வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்

 

நன்றி: கூகுள்

மார்கழி என்றாலே திருப்பாவையும், அதை அருளிச்செய்த கோதை நாச்சியாரும் நம் நினைவிற்கு வருவார்கள். கோதையாகிற ஆண்டாள் மார்கழி நோன்பு இருந்து கண்ணனை அடைந்தாள். இந்தச் சம்பவம் பின்னாளில் நடக்கப்போவதை அறிந்துதானோ என்னவோ கண்ணனும் தனது கீதையில் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்றான் போலும்!

சம்சாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடுபவனுக்கு திருப்பாவையானது அவனை கரைசேர்க்கும் மிதவை. பாலைவனத்தில் நடந்து நடந்து காலும் மனமும் நொந்து போனவன்  குளிர்ந்த தடாகம் கண்ணில் பட்டால் எப்படிக் குளிர்ந்து போவானோ அதுபோல சம்சாரிகள் திருப்பாவை எனும் தடாகத்தில் குள்ளக்குளிர நீராடி மகிழ்கிறார்கள்.

திருப்பாவையை மார்கழி மாதத்தில் மட்டுமல்லாமல் தினமுமே அனுசந்திக்க வேண்டும். நித்யானுசந்தானத்தில் திருப்பாவைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. தினமும் திருப்பாவை சேவிப்பது மட்டுமில்லாமல் விசேஷ நாட்களில் திருப்பாவையின் சில பாசுரங்களைச் சொல்லித் தலைக்கட்டுவது இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. திருமணங்களில்  ‘வாரணமாயிரம் சேவிப்பது போல உபநயனம், சீமந்தம் முதலிய நற்காரியங்கள் நடக்கும்போது திருப்பாவையின் மூன்றாம் பாசுரமான ‘ஓங்கி உலகளந்த’ சேவித்து ‘நீங்காத செல்வம் நிறைந்து’ என்று தலைக்கட்டுவது (முடிப்பது) உண்டு.

 

திருப்பாவைக்கு அப்படி என்ன விசேஷம்? ஒரு நூலின் விசேஷத்தை அந்த நூலை இயற்றியவரின் பெருமை, நூலின் பெருமை, அதன் பொருளின் பெருமை இவற்றைக் கொண்டே தீர்மானிப்பார்கள். நாமும் திருப்பாவையை அருளிச்செய்த கோதையின் சீர்மை, திருப்பாவையின் சீர்மை, அதன் பொருளின் சீர்மை இவற்றைப் பார்ப்போம்:

 

திருப்பாவையை இயற்றிய ஆண்டாளின் சீர்மை யாதெனில்  ‘அஞ்சுகுடிக்கொரு சந்ததி’ அவள். அதாவது எம்பெருமானுக்கு என்ன நேரிடுமோ என்று அஞ்சி அவனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் திருமகள். அல்லாமல், ஆழ்வார்களில் ஒரே பெண்பிள்ளை இவள் தான். பெயருக்கு ஏற்றவாறு உலக மக்களையும், உலகம் படைத்தவனையும் ஆண்டவள். மற்றைய ஆழ்வார்கள் இறைவனின் மாயையில் அகப்பட்டுக் கிடக்க, இறைவனே இவர்களது மயக்கங்களைப் போக்கி அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி அவர்களை ஆட்கொண்டான். ஆனால் ஆண்டாளோ நப்பின்னையின் பிடியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணனை அறிதுயில் எழுப்பி ‘உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவானது ஒழிக்க ஒழியாது’ என்று ஜீவாத்மா பரமாத்மாவுக்குண்டான உறவைச் சொல்லி ‘எங்களது குற்றேவலை ஏற்கவேண்டும்’ என்று முறையிட்டு ஆட்கொள்ளச் செய்து அவனால் ஆட்கொள்ளப்பட்டாள்.

