ரயிலில் கேட்ட குடும்ப அரசியல்!

இந்தப் பகுதியில் நான் எழுதும் அனுபவம் ஏற்பட்டது காலை 6 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பும் ஷதாப்தி விரைவு வண்டியில். இந்த முறையும் தனியாகத்தான் பயணம். எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் – வண்டி கிளம்புவதற்கு முன்னாலேயே கேட்க ஆரம்பித்தது. ‘நீங்க நினைக்கறாப்பல எங்க பெரியப்பா ஒண்ணும் நல்லவரில்ல…..!’ குரலைக் கேட்டால் சின்ன வயசுப் பெண் போலத் தெரிந்தது. அவள் பேசப் பேச எனக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. மெதுவாக சீட்டிலிருந்து எழுந்து திரும்பிப் பார்த்தேன். இளம்பெண்! அப்போது ஆரம்பித்த அந்தப் பெண் ரயில் சென்னை வந்து சேரும் வரை நிறுத்தவில்லை! முழுக்க முழுக்க குடும்ப அரசியல்! ரொம்பவும் வியப்பாக இருந்தது – இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளம்பெண் இப்படியா? ஒவ்வொருவரைப் பற்றியும் அடிவயிற்றிலிருந்து வரும் வெறுப்புடன் பேசுவது? அவள் கணவனிடமிருந்து அவ்வப்போது – அதுவும் அவள் – ‘கேட்டேளா?’ என்று கேட்கும்போது மட்டும் ஒரு ‘ஊம்’ அவ்வளவுதான்!

அன்று நான் கையில் எடுத்துக் கொண்ட போன புத்தகத்தைக் கூட பிரிக்கவில்லை. பின்னால் தான் லைவ் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதே! நான் மட்டும் கேட்டு அனுபவித்ததை உங்களுக்கும் கொஞ்சம் சாம்பிள் எழுதுகிறேன்: ‘எங்க அப்பா கடைசி பிள்ளை. பெரியப்பாதான் பெரியவர். எங்க அப்பாவைக் கண்டாலே எங்க பெரியப்பாவிற்குப் பிடிக்காது. Sibling rivalry என்று சொல்லுவா. அதை நான் நேரா பாத்துருக்கேன். எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கிறாப்பல நல்லா நடிப்பார். சிவாஜிலேருந்து கமலஹாசன் வரை அவர்கிட்ட பிச்ச வாங்க வேண்டும்!’ அந்தப் பெண் சொல்லச்சொல்ல, அவளது பெரியப்பாவிடத்தில் சிவாஜியும், கமலஹாசனும் கையேந்தி நின்று ‘நடிப்பு சொல்லிக்கொடுங்க…’ என்று பிச்சை கேட்பது போல ஒருநிமிடம் என் மனத்திரையில் ஒரு பிம்பம் ஓடிற்று. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை! கைப்பையில் இருந்த புத்தகத்தை எடுத்து என் முகத்தை மறைத்து, பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி சீரியலைத் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.

‘என் அம்மா இவங்களையெல்லாம் சூப்பரா ‘ஹாண்டில்’ பண்ணுவா. இவங்களை துளிக்கூட சிந்தவே மாட்டா. எங்கம்மா ஒரு டோன்ட் கேர் மாஸ்டர்! நானும் எங்க அம்மா மாதிரி தான்!’ இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த கணவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அவனது மனதில் எந்த மாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்?

 

இந்த குடும்ப அரசியல் என்பது புதியது ஒன்றுமில்லை. எல்லாக் குடும்பங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது தான். நம்முடைய விருப்பு வெறுப்புகளை இளையதலைமுறையின் மனங்களில் வேரூன்றச் செய்வது நல்லதல்ல என்பது என் கருத்து. அவர்கள் வளர்ந்து அவர்களே தெரிந்துகொள்ளட்டுமே. நமக்கு மாமியார், மாமனார், நாத்தனார் வெளி உறவாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளுக்கு இரத்த சம்மந்தம் இல்லையோ? திட்டும்போது மட்டும் அப்படியே பாட்டியைக் கொண்டு பொறந்திருக்கா. அத்தையை உரிச்சு வைச்சிருக்கா (அந்த உரிச்சு என்கிற வார்த்தையை சொல்லும்போது அத்தையையே உரிப்பது போல ஒரு அழுத்தம்!) என்றெல்லாம் திட்டுகிறோம். ஆனால் அவர்களைப் போல கச்சிதமாக ஒரு வேலையை செய்து முடித்தாலோ, அல்லது நன்றாகப் பாடினாலோ பாராட்டுகிறோமா? இல்லையே!

