காதல்களும் கடந்து போகும்..

Shankar Ji·Friday, March 18, 2016

 

முகநூலிலிருந்து: எழுதியவர் திரு ஷங்கர்ஜி.

 

காதல், காதல் என்று பல உணர்ச்சிகரமான பதிவுகளைப் பார்க்கிறேன். 16 வயது முதல் 30 வயது வரை, என்னிடம், உன்னை எனக்குப் புடிச்சிருக்கு, ‘ஐ லவ் யூன்னு’ சொன்னவர்கள் 12 பெண்கள். நானாகச் சொல்ல விரும்பியது ஒரே ஒருவரிடம். பத்துக் காசு வருமானம் இல்லாதப்ப, கூட இருந்த நண்பர்கள் எல்லாம், ‘கிடைச்சா, அவுத்துடனும்டா’ என்ற வயதுக்குரிய ஹார்மோன் பிரச்சனைகளில், பித்துப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்க, வீட்டில் ஒரே மகனாகப் பிறந்து அக்காவோ, தங்கையோ இல்லாமல் தனிமரமாக இருந்த நான், பெண்களைப் பார்த்தாலே தலை குனிந்து ஓரமாக ஓடிப்போகின்ற குணாதிசியத்துடன் வாழ்ந்துவந்தேன்.

 

இதைப் படிக்கும் உங்களில் பலருக்கு இது கேலியாக இருக்கலாம், பலருக்கு உண்மை என்று வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கலாம். ஆனாலும் அன்றைக்கு நான் அதிகம் படித்த பாலகுமாரன் நாவல்கள் மட்டுமே பெண்களைப் பற்றிய ஒரு மரியாதையை எனக்குள் ஏற்படுத்தியது. ஒரு பெண்ணைக் கண்ணைப் பார்த்துப் பேசும் தைரியத்தை, மரியாதையை எனக்குக் கற்றுத்தந்தது.

 

எனக்குப் பெண்களைப் பிடித்திருந்தது, அவர்கள் விரும்புகிறேன் என்று சொன்னது கிறக்கத்தைக் கொடுத்தது. ஆனாலும் திடீரென்று ஒரு பயம் வரும், இது சரியா? எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, ஏதோ ஒன்று என்னிடம் அந்தப் பெண்ணை ஈர்த்திருக்கிறது. நிச்சயம் அது என்னிடம் இல்லை என்று தெரியவரும்பொழுது அவள் ஏமாற்றமடைவாள், எதற்கு இந்த அவஸ்தை என்று, சாரி, நான் உனக்கு சரிப்படமாட்டேன், நாம நண்பர்களாகவே இருப்போம் என்று விலகிவிடுவேன்.

 

லேன்ட்லைன் போனே இல்லாத க்ரீட்டிங் கார்ட் காலகட்டத்தில், நான் இப்படிச் சொல்லும்பொழுதுதான் அவர்கள் என்னை மிகவும் விரும்பினார்கள் என்பது இன்னும் ஒரு பெரிய கொடுமை. ‘எவனும் சொல்லமாட்டான், கொஞ்சம் பக்கத்துல வந்தாலும் கைபோடத்தான் பார்ப்பான், நீ ஏன் இவ்ளோ நல்லவனா இருக்க? அதனாலத்தான் உன்னைய எனக்கு ரொம்ப புடிக்கும்’, என்று இன்னும் என் மென்னியை அன்பு கொண்டு நெருக்குவார்கள். என்னை அவர்கள் நம்புவதற்குக் காரணமிருந்தது. எந்தப் பெண் என்னைப் பிடித்திருக்கிறது என்றாலும் முதலில் அவர்களை என் வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி என் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைப்பேன். நண்பர்கள் எல்லாம் காதலிக்க சந்து, பொந்துகளைத் தேடிக்கொண்டிருக்க, என்னை விரும்பிய பெண்கள் என் அப்பா போட்டுத்தரும் காப்பியைக் குடித்தபடியே, என் வீட்டில் சர்வசாதாரணமாக என்னிடம், என் பெற்றோர்களிடம், பேச முடிந்ததை அவர்கள் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். 1980 களின் இறுதியில் அது உலக அதியசமாகவே இருந்தது.

