ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் அவர் எழுதியவை அல்ல!!!

 

 

 

 

 

உலக மகாகவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் மறைந்ததும் ஏப்ரலில் தான்.இவர் பிறந்த  ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள், என்று கேட்கிறீர்களா? நான் இப்படிச் சொல்லவில்லை. அவரது காலத்திலேயே அவரது விமரிசகர்கள் அவரைப் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.

 

மேலே எழுதுவதற்கு முன் ஒரு கேள்வி: ஷேக்ஸ்பியர் காபி பிரியரா? டீ பிரியரா? விடை இந்த கட்டுரையின் இறுதியில்.

 

இப்போது நாம் பாயிண்டுக்கு வருவோம்: ஷேக்ஸ்பியர் பிறந்தது ஸ்ட்ராட்போர்ட் என்னும் ஒரு சிறிய யாரும் அறியாத தூங்குமூஞ்சி ஊர். லண்டன் நகரிலிருந்து நூறு மைல் தள்ளி இருக்கும் ஒரு வியாபார இடம். என்ன வியாபாரம்?  கசாப்பு வியாபாரம் – செம்மறியாடுகளை வளர்த்து அவற்றை வெட்டி விற்கும் வியாபாரம்.

 

ஷேக்ஸ்பியரை வெறுக்கும் ஒரு கூட்டம் அப்போதும், இப்போதும் உண்டு. அவர்களுக்கு இந்த ஸ்ட்ராட்போர்டு ஊரையும் பிடிக்காது; இந்த ஊரில் பிறந்த உலகப் புகழ் பெற்ற இந்த மகா கவிஞனையும் பிடிக்காது. அதுமட்டுமல்ல; இவர் எழுதியதாகச் சொல்லப்படும் இலக்கியங்கள் எதுவுமே இவர் எழுதியது அல்ல என்று அடித்துச் சொல்லுகிறார்கள். காரணங்களைப் பார்ப்போமா?

 

 • ஸ்ட்ராட்போர்ட் துளிக்கூட வளர்ச்சி அடையாத, பின்தங்கிய ஊர். அங்கு கல்வி கற்கும் வசதிகளோ, கலாச்சார மையங்களோ கிடையாது. இப்படி இருக்கும் ஒரு ஊரில் எந்த அறிவுஜீவி பிறக்க முடியும்? பிறந்தாலும் தனது புத்திகூர்மையை எப்படி வளர்த்துக் கொள்ள முடியும்?
 • இங்கு ஷேக்ஸ்பியர் படித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்கு பள்ளிகளோ, கல்லூரிகளோ இருந்தால்தானே அதில் ஷேக்ஸ்பியர் படித்தார் என்று வருகைப்பதிவேட்டைக் காண்பிக்க முடியும்? அவரது ஆசிரியர்களைப் பற்றியோ, கூடப் படித்த மாணவர்களைப் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. இதிலிருந்து தெரியவில்லையா, அவர் ஒரு படிப்பறிவு இல்லாதவர் என்று?
 • படிப்பறிவு இல்லாத, உழைத்துப் பிழைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு, மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை பற்றியும், அரச பரம்பரையினரின் பழக்கவழக்கங்கள் பற்றியும், ஐரோப்பிய நகரங்களைப் பற்றியும் என்ன தெரியும்? எப்படி அவரால் ஒரு அரசரைப் பற்றியும், அரசியல் பற்றியும், வெளிதேசத்து கலாச்சாரம் பற்றியும் எழுத முடியும்?

 

சரி, இவர் எழுதவில்லையென்றால் வேறு யார் எழுதியிருப்பார்கள்? நன்றாகப் படித்த மேட்டுக்குடி மகனார் ஒருவரால் தான் எழுதப்பட்டிருக்கும். ஏதோ சொல்லமுடியாத காரணங்களால் அவர் அனாமதேயமாக இருந்து கொண்டு பெயர், புகழ் எல்லாவற்றையும் ஷேக்ஸ்பியருக்குக் கொடுத்துவிட்டார். ஷேக்ஸ்பியருக்கு பதிலாக இவர்கள் எழுதியிருக்கக்கூடும் என்று இந்த ஷேக்ஸ்பியர்-எதிரிகள் சுமார் 80 பேர்களைப் பட்டியலிடுகிறார்கள். இதில் பிரான்சிஸ் பேகான், கிறிஸ்டோபர் மார்லோ, ஆக்ஸ்போர்டின் 17வது பிரபு எட்வர்ட் டி வேர் இவர்களும் அடக்கம். ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இல்லவேயில்லை என்று கூட ஒரு தரப்பினர் சொல்லுகிறார்கள்.