 

ஆணாகப் பிறந்த ஒருவர் தன்னைப் பெண்ணாக பாவித்து இறைவனின் பண்பில் காதல் வயப்படுவது திராவிட வேதமான நாலாயிர திவ்யப்பிரபந்ததத்தில் நாம் காணும் ஒன்று. திருமங்கையாழ்வார் தன்னைப் பரகால நாயகியாகவும், நம்மாழ்வார் தம்மை பராங்குச நாயகியாகவும் பாவித்து இறைவனை அடைய வேண்டும் என்ற வேட்கையில் பிரபந்தங்கள் இயற்றினார்கள். இத்தகைய காதலை ‘மேட்டு மடை’ என்கிறார்கள் பூர்வாச்சாரியர்கள். அதாவது நீர் மேட்டை நோக்கிப் பாய்வது போல. இது இயற்கையில் நிகழ்வது அல்ல. ஆனால் பூமிப்பிராட்டியே  கோதையாகப் பிறந்து, கண்ணனிடத்தில் தன் காதலைச் சொல்வது ‘பள்ள மடை’. நீர் எப்போதுமே பள்ளத்தை நோக்கியன்றோ பாயும்? பெண்களில் உத்தமியான  கோதை புருஷோத்தமனிடம் காதல் வயப்படுவது இயல்பன்றோ?

 

திருத்துழாயானது முளைக்கும்போதே நறுமணத்துடன் முளைப்பது போல, திருத்துழாய் செடி அருகே பெரியாழ்வாருக்குக் கிடைத்த கோதையும், பிறக்கும்போதே கண்ணன் மேல் வேதாந்தங்களில் மிக உயர்ந்ததாகச் சொல்லப்படும் பரமாபக்தியான கழிபெருங்காதலுடனே அவதரித்தாள். இவள் சூடிக்கொடுத்த பூமாலையையும், செந்தமிழால் இயற்றிய பாமாலையாகிற திருப்பாவையையும் இறைவன் மனமுகந்து ஏற்றான் என்னும்போது இவளது பெருமையை நாம் பேசவும் இயலுமோ?

                                 

திருப்பாவை என்னும் நூலின் சீர்மை:

இறைவனை அடையும் வழியைக் கண்டுகொண்ட ஆண்டாள் ‘வையத்து வாழ்வீர்காள்!’ என்று அனைவரையும் அழைத்து அனைவருக்கும் அவனை அடைந்து உய்யும் வழியைச் சொல்வதால் இந்த திருப்பாவை ஆற்றுப்படை என்னும் இலக்கணவகையைச் சேர்ந்தது. இந்தத் திருப்பாவை ‘சங்கத் தமிழ் மாலை’ என்று குறிப்பிடப்படுகிறது. பிற்காலத்தில் திருப்பாவை என்ற பெயர் வந்திருக்கலாம்.

வேதங்கள் கடினமான தேவபாஷையான சம்ஸ்க்ருதத்தில் அமைந்திருக்கின்றன. அந்த மொழி தெரிந்தவருக்கு மட்டுமே அவைகளைக் கற்றுத் தேற முடியும். ஆனால் திருப்பாவை உலகியல் மொழியான செந்தமிழில், அனைவருக்கும் உரியதாய் செந்திறத்த தமிழோசை என்று கொண்டாடப்படுவதாய், எளிய இன்தமிழில் அமைந்திருப்பதாய் இருப்பதால் வேதங்களைக் காட்டிலும் உயர்ந்தது. மற்றைய ஆழ்வார்களின் அருளிச்செயல்களான பெரிய திருமொழி, திருவாய்மொழி, பெரியாழ்வார் திருமொழி போல ஆயிரம், ஐந்நூறு என்றில்லாமல், அதே சமயம் திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான் போல மிகவும் சுருக்கமாகவும் இல்லாமல் முப்பது பாடல்களில் அமைந்திருக்கிறது இந்தத் திருப்பாவை. மற்றைய ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் தமிழில் அமைந்திருந்தாலும் பல இடங்களில் பொருள் புரிவது சிரமம். அதோடு அவைகள் நாம் அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாவற்றையும் சொல்லாமல் சிலவற்றை மட்டுமே கூறும். ஆனால் திருப்பாவையின் முப்பது பாடல்கள் வேதமனைத்துக்கும் வித்தாக இருந்து நமது பாதகங்களைத் தீர்த்து, நமக்குப் பரமனடியைக் காட்டும்.

 

திருப்பாவையின் பொருட் சிறப்பு:

அறம், பொருள், இன்பம், வீடு இவையே இந்த நூலின் பயன் என்று சொல்லப்பட்டாலும் மற்ற சாதாரண நூல்களைப் போல முதல் மூன்று பலன்களைப் பற்றிப் பேசாமல், வீடு பேற்றைப் பற்றி பேசுகிறது, திருப்பாவை. ‘உனக்கே நாமாட் செய்வோம்’ என்று பரார்த்தைக பிரயோஜனம் என்று சொல்லப்படும் பரனான இறைவனுக்கே பிரயோஜனமான பரம புருஷார்த்தத்தைப் பேசுகிறது. இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவை விளக்குகிறது. அர்த்த பஞ்சகமான உயிர்நிலை, இறைநிலை, நெறிநிலை, ஊழ்வினைநிலை, வாழ்நிலை பற்றியும் தெளிவாக விளக்குகிறது.

