‘பெருமாளிடம் சொன்னாயா?’

serthisevaiஜூன் 20, 2016 தீபம் இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை – எடிட் செய்யப்படாமல் இங்கே:

பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் இருக்கும் யதுகிரி யதிராஜ மடத்தில் நிறைய உபந்யாசங்கள், காலக்ஷேபங்கள் நடக்கும். சென்னையில் இருக்கும் மிகவும் பிரபலமான உபந்யாசகர்கள் எல்லோருமே இங்கு வந்து உபந்யாசங்கள் செய்வார்கள்.

 

எனக்கு மிகவும் பிடித்த உபன்யாசகர் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ஸ்ரீ பூவராகாச்சார்யார் ஸ்வாமி. இந்த ஸ்வாமி மெத்தப் படித்தவர். சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் உள்ளவர். நிறைய விஷயங்கள் சொல்லுவார். தினசரி வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், கோவிலுக்குச் செல்லும்போது கைக்கொள்ள வேண்டிய நியமங்கள், பெரியவர்களுக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று எல்லாவிதமான விஷயங்களையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவார். எதற்காகவும் நம் சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் இந்த ஸ்வாமி. சொல்ல வேண்டிய விஷயங்களை மிகவும் நகைச்சுவையுடன் அதேசமயம் அசைக்கமுடியாத உதாரணங்களுடனும் இந்த ஸ்வாமி சொல்லுவார்.

 

ஒருமுறை சொன்னார்: ‘ஊருக்குப் போகிறேன், ஊருக்குப் போகிறேன் என்று எதிர்வீட்டில், பக்கத்து வீட்டில், மேல்வீட்டில் என்று எல்லோரிடமும் சொல்லுகிறீர்களே, உங்கள் அகத்துப் பெருமாளிடம் சொன்னீர்களா?’ இதைக்கேட்டு நாங்கள் எல்லோரும் முதலில் சிரித்தாலும், ஏதோ பெரிய விஷயம் வரப்போகிறது என்று சிரிப்பதை நிறுத்திவிட்டு அவர் தொடரக் காத்திருந்தோம். அவர் சொன்னார்:

 

‘ஸ்ரீரங்கத்தில் ஒரு அரையர் ஸ்வாமி இருந்தார். தினமும் பெருமாளின் திருமுன்பு திவ்யப்பிரபந்தம் சேவிப்பதை கைங்கர்யமாகச் செய்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக திருவேங்கடம் போய் திருமலையப்பனை சேவித்துவிட்டு வரவேண்டும் என்ற ஆசை. பெருமாளிடம் எப்படிக் கேட்பது என்று மிகவும் தயங்கினார். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெருமாளிடம் தனது ஆசையை விண்ணப்பம் செய்தார். பெருமாள் சற்று நேரம் யோசனை செய்தார். ‘இவன் எதற்கு அங்கு போக ஆசைப்படுகிறான் நான் இங்கிருக்கும்போது?’ என்று மனதிற்குள் நினைத்தவாறே ‘சரி, நீ உன் விருப்பபடியே போய்விட்டுவா. ஆனால் அதற்கு முன் ‘அமலனாதிபிரான்’ சேவித்துவிட்டுப் போ’ என்றார்.

 

அரையரும் ‘அப்படியே ஆகட்டும், அடியேன்’ என்று சொல்லிவிட்டு அமலனாதிபிரான் சேவிக்க ஆரம்பித்தாராம். அமலனாதிபிரான் என்பது திருப்பாணாழ்வார் சாதித்த திவ்யப்பிரபந்தம். முதல் பாசுரம் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்குவதால் அந்த பாசுரங்களுக்கு அமலனாதிபிரான் என்றே பெயர்.

 

அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.

முதல் பாசுரம் ஆயிற்று. இரண்டாம் பாசுரம் ஆயிற்று. மூன்றாம் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தார் அரையர். முதல் முறை சேவித்தார். அந்தப் பாசுரத்தை எப்போதுமே இரண்டுமுறை அனுசந்திக்க வேண்டும்.

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்ததோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.

 

அரையரும் இரண்டுமுறை சேவித்தார். அவர் சேவித்து முடித்ததும் பெருமாள் ‘எங்கே மறுபடியும் சேவியும்’ என்றார்.

‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’

‘மறுபடி சேவியும்’ பாதி பாசுரத்திலேயே பெருமாளின் ஆக்ஞை பிறந்தது.

‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’

 

அரையருக்கு பெருமாள் சொல்ல வந்த செய்தி புரிந்துவிட்டது. ‘அடியேன் எங்கேயும் போகவில்லை’ என்று சொல்லிவிட்டு பெருமாளை சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து விட்டு சென்றாராம்.

