என் குடும்பம்

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது…..

நன்றி: கூகிள்

 

இப்போதெல்லாம் தொலைக்காட்சி பார்க்கும்போது மறக்காமல் ரிமோட்டை கையில் வைத்துக்கொள்ளுகிறேன். இடைவேளையின்போது சானல் சானலாக அலைவதற்கா? நாங்களும் அதைச் செய்கிறோமே, என்கிறீர்களா? நான் அதைச் சொல்லவில்லை. நான் அதைச் செய்யவும் மாட்டேன். நான் ஸ்ரீராமன் மாதிரி அவருக்கு ஒக பாணம், ஒக வார்த்தை, ஒக மனைவி. எனக்கு ஒக சானல் ஒக நிகழ்ச்சி. பார்த்து முடித்துவிட்டுத்தான் அடுத்த சானல். சரி, ரிமோட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்? விளம்பரம் வரும்போது mute செய்துவிடுவேன். உடனே என் காது ‘அப்பாடி’ என்று நன்றி சொல்லும். அப்பப்பா! இந்த விளம்பரங்கள் படுத்தும்பாடு, சொல்லி மாளாது. விளம்பரங்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லுகிறேன்.

 

விளம்பரச் சத்தத்தை சில நிமிடங்களாவது நிறுத்துவது போல வேறு சில விஷயங்களையும் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அழகான நீர்வீழ்ச்சியின் அருகில் சகிக்காத உடையுடன் ஆடும் கதாநாயகி கதாநாயகனை அப்படியே அந்த நீர்வீழ்ச்சியில் தள்ளிவிட முடிந்தால்?  கதாநாயகனை விட கூடுதல் பெர்சனாலிட்டியுடன் கதாநாயகனின் பின்னால் ஆடும் அந்த இளைஞனை க்ளோசப்பில் பார்க்க முடிந்தால்? ஆடுகிறேன் பேர்வழி என்று சாணி மிதிக்கும் நாயக நாயகியரை அப்படியே freeze செய்ய முடிந்தால்? வெள்ளை உடையுடன் வரும் அழகிகளை அப்படியே புகைபோல மறையச் செய்தால்? இப்படி எனக்குள் நிறைய தோன்றும். முக்கியமாக ‘மலரே…மௌனமா….?’ பாடல் காட்சியில் ஒரே ஒருமுறையாவது ரஞ்சிதாவையும், அர்ஜுனையும் ‘காக்கா உஷ்’ செய்துவிட்டு அந்த இயற்கை அழகை ரசிக்க ஆசை!

 

கொஞ்சம் பின்னால் போகலாம். தொலைக்காட்சி வராத காலம். வானொலியில் மட்டுமே சில பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பேன். நாளை நமதே படம் வெளிவந்த ‘75 ஆம் ஆண்டின் பிற்பகுதி. அந்தப் படத்தில் வரும் ‘நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது….’ பாடல் மிகவும் பிரபலம். வானொலியில் மட்டுமல்ல; அன்றைய தினத்தில் மேடைப்பாடகர்களில் பிரபலமாக இருந்த திரு ஏ.வி. ரமணன், திருமதி உமா ரமணன் இருவரும் இந்தப் பாடலை மேடைதோறும் பாடுவார்கள். என் கணவருக்கு இவர்கள் இருவரும் பாடும் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். எங்கு இவர்கள் கச்சேரி என்றாலும் போய்விடுவார். திருமணத்திற்கு முன் தனியாக. திருமணம் ஆனவுடன் என்னையும் அழைத்துக்கொண்டு.

 

காதல் டூயட்கள் பாடுவதில் இவர்கள் இருவரையும் அடித்துக்கொள்ள இன்றுவரை வேறு மேடைப்பாடகர்கள் இல்லை. போர்த்திய தலைப்புடன் துளிக்கூட ஆடாமல் அசையாமல் உமா பாடுவதைக் காண மிகவும் வியப்பாக இருக்கும். அவரது குரல் தேன், அமிர்தம் இன்னும் என்னென்னவோ! பாடல்களில் வரும் அத்தனை நெளிவு, சுளிவுகள், குழைவுகள் எல்லாவற்றையும் அப்படியே கொடுப்பார் உமா.