 

ஆங்கிலம் பேசுவது, அழகாக உடை உடுத்துவது, ஒழுங்காகப் படிப்பது, பரிட்சைக்குத் தயாராவது, அழுகை, கோபம், அன்பு என்று எல்லாவற்றையும் அந்தப் பெண்கள்தான் எனக்குக் கற்றுத்தந்தார்கள். என்னுடைய நிறமோ, எனக்கு வீட்டிலிருக்கும் சுதந்திரமோ, அல்லது காதல் பற்றிய அவர்களின் மனோபாவமோ ஏதோ ஒன்றுதான் ‘லவ்’ எனும் போர்வையில் என்னிடம் இவர்கள் வரக் காரணமாக இருக்கிறது என்பதை நான் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், அதெல்லாம் வேலைக்கே ஆகாத விஷயங்கள் என்று எனக்குப் புரிந்திருந்தது. ‘பின்ன என்ன மயிறுக்கு 12 பொண்ணுங்கள லவ் பண்ணின?’ என்று நீங்கள் கேட்கலாம். கவனியுங்கள், அவர்கள்தான் என்னிடம் வந்து சொன்னார்கள். ஆயிரம் பேசினாலும், யோசித்தாலும் ‘சராசரி ஜொள்ளை’ ஜீனில் வைத்திருக்கும் ஒரு ஆணாகிய நான் ‘சாரிங்க, நான் அந்த டைப் இல்லை,.’ என்று சொல்லமுடியாதவனாக இருந்தேன். கொஞ்சம் லூசுத்தனமான குழப்பமான மனநிலைதான்.

 

ஆனால், அப்படி என் வாழ்வில் வந்த அந்தப் பெண்களாலேயே நான் ஓரளவு விஷயம் கற்றவனாக மாறினேன். இன்றைக்கும் வாழ்வில் அவர்களைச் சந்திக்க நேர்ந்தால், எந்தத் தயக்கமுமின்றி அவர்களுடன் சகஜமாக ஒரு உரையாடலைத் துவக்க முடியும். வீட்டிற்கு வாருங்கள் என்று என் மனைவியையும், குழந்தைகளையும் அறிமுகப்படுத்தி வைக்கமுடியும். சுவையான ஒரு மதிய உணவைப் பரிமாற முடியும். என்னைவிட நன்கு படித்த, சம்பாதிக்கும், திறமையான நல்ல வளமான வாழ்க்கையைத் தரக்கூடிய ஒருவர் அவர்களுக்குத் துணையாகக் கிடைப்பார்கள் என்பதே என் நம்பிக்கையாகவும், என் விலகலுக்கான விளக்கமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எல்லோருமே என்னை விட பல விஷயங்களில் முன்னேறியே இருந்தார்கள். இந்த மிக முக்கியமான விஷயத்தைக் ‘காதல்’, திரை போட்டு மறைத்தபொழுது, திரையை விலக்கி நான் தெளிவாக ‘பொருளாதாரம், அறிவு, சம்பாதிக்கும் திறன் சார்ந்த, என் கெப்பாசிட்டியைச்’ சொல்லிவிட்டு, கை குலுக்கி நாம் நண்பர்களாக இருப்பதே ‘உங்கள் வாழ்க்கைக்கு நல்லது’, என்று ஒவ்வொருமுறையும் (அப்கோர்ஸ் ஃபீலிங்கோடதான்) வெளியே வந்தேன்.

 

என்னுடைய வாழ்க்கையின் முதல் கட்டமாக என் சிறிய மகன் இருக்கிறான். என் கிளாஸ் கேர்ஸுங்க ஓவர் சீன் போடறாங்கப்பா.. அவங்கள தனி க்ளாஸ்ல போட்டுட்டா நானும் என் ப்ரென்ட்ஸ் எல்லாம் நிம்மதியா இருப்போம். அதுலயும் இந்த மிஸ்ஸுங்க பொண்ணுங்க அடிக்கிற பந்தா இருக்கே..

 

இரண்டாம் கட்டமாக என் பெரிய மகன் இருக்கிறான். என்ன கண்ணு அந்த பொண்ணு ஏதோ உன்னை கேலி பண்ணிட்டுப் போகுது? அது ஒண்ணும் இல்லைப்பா என் தலைமுடிய கேலி பண்றாங்க. உனக்குக் கோவம் வரலியா? இல்லப்பா, அவங்க எல்லாம் என் ப்ரென்ட்ஸ்தானே? எனக்கு மேக்ஸ் தலைல கொட்டி சொல்லித் தர்றதே அந்தப் பொண்ணுதான்.

