Uncategorized

விண்டுதான் வாயில போடணுமா?

செவ்வாழைப் பழத்தை உரித்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்ட நான் கேள்வி வந்த திசையைப் பார்த்து அடக்கமுடியாமல் சிரித்துவிட்டேன்.

 

எனது தோழியின் மகள் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். காலையில் சிற்றுண்டிக்கு முன் என்னிடம் ஒரு செவ்வாழை பழத்தைக் கொடுத்தார் தோழியின் மகள். எனக்கு அடுத்து சாப்பாட்டு மேஜையின் அந்தப் பக்கத்தில் என் தோழியின் மாப்பிள்ளை அமர்ந்திருந்தார். அவரிடமிருந்தான் இந்தக் கேள்வி வந்தது. அவரது கையிலும் உரித்த செவ்வாழைப் பழம். அவர் அதைக் கடித்துத் தின்பதா? அல்லது என்னைப் போல விண்டு வாயில் போட்டுக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருந்தார்!

 

சிரித்துக்கொண்டே சொன்னேன்: ‘இது உங்கள் வீடு நீங்கள் இங்கு எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்….! எனக்கு இப்படித்தான் பழக்கம்’ என்றேன்.

 

‘இதற்கு முன்னால் ஒரு வீட்டில் குடித்தனம் இருந்தோம். முன்பக்கத்தில் ஒரு மாமி இருந்தார். அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் என்று கூப்பிட்டார் ஒருநாள். நான் போனேன். என் கையில் காப்பி டம்ப்ளரைக் கொடுத்துவிட்டு ‘தூக்கி சாப்பிடு சுதா!’ என்றார் அந்த மாமி’ என்று தோழியின் மகள் கூறினார்.

 

‘இப்போது நீங்கள் வாழைப்பழத்தை கடித்து சாப்பிடாமல் விண்டு வாயில் போட்டுக் கொள்வதைப் பார்த்தவுடன் எனக்கு அந்த மாமியின் நினைவு வந்துவிட்டது!’ என்று தொடர்ந்தார் என் தோழியின் மாப்பிள்ளை. ‘அதுதான் கேட்டேன், ஒருவேளை விண்டுதான் வாயில போட்டுக்கணுமோ என்று!’

 

அதென்னமோ தெரியவில்லை சின்ன வயசிலிருந்து இப்படியே பழகிவிட்டது. என் அம்மா ரொம்பவும் கண்டிப்பு. வாழைப்பழத்தை விண்டு வாயில் போட்டுக் கொள், அப்பளாத்தை உடைத்து வாயில் போட்டுக் கொள் என்று கட்டளைகள் வந்தவண்ணம் இருக்கும். எந்த சாப்பாட்டுப் பொருளையும் அப்படியே வாயில் வைத்துக் கடித்து சாப்பிட்டதே இல்லை. இந்த வழக்கம் நல்லதுதான் என்றாலும் சிலவேளைகளில் இதுபோல மற்றவர்களுக்கு சங்கடம் உருவாகக் காரணம் ஆகிவிடுகிறது.

 

ஒருசமயம் என்னுடன் பயிற்சியாளர் ஆக வேலை பார்த்துவந்த இளைஞருக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. எல்லோரும் அவரிடத்தில் ‘ட்ரீட்’ கேட்டார்கள். சரி என்று அவரும் எல்லோருக்குமாக பிட்ஸா ஆர்டர் செய்தார். பிட்ஸா வந்தவுடன் ஒவ்வொரும் ஒரு பீஸ் எடுத்துக் கொண்டனர். மீதமிருந்த எனக்கான ஒரு துண்டை அந்த அட்டைப் பெட்டியினுள்ளேயே வைத்துக் கொண்டு தோசை சாப்பிடுவதுபோல சின்னச்சின்ன துண்டுகளாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். நிறைய சீஸ் இருந்ததனால் சரியாக வரவில்லை. நான் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு அந்த இளைஞர் சொன்னார்: ‘மேடம்! நீங்கள் பிட்ஸாவை இப்படி தோசை போலச் சாப்பிடுவதை இத்தாலிக்காரன் பார்த்தால் தூக்கில் தொங்கிவிடுவான்! ப்ளீஸ் எங்களைப் போல கடித்து சாப்பிடுங்கள். பிட்ஸாவை இப்படி அவமானப்படுத்தாதீர்கள்!’ (எங்களையும் அவமானப்படுத்தாதீர்கள் என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்!) ரொம்பவும் சங்கடமாக இருந்தது. சே! ஏன் இப்படி இருக்கிறோம் என்று. ரொம்பவும் கஷ்டப்பட்டு கடித்து சாப்பிட்டேன். பிட்ஸா ரசிக்கவில்லை!