 

நாளை நமதே படம் நான் பார்த்ததில்லை இன்று வரை. ஒவ்வொருமுறை உமா ‘நீலநயனங்களில்……’ என்று ஆரம்பிக்கும்போது கூடியிருக்கும் கூட்டம் மகுடி கேட்ட நாகமாக மயங்கும். இந்தப் பாடலுக்காகவாவது இந்தப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. அந்த ஆசை சமீபத்தில் தான் நிறைவேறியது. ஏன் நிறைவேறியது என்று நான் நொந்துவிட்டேன். பார்க்காமலேயே இருந்திருக்கலாமே என்று இன்றுவரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல பாட்டைக் கெடுக்கமுடியுமா? நிச்சயம் கெடுக்கலாம் மோசமான படப்பிடிப்பால் என்று இந்தப்பாட்டைக் கேட்டவுடன் – ஸாரி பார்த்தவுடன் புரிந்தது.

 

மோசமான உடைகள், மோசமான காட்சியமைப்பு, மோசமான உடல் அசைவுகள் மோசமான, மோசமான, மோசமான என்று எத்தனை மோசமான என்று எழுதினாலும் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு மோசமோ மோசம். இனி இந்தப்பாட்டை காதால் மட்டுமே கேட்கவேண்டும் கண்ணால் காண்பது கூடாது என்று முடிவு செய்தேன். ஒருவேளை நான் தொலைக்காட்சி எதிரே உட்கார்ந்திருக்கும்போது இந்தப்பாட்டு வந்தால் உடனடியாக இடத்தைக் காலி செய்துவிடுகிறேன்.

 

அதேபோல இன்னொரு பாட்டு: உமா ரமணன், ஜேசுதாஸ் பாடும் ‘ஆகாய வெண்ணிலாவே….’ உமா+தாஸ்யேட்டனின் தேன் குரலைக் கேட்டும் அந்த நடன அமைப்பாளருக்கு எப்படி பிரபுவையும், ரேவதியையும் கோமாளி மாதிரி ஆட வைக்க முடிந்தது என்பது இன்று வரை எனக்குப்புரியாத புதிர். இன்னொரு பாட்டு ‘வெண்ணிலவே, வெண்ணிலவே….’. கண்ணை மூடிக்கொண்டு அனுபவித்துக் கேட்க வேண்டிய பாடல் இது. கண்ணை தப்பித்தவறி திறந்து வைத்துக்கொண்டு பார்த்துவிட்டால் ‘பெண்ணே…..பெண்ணே….’ என்று பிரபுதேவா வாயைப்பிளக்கும்போது ‘பட்’டென்று கன்னத்தில் ஒன்று போட்டு இளையராஜா கேட்டது போல ‘அறிவிருக்கா?’ என்று கேட்கத்தோன்றும்.

 

கண்களை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களின் லிஸ்ட் கொடுக்கலாம் என்றால் ரொம்ப ரொம்ப நீளமானது அது. நான் பார்க்க ஆசைப்பட்டு நொந்து போன பாடல் காட்சிகளில் இன்னொன்று ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்’ பாடல். இந்தப் பாடலின் நினைவு வந்தவுடன் கே.ஆர். விஜயாவின் நினைவு நிச்சயம் வரும். ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று இவர் வாயை அசைக்கும் பாடல் காட்சியைப் பார்த்துவிட்டு என் பிள்ளை (அப்போது அவன் மிகவும் சின்னவன்) கேட்டான்: ‘இந்த மாமி ஏன் வாயைக் கோணிண்டு அழகு காட்டறா?’ என்று.