 

ஷேக்ஸ்பியரது 450 வது பிறந்த நாள் உலகெங்கும் 2014 ஆம்  வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக இவரது பிறந்த ஊரான ஸ்டார்ட்போர்டில் இருக்கும் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரது பிறந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இவர் இந்த வீட்டில்தான் பிறந்து, வளர்ந்து விளையாடி, படித்து, எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டது. திருமணம் முடிந்து தனது மனைவி அன்னா ஹாத்வேயுடன் ஐந்து வருடங்கள் வாழ்ந்ததும் இங்கேதான்.

 

பிறந்த நாள் என்றால் கேக் இல்லாமலா? ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளை ஒட்டி கேக்ஸ்பியர் கேக் என்ற போட்டியும் நடந்தது. ஒரு போட்டியாளர் ஷேக்ஸ்பியர் தனது மேஜையின் முன் உட்கார்ந்து தனது நாடகங்களின் கையெழுத்துப் பிரதியை கையில் வைத்திருப்பது போல கேக் செய்து வந்திருந்தார். இன்னொருவர் இவரது மூன்றாம் ரிச்சர்ட் நாடகத்திலிருந்து சில காட்சிகளை கேக்கில் செய்து வந்திருந்தார்.

 

இவரைப் பற்றிய சில வியப்பான தகவல்கள்:

 • நிறைய வார்த்தைகள் தெரிந்தவர். இவரது நாடகங்களிலும், கவிதைகளிலும் சுமார் 30,000 வேறு வேறுவிதமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 • 38 நாடகங்கள், 154 சானட்ஸ் (14 வரிகள் கொண்ட பாடல்கள்), மற்றும் பல பல்சுவை பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
 • இவரைப்பற்றிய கூகிள் பக்கங்கள் 157 மில்லியன்.
 • இவரது நாடகங்களில் தற்கொலை 13 தடவை நடந்திருக்கிறது.
 • வெளி உலகிற்கு மிகப்பெரிய நாடக ஆசிரியர் என்று அறியப்பட்டிருந்தாலும், அவரது ஊரில் மதிப்பிற்குரிய தொழிலதிபராகவும், சொத்துக்களின் அதிபதியாகவும் அறியப்பட்டிருந்தார்.
 • அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஷேக்ஸ்பியரின் மிகப்பெரிய விசிறி. நண்பர்களுடன் பேசும்போது அடிக்கடி ஷேக்ஸ்பியரது நாடக வசனங்களைப் பேசிக் காண்பிப்பாராம்.
 • இவரது நாடகங்கள் மேடையில் நடிப்பதற்காக அவசரம் அவசரமாக எழுதப்பட்டதினால், அவர் எழுதிய அசல் கையெழுத்துப் பிரதிகள் எதுவும் இப்போது இல்லை.
 • அடித்தல் திருத்தல் இல்லாமல் வேகமாகவும், தங்குதடங்கல் இல்லாமலும் எழுதுவார்.
 • தமது 18 வயதில் தன்னை விட 8 வயது மூத்த பெண்மணியை மணந்து கொண்டார்.
 • ஆங்கில மொழிக்கு இவர் கொடுத்த வார்த்தைகள் கணக்கிலடங்காதவை. பேச்சு வழக்கில் இருந்த பல வார்த்தைகள் எழுத்துருவில் இவரது நாடகங்களில் இடம் பிடித்தன. பல சொலவடைகளை பிரபலப்படுத்தவும் செய்தார்.
 • அந்தக்காலத்தில் 30, 40 வயது வாழ்வது என்பதே பெரிய விஷயமாக இருந்தபோது ஷேக்ஸ்பியர் 52 வயது வரை வாழ்ந்து, 1616, ஏப்ரல் 23 ஆம் தேதி மறைந்தார். ஸ்ட்ராட்போர்ட் சர்ச்சில் இருக்கும் இவரது கல்லறையின் மேல் எழுதப்பட்ட வார்த்தைகள்: ‘என்னை இங்கிருந்து நகர்த்துபவன் சபிக்கப்படுவானாக’.