 

இன்னொருமுறை பிட்ஸா வெளியில் சாப்பிடும் வாய்ப்பு வந்தது.

என் உறவினர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து பெங்களூரு வந்திருந்தார். அவரைப் பார்க்க  நாங்கள் அவர் தங்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோடேலுக்குச் சென்றோம். அவரது நண்பர்கள் சிலரும் அவரைப் பார்க்க வந்திருந்தனர். பேசிக்கொண்டிருக்கும்போது எங்கள் உறவினர் அந்த ஹோடேலின் மென்யூ கார்டை என்னிடம் கொடுத்து ‘ஏதாவது ஆர்டர் செய்யுங்கள் அக்கா’ என்றார். எனக்கு அதைப் பிரித்தால் கிரீக், லாடின் போல இருந்தது. ஏதாவது தெரிந்த பெயர் இருந்தால் தானே? என் உறவினரின் நண்பர் எனக்கு உதவ முன்வந்தார். பொடி இட்லி என்று ஒரு உணவு போட்டிருந்தது. அவர் அதை இரண்டு ப்ளேட் என்று ஆர்டர் செய்தார். வந்தது பாருங்கள்…அட… அட…..  இட்லி எங்கே என்று தேட வேண்டியிருந்தது. நம்மூரில் தீபாவளி சமயத்தில் கேப் வெடிப்போமே அந்த சைசில் இட்லி! நான் அதிகப்படுத்திச் சொல்லவில்லை, மக்களே! உண்மையைச் சொல்லுகிறேன். மெலிசு மெலிசாக இத்துனூண்டு இத்துனூண்டு இட்லிகள்! மினி இட்லியில் பாதி அளவு கூட இல்லை! வெள்ளைவெளேரென்று ஒரு பீங்கான் தட்டில் மூன்று குழிகள் அந்த மூன்றிலும் இந்த கேப் சைஸ் இட்லிகள் 6 உட்கார்ந்திருந்தன. யார் அது? இட்லி சூடா இருந்ததா என்று கேட்பது? மூச்! இது ஐந்து நட்சத்திர ஹோடேல்! வாயைத் திறந்தால் போச்! நல்லவேளை அவர் இரண்டு ப்ளேட் சொன்னாரோ, பிழைத்தோம்! ஆளுக்கு ஏதோ அவல்பொரி சாப்பிடுவது போல இரண்டு இரண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டோம்.

 

அடுத்தாற்போல பிட்ஸா ஆளுக்கு ஒன்று. நான் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போது ‘பொறுங்கள். மிகவும் மெலிதாக இருக்கும் (thin crust)’ என்று விளக்கினார் நண்பர். நாங்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. நம்மூரு இட்லியே நம்மை ஏய்த்துவிட்டதே! அதுவும் எங்களை ஏமாற்றாமல் மஸ்லின் துணி போல வந்தது. எல்லோரும் வழக்கம்போல ஒரு துண்டு எடுத்துக் கடிக்க ஆரம்பித்தனர். என் பிள்ளை சங்கடத்துடன் என்னைப் பார்த்தான். நண்பருக்குப் புரிந்துவிட்டது. அங்கிருந்த ஸ்டூவர்ட் (சாதாரண ஓட்டல்களில் தான் சர்வர்! இது ஐந்து நட்சத்திர ஹோடேல் இல்லையா? அதனால் ஸ்டூவர்ட்!) கூப்பிட்டு பிட்ஸாவை கட் பண்ணச் சொன்னார். அவர் பிட்ஸா கட்டரை எடுத்துக் கொண்டு வந்தார். நண்பரே அதை வாங்கி எனக்காக பிட்ஸாவை துண்டுகள் போட்டுக் கொடுத்தார்.!