சென்னையில் ரயிலிலிருந்து இறங்கியவுடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘பிற்காலத்தில் நல்ல அரசியல்வாதியாக வருவாயடி பெண்ணே!’ என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை! கணவன் என்கிற அப்பிராணியை நினைத்து வருத்தப்பட்ட படியே வெளியே நடந்தேன். வேறு என்ன செய்ய?

டபிள் டக்கர் என்னும் நரகம்!

ரயில் பயணங்களில் தொடர்ச்சி……

இரண்டாவது முறை இந்த டபிள் டக்கரில் (ஒரு எமர்ஜென்சி வேறு வழியில்லாமல் இந்த வண்டியில் போக நேரிட்டது.) போக நேர்ந்த போது ஒற்றை சீட் கிடைத்தது. அப்பாடா! ஒரு மகிழ்ச்சி பெருமூச்சு விட்டேன். அப்புறம் தான் தெரிந்தது அது எத்தனை பெரிய அசௌகரியம் என்று.

 

இருக்கையில் உட்கார முயன்றேன்.  கைப்பிடியை எடுத்துவிட்டு உள்ளே நுழையலாம் என்றால் அது பெர்மனென்ட் ஆக உட்காந்திருந்தது!  கஷ்டப்பட்டு என்னை திணித்துக் கொண்டு உட்கார்ந்தேன், எழுந்திருக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று. ஜன்னல் ஓரம் என்று வேறு சந்தோஷப்பட்டேன். ஆந்திரா வந்தவுடன் ஒரு வெயில் அடித்தது பாருங்கள். ஜன்னலுக்குப் போட்டிருந்த பச்சைத் திரையையும் தாண்டி வெயில். சுருண்டு விட்டேன். சாப்பிட்டு விட்டு கையலம்ப போவதற்கும் யோசனையாக இருந்தது. மறுபடி இருக்கையில் இருந்து வெளியே வந்து என்னை மறுபடியும் உள்ளே திணித்துக் கொள்ள வேண்டுமே!

 

கொஞ்ச நேரம் candy crush விளையாடிவிட்டு, கொஞ்சநேரம் புத்தகம் படித்துவிட்டு…எப்படியோ காலத்தை கழித்தேன். இந்த ஸ்மார்ட் போன் வேறு அவ்வப்போது சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் கேம்ஸ் விளையாடினால் சீக்கிரம் காலியாகிறது. எனக்கு முன் இருக்கைக்கு மேலே இருந்த சார்ஜரில் போட்டேன் – அங்கு உட்கார்ந்தவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுதான் – அவர் மேல் வயர் வராதபடி இழுத்து விட்டு இருக்கைக்கு முன்னால் இருந்த ட்ரேயில் வைத்தேன். முன்னால் உட்கார்ந்திருந்தவர் ஒரு இளைஞர்தான். ஏதோ அவரது வீட்டு சார்ஜரில் என் போனைப் போட்டது போல நொடிக்கு ஒருதரம் அந்த வயரை பார்த்து பார்த்து ‘ப்ச்…..ப்ச்….’ என்றார். அவருக்கு என்ன பிரச்னையோ என்னவோ?

 

கையில் இட்லி எடுத்துப் போயிருந்தேன். கஷ்டகாலக் காபி மட்டும் குடித்துவிட்டு எப்போது சென்னை வரும் என்று காத்திருந்தேன். பக்கத்து மூன்று இருக்கையில் ஒரு இளம் வயது தம்பதி இரண்டு குழந்தைகளுடன் வந்து அமர்ந்திருந்தனர். பெரிய குழந்தைக்கு 9 அல்லது பத்து வயது இருக்கும். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தேமேன்னு வந்தது. ஆனால் இரண்டாவது குழந்தை ஒரு கத்தல் கத்திற்று, பாருங்கள். காது கிழிந்து போயிற்று! என்ன சொன்னாலும் அழுகை, கத்தல், அம்மாவையும் அப்பாவையும் பட்பட்டென்று அடித்துக் கொண்டே வந்தது. ஆறுமணி நேரப்பயணத்தில் நமக்கே தாங்க முடியவில்லையே, எப்படித்தான் 365 தினங்கள் சமாளிக்கிறார்களோ என்று நினைத்துக் கொண்டே வந்தேன். வெயிலுடன் அந்தப் பாப்பா வேறு என் பொறுமையை சோதித்தது.