 

 

கடைசியாக புதிருக்கு விடை: ஷேக்ஸ்பியர் காலத்திற்குப் பிறகுதான் காபி, டீ இவை பிரிட்டனுக்குள் வந்தன. அதனால் ஷேக்ஸ்பியர் காபி பிரியரும் அல்ல; டீ பிரியரும் அல்ல!

 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், மகாராணி!

இங்கிலாந்து நாட்டின் அரசியாக  நீண்ட நாட்கள் அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு 90 வயது நிறைவடைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு இந்த மாதம் 21 ஆம் தேதி 90 வயது நிறைவடைந்தது.

 

 

யார்க் கோமகன் என்றும் பிற்காலத்தில் ஆறாம் ஜியார்ஜ் என்றும் அழைக்கப்பட்ட ஆல்பெர்ட் இளவரசருக்கும், அவரது மனைவி முதலாம் எலிசபெத் ராணிக்கும் லண்டனில் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் 1926 ஆம் ஆண்டில் பிறந்தவர் இந்த இரண்டாம் எலிசபெத் ராணி. இவரது முழு  பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. அவரது தாயாரின் பெயரான எலிசபெத், ஐந்தாம் ஜியார்ஜின் (அப்பா வழி தாத்தா) தாயார் பெயரான அலெக்சாண்ட்ரா, தந்தையைப் பெற்ற அம்மாவின் பெயரான மேரி ஆகிய மூன்று பெயர்களையும் சேர்த்து இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. இங்கிலாந்து, கனடா, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளின் ராணியாகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் 1952 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். பிற்காலத்தில் சுதந்திரம் பெற்ற 12 நாடுகளுக்கும் அவர் ராணியாக இருந்தார்.

 

இவர் வீட்டிலேயே கல்வி கற்றவர். இவர் பிறந்த சமயத்தில் இவரது அப்பாவைப் பெற்ற தாத்தா ஐந்தாம் ஜியார்ஜ் அரசராக இருந்தார்.

 

இரண்டாம் எலிசபெத்திற்கு பட்டத்திற்கு வரும் வாய்ப்பே இருக்கவில்லை. இவருக்கு முன்னால் இவரது பெரியப்பா எட்டாவது எட்வர்ட் கோமகன், இவரது தந்தை இருவரும் வாரிசுகளாக அறியப்பட்டு இருந்தனர். ஆனால் எட்டாவது எட்வர்ட் அரச குடும்பத்திற்கு ஏற்காத வகையில் வாலிஸ் சிம்ஸன் என்ற விதவையை மணந்து பட்டத்தைத் துறந்தார். (இந்தக் காதல் அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிற்காலத்தில் நம்ம ஊர் ஆனந்த விகடனில் ‘கோமகனின் காதல்’ என்ற பெயரில் தொடராகவும் வந்தது.) அதனால் எலிசபெத்தின் அப்பா பட்டத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாததால் எலிசபெத் அவரது வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

 

இவரது சிறுவயதில் இவரைப் பார்த்துக்கொண்ட மரியன் கிராபோர்ட் எழுதிய ‘தி லிட்டில் பிரின்சஸ்’ என்ற புத்தகத்தில் சிறுவயதில் இவருக்கு குதிரை, மற்றும் நாய் இவற்றின் மீது பெரும் ஆசை இருந்ததாக சொல்லியிருக்கிறார். சிறிய வயதிலேயே மிகவும் ஒழுங்கு நிறைந்தவராகவும், பொறுப்பு மிக்கவராகவும் இருந்தார் என்றும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் ஒரு அரசியாக வருவதற்குரிய தோரணைகள் அப்போதே காணப்பட்டன போலிருக்கிறது!

 

1947 ஆம் ஆண்டு எடின்பர்க் கோமகன் பிலிப்பை மணந்தார் இரண்டாம் எலிசபெத்.  இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் – சார்ல்ஸ், ஆன், ஆண்ட்ரு, எட்வர்ட் என்று.  இரண்டாம் எலிசபெத் ராணியை மணந்த பிலிப், ராணியின் கணவர் என்றே குறிப்பிடப்படுகிறார். ராஜா என்று அழைக்கப்படுவது இல்லை. ஏனெனில் அவருக்கென்று ராஜ்ஜியம் இல்லை.