 

நம்மை விட குழந்தைகள் உள்ளதை அப்படியே சொல்லுபவை, இல்லையா?

 

 

 

Advertisements

26 thoughts on “நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது…..

 1. பாட்டை மட்டுமே ரசிக்க வேண்டிய காட்சிகள் ஏராளம்… ஏராளம்! காட்சியும் நன்றாயிருக்கும் பாடல்கள் மிக மிகக் குறைவு. காட்சி நன்றாயிருந்து பாடல் நன்றாயிலாத பாடல்களும் உண்டு! நாளை நமதே படம் ஹிந்தி யாதோன் கி பாராத் தின் தமிழ்த் தழுவல். அதில் யேசுதாசின் எல்லாப் பாடல்களுமே நன்றாயிருக்கும்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   நீங்கள் கூட பேஸ்புக்கில் ஒரு பாடலைப் போட்டு அதில் வருபவர் அசோகன் என்று போட்டிருந்தீர்கள். எனக்கு அசோகனின் நடிப்பு ரொம்பவும் பிடிக்கும். மணப்பந்தல் படம் பார்த்திருக்கிறீர்களா? மிகச்சிறப்பாக நடித்திருப்பார். சிவாஜியின் நிழலில் அவரது நடிப்பு எடுபடாமல் போய்விட்டதோ என்று தோன்றும். பிறகு அவரை கோமாளி வில்லன் ஆக்கிவிட்டார்கள் நம் தமிழ் படத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். ஒரு நல்ல கலைஞர் கவனிக்கப்படவில்லை.

   நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடலில் மணிமாலா கதாநாயகி. எனக்குக் கூட அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். வேதாவின் பாடல்கள் எல்லாமே ஹிந்திப் படப்பாடல்களின் காப்பிதான்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   1. அசோகனுக்கு சில காட்சிகளில் ‘இப்படி நடிக்கலாம்’ என்று சிவாஜி சொல்லிக் கொடுத்தது ‘உயர்ந்த மனிதன்’ படத்திலாம். அசோகன் இயக்குனரிடம் “ஏண்ணே… நல்ல மனசோடதான் சொல்லிக் கொடுக்கறாரா”என்று கேட்டதாகப் படித்தேன்.ஏனென்றால் அசோகன் எம் ஜி ஆர் குழுவைச் சேர்ந்த நடிகர். ஆனால் கத்தல், மிகை நடிப்பு!அவரது பையன் கூட சமீபத்துப் படங்களில் வில்லன் வேடம் போட்டார்!

 2. Very much true R Rji
  i had experienced these feelings with famous writers vips and all
  excellent stories novels would reveal their talents…
  but when you talk to them you will be disappointed sometimes frustrated….
  first thing they would ask is our caste native place our back ground….
  so the songs when you hear outside the theatres and the actual
  picturisation…..
  i had the experience of interacting BLOG WRITERS too
  who showed keen desire
  the SUBSECT of my caste…….

  1. வாங்க கருணாகரன்!
   நீங்க சொல்வது ரொம்பவும் சரி. பாட்டை மட்டுமே கேட்க வேண்டும். காட்சியைப் பார்க்ககூடாது என்ற பாடத்தைப் பலபாடல்கள் எனக்குக் கொடுத்திருக்கின்றன.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க கீதா!
   காட்சிகளைப் பார்க்காமல், பாடல்களை மட்டும் கேட்கவேண்டும் போலிருக்கு.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வா ஜெயந்தி!
   உனக்கும் இப்படித் தோன்றுமா?
   பேசாமல் இனி பாடல்கள் இல்லாத திரைப்படங்களை எடுக்கலாம், இல்லை?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. 🙂
  என்னடா வாழ்க்கை இது என்கிற சலிப்பு வரும்போது, இந்தப் பாட்டின் அசை படத்தையும் பார்த்துவிடுங்கள். பாடல் – தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்…

  விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

  1. வாங்க பாண்டியன்!
   இது எந்தப் படத்துப்பாடல்? சொன்னீர்களானால் தேடிப்பிடித்து பார்க்கிறேன்.

