திவ்யப்பிரபந்தம் · Uncategorized

கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தான் 3

திருவாலி திருநகரியில் வருடம்தோறும் நடக்கும் வேடுபரி உத்சவத்தில் திருமங்கையாழ்வார் தனது ஆடல்மா குதிரையில்

 

 

பல பறவைகளை நோக்கி மாயனை அழை என்று சொல்லும் பாடல்கள் பத்து வெண்துறை என்னும் அரிதான பா வகையில் பாடியிருக்கிறார்.

அவைகளில் ஒன்று.

கரையாய் காக்கைப் பிள்ளாய்

கருமாமுகில் போல் நிறத்தான்

உரையார் தொல்புகழ் உத்தமனை வரக்

கரையாய் காக்கைப் பிள்ளாய்

 

என்று கண்ணன் வருமாறு கரைவாய் என்று காக்கையிடம் வேண்டிக் கொள்கிறாள் பெண்.

 

ஓர் இளம் பெண்ணின் நோக்கிலிருந்தும் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

 

திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகமும் திருக்குறுத் தாண்டகமும் முறையே முப்பது, இருபது விருத்தப் பாடல்கள் கொண்டவை.

 

நெடுந்தாண்டகம், எட்டு சீர்கள் அமைந்தவை. குறுந்தாண்டகம், ஆறுசீர் விருத்தம். தாண்டகம் என்னும் இலக்கிய வகையின் விதிகள் கடினமானவை. புள்ளி எழுத்துகளை நீக்கினால் ஒவ்வொரு அடியிலும் இருக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை 27-க்கு மேல் இருக்க வேண்டும் என்று ஒரு விதி சொல்கிறது. இந்தப் பா வகை வடமொழியில் உள்ள தண்டகம் என்பதிலிருந்து வந்ததா என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. தமிழ் யாப்பின் தாண்டகம் வடமொழியிலிருந்து வேறுபடுகிறது. திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை தாண்டக யாப்பில் அமைந்தது. திருத்தாண்டகம் என்றும், அவர் ஏறக்குறைய ஆயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார். திருமங்கையாழ்வாரின் தாண்டகங்கள் இரண்டும் மொத்தம் ஐம்பது பாடல்களே. எல்லா அடிகளும் தாண்டக அடிகளுக்கான இருபத்தேழுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் கொண்டவையல்ல. திருமங்கை மன்னனின் தாண்டகத்தைப் பற்றி தனிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம்.

 

திருக்குறுந்தாண்டகத்தில் அருமையான அறுசீர் விருத்தங்கள் உள்ளன.

 

மூவரில் முதல்வனாய ஒருவனை உலகம்கொண்ட

கோவினை குடந்தை மேய குருமணித் திரளை இன்பப்

பாவினைப் பச்சைத் தேனை பைம்பொன்னை அமரர் சென்னிப்

பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வார் தாமே.

 

மும்மூர்த்திகளுக்கும் முதல்வன், உலகத்தை விழுங்கிய தலைவன், குடந்தையின் மணித்திரள், இன்பப் பாட்டு, பச்சைத் தேன், பசும்பொன், தேவர்களின் தலைப்பூ இப்படி என்னவெல்லாம் சொல்லித் தொண்டர்கள் அவனைப் புகழ முடியும்! திருநெடுந்தாண்டகத்தின் இந்தப் பாடல் பிரசித்தமானது.

 

பாருருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகி

பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற

ஏருருவில் மூவருமே யென்னநின்ற

இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது

ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ

ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற

மூவுருவும் கண்டபோது ஒன்றாம்சோதி

மூகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே

 

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றும் பலவேறு சமயங்களுமாய் பரந்து விரிந்தவனை ஒருமைப்படுத்தி, பிரமன், விஷ்ணு, சிவன் மூவரையும் ஓர் உருவம் என்று இமையவர்கள் எண்ணும்போது ஓர் உருவம் பொன்நிறம், ஒன்று சிவந்த நெருப்புருவம், ஒன்று கடல் உருவம். இந்த மூன்று உருவங்களும் கண்டபோது ஒருமைப்படுத்திய ஒரு சோதி போன்றவன் மேகக் கருமை படைத்த எங்கள் நாராயணனின் உருவம், என்று விஸ்தாரமான அழகான பாசுரத்தால் விளக்குகிறார்.