 

இவரைப்பற்றிய சில வியக்கத்தக்க விஷயங்கள்:

 • நீண்டகாலம் அரியணையில் இருந்த அரசி இவர். இதுவரை இவரது எள்ளுப்பாட்டியான விக்டோரியா ராணிதான் இந்த சாதனைப் புரிந்திருந்தார். அவரை விட இவர் இப்போது அதிக நாட்கள் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்து அவரது சாதனையை முறித்திருக்கிறார்.
 • பல உலகநாடுகளுக்கு – சுமார் 116 நாடுகளுக்கு – சுற்றுப்பயணம் செய்திருக்கும் இவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. வியப்பாக இருக்கிறது, இல்லையா? இங்கிலாந்து நாட்டில் ராணியின் பெயரில்தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். அதனால் இவருக்கு பாஸ்போர்ட் கிடையாது. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுக்க சுற்றிவரும் சிறப்பு இவருக்கு மட்டும் தான். இவரது வாரிசுகளுக்கும், கணவருக்கும் இந்தச் சிறப்பு இல்லை! அவர்களுக்கு கட்டாயம் பாஸ்போர்ட் வேண்டும். பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் இவர் எந்த ஆண்டு எந்த நாட்டிற்கு சென்று வந்தார் என்கிற தகவல்கள் அரசாங்க ரீதியாகப் பதியப்படவில்லை!
 • மேலும் தனது தோட்டங்களை தனது ரேஞ்ஜர் ரோவரில் பயணம் செய்து சுற்றிப் பார்ப்பது இவருக்குப் பிடித்த பொழுபோக்கு. ஆனால் இவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை!
 • இவருக்கு இரண்டு பிறந்தநாட்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி இவர் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு காமன்வெல்த் நாடும் மே அல்லது ஜூன் மாதத்தில் இவரது பிறந்த நாளைக் கொண்டாடும்.
 • தனது தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று தனது 18வது வயதில் பெண்கள் துணைபிராந்திய சேவையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் பணி புரிந்தார். சீருடை அணிந்து மெக்கானிக் ஆகவும் ட்ரக் ஓட்டுனராகவும் பயிற்சி பெற்றார். இரண்டாம் உலகப்போரில் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ராணி என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு.
 • இவரது திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளிலிருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரம். சிக்கன நடவடிக்கைகள் அமலிலிருந்த காரணங்களால் ராணி தனது ரேஷன் கூப்பன்களை சேமித்து வைத்து அந்தப் பணத்தில் தந்தக்கலரில் 10,000 வெண்முத்துக்கள் வைத்துத் தைக்கப்பட்டிருந்த தனது திருமண உடையை வாங்கினார்.
 • 1976 இல் முதன்முதலில் மின்னஞ்சல் அனுப்பிய ராணி இவர்தான்.
 • 13 வயதிலேயே தனது எதிர்காலக் கணவரை சந்தித்தவர். 1947 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. 68 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் ராணி தம்பதிக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
 • தனது செல்ல நாய்களான வில்லி, ஹோல்லி இரண்டிற்கும் தன் கையால் தானே உணவளிப்பார். முடிந்தபோது அவைகளுடன் நடப்பார்.
 • இவரது 90வது பிறந்தநாளை ஒட்டி இவரும், இவரது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் நால்வரும் இருக்கும் தபால்தலை ஒன்று வெளியிடப்பட்டது.

இளவரசர் சார்ல்ஸ்,  இரண்டாம் எலிசபெத் ராணி, இளவரசர் வில்லியம்ஸ், குட்டி இளவரசர் ஜியார்ஜ்.

நான்குபேர்களும் ஒன்றாக இருப்பது போல இருந்தாலும் நான்கு தனித்தனி தபால்தலைகள் இவை. முதல் முறையாக குட்டி இளவரசர் தபால்தலையில் இடம்பெறுகிறார். ‘Born with a silver spoon’ என்பார்கள். இவர் வெள்ளிக்கூஜாவுடன் பிறந்தவர்! 🙂 குட்டி இளவரசர் இந்தப் படத்தில் தனது அப்பா, தாத்தா, கொள்ளுப்பாட்டியுடன் காட்சியளிக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் நீண்ட நாள் அரசியான இவர் நூறு வருடங்கள் வாழ்ந்து அதிலும் ஒரு சரித்திரம் படைக்கட்டும்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், மகாராணி!

 

பின்குறிப்பு: எனக்கும் ராணிக்கும் ஒரு ஒற்றுமை.

