விசாகா ஹரி (கதா)!

 

இரண்டு வாரங்களாக வார இறுதிகள் மிகவும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறன. முதலில் இந்த வார சனிக்கிழமை பற்றி. (இந்த முன்னுரை எழுதி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன!)

 

எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களின் பிள்ளைக்குத் திருமணம் ஜூன் 22. திருமணத்திற்கு முன்சனிக்கிழமை சீதா கல்யாண வைபவமும், திருமதி விசாகா ஹரியின் ‘சீதா கல்யாண’ ஹரி கதையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

மல்லேஸ்வரம் ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதியிலிருந்து சீதா ராம திவ்ய தம்பதியின் திவ்யமங்கள விக்ரகங்களை எழுந்தருளப் பண்ணி சீதா கல்யாணம் நடந்தது. ஆரம்பத்தில் எதற்காக இந்தக் கல்யாணம் என்று சுருக்கமாக கன்னட மொழியில் கூறினார் கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வந்திருந்த கோவில் பட்டாச்சார் ஸ்வாமி ஒருவர். கல்யாணப் பிள்ளை, பெண்ணின் பெற்றோர்கள் மணையில் அமர்ந்து சங்கல்பம் செய்துகொண்டு சீதா கல்யாண வைபவத்தைத் தொடங்கி வைத்தனர். பெருமாளுக்கும் தாயாருக்கும் சீர் வரிசை பிரமாதமாகச் செய்திருந்தனர். உள்ளங்கை அகல திருமாங்கல்யம். கையகல ஜரிகைப் புடவை, கெட்டிக்கரை வேஷ்டி எல்லாம்  (இந்த ஊர் வழக்கப்படி வண்ணப்பட்டு வேஷ்டி) அந்த திவ்ய தம்பதிக்கு ஏற்றவாறு அமைந்திருந்தன.

 

நம் கல்யாணம் போலவே பெருமாளும் தாயாரும் மாலை மாற்றி, காப்பு கட்டி கொண்டு அக்ஷதையை ஒருவர் தலை மேல் ஒருவர் போட்டு…. மல்லிகைப் பூவை பந்து போல உருட்டி ஒருவர்மேல் ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். பட்டாச்சார் ஸ்வாமி இருவர் இவை எல்லாவற்றையும் செய்தனர். பூப்பந்து அவ்வப்போது எங்களிடம் வீசியெறியப்பட்டது. நாங்களும் பந்தைப் பிடித்து அவர்களிடம் எறிந்தோம். சீதா ராம கல்யாணத்தில் பங்கு கொண்டோம் என்ற குதூகலம்! இவை எல்லாவற்றையும் விட தனது அபாரமான வாசிப்பால் எல்லோரையும் கவர்ந்தார் நாயனக்காரர். சமயத்திற்குத் தகுந்தாற்போல பாடல்களை வாசித்துத் தள்ளினார். பட்டாச்சார் ஸ்வாமி மாலையைக் கையில் எடுத்தவுடன் ‘மாலை மாற்றினாள், கோதை மாலை மாற்றினாள்’ பாடல், தொடர்ந்து ஊஞ்சல் பாட்டு, திருமாங்கல்யதாரணம் ஆனவுடன் ‘ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே’ என்று மிகச் சிறப்பாக வாசித்தார். அதேபோல – சாம வேதம் என்று நினைக்கிறேன் – ஒரு ஸ்லோகம் சொல்லி முடித்தவுடன் அதை அப்படியே வாத்தியத்தில்  வாசித்தார். பெரிய பெரிய அண்டாக்களில் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை. அங்கு வந்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் தீர்த்தம் சடாரி ஆனவுடன் பிரசாதம் விநியோகம் செய்தார்கள். கூடவே சுடச்சுட காப்பியும்.

 

இத்தனையும் முடிந்த பின் திருமதி விசாகா ஹரியின் ஹரிகதை. நாங்கள் இருவரும் ஹரிகதை கேட்கவே வந்திருந்தோம். என்னதான் தொலைக்காட்சியிலும், யூடியுபிலும் கேட்டிருந்தாலும், நேரில் ஒருமுறையாவது கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. சந்தர்ப்பம் வாய்த்திருக்கும்போது விடமுடியுமா?

 

சீதாகல்யாணம் முடிந்தவுடன் நானும் என் கணவரும் ஹரிகதையைக் கேட்க வசதியாக (ஓடிப்போய்!!) இரண்டு நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டோம். சர்க்கரைப் பொங்கல் புளியோதரையையும் தியாகம் செய்தோம் – இடம் போய்விடப்போகிறதே என்ற பதட்டத்தில்!

 

குலசேகர ஆழ்வாரின் ‘அங்கணெடுமதில் சூழ் அயோத்தி என்னும்’ என்ற பாசுரத்துடன் ஆரம்பித்தார் திருமதி விசாகா ஹரி. ஹரிகதை என்பது நிறைய பாடல்கள் நிறைந்தது. பாடல்களுக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் கதை. அந்தக் காலத்தில் திரு டி.எஸ். பாலக்ருஷ்ண சாஸ்திரி ஹரிகதை செய்வார். எங்கள் பள்ளி வளாகத்திலேயே நடக்கும். நின்றுகொண்டே சொல்வார். அவரது பக்கவாத்தியக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். இவர் மட்டும் இரண்டு, மூன்று மணிநேரம் நின்றுகொண்டு கதை சொல்வார். அவரும் மிக நன்றாகப் பாடுவார். அவரது ‘தியாகராஜ இராமாயணம் ரொம்பவும் பிரபலம். தியாகராஜரின் கீர்த்தனைகளை வைத்து ராமாயணத்தைச் சொல்லுவார். அவர் பாடித்தான் நான் முதன்முதலாக ‘ஸ்வரராக சுதா ரஸ’ என்ற சங்கராபரணப் பாடலை கேட்டேன். கையில் சப்ளாகட்டையுடன் அற்புதமாகப் பாடுவார்.

