ரயில் பயணங்கள்

ரயிலில் கேட்ட குடும்ப அரசியல்!

இந்தப் பகுதியில் நான் எழுதும் அனுபவம் ஏற்பட்டது காலை 6 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பும் ஷதாப்தி விரைவு வண்டியில். இந்த முறையும் தனியாகத்தான் பயணம். எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் – வண்டி கிளம்புவதற்கு முன்னாலேயே கேட்க ஆரம்பித்தது. ‘நீங்க நினைக்கறாப்பல எங்க பெரியப்பா ஒண்ணும் நல்லவரில்ல…..!’ குரலைக் கேட்டால் சின்ன வயசுப் பெண் போலத் தெரிந்தது. அவள் பேசப் பேச எனக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. மெதுவாக சீட்டிலிருந்து எழுந்து திரும்பிப் பார்த்தேன். இளம்பெண்! அப்போது ஆரம்பித்த அந்தப் பெண் ரயில் சென்னை வந்து சேரும் வரை நிறுத்தவில்லை! முழுக்க முழுக்க குடும்ப அரசியல்! ரொம்பவும் வியப்பாக இருந்தது – இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளம்பெண் இப்படியா? ஒவ்வொருவரைப் பற்றியும் அடிவயிற்றிலிருந்து வரும் வெறுப்புடன் பேசுவது? அவள் கணவனிடமிருந்து அவ்வப்போது – அதுவும் அவள் – ‘கேட்டேளா?’ என்று கேட்கும்போது மட்டும் ஒரு ‘ஊம்’ அவ்வளவுதான்!

அன்று நான் கையில் எடுத்துக் கொண்ட போன புத்தகத்தைக் கூட பிரிக்கவில்லை. பின்னால் தான் லைவ் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதே! நான் மட்டும் கேட்டு அனுபவித்ததை உங்களுக்கும் கொஞ்சம் சாம்பிள் எழுதுகிறேன்: ‘எங்க அப்பா கடைசி பிள்ளை. பெரியப்பாதான் பெரியவர். எங்க அப்பாவைக் கண்டாலே எங்க பெரியப்பாவிற்குப் பிடிக்காது. Sibling rivalry என்று சொல்லுவா. அதை நான் நேரா பாத்துருக்கேன். எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கிறாப்பல நல்லா நடிப்பார். சிவாஜிலேருந்து கமலஹாசன் வரை அவர்கிட்ட பிச்ச வாங்க வேண்டும்!’ அந்தப் பெண் சொல்லச்சொல்ல, அவளது பெரியப்பாவிடத்தில் சிவாஜியும், கமலஹாசனும் கையேந்தி நின்று ‘நடிப்பு சொல்லிக்கொடுங்க…’ என்று பிச்சை கேட்பது போல ஒருநிமிடம் என் மனத்திரையில் ஒரு பிம்பம் ஓடிற்று. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை! கைப்பையில் இருந்த புத்தகத்தை எடுத்து என் முகத்தை மறைத்து, பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி சீரியலைத் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.

‘என் அம்மா இவங்களையெல்லாம் சூப்பரா ‘ஹாண்டில்’ பண்ணுவா. இவங்களை துளிக்கூட சிந்தவே மாட்டா. எங்கம்மா ஒரு டோன்ட் கேர் மாஸ்டர்! நானும் எங்க அம்மா மாதிரி தான்!’ இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த கணவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அவனது மனதில் எந்த மாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்?

 

இந்த குடும்ப அரசியல் என்பது புதியது ஒன்றுமில்லை. எல்லாக் குடும்பங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது தான். நம்முடைய விருப்பு வெறுப்புகளை இளையதலைமுறையின் மனங்களில் வேரூன்றச் செய்வது நல்லதல்ல என்பது என் கருத்து. அவர்கள் வளர்ந்து அவர்களே தெரிந்துகொள்ளட்டுமே. நமக்கு மாமியார், மாமனார், நாத்தனார் வெளி உறவாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளுக்கு இரத்த சம்மந்தம் இல்லையோ? திட்டும்போது மட்டும் அப்படியே பாட்டியைக் கொண்டு பொறந்திருக்கா. அத்தையை உரிச்சு வைச்சிருக்கா (அந்த உரிச்சு என்கிற வார்த்தையை சொல்லும்போது அத்தையையே உரிப்பது போல ஒரு அழுத்தம்!) என்றெல்லாம் திட்டுகிறோம். ஆனால் அவர்களைப் போல கச்சிதமாக ஒரு வேலையை செய்து முடித்தாலோ, அல்லது நன்றாகப் பாடினாலோ பாராட்டுகிறோமா? இல்லையே!