அவர் இருப்பது விண்ட்ஸர் அரண்மனையில்.

நான் இருப்பது விண்ட்ஸர் அம்பிகா அடுக்குக் குடியிருப்பில்!

 

நீங்கள் அடிக்க வருவதற்கு முன் ஜூட்!

விண்டுதான் வாயில போடணுமா?

செவ்வாழைப் பழத்தை உரித்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்ட நான் கேள்வி வந்த திசையைப் பார்த்து அடக்கமுடியாமல் சிரித்துவிட்டேன்.

 

எனது தோழியின் மகள் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். காலையில் சிற்றுண்டிக்கு முன் என்னிடம் ஒரு செவ்வாழை பழத்தைக் கொடுத்தார் தோழியின் மகள். எனக்கு அடுத்து சாப்பாட்டு மேஜையின் அந்தப் பக்கத்தில் என் தோழியின் மாப்பிள்ளை அமர்ந்திருந்தார். அவரிடமிருந்தான் இந்தக் கேள்வி வந்தது. அவரது கையிலும் உரித்த செவ்வாழைப் பழம். அவர் அதைக் கடித்துத் தின்பதா? அல்லது என்னைப் போல விண்டு வாயில் போட்டுக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருந்தார்!

 

சிரித்துக்கொண்டே சொன்னேன்: ‘இது உங்கள் வீடு நீங்கள் இங்கு எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்….! எனக்கு இப்படித்தான் பழக்கம்’ என்றேன்.

 

‘இதற்கு முன்னால் ஒரு வீட்டில் குடித்தனம் இருந்தோம். முன்பக்கத்தில் ஒரு மாமி இருந்தார். அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் என்று கூப்பிட்டார் ஒருநாள். நான் போனேன். என் கையில் காப்பி டம்ப்ளரைக் கொடுத்துவிட்டு ‘தூக்கி சாப்பிடு சுதா!’ என்றார் அந்த மாமி’ என்று தோழியின் மகள் கூறினார்.

 

‘இப்போது நீங்கள் வாழைப்பழத்தை கடித்து சாப்பிடாமல் விண்டு வாயில் போட்டுக் கொள்வதைப் பார்த்தவுடன் எனக்கு அந்த மாமியின் நினைவு வந்துவிட்டது!’ என்று தொடர்ந்தார் என் தோழியின் மாப்பிள்ளை. ‘அதுதான் கேட்டேன், ஒருவேளை விண்டுதான் வாயில போட்டுக்கணுமோ என்று!’

 

அதென்னமோ தெரியவில்லை சின்ன வயசிலிருந்து இப்படியே பழகிவிட்டது. என் அம்மா ரொம்பவும் கண்டிப்பு. வாழைப்பழத்தை விண்டு வாயில் போட்டுக் கொள், அப்பளாத்தை உடைத்து வாயில் போட்டுக் கொள் என்று கட்டளைகள் வந்தவண்ணம் இருக்கும். எந்த சாப்பாட்டுப் பொருளையும் அப்படியே வாயில் வைத்துக் கடித்து சாப்பிட்டதே இல்லை. இந்த வழக்கம் நல்லதுதான் என்றாலும் சிலவேளைகளில் இதுபோல மற்றவர்களுக்கு சங்கடம் உருவாகக் காரணம் ஆகிவிடுகிறது.

 

ஒருசமயம் என்னுடன் பயிற்சியாளர் ஆக வேலை பார்த்துவந்த இளைஞருக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. எல்லோரும் அவரிடத்தில் ‘ட்ரீட்’ கேட்டார்கள். சரி என்று அவரும் எல்லோருக்குமாக பிட்ஸா ஆர்டர் செய்தார். பிட்ஸா வந்தவுடன் ஒவ்வொரும் ஒரு பீஸ் எடுத்துக் கொண்டனர். மீதமிருந்த எனக்கான ஒரு துண்டை அந்த அட்டைப் பெட்டியினுள்ளேயே வைத்துக் கொண்டு தோசை சாப்பிடுவதுபோல சின்னச்சின்ன துண்டுகளாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். நிறைய சீஸ் இருந்ததனால் சரியாக வரவில்லை. நான் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு அந்த இளைஞர் சொன்னார்: ‘மேடம்! நீங்கள் பிட்ஸாவை இப்படி தோசை போலச் சாப்பிடுவதை இத்தாலிக்காரன் பார்த்தால் தூக்கில் தொங்கிவிடுவான்! ப்ளீஸ் எங்களைப் போல கடித்து சாப்பிடுங்கள். பிட்ஸாவை இப்படி அவமானப்படுத்தாதீர்கள்!’ (எங்களையும் அவமானப்படுத்தாதீர்கள் என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்!) ரொம்பவும் சங்கடமாக இருந்தது. சே! ஏன் இப்படி இருக்கிறோம் என்று. ரொம்பவும் கஷ்டப்பட்டு கடித்து சாப்பிட்டேன். பிட்ஸா ரசிக்கவில்லை!

