ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் அவர் எழுதியவை அல்ல!!!

 

 

 

 

 

உலக மகாகவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் மறைந்ததும் ஏப்ரலில் தான்.இவர் பிறந்த  ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள், என்று கேட்கிறீர்களா? நான் இப்படிச் சொல்லவில்லை. அவரது காலத்திலேயே அவரது விமரிசகர்கள் அவரைப் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.

 

மேலே எழுதுவதற்கு முன் ஒரு கேள்வி: ஷேக்ஸ்பியர் காபி பிரியரா? டீ பிரியரா? விடை இந்த கட்டுரையின் இறுதியில்.

 

இப்போது நாம் பாயிண்டுக்கு வருவோம்: ஷேக்ஸ்பியர் பிறந்தது ஸ்ட்ராட்போர்ட் என்னும் ஒரு சிறிய யாரும் அறியாத தூங்குமூஞ்சி ஊர். லண்டன் நகரிலிருந்து நூறு மைல் தள்ளி இருக்கும் ஒரு வியாபார இடம். என்ன வியாபாரம்?  கசாப்பு வியாபாரம் – செம்மறியாடுகளை வளர்த்து அவற்றை வெட்டி விற்கும் வியாபாரம்.

 

ஷேக்ஸ்பியரை வெறுக்கும் ஒரு கூட்டம் அப்போதும், இப்போதும் உண்டு. அவர்களுக்கு இந்த ஸ்ட்ராட்போர்டு ஊரையும் பிடிக்காது; இந்த ஊரில் பிறந்த உலகப் புகழ் பெற்ற இந்த மகா கவிஞனையும் பிடிக்காது. அதுமட்டுமல்ல; இவர் எழுதியதாகச் சொல்லப்படும் இலக்கியங்கள் எதுவுமே இவர் எழுதியது அல்ல என்று அடித்துச் சொல்லுகிறார்கள். காரணங்களைப் பார்ப்போமா?

 

 • ஸ்ட்ராட்போர்ட் துளிக்கூட வளர்ச்சி அடையாத, பின்தங்கிய ஊர். அங்கு கல்வி கற்கும் வசதிகளோ, கலாச்சார மையங்களோ கிடையாது. இப்படி இருக்கும் ஒரு ஊரில் எந்த அறிவுஜீவி பிறக்க முடியும்? பிறந்தாலும் தனது புத்திகூர்மையை எப்படி வளர்த்துக் கொள்ள முடியும்?
 • இங்கு ஷேக்ஸ்பியர் படித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்கு பள்ளிகளோ, கல்லூரிகளோ இருந்தால்தானே அதில் ஷேக்ஸ்பியர் படித்தார் என்று வருகைப்பதிவேட்டைக் காண்பிக்க முடியும்? அவரது ஆசிரியர்களைப் பற்றியோ, கூடப் படித்த மாணவர்களைப் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. இதிலிருந்து தெரியவில்லையா, அவர் ஒரு படிப்பறிவு இல்லாதவர் என்று?
 • படிப்பறிவு இல்லாத, உழைத்துப் பிழைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு, மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை பற்றியும், அரச பரம்பரையினரின் பழக்கவழக்கங்கள் பற்றியும், ஐரோப்பிய நகரங்களைப் பற்றியும் என்ன தெரியும்? எப்படி அவரால் ஒரு அரசரைப் பற்றியும், அரசியல் பற்றியும், வெளிதேசத்து கலாச்சாரம் பற்றியும் எழுத முடியும்?

 

சரி, இவர் எழுதவில்லையென்றால் வேறு யார் எழுதியிருப்பார்கள்? நன்றாகப் படித்த மேட்டுக்குடி மகனார் ஒருவரால் தான் எழுதப்பட்டிருக்கும். ஏதோ சொல்லமுடியாத காரணங்களால் அவர் அனாமதேயமாக இருந்து கொண்டு பெயர், புகழ் எல்லாவற்றையும் ஷேக்ஸ்பியருக்குக் கொடுத்துவிட்டார். ஷேக்ஸ்பியருக்கு பதிலாக இவர்கள் எழுதியிருக்கக்கூடும் என்று இந்த ஷேக்ஸ்பியர்-எதிரிகள் சுமார் 80 பேர்களைப் பட்டியலிடுகிறார்கள். இதில் பிரான்சிஸ் பேகான், கிறிஸ்டோபர் மார்லோ, ஆக்ஸ்போர்டின் 17வது பிரபு எட்வர்ட் டி வேர் இவர்களும் அடக்கம். ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இல்லவேயில்லை என்று கூட ஒரு தரப்பினர் சொல்லுகிறார்கள்.

