என் குடும்பம் · Uncategorized

ஸ்ரீரங்க நாச்சியாரும் பங்குனி உத்திரமும்

ஸ்ரீவைஷ்ணவர்கள் கட்டாயம் சேவிக்க வேண்டிய உத்சவங்கள் மூன்று:

 1. பங்குனி உத்திரம் ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளின் சேர்த்தி சேவை.
 2. திருநாராயணபுரம் வைரமுடி சேவை
 3. திருவாலி-திருநகரி வேடுபறி சேவை

மூன்றையுமே சேவித்திருக்கிறேன் என்பதில் ஒரு நிறைவு.

 

WP_20160322_17_56_25_Pro.jpg

மேலே எங்கள் அகத்தில் இருக்கும் பெருமாளும் நப்பின்னையும்.

நாளை (23.3.2016) ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை. ஸ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் சில வருடங்களுக்கு முன்தான் இந்த சேர்த்தி சேவையை சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. பிள்ளைக்குக் கல்யாணம் ஆனவுடன் மாட்டுப்பெண்ணையும் கூட்டிக்கொண்டு போயிருந்தோம். சாயங்காலமே (ரொம்ப சீக்கிரம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் – அங்கு போனபின்தான் எங்களுக்கு முன்னால் ஒரு நீண்ட வரிசை நிற்பது  தெரிய வந்தது.) ஒரேயொரு சந்தோஷம் என்னவென்றால் தாயார் சந்நிதி எதிரே இருக்கும் கம்பராமாயணம் அரங்கேறிய மண்டபம் வரை க்யூ இல்லாமல் போய்விட்டோம். சரி, சீக்கிரம் சேவை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டோம்.

 

நாங்கள் நின்றிருந்த இடத்தில் கருங்கல் தரை. மார்ச் மாத வெயிலில் கால்கள் பொரிந்துவிட்டன. காலை மாற்றி மாற்றி வைத்து நின்று கொண்டோம். பிள்ளையின் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பராக்கு பார்த்தபடி நின்றிருந்தேன். காலில் பட்ட சூடு அவன் கண்களில் நெருப்பாக வெளிவந்து என்னை எரித்துக்கொண்டிருந்தது. நல்லகாலம், சீக்கிரமே வரிசை சற்று முன்னேறி மண்டபத்திற்குள் போய்விட்டோம். இப்போது பிள்ளையைப் பார்த்து கூலாக சிரித்தேன். ‘பெங்களூருக்கு வா, உன்னைப் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்றான்.

 

ஒரு வழியாக முன்னேறி பெருமாள் தாயார் சேர்த்தி மண்டபத்திற்குள் ஏறினோம். தாயாரும் பெருமாளும் வெள்ளைவெளேரென்ற பட்டு வஸ்த்திரத்தில் ஜொலித்தனர். ஒரு நிமிடம் அப்படியே மெய் சிலிர்த்தது. என்ன கம்பீரம்! அன்றுதான் பிறந்த பயன் கிடைத்தது போல ஒரு நெகிழ்ச்சி. என்னவொரு ஜோடிப்பொருத்தம்! திவ்யதம்பதிகள் என்று இதனால்தான் சொல்லுகிறார்களோ என்று கூடத் தோன்றியது.

 

இவர்களின் சேர்த்தி அழகை சேவித்துதானே ஸ்ரீ ராமானுஜர் கத்யத்ரயம் சாதித்தார்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்காகவும் அன்றே அவர் இந்த திவ்யதம்பதிகளை சரணடைந்தார்! (கத்யம் என்பது வடமொழி ஸ்லோகங்களில் ஒருவகை. சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம் என்று மூன்று கத்யங்களை சாதித்ததால் கத்யத்ரயம் (த்ரயம் என்றால் மூன்று) என்ற பெயர் வந்தது).

 

மறுபடி இன்னொருமுறை சேவிக்க ஆசை. ஆனால் வெளியே நின்றிருந்த வரிசையைப் பார்த்து (கூடவே என் பிள்ளையையும் நினைத்து!) பேசாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன். எப்படியாவது இரவில் நடக்கும் கத்யத்ரய சேவைக்குப் போக வேண்டும் என்று நான், என் அக்கா, என் சம்பந்தி மூவரும் ரகசிய ஆலோசனைக் கூட்டம் போட்டு முடிவு செய்தோம். என் கணவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் மூவர் மட்டுமே.  ‘நீ ஏதாவது இப்படிச் செய்வாய் என்று தெரியும்’ என்று என்னை கோபித்தவாறே என் பிள்ளை எங்கள் மூவரையும் தாயார் சந்நிதி வரையில் காரில் கொண்டுவந்து விடுவதாக மனமிரங்கினான். ‘ஆஹா! பெருமாளின் கருணையே கருணை’ என்ற என் அக்காவைப் பார்த்து ஒன்றும் சொல்லமுடியாமல் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன்.