 

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு. ஏழு, கூற்று, இருக்கை என்று பிரிப்பார்கள். ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு. ஒன்றிலிருந்து ஏழுவரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும் இதைச் சித்திரக் கவி வகையிலும் சேர்ப்பார்கள்.

 

திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய் விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார். குடந்தை ஆராவமுதப் பெருமாளைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இதை, தேர் வடிவத்தில் கோலம் போல எழுத முடிகிறது. ரதபந்தம் என்றும் பெயர் சொல்கிறார்கள். கவிதைக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் இந்தப் பாட்டு ஆழ்வாரின் பல் திறமையைக் காட்டுகிறது.

 

ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து

மங்கையர் இருவரும்

மலரன அங்கையில் முப்பொழுதும்

வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை

வருணமும் ஆயினை

மேதகும் ஐம்பெரும்

பூதமும் நீயே அறுபதம்

முரலும் கூந்தல் காரணம், ஏழ்விடை

அடங்கச் செற்றனை அறுவகைச்

சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்

ஓதியை ஆகத்து இருத்தினை அறமுதல்

நான்கவையாய்

மூர்த்தி மூன்றாய்

இருவகைப் பயனாய்

ஒன்றாய் விரிந்து

நின்றனை.

 

இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார். திருமங்கை மன்னனின் இரண்டு திருமடல்களும் மிகுந்த இலக்கிய சர்ச்சைக்கு உள்ளானவை. அவைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

 

தமிழில் அகத்துறை நூல்களில் மடல் ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார். மடல் என்றால் பொதுவாக இதழ் என்று பொருள். சங்க இலக்கியங்கள் மடல் என்று பெரும்பாலும் பனை மடலையே குறித்தன. விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே ஒரு பைத்தியக்காரன் போலக் காதலன் தோன்றிப் பிடிவாதமாக அடம் பண்ணி அடையும் ஒரு விதமான முரட்டுக் காதல் வகை இது. அவன் மேல்

 

இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதித்துத் தொலைப்பார்களாம். இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது. இயற்பா என்கிற பிரிவில் திருமங்கையாழ்வாரின் இரண்டு மடல்களும் வருகின்றன. திருமால் மீது காதல் கொண்ட பெண், அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாக இரு மடல்களிலும் பாடிப் புரட்சி செய்திருக்கிறார். தொல்காப்பியம் பெண்கள் மடலேறுதல் கூடாது என்கிறது. திருக்குறளும் கடல் போலக் காமம் இருந்தாலும் மடல் ஏறத்தயங்குவாள் என்று பெண்ணின் பெருமையைப் பேசுகிறது. திருமங்கையாழ்வாருக்கும் இது தெரியும்.

 

அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டதுண்டு அதனை யாம் தௌ¤யோம்.

 

பெண்கள் வதந்தி பரவ, ஆண்களுக்காக மடல் ஏற மாட்டார்கள் என்று தமிழ் நூல்களில் (தென்னுரை) கேட்டதுண்டு என்று தெரிந்திருந்தும் பாடுகிறார்.

 

திருமங்கையாழ்வார் காலத்துக்கு (8ம் நூற்றாண்டு) முன்பு பெண்கள் மடலேறுவதாக ஒரு சில குறிப்புகள் கலித் தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால் அவையெல்லாம் காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சம்பிரதாயத்தை மீறி மடலூர்ந்து வருவேன் என்று அச்சுறுத்தும் வகையில்தான் உள்ளன. நம்மாழ்வாரும் யாம் மடல் ஊர்ந்தும் எம்ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணந் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்று மடல் ஊர்ந்தாவது அவனை அடைவேன் என்கிறாரே தவிர முழுவதுமாக மடல் எழுதி அமைத்தவர் திருமங்கையாழ்வாரே. கடவுள் தலைவனாக இருந்தால் பெண்கள் மடலேறலாம் என்கிற விதியை ஆழ்வாரின் இரு மடல்களின் அடிப்படையில் பன்னிரு பாட்டியல் என்னும் நூல் கூறுகிறது.