   தனிமையிலே என்று ஆரம்பிக்கும் இன்னொரு பாடல் (ஜெமினி, சரோஜாதேவி நடித்தது) நான் ரொம்பவும் விரும்பிப் பார்ப்பேன். சரோஜாதேவி மிக மிக அழகாக இருப்பார். பாடலே நன்றாக இருக்கும்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   1. பாவம் நீங்க. அப்டியெல்லாம் உங்களைக் கொடுமைப் படுத்தக் கூடாது. விட்ருவோம். 🙂 மிக நன்றி.

 4. பாடலை மட்டும் தான் ரசிக்கவேண்டும் ரஞ்சனி.
  நிறைய பாடல்கள் அப்படி இருக்கிறது.
  பாடல்கள் மட்டும் கேட்க வேண்டும் என்றால் நாம் வேறு வேலை பார்க்கும் போது பாடல்களை ஒலிக்கவிட்டு விட்டு கேட்க வேண்டும்.
  ஒரே விளம்பரங்கள் மீண்டும் மீண்டும் வரும் போது எரிச்சலாக இருக்கும்.

  1. வாங்க கோமதி!
   உண்மைதான் பாடலை மட்டுமே ரசிக்க வேண்டும். ரேடியோவில் கேட்டுவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டும். பார்ப்பதற்கு ஆசைப்படக் கூடாது!
   ஒருகாலத்தில் என் சமையலறையில் எப்போதும் ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் இந்த எப்.எம் ரேடியோக்கள் வந்து கூச்சல் தாங்க முடியவில்லை. இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் கச்சேரிகளையும் கேட்பேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. மிகவும் சீரியசாக எழுதிக்கொண்டே வந்த நீங்கள் கடைசியில் நல்ல ஹாஸ்யத்தை எழுதி
  என்னை வாய் விட்டு சிரிக்க வைத்துவிட்டீர்கள்.நானும் கே.ஆர். விஜயா என்
  இவ்வளவு கஷ்டப்பட்டு வாயைக் கோணிக் கொள்கிறார் என்று பார்க்கும்போதெல்லாம்
  நினைத்துக் கொள்வேன்.பல பாடல்கள் கேட்க மட்டுமே லாயக்கானவை.சிறிய விஷயத்தை
  சுவாரசியமாக எழுதியுள்ளதைப் பார்த்து மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.
  அன்புடன் ருக்மணி சேஷசாயி.

  1. வாங்க ருக்மணி!

   ரொம்பவும் ரசித்திருக்கிறீர்கள் என்று உங்கள் கருத்துரையிளிருந்து தெரிகிறது.
   வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி!

 6. அட! நாங்களும் இப்படித்தான் சொல்லிக் கொள்வதுண்டு. பல பாடல்கள் காதால் கேட்கமட்டுமே! பாடல் நன்றாக இருக்கிறதே காட்சியும் நன்றாக இருக்குமோ என்றால் நாம் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவோம். அது போன்று காட்சி நன்றாக இருக்கும் ஆனால் பாடல் “ஸாரி” என்று சொல்ல வைத்துவிடும்…

  கீதா: கடைசி வரிகள் செம சிரிப்பு. ஏனென்றால் நான் வீட்டில் கே ஆர் விஜயா போன்று செய்து காட்டுவதுண்டு. என் கசின்கள் எல்லாம் விழுந்து விழந்து சிரிப்பார்கள். ஏனோ அவர் பாடல் காட்சிகளில் மிகவும் அஷ்டகோணலாக மிகைப்படுத்தி நடிப்பதாகத் தோன்றும். பாடல் மட்டுமில்லை மற்ற காட்சிகளிலும் கூட…

  நொந்ததைக் கூட மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றீர்கள். அருமை..மிகவும் ரசித்தோம்..

 7. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s