 

இன்னொருமுறை பிட்ஸா வெளியில் சாப்பிடும் வாய்ப்பு வந்தது.

என் உறவினர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து பெங்களூரு வந்திருந்தார். அவரைப் பார்க்க  நாங்கள் அவர் தங்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோடேலுக்குச் சென்றோம். அவரது நண்பர்கள் சிலரும் அவரைப் பார்க்க வந்திருந்தனர். பேசிக்கொண்டிருக்கும்போது எங்கள் உறவினர் அந்த ஹோடேலின் மென்யூ கார்டை என்னிடம் கொடுத்து ‘ஏதாவது ஆர்டர் செய்யுங்கள் அக்கா’ என்றார். எனக்கு அதைப் பிரித்தால் கிரீக், லாடின் போல இருந்தது. ஏதாவது தெரிந்த பெயர் இருந்தால் தானே? என் உறவினரின் நண்பர் எனக்கு உதவ முன்வந்தார். பொடி இட்லி என்று ஒரு உணவு போட்டிருந்தது. அவர் அதை இரண்டு ப்ளேட் என்று ஆர்டர் செய்தார். வந்தது பாருங்கள்…அட… அட…..  இட்லி எங்கே என்று தேட வேண்டியிருந்தது. நம்மூரில் தீபாவளி சமயத்தில் கேப் வெடிப்போமே அந்த சைசில் இட்லி! நான் அதிகப்படுத்திச் சொல்லவில்லை, மக்களே! உண்மையைச் சொல்லுகிறேன். மெலிசு மெலிசாக இத்துனூண்டு இத்துனூண்டு இட்லிகள்! மினி இட்லியில் பாதி அளவு கூட இல்லை! வெள்ளைவெளேரென்று ஒரு பீங்கான் தட்டில் மூன்று குழிகள் அந்த மூன்றிலும் இந்த கேப் சைஸ் இட்லிகள் 6 உட்கார்ந்திருந்தன. யார் அது? இட்லி சூடா இருந்ததா என்று கேட்பது? மூச்! இது ஐந்து நட்சத்திர ஹோடேல்! வாயைத் திறந்தால் போச்! நல்லவேளை அவர் இரண்டு ப்ளேட் சொன்னாரோ, பிழைத்தோம்! ஆளுக்கு ஏதோ அவல்பொரி சாப்பிடுவது போல இரண்டு இரண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டோம்.

 

அடுத்தாற்போல பிட்ஸா ஆளுக்கு ஒன்று. நான் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போது ‘பொறுங்கள். மிகவும் மெலிதாக இருக்கும் (thin crust)’ என்று விளக்கினார் நண்பர். நாங்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. நம்மூரு இட்லியே நம்மை ஏய்த்துவிட்டதே! அதுவும் எங்களை ஏமாற்றாமல் மஸ்லின் துணி போல வந்தது. எல்லோரும் வழக்கம்போல ஒரு துண்டு எடுத்துக் கடிக்க ஆரம்பித்தனர். என் பிள்ளை சங்கடத்துடன் என்னைப் பார்த்தான். நண்பருக்குப் புரிந்துவிட்டது. அங்கிருந்த ஸ்டூவர்ட் (சாதாரண ஓட்டல்களில் தான் சர்வர்! இது ஐந்து நட்சத்திர ஹோடேல் இல்லையா? அதனால் ஸ்டூவர்ட்!) கூப்பிட்டு பிட்ஸாவை கட் பண்ணச் சொன்னார். அவர் பிட்ஸா கட்டரை எடுத்துக் கொண்டு வந்தார். நண்பரே அதை வாங்கி எனக்காக பிட்ஸாவை துண்டுகள் போட்டுக் கொடுத்தார்.!

 

‘ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே எங்கம்மாவும் உங்களை மாதிரிதான்,,,!’ என்றார்!