 

‘ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே எங்கம்மாவும் உங்களை மாதிரிதான்,,,!’ என்றார்!

 

பிட்ஸாவை தோசை மாதிரி பிட்டு பிட்டு வாயில் போட்டுக் கொள்ளுபவள் நான் ஒருத்தி மட்டுமல்ல என்று தெரிந்து சந்தோஷமாக இருந்தது.

 

 

 

 

 

 

Advertisements

32 thoughts on “விண்டுதான் வாயில போடணுமா?

  1. வாங்க ஸ்ரீராம்!
   பெண்கள் தான் இதெல்லாம் ரொம்ப பார்க்கிறோமோ என்று தோன்றுகிறது.
   முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 1. பிட்ஸா அனுபவம் வெகு அருமை ரஞ்சனி ஆனால் நான் பிட்ஸா பக்கம் போனதே இல்லை இதுவரை ஆகையால் இந்த சங்கடங்கள் எனக்கு இல்லை. மற்றவர்களுடன் பிட்ஸா ஹட் போனாலும் கார்லிக் பிரட் ஆர்டர் செய்து அழகாக சாப்பிட்டுவிட்டு வந்து விடுவேன். என் பாட்டியிடம் வளர்ந்ததால் இன்று வரை வாழைப்பழத்தை விண்டு தான் நானும் சாப்பிடுவேன்.

 2. துளசி : பிசா எல்லாம் இங்கு எங்கள் ஊரில் வழக்கம் இல்லை ஆதலால் சாப்பிட்டதில்லை. நாங்கள் இருப்பது சிறிய ஊர் ஆயிற்றே…
  எங்கள் வீடுகளில் சிப் பண்ணுவதும், கடித்துச் சாப்பிடுவதும் பழக்கமாகிவிட்டது சிறு வயது முதல். ஹிஹிஹி…உங்கள் பதிவு மிக அருமை!

  ஹஹஹஹ்ஹ்ஹ் செம ரஞ்சனி அக்கா!! அட! என்னைப் பல வருடங்களுக்கு முன்னால் அப்படியே பிரதிபலிப்பது போல்….நானும் அப்படித்தான் வளர்க்கப்பட்டதால் உங்களைப் போலத்தான் இருந்தேன். அப்புறம் இப்போது ..விண்டல்ல கடித்து…ஹிஹிஹி.
  பதிவை மிகவும் ரசித்தோம்!

  1. வாங்க துளசி,
   வாங்க கீதா!
   பல வீடுகளில் இதையெல்லாம் பார்ப்பதே இல்லை. என் மாமியார் வீட்டிலும் ரொம்ப பார்ப்பார்கள். ஆனால் என் வீட்டுக்காரர் கண்டுக்க மாட்டார்!
   கீதா! நீங்க என்னை மாதிரியா? காலத்திற்குத் தகுந்தாற்போல மாற வேண்டியதுதான்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. என் நாட்டுப்பெண் பிட்ஸைவைத் துண்டு போட்டே என் முன் வைப்பாள். இல்லாவிட்டால் எனக்குச் ஸரிப்படாது. வீட்டிலேயே செய்வதால். என் பிள்ளை சொல்வான் மாமியாருக்கு ஸேவை செய். பிரட்கூட துண்டு செய்தே தட்டில் வைத்துக்கொள்வேன். பார்க்கிறவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். நம் வழக்கம் விடமுடியாது. உங்களை எல்லாம் விட ஒரு தலைமுறைக்கதிகமாயிற்றே நான். தூக்கிப்போட்டு சாப்பிடும் வழக்கம் கூட மாறவில்லை. உன் அனுபவம் மெட்டும்படி இருக்கிறது. நாளை நான் மும்பை போகிறேன். முன் நாளில் எச்சை,துப்பல்,மடி ஆசாரமில்லை. அதான் வீட்டில் தேள் வருகிறது. கண் எரிகிறது. இப்படி பல ஸம்பவங்களைச் சொல்வார்கள். ஒவ்வொன்றாக ஞாபகம் வருகிறது. செவ்வாழைப்பழமும் பிட்ஸாவும் எங்கிருந்து எங்கே ஜோடி சேருகிறது. அழகு. நன்றி அன்புடன்.

