Uncategorized

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், மகாராணி!

இங்கிலாந்து நாட்டின் அரசியாக  நீண்ட நாட்கள் அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு 90 வயது நிறைவடைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு இந்த மாதம் 21 ஆம் தேதி 90 வயது நிறைவடைந்தது.

 

 

யார்க் கோமகன் என்றும் பிற்காலத்தில் ஆறாம் ஜியார்ஜ் என்றும் அழைக்கப்பட்ட ஆல்பெர்ட் இளவரசருக்கும், அவரது மனைவி முதலாம் எலிசபெத் ராணிக்கும் லண்டனில் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் 1926 ஆம் ஆண்டில் பிறந்தவர் இந்த இரண்டாம் எலிசபெத் ராணி. இவரது முழு  பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. அவரது தாயாரின் பெயரான எலிசபெத், ஐந்தாம் ஜியார்ஜின் (அப்பா வழி தாத்தா) தாயார் பெயரான அலெக்சாண்ட்ரா, தந்தையைப் பெற்ற அம்மாவின் பெயரான மேரி ஆகிய மூன்று பெயர்களையும் சேர்த்து இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. இங்கிலாந்து, கனடா, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளின் ராணியாகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் 1952 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். பிற்காலத்தில் சுதந்திரம் பெற்ற 12 நாடுகளுக்கும் அவர் ராணியாக இருந்தார்.

 

இவர் வீட்டிலேயே கல்வி கற்றவர். இவர் பிறந்த சமயத்தில் இவரது அப்பாவைப் பெற்ற தாத்தா ஐந்தாம் ஜியார்ஜ் அரசராக இருந்தார்.

 

இரண்டாம் எலிசபெத்திற்கு பட்டத்திற்கு வரும் வாய்ப்பே இருக்கவில்லை. இவருக்கு முன்னால் இவரது பெரியப்பா எட்டாவது எட்வர்ட் கோமகன், இவரது தந்தை இருவரும் வாரிசுகளாக அறியப்பட்டு இருந்தனர். ஆனால் எட்டாவது எட்வர்ட் அரச குடும்பத்திற்கு ஏற்காத வகையில் வாலிஸ் சிம்ஸன் என்ற விதவையை மணந்து பட்டத்தைத் துறந்தார். (இந்தக் காதல் அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிற்காலத்தில் நம்ம ஊர் ஆனந்த விகடனில் ‘கோமகனின் காதல்’ என்ற பெயரில் தொடராகவும் வந்தது.) அதனால் எலிசபெத்தின் அப்பா பட்டத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாததால் எலிசபெத் அவரது வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

 

இவரது சிறுவயதில் இவரைப் பார்த்துக்கொண்ட மரியன் கிராபோர்ட் எழுதிய ‘தி லிட்டில் பிரின்சஸ்’ என்ற புத்தகத்தில் சிறுவயதில் இவருக்கு குதிரை, மற்றும் நாய் இவற்றின் மீது பெரும் ஆசை இருந்ததாக சொல்லியிருக்கிறார். சிறிய வயதிலேயே மிகவும் ஒழுங்கு நிறைந்தவராகவும், பொறுப்பு மிக்கவராகவும் இருந்தார் என்றும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் ஒரு அரசியாக வருவதற்குரிய தோரணைகள் அப்போதே காணப்பட்டன போலிருக்கிறது!

 

1947 ஆம் ஆண்டு எடின்பர்க் கோமகன் பிலிப்பை மணந்தார் இரண்டாம் எலிசபெத்.  இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் – சார்ல்ஸ், ஆன், ஆண்ட்ரு, எட்வர்ட் என்று.  இரண்டாம் எலிசபெத் ராணியை மணந்த பிலிப், ராணியின் கணவர் என்றே குறிப்பிடப்படுகிறார். ராஜா என்று அழைக்கப்படுவது இல்லை. ஏனெனில் அவருக்கென்று ராஜ்ஜியம் இல்லை.

 

இவரைப்பற்றிய சில வியக்கத்தக்க விஷயங்கள்:

 • நீண்டகாலம் அரியணையில் இருந்த அரசி இவர். இதுவரை இவரது எள்ளுப்பாட்டியான விக்டோரியா ராணிதான் இந்த சாதனைப் புரிந்திருந்தார். அவரை விட இவர் இப்போது அதிக நாட்கள் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்து அவரது சாதனையை முறித்திருக்கிறார்.
 • பல உலகநாடுகளுக்கு – சுமார் 116 நாடுகளுக்கு – சுற்றுப்பயணம் செய்திருக்கும் இவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. வியப்பாக இருக்கிறது, இல்லையா? இங்கிலாந்து நாட்டில் ராணியின் பெயரில்தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். அதனால் இவருக்கு பாஸ்போர்ட் கிடையாது. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுக்க சுற்றிவரும் சிறப்பு இவருக்கு மட்டும் தான். இவரது வாரிசுகளுக்கும், கணவருக்கும் இந்தச் சிறப்பு இல்லை! அவர்களுக்கு கட்டாயம் பாஸ்போர்ட் வேண்டும். பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் இவர் எந்த ஆண்டு எந்த நாட்டிற்கு சென்று வந்தார் என்கிற தகவல்கள் அரசாங்க ரீதியாகப் பதியப்படவில்லை!
 • மேலும் தனது தோட்டங்களை தனது ரேஞ்ஜர் ரோவரில் பயணம் செய்து சுற்றிப் பார்ப்பது இவருக்குப் பிடித்த பொழுபோக்கு. ஆனால் இவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை!
 • இவருக்கு இரண்டு பிறந்தநாட்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி இவர் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு காமன்வெல்த் நாடும் மே அல்லது ஜூன் மாதத்தில் இவரது பிறந்த நாளைக் கொண்டாடும்.
 • தனது தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று தனது 18வது வயதில் பெண்கள் துணைபிராந்திய சேவையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் பணி புரிந்தார். சீருடை அணிந்து மெக்கானிக் ஆகவும் ட்ரக் ஓட்டுனராகவும் பயிற்சி பெற்றார். இரண்டாம் உலகப்போரில் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ராணி என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு.
 • இவரது திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளிலிருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரம். சிக்கன நடவடிக்கைகள் அமலிலிருந்த காரணங்களால் ராணி தனது ரேஷன் கூப்பன்களை சேமித்து வைத்து அந்தப் பணத்தில் தந்தக்கலரில் 10,000 வெண்முத்துக்கள் வைத்துத் தைக்கப்பட்டிருந்த தனது திருமண உடையை வாங்கினார்.
 • 1976 இல் முதன்முதலில் மின்னஞ்சல் அனுப்பிய ராணி இவர்தான்.
 • 13 வயதிலேயே தனது எதிர்காலக் கணவரை சந்தித்தவர். 1947 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. 68 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் ராணி தம்பதிக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
 • தனது செல்ல நாய்களான வில்லி, ஹோல்லி இரண்டிற்கும் தன் கையால் தானே உணவளிப்பார். முடிந்தபோது அவைகளுடன் நடப்பார்.
 • இவரது 90வது பிறந்தநாளை ஒட்டி இவரும், இவரது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் நால்வரும் இருக்கும் தபால்தலை ஒன்று வெளியிடப்பட்டது.

இளவரசர் சார்ல்ஸ்,  இரண்டாம் எலிசபெத் ராணி, இளவரசர் வில்லியம்ஸ், குட்டி இளவரசர் ஜியார்ஜ்.

நான்குபேர்களும் ஒன்றாக இருப்பது போல இருந்தாலும் நான்கு தனித்தனி தபால்தலைகள் இவை. முதல் முறையாக குட்டி இளவரசர் தபால்தலையில் இடம்பெறுகிறார். ‘Born with a silver spoon’ என்பார்கள். இவர் வெள்ளிக்கூஜாவுடன் பிறந்தவர்! 🙂 குட்டி இளவரசர் இந்தப் படத்தில் தனது அப்பா, தாத்தா, கொள்ளுப்பாட்டியுடன் காட்சியளிக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் நீண்ட நாள் அரசியான இவர் நூறு வருடங்கள் வாழ்ந்து அதிலும் ஒரு சரித்திரம் படைக்கட்டும்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், மகாராணி!

 

பின்குறிப்பு: எனக்கும் ராணிக்கும் ஒரு ஒற்றுமை.

அவர் இருப்பது விண்ட்ஸர் அரண்மனையில்.

நான் இருப்பது விண்ட்ஸர் அம்பிகா அடுக்குக் குடியிருப்பில்!

 

நீங்கள் அடிக்க வருவதற்கு முன் ஜூட்!

Advertisements

7 thoughts on “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், மகாராணி!

 1. இவ்வளவு செய்திகள் தொடுத்த கதம்பம் படிக்க மிக்க நன்றாக இருந்தது. நல்ல பண்புகள் இருக்கிறது. வாழ்த்துகள் நானும் சொல்கிறேன். விண்ட்ஸர் அரண்மனைக்கும், விண்ட்ஸர் அம்பிகா குடியிருப்பிற்கும் தொலைவு வெகு தூரமில்லை. உங்களுக்கும் அரண் மனைப் பிராப்தம் கிட்டட்டும். அழகிய நடை. அன்புடன்

 2. அப்போ உங்களுக்கும் கண்டிப்பாக 90 வது பிறந்த நாள் உண்டு ரஞ்சனி அப்போது வாழ்த்த நான் இருப்போனோ என்னவோ இப்போதே பிடியுங்கள் வாழ்த்தை ரஞ்சனி 90 க்கு ஜெய்

 3. ஹஹாஹ்ஹ்ஹ் எலிசபெத் ராணி இருப்பது வின்ட்சர் அரண்மனையில் நான் இருப்பது வின்ட்சர் அம்பிகா குடியிருப்பில்…செம…ஜீட் எல்லாம் வேண்டாம் நீங்களும் ராணிதான்! வலையுலகில்!!

  புதிய தகவல்கள். அறிந்துகொண்டோம்…குட்டி இளவரசர் அழகாக இருக்கிறார்.

  ராணிக்குத் தாமதமான வாழ்த்துகள். பல ஆண்டுகள் வாழ்ந்திட..

 4. இணையப் பிரச்சனையினால் அன்றே கருத்திட முடியவில்லை. கருத்து அடித்து பப்ளிஷ் கொடுக்கும் போது இணையம் கட் ஆகும். இப்படிப் படுத்தியது ..

 5. அருமையான பதிவு.நிறைய செய்திகளை சேகரித்துத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

  2016-04-22 0:26 GMT-04:00 ranjani narayanan :

  > ranjani135 posted: ” இங்கிலாந்து நாட்டின் அரசியாக நீண்ட நாட்கள்
  > அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இரண்டாம் எலிசபெத்
  > ராணிக்கு 90 வயது நிறைவடைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு
  > இந்த மாதம் 21 ஆம் தேதி 90 வயது நிறைவடைந்தது. ”
  >

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s