 

பெண்களை விட ஆண்குழந்தைகளை வளர்ப்பதில்தான் அதிக பொறுப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். சக மாணவிகளிடம் மரியாதையாக நடக்கவேண்டும், அடிப்பது, கேலி செய்வது, முடியைப் பிடித்து இழுப்பது போன்ற விஷயங்கள் தவறாகப் பார்க்கப்படலாம், சென்சிடிவாக எடுத்துக்கொள்ளப்படலாம். ஆணோ, பெண்ணோ நண்பர்கள் என்பவர்கள் மதிப்புக்குரியவர்கள், அவர்களுக்கென்று தனித் திறமைகள் இருக்கும் அவற்றில் நல்லவைகளைக் கற்றுக்கொள், தவறாகப் பேசினால் அது தவறு அதில் எனக்கு உடன்பாடு இல்லை மன்னிக்கவும் என்று சொல்லி அதிலிருந்து வெளியேறிவிடு. சகஜமாகப் பேசு, ஜாதி, மதம் போன்றவைகள் தேவையற்றது. என்றெல்லாம் எனக்குத் தெரிந்தவைகளைக் கற்றுக்கொடுக்கிறேன்.

 

‘டேய், தகப்பா, நிஜமா 12 கேர்ல்ஸ், உன்கிட்ட லவ்யூ சொன்னாங்களா?’ என்று என் மகன்கள் கேட்கும்பொழுது என்ன பதில் சொல்வது என்பதையும் ஒத்திகை பார்த்து வருகிறேன்.

4 thoughts on “காதல்களும் கடந்து போகும்..

 1. மிகவும் ரசித்தோம் திரு சங்கர்ஜி அவர்களின் பதிவை. உண்மைதான் ஆண் குழந்தைகளை வளர்ப்பதில்தான் பொறுப்புணர்வு கூடுதல்.

  மிகத் தெளிவான சிந்தனையுடன் இருந்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர்கள் வீட்டில் கிடைத்த சுதந்திரம்.
  அதே போன்று அவர் தன் குழந்தைகளுக்கு நல்ல தோழனாக இருப்பது தெரிகிறது. எனவே அந்தக் குழந்தைகளும் நன்றாகவே நல்ல சிந்தனை வளத்துடன் வளர்வார்கள்.

  சகஜமாகப் பேசு, ஜாதி, மதம் போன்றவைகள் தேவையற்றது. என்றெல்லாம் எனக்குத் தெரிந்தவைகளைக் கற்றுக்கொடுக்கிறேன்.// சரியான அறிவுரை.

  நல்ல சுவாரஸ்யமான பதிவுப் பகிர்வு சகோ. மிக்க நன்றி

 2. நல்ல பதிவு. அவர் சொல்லியிருக்கா விட்டால் கூட அவர் பாலகுமாரன் படித்தவராயிருக்கக் கூடும் என்று தெரிந்திருப்பேன். அதே நடை! ஆன் குழந்தையாயினும், பெண் குழந்தையாயினும் தனித் தனியாய்ப் பொறுப்பு உண்டுதான்!

 3. பதிவை மிகவும் ரஸித்தேன். எல்லோருக்கும் சிறிது அநுபவங்களும், அடுத்த தலைமுறையைப்பற்றி யோசனைகள் இருக்கும். என்னைப் பொருத்த வரையில் பெண் பிள்ளை .பேரன் , அறிந்தவர்கள் உறவினர்கள் என்று ஒரு தொடர் காவியம் எழுத அனுபவங்களும்,நிகழ்வுகளும், இன்னும் யோசனை கேட்பவர்களுக்கு அனுபவங்களைச் சொல்லிஊக்கம் கொடுப்பதும் ப்ராக்டிகலாக யாவும் மனதில் நிழலாடியது.. அனுபவம் கற்றுக்கொடுத்த சிந்தனைகள் எழுதியவரின் எழுத்தில் நல்லதொரு சிந்தனையைத் தூண்டும். யாவும், உண்மையாகவும், நடை முறைக்கு ஒத்து வருவதாகவும், கருத்துள்ளதாகவும்,காலத்திற்கேற்றதாகவும் இருப்பது மிக்க மகிழ்வைக் கொடுத்தது. நான் இன்னும் எவ்வளவோ எழுதலாம்..அருமையானபதிவு. அன்புடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s