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   //முன் நாளில் எச்சை,துப்பல்,மடி ஆசாரமில்லை. அதான் வீட்டில் தேள் வருகிறது. கண் எரிகிறது. இப்படி பல ஸம்பவங்களைச் சொல்வார்கள். // இதுவரை கேள்விப்படாத தகவல்.
   என் அம்மா தூக்கித் தூக்கிப் போட்டுத்தான் சாதம் சாப்பிடுவாள். நல்லவேளை நான் அதைப் பழக்கிக் கொள்ளவில்லை!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. https://groups.google.com/forum/#!topic/mintamil/rPUAr0XRbWk

  மேற்கண்ட சுட்டியில் முன்னொரு காலத்தில் மின் தமிழில் நடந்த எச்சில், பத்து குறித்த விவாதங்களைக் காணலாம். இதைக் குறித்து நானும் எழுத ஆரம்பித்துப் பாதியில் தொங்கலில் விட்டிருக்கேன். எனக்கும் இந்த எச்சில் செய்து சாப்பிடும் வழக்கம் இல்லை என்பதால் என் புக்ககத்தில் அனைவருமே நான் வந்தாலே நடுங்குவாங்க! அவங்க வெண்கலப்பானைக்கே எச்சில் தட்டைப் போட்டு மூடும் வழக்கம் உள்ளவங்க! இத்தனைக்கும் பட்டிக்காட்டு வாசம் தான். ஆனாலும் அதிகம் எச்சில் பத்து பார்க்க மாட்டார்கள். தோசையோ இட்லியோ வார்த்தால் கூட சாப்பிடும் எச்சில் தட்டில் தான் அதை எடுத்துப் போட்டுக் கொண்டு மற்றவர்களுக்குப் பரிமாறுவார்கள். நான் போனால் இதை எல்லாம் ஆக்ஷேபிப்பேன். அப்புறமா இப்போது எல்லாம் நம்மவர் சொல்லிச் சொல்லிக் கண்டுக்கிறதில்லை!

  1. வாங்க கீதா!
   என் மாமியார் வீட்டில் பலபடி அதிகம். ஆனால் பிள்ளைகள் யாரும் அம்மா சொல்வதை கண்டுக்கவே மாட்டார்கள்.
   நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் போய் படித்துப் பார்க்கிறேன்.

 5. ஆனால் பாருங்க, நம்ம ரங்க்ஸுக்கும் இந்த எச்சில் பத்து பிடிக்காது என்பதால் எங்க வீட்டிற்கு உறவினர் யாரேனும் சாப்பிட வந்தால் அவங்களுக்கு ஒண்ணு இலையைப் போட்டுச் சாப்பிட வைப்பார். இல்லைனா எச்சில் தட்டுன்னா அவங்க எங்கேயானும் சமையலறையில் போட்டுடப் போறாங்கனு அவங்க பின்னாடியே சுத்துவார்! வேடிக்கையா இருக்கும். ஒரு இளம் ஜோடி எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. ஒரு நாள் தங்கிட்டு மறு நாள் கிளம்பினாங்க. அவங்களுக்குச் சாப்பாடு போடும்போது இலை இல்லை என்பதாலும் வாங்கப் போக முடியவில்லை என்பதாலும் தட்டில் சாப்பாடு போட்டேன். அந்தப் பெண் சாப்பிட்டத்தும், சாப்பாட்டுத் தட்டைத் தூக்கிக் கொண்டு நேரே சமையலறையில் பாத்திரங்கள் போட்டிருக்கும் தொட்டிக்கு எடுத்து வந்து விட்டாள். அப்புறமா அவங்களை டைனிங் ஹாலிலேயே இருக்கும் வாஷ் பேசினைச் சுட்டிக் காட்டி அதில் அலம்புமாறு செய்தோம். இத்தனைக்கும் அவங்க் அப்பா புரோகிதர்னு சொன்னாள்! 🙂 இப்போல்லாம் இது பார்க்கலைனாத் தான் நாகரிகமானவர்கள்னு நினைக்கிறாங்க! பார்த்தால் அநாகரிகமாப் படுது!