வடவேங்கட மாமலையில் இருப்பதும் இந்த அரங்கத்தரவினணையான் தானே?

இங்கே இருப்பவரை மெனக்கெட்டு அங்கே போய் ஏன் சேவிக்க வேண்டும்? என்று பெருமாள் நினைத்தாராம்.

அரையர் போக விரும்பியும் பெருமாள் விரும்பவில்லை. அதனால் அவரால் போக முடியவில்லை. அதனால் நீங்களும் எங்கு போவதானாலும் முதலில் பெருமாளிடம் சொல்லி உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள். அவன் விருப்பப்படவில்லை என்றால் நாம் எங்கேயும் போகமுடியாது!’ என்று முடித்தார் ஸ்வாமி.

அன்றிலிருந்து நான் அப்படியே கடைப்பிடித்து வருகிறேன். நீங்களும் செய்து பாருங்களேன்.

8 thoughts on “‘பெருமாளிடம் சொன்னாயா?’

 1. எங்க பெருமாள் கம்முனு இருக்கார். அவரோட பெருமாள் மாதிரி பேச மாட்டேங்கறார். என்னோட விருப்பங்களுக்கு மாறாகவேதான் பெரும்பாலும் நடக்கிறது. என்றாலும் எல்லாவற்றுக்கும் ஏதோ காரணம் இருக்கும், இதைவிட நல்லதைத்தான் அவர் நமக்குத் தர விரும்புகிறார் என்று நானும் கம்முனு இருந்துடுவேன்! பாஸிட்டிவ் திங்கிங்!!!!

 2. வாங்க ஸ்ரீராம்!
  பாசிடிவ் திங்கிங் தான் ரொம்பவும் சரி. அந்தக் காலத்தில் அவர்களுக்கெல்லாம் பெருமாளைத் தவிர வேறெதுவும் தெரியாது. வேண்டவும் வேண்டாம் அதனால் பெருமாள் பேசினார். நமக்கு பெருமாளைத் தவிர மற்ற எல்லாம் தெரியும்! அதனால அவர் நம்முடன் பேச மாட்டார். ஆனால் ஒரு வேலை நடக்குமா, நடக்காதா என்று நம் உள்மனம் சொல்லிவிடுமே! அப்படித்தான் நம்முடன் பெருமாள் பேசுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.
  நன்றி!

 3. திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான், அடுத்து மதுரகாவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு வரை நிறைவு செய்துவிட்டு பெரியாழ்வார் அருளிய திருமொழியைப் படித்துவருகிறேன். தங்களது இப்பதிவினைப் படித்ததும் அமலனாதிபிரான் படித்த நினைவிற்கு வந்தது. பிரபந்தங்களைப் படிக்கும்போது கிடைக்கும் மன இன்பம் அற்புதம். நன்றி.

  1. வாங்க ஜம்புலிங்கம் ஐயா!

   அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு இரண்டுமே மிகவும் எளிமையாகப் புரியக் கூடியவை. இவை இரண்டுமே தினசரி சேவிக்க வேண்டிய பாசுரங்களில் அடங்கும்.
   திவ்யப் பிரபந்தங்கள் நமது தினசரி வாழ்க்கையிலும் நாம் அனுசரிக்க வேண்டியவை. அதை தான் இந்தக் கதை விளக்குகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. தீபம் இதழிலும் படித்தேன். இங்கேயும் படித்தேன். நாங்கல்லாம் பிள்ளையார்ட்டே சொல்லிட்டுத் தான் கழிவறையே பயன்படுத்துவோம்! 🙂 இதிலே எங்களை மிஞ்ச யாரும் இல்லைனு நினைக்கிறேன். 🙂

  1. வாங்க கீதா!
   நிஜமாவா? ஒரு பதிவு எழுதிவிடுங்களேன்!
   வருகைக்கும், இத்தனை நாட்கள் நான் கேள்விப்பட்டிராத ஒருவிஷயத்தை சொன்னதற்கும் நன்றி!

 5. நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது! இறைவன் விருப்பம் இருந்தால்தான் அவரை சேவிக்க முடியும் என்ற அருமையான கருத்து. எளிமையாக சொன்னவிதம் சிறப்பு! நன்றி!

  1. வாங்க சுரேஷ்!
   அவரை சேவிப்பது மட்டுமல்ல நாம் செய்ய நினைக்கும் காரியங்களும் அவரது விருப்பமின்றி நடக்காது என்பதும் இதில் சொல்லப்படுகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s