 

நோன்பு என்பது ஒரு காரணம் மட்டுமே. மறுபடி மறுபடி பிறந்து பிறந்து உழலும் ஜீவாத்மாக்களைக் கரையேற்ற ஆண்டாள் செய்யும் பிரார்த்தனை தான் திருப்பாவை. அடியார்களை முன்னிட்டுச் சென்று பிராட்டியின் புருஷகாரத்துடன் (சிபாரிசுடன்) இறைவனை எழுப்பி ‘ஜீவாத்மாக்கள் உனக்கு அடிமையாயிருப்பதுதான் அவர்கள் இந்தப் பிறவி எடுத்ததற்கு அர்த்தம். அப்படியிருக்க அவர்களது பிறப்பு அனர்த்தப்படாமல் நீ அங்கீகரிக்க வேணும்; எங்கள் ஸ்வரூபத்திற்கு ஏற்ற கைங்கர்யமாகிற புருஷார்த்தத்தைக் கொடுக்க வேணும்; எங்களை கைவிடாமல் ஆத்மா உள்ளவரையிலும் கிருபை செய்தருள வேணும்’ என்று நமக்காகப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

 

நன்றி : பயன்படுத்தப்பட்ட நூல்கள்: திருப்பாவை விளக்கவுரை -ஆழ்வார்கள் அமுத நிலையம் வெளியீடு

ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய ஸ்வாமி எழுதிய ‘திவ்யார்த்த தீபிகை’ என்னும் உரை.

 

முதல் பாசுரம் விளக்கம் இங்கே 

 

 

 

13 thoughts on “வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்

 1. தெரிந்த அளவுக்கு நானும் எழுதி இருக்கிறேன். தேடிப் பார்க்கணும். உங்கள் விளக்கம் அருமை!

  1. இணைப்புக் கொடுங்கள், நான் படித்துப் பார்க்கிறேன். நான் எழுதியிருப்பது எங்கள் பூர்வாசார்யர்களின் விளக்கவுரையை அடியொற்றி.
   நன்றி கீதா!

   1. இரண்டு இணைப்புகளிலும் error msg வருகிறது. This page doesn’t exist என்று வருகிறது.

 2. ம்ம்ம்ம்ம், பார்க்கிறேன் என்னனு! நேத்திக்கு நான் சோதிச்சப்போச் சரியா இருந்தது. 😦

 3. http://sivamgss.blogspot.in/2011/01/18.html

  http://sivamgss.blogspot.in/2014/12/blog-post_21.html

  சோதிச்சுப் பார்த்துட்டேன். சரியாத் தான் வருது. மறுபடி அடம் பிடிக்குதானு பாருங்க. கடைசியில் இருக்கும் // இதை எடுத்துட்டுப் போடணும். // நானாகச் சேர்த்தது! அதனால் வந்திருக்காது. இப்போ // இல்லாமல் கொடுத்திருக்கேன். ஆனால் பிரச்னை என்னன்னா இந்தப் பதிவுக்குக் கருத்திட்டாலே சரியாப் போகலை! 🙂

 4. ஹூம், மூன்றாவது முறையாக இந்தக் கருத்தைப் பதிகிறேன். போகவே மாட்டேனு அடம்! 😦

  http://sivamgss.blogspot.in/2011/01/18.html

  http://sivamgss.blogspot.in/2014/12/blog-post_21.html

  சோதிச்சுப் பார்த்துட்டேன். சரியாத் தான் வருது. மறுபடி அடம் பிடிக்குதானு பாருங்க. கடைசியில் இருக்கும் // இதை எடுத்துட்டுப் போடணும். // நானாகச் சேர்த்தது! அதனால் வந்திருக்காது. இப்போ // இல்லாமல் கொடுத்திருக்கேன். ஆனால் பிரச்னை என்னன்னா இந்தப் பதிவுக்குக் கருத்திட்டாலே சரியாப் போகலை! 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s