சென்னையில் ரயிலிலிருந்து இறங்கியவுடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘பிற்காலத்தில் நல்ல அரசியல்வாதியாக வருவாயடி பெண்ணே!’ என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை! கணவன் என்கிற அப்பிராணியை நினைத்து வருத்தப்பட்ட படியே வெளியே நடந்தேன். வேறு என்ன செய்ய?

Advertisements

20 thoughts on “ரயிலில் கேட்ட குடும்ப அரசியல்!

 1. சுவாரஸ்யம்தான். பொது இடத்தில் எப்படி இவ்வளவு சத்தமாகப் பேச முடிகிறதோ என்றுதான் எனக்கும் தோன்றும். அதுவும் சொந்த விஷயங்களை. நன்றல்லாத விஷங்கள் மனதில் நிற்குமளவு நல்ல விஷயங்கள் நிற்காதது மனித பலவீனம்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   எனக்கு ஆச்சர்யம் அத்தனை இளம்பெண் என்ன பேச்சு பேசுகிறாள் என்பதுதான். ஒருவேளை அவள் கணவன் உங்க பெரியப்பா நல்ல மாதிரி என்று சொல்லியிருப்பானோ என்று தோன்றியது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. ராஜா காது கழுதை காது! :)))

  பொது வெளியில் இப்படி குடும்ப விஷயங்கள் பேசுவது சரியல்ல. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் தான் எத்தனை எத்தனை.

  தொடர்கிறேன்.

 3. குடும்ப அரசியலை ரயில் பொதுவிடங்களில் பேசுவதைத் தவிர்க்கலாம் . ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் சுற்றுப் புறத்தை மறந்து கதையளந்துக் கொண்டிருப்பார்கள். வேண்டாம் என்றாலும் நம் காதில் விழுந்துக் கொண்டுதானிருக்கும். என்ன செய்வது ?சிலபயனங்கள் இப்படித்தான்……

  1. வாங்க ராஜி!
   நான் கூட யாருடனாவது போனால் பேசிக் கொண்டு போவேன். ஆனால் இப்படி ஒரு சின்னப்பெண் பேசியது தான் எனக்கு ஆறவில்லை.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. வீட்டில் சொல்ல ஸமயம் கிடைத்திராது. கெட்டிக்காரத் தனத்தில் அவர்களையும், ஏதாவது அகஸ்மாத்தாக தவறு நேர்ந்து விட்டால் உங்கள் வம்சம் என்று குழந்தைகளைத் திட்டுவது எங்கிலும் பார்க்கக் கூடியது. இப்போது வம்சத்தைக் கூப்பிட முடியாது. யாருக்குயாரோ,யார்யாரோ ஸுதந்திரமாய்த் திட்டித் தீர்க்கஸமயம். இதைப்போய் தப்பென்றால். இப்போது அப்பாவிக் கணவர்கள்தான் எல்லோரும். நீங்கள் பிறந்தகத்தைப் பற்றி பேசியதை எழுதியிருக்கிறீர்கள். மாமியார் வீடு மட்டிலும் என்ன வாழ்ந்தது. எதைப் பேசினாலும் பதில் சொல்லாத கணவன் சமத்து. ரயிலில் சண்டை வேறு போட்டுக் காட்டும்படி ஆகிவிட்டால். நல்ல கணவன் மனைவி. ரஸிக்க,ரஸிக்கப் பிரயாணம். அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   சண்டைப் போட்ட கணவனையும் ரயிலில் பார்த்தாயிற்று. அதையும் எழுதுகிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. பொது இடத்தில் குடும்ப விஷயம் பேசுவது தவறு! ஆனாலும் அந்த பெண்ணுக்கு பெரியப்பா மேல் அப்படி வன்மம் வர என்ன காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது!

 6. ரயில் ஆட்டத்தில் புத்தகம் படிக்கிற தொல்லை உங்களுக்கு அன்று இல்லை. பொதுவாகவே பெரும்பாலானவர்களிடம் தேவையில்லாத வெறுப்பு மண்டிக்கிடக்கிறது. பொது இடத்தில் வீட்டு அழுக்கை அலசுபவர்களையும், சத்தம்போட்டு செல்போனில் வீட்டுவிஷயங்களைப் பேசுபவர்களையும் கண்டாலே அலர்ஜிதான்.

  1. வாங்க நெல்லைத் தமிழன்!
   இன்னொருமுறை ஒருவர் சத்தம் போட்டு தனது அலம்பல்களை எல்லாம் சொல்லிக்கொண்டே வர, ஒருவர் எழுந்திருந்து அவரை அதட்டி அதன்பின் ஆள் கப்சிப்!

   ஒவ்வொருமுறை பயணத்தின்போதும் ஒவ்வொரு வகை அனுபவம்!
   முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s