்த ஊர் எனக்கு பிறந்த ஊர் போலவே இருக்கிறது. கன்னடம் பேசும் பல தோழிகள் இந்த ஊரில் நான் பெற்ற வரம் என்று சொல்லலாம்.

 

இங்கே ரசிக்கும் உணவு மற்றும் கலாசாரம்

கர்நாடக உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது பிஸிபேளேபாத். எனது தோழி ஒருவர் வீட்டிலேயே இதற்குத் தேவையான மசாலா தயார் செய்து நான் போகும்போதெல்லாம் செய்து தருவார். ஆஹா! ருசியோ ருசி!

 

இந்த ஊர் பெண்கள் எத்தனை வயதானாலும் தலைமுடியை பின்னித் தொங்கவிட்டுக் கொண்டிருப்பார்கள். நம்மைப்போல கொண்டை போடமாட்டார்கள். திருமணம் அல்லது வேறு எந்த மங்கல நிகழ்ச்சிகள் நடந்தாலும் யாரும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்காமல் பாடுவார்கள் இந்த ஊர் பெண்கள். ‘பாடத் தெரியாது’, ‘தொண்டை சரியில்லை’ என்றெல்லாம் சாக்குபோக்கு சொல்லவே மாட்டார்கள். எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம் இது. அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல – காலை 7 மணிக்குப் பார்த்தால் ‘காபி ஆயித்தா?’ (காபி ஆச்சா?), 10 மணிக்கு மேல் ‘திண்டி (டிபன்) ஆயித்தா?’, ஒருமணிக்கு ‘மேல் ஊட்டா ஆயித்தா?’, மாலை நான்கு மணிக்கு மேல் மறுபடியும் ‘காபி ஆயித்தா?’ இரவு எட்டு மணிக்கு மேல் ‘ஊட்டா ஆயித்தா?’ கேட்கத் தவறவே மாட்டார்கள். இப்போது நானும் அப்படிக் கேட்க ஆரம்பித்துவிட்டேன். ரோம் நகரில் இருக்கும்போது ரோமானியனாக இருக்கவேண்டும் அல்லாவா?

 

பிடித்த புத்தகங்கள்

கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள்.  தி. ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள்.  சாவியின் விசிறி வாழை. ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல மிகவும் பிடித்த கதை. அலுக்காமல் சலிக்காமல் திரும்பத் திரும்பப் படிப்பது ‘பொன்னியின் செல்வன்’. அம்பை, எஸ்ரா, ஆகியோரின் எழுத்துக்கள் ரொம்பவும் பிடிக்கும். ஆங்கிலப் புத்தகங்களில் ‘தி அல்கெமிஸ்ட்’, ‘டா வின்சி கோட்’. இப்போது படித்துக் கொண்டிருப்பது டாக்டர் பால் கலாநிதி எழுதிய ‘When breathe becomes air’ என்கிற மனதைப் பிழியும் சுயசரிதை. தமிழில் எஸ்ராவின் ‘எனதருமை டால்ஸ்டாய்’.

 

தொடரும்…….!!!