 

தாயார் சந்நிதிக்குள் நுழையவே முடியவில்லை. சேர்த்தி சேவை முடியும் வரையில் இருந்த வரிசை ஒழுங்கெல்லாம் போயே போச்! எல்லோரும் அடித்துப்பிடித்து தள்ளுமுள்ளு பண்ணிக்கொண்டு உள்ளே போய்க்கொண்டிருந்தனர். எங்களால் அந்தக் கூட்டத்தில் உள்ளே நுழையவே முடியவில்லை. ஒருமணிநேரம் அப்படி இப்படி சுற்றிச்சுற்றி வந்தோம். ஊஹூம். எங்கள் பாச்சா எதுவும் பலிக்கவில்லை. அவரவர்கள் அடித்துப்பிடித்து நுழைந்து கொண்டிருந்தார்களே எங்கள் மூவரையும் அழைத்துப்போக யாரும் முன்வரவில்லை. எங்களுக்கும் அந்த நெரிசலில் உள்ளே நுழைய பயமாக இருந்தது. சரி வீட்டிற்குப் போகலாம் என்று பிள்ளைக்குப் போன் செய்து வர சொன்னேன். தாயார் சந்நிதி வாசலில் வந்து நின்றுகொண்டோம். கார் வந்ததும் நான் வாயைத் திறக்கவில்லை. பேசாமல் ஏறிக்கொண்டேன். என் அக்கா என் பிள்ளையிடம், ‘அம்மாவைக் கோவிச்சுக்காதே!’ என்றாள். ‘அம்மாவைப் பற்றித் தெரியும் பெரியம்மா!’ என்பதுடன் நிறுத்திவிட்டான். அப்பாடி! இனி பெங்களூரு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

 

மனதிற்குள் ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று. இது நடந்து சில வருடங்களுக்குப் பிறகு ‘திருவாலி-திருநகரி வேடுபறி சேவித்துவிட்டு அப்படியே ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி சேவை வருகிறீர்களா?’ என்று என் உறவினர் ஒருவர் கேட்க, இரண்டாம்முறை பங்குனி உத்திர சேவை! சென்னைக்குப் போய் அங்கிருந்து  திருவாலி-திருநகரி. அங்கு வேடுபறி சேவித்துக் கொண்டு நாங்கள் ஸ்ரீரங்கம் போய்ச்சேர்ந்த போதே இருட்டிவிட்டது. க்யூ வரிசை வெள்ளைக்கோபுரம் தாண்டி நின்றுகொண்டிருந்தது. எங்களுடன் கூட வந்தவர்கள் 300 ரூ டிக்கட் வாங்கிவிடலாம் என்று சொல்ல, தாயார் சந்நிதி வரை அப்படியே போய்விட்டோம். அங்கு டிக்கட் வாங்கிக்கொண்டு க்யூவில் சேர்ந்து கொண்டோம். சேர்த்தி சேவித்துவிட்டு அப்படியே கத்யத்ரய சேவையில் உட்கார்ந்துவிடுவது என்று முதலிலேயே தீர்மானம் செய்து விட்டோம்.

 

சேர்த்தி சேவையை முடித்தக்கொண்டு வசந்த மண்டபத்தில் வந்து உட்கார்ந்து கொண்டோம். இன்னும் சிறிது நேரத்தில் வரிசைக்காகக் கட்டியிருக்கும் மூங்கில்கழிகளை எடுத்துவிடுவார்கள். அதனால் எந்தவித சிரமமும் இல்லாமல் பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் அன்றைய தினம் கூட்டமோ கூட்டம். சேர்த்தி சேவைக்காக டிக்கட் வாங்கியவர்கள் இன்னும் வரிசையில் வந்து கொண்டிருந்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. கூட்டம் குறைந்தபாடில்லை. அப்படியே கத்யத்ரயம் சேவிக்க ஆரம்பித்துவிட்டனர். எங்களுக்கு என்ன பிரச்னை என்றால் இத்தனை மூங்கில் கழிகளைத் தாண்டி எப்படி பங்குனி உத்திர மண்டபம் செல்வது என்பதுதான். க்யூவில் நின்றிருந்தவர்களிடம் அந்தப்பக்கம் போவதாகச் சொல்லிவிட்டு வழியை ஏற்படுத்திக் கொண்டோம். கடைசியாக ஒரு மூங்கில்கழி. எப்படித் தாண்டி அந்தப்பக்கம் போவது? எங்களுடன் வந்திருந்த இளம் வயதுக்காரர்கள் அந்த மூங்கில்கழி மீது காலைவைத்து அந்தப் பக்கம் குதித்தனர்.  நான் என்ன செய்வது? சட்டென்று ஒரு யோசனை. கீழே உட்கார்ந்தேன். பின் அப்படியே நிலத்தில் படுத்துக்கொண்டு மூங்கில் கழிகளின் கீழே நீந்தி அந்தப்பக்கம் போய்விட்டேன்.