  1. காலம் மாறிப்போச்சுன்னு நாம் தான் நினைச்சுக்கணும் போலிருக்கு. நான் என்ன செய்வேன் தெரியுமா? தினமும் காலையில் தளிகை ஆனவுடன், பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணிவிட்டு எல்லாவற்றையும் கொண்டுபோய் டைனிங் டேபிளின் மேல் வைத்துவிடுவேன். யாரும் எச்சில் தட்டை தூக்கிக்கொண்டு தளிகை உள்ளுக்கு வரக்கூடாது.
   கையில் வைத்துக்கொண்டு சாப்பிடுகிறோம் என்றால் நான் பரிமாறி விடுவேன்.

 6. ஆனாலும் இன்றைக்கும் வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ராவில் தண்ணீர்ப் பானையில் நாமே தம்பளரை மொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. அதுக்குனு நீளமாகப் பிடி வைத்து ஒரு டம்பளர் அல்லது கிண்ணம் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும். பானையில் இருந்து அதால் தண்ணீர் எடுத்துத் தம்ளரில் விட்டுக் குடிக்கணும். நாம் குடித்த தம்பளரை மத்தவங்களுக்கு அப்படியே கொடுக்க முடியாது. கழுவிட்டுத் தான் கொடுக்கணும். தூக்கிக் குடிச்சால் கூட! 🙂 குழந்தையாக இருந்தால் கூட அலம்பிட்டுத் தான் அந்தத் தம்பளரைப் பயன்படுத்துவாங்க.

  1. நான் சொல்ல மறந்த ஒரு விஷயத்தை மேலே நீங்கள் எழுதியிருப்பது நினைவுபடுத்தியது. என் மகள் வீட்டில் எல்லோரும் எல்லாவற்றையும் – நீர் முதற்கொண்டு எச்சில் பண்ணித்தான் குடிப்பார்கள். முதல்முறை இதைப் பார்த்துவிட்டு அசந்துபோய்விட்டேன். நான் தூக்கிக் குடிப்பதைப் பார்த்துவிட்டு ‘பரவாயில்லை, எச்சல் பண்ணி சாப்பிடுங்கள்’ என்று ஏக உபசாரம்!
   இந்த ஊரில் காபி கொடுத்தால் டபரா வராது – எச்சில் செய்து தானே குடிக்கப்போகிறார்கள் என்பதால். நான் என் பெண்ணிடம் இன்னொரு டம்ப்ளர் வாங்கிக் கொண்டுவிடுவேன்!

 7. என் மாமியாருக்கும் கடித்துச் சாப்பிடும் பழக்கம் இல்லை. ஒருமுறை விமானத்தில் கொடுத்த (நீள பன்) சாண்ட்விச்சை மிகவும் சிரமப்பட்டுச் சாப்பிட்டார்கள். அவர்கள் அதுவரை அல்லது அதற்குப் பின்னரும் சாண்ட்விச், பீட்ஸா போன்ற எதுவும் சாப்பிட்டதில்லை என்பது பின்னர்தான் உணர்ந்தேன். கையால் பிய்த்து, சிறு துண்டுகளாக ஆக்கிக் கொடுத்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.