 

ஷேக்ஸ்பியரது 450 வது பிறந்த நாள் உலகெங்கும் 2014 ஆம்  வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக இவரது பிறந்த ஊரான ஸ்டார்ட்போர்டில் இருக்கும் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரது பிறந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இவர் இந்த வீட்டில்தான் பிறந்து, வளர்ந்து விளையாடி, படித்து, எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டது. திருமணம் முடிந்து தனது மனைவி அன்னா ஹாத்வேயுடன் ஐந்து வருடங்கள் வாழ்ந்ததும் இங்கேதான்.

 

பிறந்த நாள் என்றால் கேக் இல்லாமலா? ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளை ஒட்டி கேக்ஸ்பியர் கேக் என்ற போட்டியும் நடந்தது. ஒரு போட்டியாளர் ஷேக்ஸ்பியர் தனது மேஜையின் முன் உட்கார்ந்து தனது நாடகங்களின் கையெழுத்துப் பிரதியை கையில் வைத்திருப்பது போல கேக் செய்து வந்திருந்தார். இன்னொருவர் இவரது மூன்றாம் ரிச்சர்ட் நாடகத்திலிருந்து சில காட்சிகளை கேக்கில் செய்து வந்திருந்தார்.

 

இவரைப் பற்றிய சில வியப்பான தகவல்கள்:

 • நிறைய வார்த்தைகள் தெரிந்தவர். இவரது நாடகங்களிலும், கவிதைகளிலும் சுமார் 30,000 வேறு வேறுவிதமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 • 38 நாடகங்கள், 154 சானட்ஸ் (14 வரிகள் கொண்ட பாடல்கள்), மற்றும் பல பல்சுவை பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
 • இவரைப்பற்றிய கூகிள் பக்கங்கள் 157 மில்லியன்.
 • இவரது நாடகங்களில் தற்கொலை 13 தடவை நடந்திருக்கிறது.
 • வெளி உலகிற்கு மிகப்பெரிய நாடக ஆசிரியர் என்று அறியப்பட்டிருந்தாலும், அவரது ஊரில் மதிப்பிற்குரிய தொழிலதிபராகவும், சொத்துக்களின் அதிபதியாகவும் அறியப்பட்டிருந்தார்.
 • அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஷேக்ஸ்பியரின் மிகப்பெரிய விசிறி. நண்பர்களுடன் பேசும்போது அடிக்கடி ஷேக்ஸ்பியரது நாடக வசனங்களைப் பேசிக் காண்பிப்பாராம்.
 • இவரது நாடகங்கள் மேடையில் நடிப்பதற்காக அவசரம் அவசரமாக எழுதப்பட்டதினால், அவர் எழுதிய அசல் கையெழுத்துப் பிரதிகள் எதுவும் இப்போது இல்லை.
 • அடித்தல் திருத்தல் இல்லாமல் வேகமாகவும், தங்குதடங்கல் இல்லாமலும் எழுதுவார்.
 • தமது 18 வயதில் தன்னை விட 8 வயது மூத்த பெண்மணியை மணந்து கொண்டார்.
 • ஆங்கில மொழிக்கு இவர் கொடுத்த வார்த்தைகள் கணக்கிலடங்காதவை. பேச்சு வழக்கில் இருந்த பல வார்த்தைகள் எழுத்துருவில் இவரது நாடகங்களில் இடம் பிடித்தன. பல சொலவடைகளை பிரபலப்படுத்தவும் செய்தார்.
 • அந்தக்காலத்தில் 30, 40 வயது வாழ்வது என்பதே பெரிய விஷயமாக இருந்தபோது ஷேக்ஸ்பியர் 52 வயது வரை வாழ்ந்து, 1616, ஏப்ரல் 23 ஆம் தேதி மறைந்தார். ஸ்ட்ராட்போர்ட் சர்ச்சில் இருக்கும் இவரது கல்லறையின் மேல் எழுதப்பட்ட வார்த்தைகள்: ‘என்னை இங்கிருந்து நகர்த்துபவன் சபிக்கப்படுவானாக’.

 

 

கடைசியாக புதிருக்கு விடை: ஷேக்ஸ்பியர் காலத்திற்குப் பிறகுதான் காபி, டீ இவை பிரிட்டனுக்குள் வந்தன. அதனால் ஷேக்ஸ்பியர் காபி பிரியரும் அல்ல; டீ பிரியரும் அல்ல!

 

11 thoughts on “ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் அவர் எழுதியவை அல்ல!!!