 

உட்கார இடம் கிடைத்தவுடன் கையுடன் எடுத்துப் போயிருந்த கத்யத்ரய புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு சேவிக்க ஆரம்பித்தேன். அன்று பெருமாளுக்கு 18 முறை கைலி மாற்றி திருமஞ்சனம். நேரம் ஆக ஆக தூக்கம் கண்ணைச் சுற்றியது. முதல்நாள் காலையிலிருந்து பேருந்துப்பயணம். பின்பு வேடுபறி விடிய விடிய சேவித்தாயிற்று. இரவு தூக்கமும் இல்லை. உட்கார்ந்துகொண்டே அவ்வப்போது ஆடி ஆடி விழுந்துகொண்டு, கண் விழித்த போதெல்லாம்   பெருமாளையும் சேவித்துக் கொண்டு… நான் கண் விழித்த போதெல்லாம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ரஞ்சனிகுமாரி?’ என்று பெருமாள் கேட்பது போல இருந்தது. மறக்கமுடியாத அனுபவம்.

 

இந்தப் பங்குனி உத்திரம் ஸ்ரீரங்க நாச்சியாரின் திருநக்ஷத்திரம். வருடத்திற்கு ஒருமுறை ஒரேஒரு நாள் அன்று நம்பெருமாளுடன் சேர்ந்து அடியவர்களுக்கு சேவை கொடுப்பாள்.

 

அவளைப் போலவே எனக்கும் இது ரொம்பவும் முக்கியமான நாள். ஏன் தெரியுமா? என் அகத்துக்காரரின் பிறந்தநாள். அவரது நல்வாழ்விற்கு ஸ்ரீரங்கம் திவ்யதம்பதிகளைப் பிரார்த்தித்து  நிற்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

Advertisements

9 thoughts on “ஸ்ரீரங்க நாச்சியாரும் பங்குனி உத்திரமும்

 1. //சட்டென்று ஒரு யோசனை. கீழே உட்கார்ந்தேன். பின் அப்படியே நிலத்தில் படுத்துக்கொண்டு மூங்கில் கழிகளின் கீழே நீந்தி அந்தப்பக்கம் போய்விட்டேன்.//

  நாங்க ஶ்ரீரங்கம் வந்த 2012 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி சேவைக்குப் போயிட்டு நானும் இப்படித் தான் உருண்டு புரண்டு உள்ளே சென்றேன். உயரமான என் கணவர் சுலபமாகக் கழிகளைத் தாண்டி விட்டார். எனக்கு முழங்கால் வேறே பிரச்னை! இடக்காலைத் தூக்கவே முடியாது! 😦

 2. ஶ்ரீரங்கம் வந்த இந்த நான்காண்டுகளில் இந்த வருஷம் தான் தைத்தேரே பார்த்தோம். கூட்டம் அதிகம் என்ற காரணத்தினால் போக முடியலை! சேர்த்தி எல்லாம் எங்கே பார்க்கிறது! மனசுக்குள் நினைச்சுக்க வேண்டியது தான்!

 3. அடுத்த மாதம் சித்திரைத் தேர். கும்பல் அதிகமா இருக்கும். பார்க்க முடியுமோ, முடியாதோ! 😦 பெருமாளைப் பார்த்துடலாம். பக்கத்தில் உள்ள மண்டகப்படிகளுக்கு வருவார்.

 4. மிகவும் பக்தி பூர்வமான பதிவு ரஞ்சனி பாராட்டுக்கள். என் புக்காத்து மாமி பெண் திருமணத்திற்கு 1995 ல் ஸ்ரீரங்கம் போனபோது பெருமாளை தரிசித்ததுதான் இத்தனை விவரங்கள் எனக்கு ஞாபகம் இல்லை.

 5. ஸ்ரீவைஷ்ணவப் பதிவு சிறப்பாக இருந்தது. உங்கள் அகத்திலேயே பெருமாளும் தாயாரும் சேவை சாதிக்கிறார்கள். பிறகென்ன!

  புகழ்பெற்ற கோவில்களில், பெருமாளை சேவிப்பதற்குமுன் அங்கு காணப்படும் திணறவைக்கும் கூட்டத்தைக் கண்டால், பெருமாளை மனதிற்குள்ளேயே சேவித்தால் போதும் என்கிற வேதாந்தம் வந்துவிடுகிறது!

 6. இந்த வருஷம் நாங்களே எதிர்பாராமல் பூந்தேர் பார்க்கப் போயிட்டுச் சேர்த்தி சேவையை தரிசித்து வந்தோம். அரங்கன் அந்தக் குறை உனக்கு எதுக்குனு நினைச்சு எங்களை வரச் சொல்லி அழைத்துக் காட்டி விட்டான். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s