 

திருமதி விசாகா ஹரியின் ஹரிகதை கேட்டுக் கொண்டிருக்கையில் எனக்கு டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் நினைவு நிறைய வந்தது. அவரைப் போலவே இவரும் நிறைய பாடல்கள் பாடினார். எல்லா மொழிகளிலிருந்தும் பாடல்கள் பாடினார்.

 

தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் பாடல்களும் மற்றும் துளசிதாசர், புரந்தரதாசர் ஆகியவர்களின் பாடல்களையும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தாற்போல பாடினார். மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. எத்தனையோ முறை கேட்ட கதைதான் என்றாலும் அலுக்காத கதை ராமாயணமும் மகாபாரதமும் என்பதை அன்றும் உணர்ந்தோம்.

 

திருமதி விசாகா ஹரி சொன்னதில் நான் ரசித்த சில சம்பவங்களை உங்களுக்காக இங்கு கொடுக்கிறேன்.

 

  • வால்மீகி ராமனும், சீதையும் திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதாக எழுதவில்லை. ஆனால் பின்னால் வந்த கவிஞர்கள் (கம்பன், அருணாச்சலக் கவிராயர், துளசி தாசர்) ராமாயணத்திற்கு இனிமை கூட்ட ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்று எழுதினார்கள்.
  • வால்மீகி மிகவும் சீரியஸ் ஆக இராமாயணத்தை எழுதியிருக்கிறார். ராமனின் குழந்தைப் பருவ விளையாட்டுக்களை அவர் சொல்லவேயில்லை. அந்தக் குறையைப் போக்க குலசேகர ஆழ்வார் திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமாளை ராமனாக கற்பனை பண்ணிக்கொண்டு மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே’ ‘என்று தாலாட்டுப் பாடினார்.
  • ‘ராமனின் கால் பட்டு கல் அகலிகை என்ற பெண்ணாயிற்றாமே! இப்போ நம் சீதையின் காலை எடுத்து அம்மி மேல் வைக்கும்போது அவன் கை பட்டு அதுவும் பெண்ணாயிடுத்துன்னா….?’ என்று சீதாராம கல்யாணம் பார்க்க வந்த மிதிலா மக்கள் பேசினார்களாம்.
  • ராமனைப் பார்த்தவுடன் ஜனகர் நினைத்தாராம்: ‘இவன் சிவதனுசை முறிக்கணுமே!’ என்று.
  • விஸ்வாமித்திரர் ராமனைப் பார்த்தார். குருவின் பார்வையைப் புரிந்துகொண்ட ராமன் வில்லை எடுத்தான். அடுத்த நிமிடம் ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்!’ சிவதனுசு முறிந்துவிட்டதுதான் தெரியும்.

 

9 கஜம் பட்டுப்புடவையில் ‘ஜம்மென்று’ வந்து அவையை சுமார் மூன்று மணிநேரம் தன் குரலால், ஹரிகதையால் கட்டிபோட்ட அந்த பெண்மணி மனதை ரொம்பவும் கவர்ந்துவிட்டார். என்ன ஒரு ஆளுமை! என்ன ஒரு தன்னம்பிக்கை! நடுநடுவில் பக்கவாத்தியக்காரர்களுக்கு நேரம் ஒதுக்கி தனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு தொண்டையை நீவி விட்டுக்கொண்டு, அவர்களையும் உற்சாகப்படுத்தி… அருமை அருமை என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகளே இல்லை.

 

தனது ஆச்சார்யனான தனது மாமனாரை (திரு கிருஷ்ணப்ரேமி) அவ்வப்போது ஸ்ரீ அண்ணா சொல்லுவார், ஸ்ரீ அண்ணா சொல்லுவார் என்று குறிப்பிட்டுச் சொன்னது இவரது ஆச்சார்ய பக்தியை வெளிப்படுத்தியது. ஆச்சார்யனின் ஆசி இவருக்குப் பரிபூரணமாக இருக்கிறதால் தான் இத்தனை தூரம் பிரகாசிக்க முடிகிறது. கடைசியில் ‘பாவயாமி ரகுராமம்’ என்ற ஸ்வாதித் திருநாள் இயற்றிய ராகமாலிகை கீர்த்தனையைப் பாடி கதையை நிறைவு செய்தார்.

 

இவருக்கு அந்த திவ்ய தம்பதியின் ஆசிகள் எப்போதும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு வீட்டிற்குக் கிளம்பி வந்தோம். ஹரிகதா முடிந்ததும் நிறைய இளம்பெண்கள் இவரிடம் போய் பேசிக்கொண்டிருந்தார்கள். பதினைந்து தினங்கள் ஆகியும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு நீங்காமலேயே இதை எழுதுகிறேன்.

 

இவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள்: நிறைய பெண்களை உங்களை மாதிரியே தயார் செய்யுங்கள், ப்ளீஸ்!