இந்த ரயிலில் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே வயதானவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. சின்ன வயதுக்காரர்கள் இதில் வருவதில்லை. எப்போது டிக்கட் வேண்டுமென்று பார்த்தாலும் இந்த ரயிலில் இடம் இருக்கிறது. கீழே இறங்குவதும், மேலே ஏறுவதும் மிக மிகக் கடினமாக இருக்கிறது. உயரமான படிகள். சென்னை வருவதற்கு முன்பே நான் என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு – எனக்கு சீட் கீழ் வண்டியில் – படியில் ஏறமுடியாமல் ஏறி… …ஆறுபடிகளுக்குப் பதில் எட்டு படிகள் சின்னச்சின்னதாக (உயரம் கம்மியாக) வைத்திருக்கலாம்.

நல்லகாலம், சென்னை வந்தவுடன் உறவினரின் கார் எனக்காகக் காத்திருந்தது. அதில் ஏறி உட்கார்ந்து அந்த ஏசியில் சற்று ஆசுவாசப்படுத்திக் ஒருகொண்டேன்.

திரும்பி வரும்போது எனது சம்பந்தி ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். எனது அந்தப் பக்கத்து இரண்டு சீட் இருக்கையில் ஒரு அம்மா, பெண். அம்மாவிற்கு 93 வயது என்றார் 70+ இல் இருந்த மகள். ‘அம்மா நன்றாக இருக்கிறாள். ஒரு பிரச்னையும் இல்லை. காதுதான் கொஞ்சம் கேட்கவில்லை’ என்று என்னுடன் பேச ஆரம்பித்தார் மகள். என் சம்பந்தி என்னிடம் ‘மாமி உங்களுக்கு இன்னைக்குப் பொழுது நன்றாகப் போகும்’ என்று சொல்லிச் சிரித்தார். காது கொஞ்சம் கேட்கவில்லை என்பதன் முழு அர்த்தத்தை ரயில் கிளம்பத் தொடங்கியவுடன்தான் உணர்ந்தேன். ரயில் சத்தத்தையும் மீறி ‘ஓ’ என்று பேசிக்கொண்டிருந்தார் மகள். அவரது அம்மாவிற்குக் கேட்டதோ இல்லையோ, பெங்களூரில் இருப்பவர்களுக்குக் கேட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ரயிலில் கொடுக்கும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் இருவரும். தாங்கள் கையோடு எடுத்து வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அம்மா அப்படியே தூங்கலானார். பெண்ணும் அப்படியே. ரயில் சத்தமில்லாமல் ஓடுவது போல இருந்தது!

 

திடீரென்று ஒருவர் வந்து எல்லோருடைய கைகளிலும் ஒரு படிவத்தைக் கொடுத்துச் சென்றார். ரயில் பிரயாணம் பற்றிக் கேட்டிருப்பார்கள் என்று நினைத்தேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளைஞன் ‘சென்றமுறை பிரயாணத்தின் போது இதுபோல ஏற்கனவே ஒன்று கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். அப்போது சொன்ன குறைகளை நிவர்த்தி செய்ய  ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்று தெரியவில்லை. இப்போது புதிதாக இன்னொன்று…..!’ என்றார். கடைசியில் அந்தப் படிவத்தில்  பிரயாணத்தைப் பற்றிக் கேட்கவில்லை. மாறாக ரயிலில் Wi-Fi வேண்டுமா, ப்ரீயா? பிரயாணிகளிடமிருந்து பணம் வசூலிக்கலாமா? என்றெல்லாம் அந்தப் படிவத்தில் கேட்டிருந்தது. எனக்கு வந்த கோவத்தில், முதலில் பிரயாணிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கவனியுங்கள். பிறகு இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சுடச்சுட எழுதிக் கொடுத்தேன்!

 

வளவளப் பெண்….நாளை

‘பெருமாளிடம் சொன்னாயா?’

serthisevaiஜூன் 20, 2016 தீபம் இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை – எடிட் செய்யப்படாமல் இங்கே:

பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் இருக்கும் யதுகிரி யதிராஜ மடத்தில் நிறைய உபந்யாசங்கள், காலக்ஷேபங்கள் நடக்கும். சென்னையில் இருக்கும் மிகவும் பிரபலமான உபந்யாசகர்கள் எல்லோருமே இங்கு வந்து உபந்யாசங்கள் செய்வார்கள்.

 

எனக்கு மிகவும் பிடித்த உபன்யாசகர் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ஸ்ரீ பூவராகாச்சார்யார் ஸ்வாமி. இந்த ஸ்வாமி மெத்தப் படித்தவர். சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் உள்ளவர். நிறைய விஷயங்கள் சொல்லுவார். தினசரி வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், கோவிலுக்குச் செல்லும்போது கைக்கொள்ள வேண்டிய நியமங்கள், பெரியவர்களுக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று எல்லாவிதமான விஷயங்களையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவார். எதற்காகவும் நம் சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் இந்த ஸ்வாமி. சொல்ல வேண்டிய விஷயங்களை மிகவும் நகைச்சுவையுடன் அதேசமயம் அசைக்கமுடியாத உதாரணங்களுடனும் இந்த ஸ்வாமி சொல்லுவார்.