 

இந்த காலகட்டத்தில்தான் மடலிலும் புதுமை செய்திருக்கிறார்.

 

நீரேதும் அஞ்சேல்மின் நும்மகளை நோய் செய்தான் ஆரானுமல்லன் அறிந்தேன் அவனை நான் கூரார் வேற்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ ஆரால் இவ்வையம் இவ்வையம் அடியளப் புண்டது தான் ஆரால் இலங்கை பொடி பொடியாய் வீழ்ந்தது மற்று ஆராலே கன்மாரி காத்ததுதான் ஆழிநீர் ஆரால் கடைத்திடப்பட்டது அவன் காண்மின்

 

பயப்படாதீர்கள் உம் மகளுக்கு காதல் நோய் கொடுத்வன் வேறு யாருமில்லை. எனக்கு அவனைத் தெரியும். உங்களுக்கு அறியுமாறு சொல்கிறேன். யாரால் உலகம் மூன்று அடிகளால் அளக்கப்பட்டது. யாரால் இலங்கை பொடிப்பொடியாயிற்று, யாரால் கன்றுகள் மழையிலிருந்து காப்பாற்றப்பட்டன, யார் பாற்கடலைக் கடைந்தது அவன்தான்.

 

போரானை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடுங்கையால் நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆரிடரை நீக்காய்

 

பொய்கையில் அகப்பட்ட போர் யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவை உயர்த்தி நாராயணா என் கஷ்டத்தை நீக்காயோ என்றபோது வந்து காப்பாற்றினவன். இவ்வாறு சிறிய திருமடல் முழுவதும் நாராயணன் என்கிற பெயருடன் எதுகை.

 

பெரியதிருமடலில் அதுபோல் கண்ணன் என்பதுடன் முழுவதும் எதுகை பயில்கிறார் (எதுகை என்றால் போரா, நீரா, வாரா, நாரா என்று ஆரம்பச் சீரில் பயிலும் _ ஓசை ஒற்றுமை)

 

பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். 220ம் வரியிலிருந்து வரிசையாக ஒவ்வொரு ஊரையும் அழகாகச் சொல்கிறார்.

 

அந்த ஊர்கள்: திருவிண்ணகர், குடந்தை, திருக்குறுங்குடி, திருச்சேறை, திருவாலி, திரு எவ்வளூர், திருக்கண்ணமங்கை, திருவெள்ளறை, திருப்புட்குழி, திருவரங்கம், திருவல்லவாழ், திருப்பேர்நகர், திருக்கோவிலூர், திருவழுந்தூர், தில்லைச் சித்திரக்கூடம், திருவேங்கடம், திருமாலிரும்சோலை, திருக்கோட்டியூர், திருமையம், திரு இந்தளூர் கச்சி, திருவேளுக்கை, திருவெஃபா, திருவிடவெந்தை, கடல்மல்லை, திருத்தண்கா, ஊரகம், அட்டபுயகரம், திருவாதனூர், திருநீர்மலை, திருப்புல்லாணி, திருநாங்கூர், திருக்கண்ணபுரம், திருநறையூர் மணிமாடக் கோயில் _ இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிடுகிறார். ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து.

 

திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரை நம்மாழ்வாருக்கு அருகில் கொண்டு செல்கின்றன. நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார் _ முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும்.

இந்திரர்க்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.

இந்திரனின், பிரம்மாவின் தலைவன், நிலம், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் ஐந்து பூதங்களும் அவன், தமிழும் அவன், வடமொழியும் அவன், நான்கு திசைகளும் அவன், சூரிய சந்திரனும் அவன், தேவர்களாலும்    ஸ்ரீ அறியப்படாத உத்தமன், வேத மந்திரமும் அவன்தான். அறியாத நெஞ்சமே அவனை மறக்காமல் இருந்தால் சிறப்பாக வாழலாம்.

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்

இந்தக் கட்டுரையை மிகச் சிறப்பாக எழுதிய திரு ராஜசேகரன் ஸ்வாமிக்கு எனது தண்டன்கள்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

5 thoughts on “கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தான் 3

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s