 

பிட்ஸாவை தோசை மாதிரி பிட்டு பிட்டு வாயில் போட்டுக் கொள்ளுபவள் நான் ஒருத்தி மட்டுமல்ல என்று தெரிந்து சந்தோஷமாக இருந்தது.

 

 

 

 

 

 

இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

ஒரு பிரபல எழுத்தாளர் தனது படிக்கும் அறையில் அமர்ந்திருந்தார். ஏதோ தோன்றவே தனது எழுதுகோலை எடுத்து எழுத ஆரம்பித்தார்:

 • சென்ற வருடம் எனது கல்லீரல் அகற்றப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் நான் பல நாட்கள், மாதங்கள் படுக்கையிலேயே இருக்கநேரிட்டது. என்ன கொடுமையான நாட்கள்!
 • சென்ற வருடம் எனக்கு 60 வயது பூர்த்தியாயிற்று. அதனால் எனது மனதிற்குப் பிடித்த, 30 வருடங்கள் வேலை பார்த்த பதிப்பகத்திலிருந்து  கட்டாய ஓய்வு பெற வேண்டி வந்தது.
 • சென்ற வருடம் எனது தந்தையின் மறைவு எனக்கு மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது.
 • சென்ற வருடம் எனது மகன் ஒரு கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்டதால் அவன் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை. மருத்துவமனையில் உடல் முழுக்கக் கட்டுக்களுடன் நீண்டநாட்கள் இருக்க நேர்ந்தது. எனது கார் அந்த விபத்தில் முழுவதும் சேதமடைந்தது இன்னொரு வருத்தமான செய்தி.

 

கடைசியில் எழுதினர்: மொத்தத்தில் சென்ற வருடம் ஒரு மோசமான வருடம்.

சற்று நேரத்தில் எழுத்தாளரின் மனைவி அந்த அறையினுள் வந்தார். தன் கணவர் ஏதோ நினைவில் ஆழ்ந்து, முகம் மிகவும் வாடிப்போய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். கணவரின் அருகில் வந்தவர் அவர் கையில் இருந்த காகிதத்தை வாங்கிப் படித்தார். ஒன்றும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறியவர் சிறிது நேரத்தில் கையில் இன்னொரு காகிதத்துடன் வந்தார். தன் கணவர் எழுதி வைத்திருந்த காகிதத்தின் அருகில் தான் கொண்டு வந்த காகிதத்தையும் வைத்தார்.

எழுத்தாளர் அந்தத் தாளில் தனது பெயர் எழுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

அதில் எழுதியிருந்தது:

 • சென்ற வருடம் எனது கல்லீரல் அகற்றப்பட்டது. பல வருடங்களாக நான் பட்டுக் கொண்டிருந்த சொல்லமுடியாத வலியிலிருந்து எனக்கு ஒருவழியாக விடுதலை கிடைத்தது.
 • சென்ற வருடம் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும்போதே வேலை ஓய்வு பெற்றேன். இனி இன்னும் நிறைய எழுதலாம். எனது எழுத்துக்களில் அதிக கவனம் செலுத்தலாம். எனது நேரம் இனி எனக்கே.
 • சென்ற வருடம் என் தந்தை தனது 95 வது வயதில் யாரையும் சார்ந்து இருக்காமல், எந்தவிதமான நோய்க்கும் ஆளாகாமல் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
 • சென்ற வருடம் எனது காரை ஓட்டிச் சென்ற எனது மகன் ஒரு விபத்தில் அகப்பட்டுக் கொண்டான். கார் முழுமையாக சேதமடைந்த போதிலும், எனது மகன்  எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்தான். இப்போது அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது. கடவுள் மிகவும் கருணை உள்ளவர்.

கடவுளின் அருளால் சென்ற வருடம் நல்லபடியாகச் சென்றது.

இதைப்படித்த எழுத்தாளர் மனம் மகிழ்ந்து போனார். வருத்தத்தைக் கொடுக்கும் நிகழ்வுகளிலும் நல்லவற்றைக் காணும் தன் மனைவியைப் பாராட்டினார்.

********                                          ***************                                    **************

அந்த எழுத்தாளரின் மனைவி போல நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் நல்லதைப் பார்க்கும் மனப்பக்குவத்தை கடவுள் எல்லோருக்கும் கொடுக்கட்டும்.

இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!