  1. வாங்க ஹூசைனம்மா!
   உங்க மாமியாரும் எங்க தலைமுறையினர் என்று நினைக்கிறேன்.
   இப்போதெல்லாம் ஸ்பூனால் சாப்பிட்டுவிட்டு கையைக் கூட கழுவுவது இல்லை! கீதா சொல்வது போல அதுதான் நாகரீகம் போலிருக்கு!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 8. இங்கே ஆஸி வந்த புதிதில் பர்கரை அப்படியே வாயில் வைத்து கடித்துத்தின்ன அறிவுறுத்தப்பட்டபோது.. நான் பட்ட பாடு.. ஒழுங்காக சாப்பிடத்தெரியாமல் கீழே மேலே சிந்தி.. சீச்சீ என்றாகிவிட்டது.. மாறாக, நட்சத்திர ஹோட்டல்களில் பலரும் தோசையை கத்தி முள்கரண்டி கொண்டு உண்ணும்போது நாம் கையால் உண்ணுவதா கூடாதா என்று குழப்பமாகிவிடுகிறது. என்ன ஆனாலும் சரி என்று கையைக் கழுவிவிட்டு உண்ண ஆரம்பித்துவிடுகிறேன் இப்போதெல்லாம். உங்கள் அனுபவங்கள் வெகு சுவாரசியம் ரஞ்சனிம்மா. :)))

  1. வாங்க கீதமஞ்சரி!
   வெளிநாடுகளில் போய் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது எத்தனை கடினம், இல்லை? நானும் உங்களை மாதிரிதான், கையில் எடுத்து சாப்பிட்டுவிடுவேன். இதுவரை இந்தியாவை விட்டு வெளியே போனதில்லை. அதனால் வெளியே சாப்பிடுவதில் அதிக இடைஞ்சல்கள் வந்ததில்லை.
   வருகைக்கும், ரசித்துப் படித்துப் பாராட்டியதற்கும் நன்றி!

   1. அப்பாடி! மூன்றாவது முறையாக உங்களுக்கு பதில் எழுதி போய்ச் சேர்ந்துவிட்டது!
    ஒவ்வொருமுறையும் send பட்டனை அழுத்தும்போது கரண்ட் போய்விடும்! நேற்றிலிருந்து இந்த கண்ணாமூச்சி!

 9. நான் வாழைபழத்தை வட்டதுண்டுகளாக தோலுடன் வெட்டி வச்சிடுவேன் கூடவே முள்கரண்டியும் கொடுத்துவிடுவேன் 🙂 பிட்சாவை சதுரமா வெட்டிட்டா சாப்பிடலாம் ஈசியா தோசை இட்லியையும் முள்கரண்டி கத்தி உபயதுடன் சாப்பிட பழகியாச்சு ..ஹோட்டல்சில் இந்த சாலட் தக்காளி மட்டும் முழுசா இருக்கும் பெரிய கோலி குண்டு சைஸில் அதை வாயில் போட்டா பெரும்பாடு வாயை திறக்காம கடிக்கணும் 🙂 சிலர் இரண்டா வெட்டி வைப்பாங்க பலர் முழுசாவே வைப்பதால் ரொம்ப பிரச்சினை சாலட் லீவ்சும் அப்படித்தான் ஐந்து வெற்றிலையை சுருட்டி வாயில் போட்ட பீலிங் 🙂 இங்கே பிரிட்டிஷ்காரங்க உருட்டிய சப்பாத்தியை மற்றும் பராத்தாவை முள் கரண்டியில் வெட்டி சுருட்டி சாப்பிடும் அழகு தனி 🙂

  1. வாங்க ஏஞ்சலின்!
   நீங்க ரொம்ப சமத்துக்குட்டி என்று தெரிகிறது. அதான் இட்லி தோசையைக் கூட முள்கரண்டி, கத்தி உபயோகித்து சாப்பிடப் பழகிவிட்டீர்கள்! 🙂
   நம்மூர் சாப்பாட்டை முள்கரண்டியில் சாப்பிடுவது கஷ்டம் என்று தோன்றுகிறது.
   வருகைக்கும், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  1. வாங்க துர்கா!
   சரியாச் சொன்னீங்க!
   உங்களுடைய ப்ளாகிற்கு இன்று தான் வந்து பார்த்தேன். சமையல் குறிப்பெல்லாம் நன்றாக இருக்கிறது. அங்கும் கருத்துரை கொடுக்கிறேன்.வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s