 1. அறிந்திருக்கிறேன். திருக்குறள் பற்றியும் இதே போல ஒரு கருத்து உண்டு.

 2. கம்பராமாயணம் கூட கம்பன் எழுதவில்லை என்ற கருத்து உண்டு. வால்மீகியின் பூர்வீகம் என்ன? ஒரு எழுதப் படிக்கத் தெரியாத திருடன்.. அவர் சமஸ்கிருதத்தில் அப்படி ஒரு காவியம் எழுதியிருக்க முடியுமா? இவர்களெல்லாம் பள்ளிக்கூடம் போன சாட்சி ஆதாரம் எதுவுமே இல்லை. அந்த நூல்களைத் தவிர வேறே எதுவுமே எழுதியதற்கான அத்தாட்சியும் இல்லை.

  அதனால் கம்பனும் வால்மீகியும் ராமாயணம் எழுதவில்லை என்று சொல்லிவிடுவோம், சரியா?

  காரிகன் சொல்லியிருப்பது போல வள்ளுவரும் எழுதவில்லை.

  இவற்றையெல்லாம் நானாக்கும் என் பூர்வ ஜென்மங்களில் இவர்களின் பக்கத்து குடிசைக்காரனாக இருந்தப்போ எழுதினது. சும்மா படிச்சுட்டு தரேன்னு வாங்கிட்டு போனவர்கள் தான்.. இந்த மாதிரி செய்து விட்டார்கள். ஹூம். எந்தக் காலத்துலயும் யாரையும் நம்பக்கூடாது.

  1. அப்பாடி ! இப்ப புரிஞ்சு போச்சு.
   பல்கொட்டி பேய் நீங்க எழுதியது இல்லையா?
   இல்லவே இல்லை.
   அப்ப யார் எழுதினாங்க.?
   பல் கொட்டி பேயே எழுதியது.

   சுப்பு தாத்தா.

 3. A>C BRADLEY the celebrated critic had written many reviews on all shakespears plays…….
  Historians would jokularly tell that even if shakespear had a doubt about his creations
  he would refer A.C BRADLEYS reviews………
  To my best of knowledge A C BRADLEY had never raised any
  doubt about shakespears creativity……

 4. உங்கள் கட்டுரை தந்த புள்ளீ விவரங்களோடு, அப்பாதுரையின் கருத்துரையில் இருந்த நகைச்சுவையையும் ரசித்தேன்.

 5. ஷேக்ஸ்பிரயரைப் பற்றி மிகவும் ஆராய்ச்சி செய்திருக்கிறீகளே ரஞ்சனி இவரது நாடகங்களில் TEMPEST என்ற நாடகம் நான் பி யூ சி படிக்கும்போது இருந்தது படித்த ஞாபகம். ஒத்தெல்லோ என்ற நாடகத்தை நான் டிகிரி படிக்கும்போது அரங்கேற்றினோம் அதில் ரொமேலா என்ற சிறிய பாத்திரத்தில் நான் நடித்தேன். உங்கள் பதிவைப் படித்தபோது எனக்கு வந்த மலரும் நினைவுகள் இவை பகிர்ந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அருமையான பதிவு பாராட்டுக்கள்

 6. அருமையானக் கட்டுரை ரஞ்சனி . ஷேக்ஸ்பியரைப் பற்றிய இத்தனை சுவாரஸ்யமான் விஷயங்களை அழகாய் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி. .,

 7. ஷேக்ஸ்பியர் பற்றி அறிவோம் என்றாலும் சில புள்ளிவிவரங்கள் புதிது. இப்படித்தான் சில புகழ்பெற்ற எழுத்தாளர்களை அவர்கள் இருக்கவில்லை, அவர்கள் எழுதவில்லை என்று சொல்லிவிடுகின்றார்கள். எதிர்க்கட்சி ஒன்று இருக்கும் போல எப்போதும்.

  நல்ல பதிவு. பள்ளியில், கல்லூரியில் போட்ட நாடகங்கள் நினைவுக்கு வருகின்றது..

 8. ஷேக்ஸ்பியர் பற்றிய கான்ட்ரவர்சி எல்லாம் நாட் வொர்த் லூகிங் இன்டு .
  எ ரோஸ் இஸ் எ ரோஸ் பை வாடெவெர் நேம் யூ கால் இட்.

  சுப்பு தாத்தா.

 9. அருமையான பதிவு. ஷேக்ஸ்பியர் பற்றிய செய்திகள் மிகவும் அற்புதம் எடுத்துத் தந்தமைக்கு மிகவும் நன்றியும் பாராட்டுகளும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s