 

ஒருமுறை சொன்னார்: ‘ஊருக்குப் போகிறேன், ஊருக்குப் போகிறேன் என்று எதிர்வீட்டில், பக்கத்து வீட்டில், மேல்வீட்டில் என்று எல்லோரிடமும் சொல்லுகிறீர்களே, உங்கள் அகத்துப் பெருமாளிடம் சொன்னீர்களா?’ இதைக்கேட்டு நாங்கள் எல்லோரும் முதலில் சிரித்தாலும், ஏதோ பெரிய விஷயம் வரப்போகிறது என்று சிரிப்பதை நிறுத்திவிட்டு அவர் தொடரக் காத்திருந்தோம். அவர் சொன்னார்:

 

‘ஸ்ரீரங்கத்தில் ஒரு அரையர் ஸ்வாமி இருந்தார். தினமும் பெருமாளின் திருமுன்பு திவ்யப்பிரபந்தம் சேவிப்பதை கைங்கர்யமாகச் செய்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக திருவேங்கடம் போய் திருமலையப்பனை சேவித்துவிட்டு வரவேண்டும் என்ற ஆசை. பெருமாளிடம் எப்படிக் கேட்பது என்று மிகவும் தயங்கினார். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெருமாளிடம் தனது ஆசையை விண்ணப்பம் செய்தார். பெருமாள் சற்று நேரம் யோசனை செய்தார். ‘இவன் எதற்கு அங்கு போக ஆசைப்படுகிறான் நான் இங்கிருக்கும்போது?’ என்று மனதிற்குள் நினைத்தவாறே ‘சரி, நீ உன் விருப்பபடியே போய்விட்டுவா. ஆனால் அதற்கு முன் ‘அமலனாதிபிரான்’ சேவித்துவிட்டுப் போ’ என்றார்.

 

அரையரும் ‘அப்படியே ஆகட்டும், அடியேன்’ என்று சொல்லிவிட்டு அமலனாதிபிரான் சேவிக்க ஆரம்பித்தாராம். அமலனாதிபிரான் என்பது திருப்பாணாழ்வார் சாதித்த திவ்யப்பிரபந்தம். முதல் பாசுரம் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்குவதால் அந்த பாசுரங்களுக்கு அமலனாதிபிரான் என்றே பெயர்.

 

அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.

முதல் பாசுரம் ஆயிற்று. இரண்டாம் பாசுரம் ஆயிற்று. மூன்றாம் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தார் அரையர். முதல் முறை சேவித்தார். அந்தப் பாசுரத்தை எப்போதுமே இரண்டுமுறை அனுசந்திக்க வேண்டும்.

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்ததோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.

 

அரையரும் இரண்டுமுறை சேவித்தார். அவர் சேவித்து முடித்ததும் பெருமாள் ‘எங்கே மறுபடியும் சேவியும்’ என்றார்.

‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’

‘மறுபடி சேவியும்’ பாதி பாசுரத்திலேயே பெருமாளின் ஆக்ஞை பிறந்தது.

‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’

 

அரையருக்கு பெருமாள் சொல்ல வந்த செய்தி புரிந்துவிட்டது. ‘அடியேன் எங்கேயும் போகவில்லை’ என்று சொல்லிவிட்டு பெருமாளை சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து விட்டு சென்றாராம்.

வடவேங்கட மாமலையில் இருப்பதும் இந்த அரங்கத்தரவினணையான் தானே?

இங்கே இருப்பவரை மெனக்கெட்டு அங்கே போய் ஏன் சேவிக்க வேண்டும்? என்று பெருமாள் நினைத்தாராம்.

அரையர் போக விரும்பியும் பெருமாள் விரும்பவில்லை. அதனால் அவரால் போக முடியவில்லை. அதனால் நீங்களும் எங்கு போவதானாலும் முதலில் பெருமாளிடம் சொல்லி உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள். அவன் விருப்பப்படவில்லை என்றால் நாம் எங்கேயும் போகமுடியாது!’ என்று முடித்தார் ஸ்வாமி.

அன்றிலிருந்து நான் அப்படியே கடைப்பிடித்து வருகிறேன். நீங்களும் செய்து பாருங்களேன்.