திவ்யப்பிரபந்தம் · Uncategorized

கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தோன் 2

திருமங்கையாழ்வாரும், அவரை மணந்து திருத்திப் பணி கொண்ட குமுதவல்லியும், திருவாலி திருநகரி ஸ்தலம்

என்ன  ஒரு  அழகான  திருவுருவம்!

 

பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை. பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார். ‘சரியான கலியனப்பா நீ’ என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார். பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது. என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை.

 

பரகாலன் ‘யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்’ என்று அதட்ட, நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார். ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது.

உடனே அவர் பாடிய பாசுரம்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமமே

 

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் அடிநாதம் நாராயணன் என்னும் நாமத்தைக் கண்டு கொண்டது. தின வாழ்வில் செல்வங்களையும் சுகங்களையும் தேடி அலைந்து விட்டு உணர்வால் அந்தப் பெயரின் கடவுள் தன்மையை அறிந்துகொள்ளும் ஒரு கண்டுபிடிப்பு. வியப்பும், கடந்தகாலத் தப்புகளுக்கு வருந்துவதும் அவர் பாடல்களில் இருக்கும். அவர் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதும் தெரியும். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை போன்றவைகளையும் இயற்றியுள்ளார். பின் சொன்னவை மூன்றும் பிரபந்தத்தின் இயற்பா என்னும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட பாடல்களாயினும் யாப்பிலக்கணப்படி மூன்றையும் மூன்று பாடல்களாகக் கணக்கிடுவதுதான் சரி. இதனால் திவ்யப்பிரபந்தம் மொத்தம் நாலாயிரம் பாடல்களுக்குக் குறைவு. இருந்தாலும் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்று கூறுவதே வழக்கம். இதில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது. எல்லா வகைப்பாடல்களையும் இயற்றியுள்ளார். எல்லா திவ்யதேசங்களையும் பாடியிருக்கிறார். வடநாட்டிலுள்ள திருவதரி (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் இவைகளிலிருந்து துவங்கி தென்னாட்டுக் கோயில்கள் அத்தனையும் விட்டுவைக்காமல் ஊர் ஊராகச் சென்று பாடியிருக்கிறார். திருமங்கை மன்னனின் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே சில வைணவக் கோயில்களின் பழமை நமக்குத் தெரிகிறது. உதாரணம் திருவிடவெந்தை. சென்னைக்கு அருகே இருக்கும் அழகான கோயில். மகாபலிபுரம் போகும் வழியில் உள்ளது. அதைப் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்களும் அஷ்டாக்ஷரத்தின் மகிமையைச் சொல்கின்றன. அதில் உதாரணம் பார்க்கலாம்.

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்

எனக்கரசு என்னுடை வாணாள்

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி

அவருயிர் செகுத்தஎம் அண்ணல்

வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை

மாமணிக்கோயில் வணங்கி

நம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்

 

இதில் குறிப்பிடும் மாமணிக் கோயில் தஞ்சையில் எங்கிருக்கிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

கீழ்வரும் பாசுரம் வைணவர்களுக்கு மிக முக்கியமானது-பல சந்தர்ப்பங்களில் இது வைணவ இல்லங்களில் ஒலிக்கும்.

 

குலந்தரும் செல்வம் தந்திடும்

அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்

அருளோடு பெருநிலமளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும்

பெற்ற தாயினும்ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமமே.

 

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது.

 

இரண்டாம் பத்து பாடல்களில் திருமங்கையாழ்வார் திருப்பிருதியைப் பாடுகிறார். திருப்பிருதி என்பது வடக்கே மானசரோவர் என்கிறார்கள்.

 

வாலி மாவலத் தொருவனது உடல்கெட

வரிசிலை வளைவித்து அன்று

ஏல நாறு தண் தடம் பொழில்

இடம்பெற இருந்த நல் இமயத்துள்

ஆலி மாமுகில் அதிர்தர

அருவரை அகடுற முகடேறி

பீலி மாமயில் நடம்செயும் தடம் சுனை

பிருதி சென்று அடை நெஞ்சே

 

வாலியின் பலம் கெடும்படி வில்லை வளைத்து வீழ்த்தியவனை, வாசனை வீசும் குளிர்ந்த பரந்த பொழில் கொண்ட இமயத்தில் மழை மேகங்கள் சப்தமிட, மலை உச்சிகளில் மயில்கள் ஆடும் சுனைகளுடைய திருப்பிருதி என்கிற இடத்தைச் சென்று அடை.

 

இந்தப் பாடலை அவர் அங்கே போய்ப் பாடினாரா, இல்லை, மனசில் கற்பனை பண்ணிக் கொண்டு பாடினாரா என்பது தௌ¤வாக இல்லை. இமயத்துள் இருப்பதாக முதல் பாட்டிலேயே குறிப்பிடுகிறார். அவர் காணும் பிருதியில் மயில்கள் நடனமிடுகின்றன. சுனைகள் நிறைந்திருக்கின்றன. சிங்கங்கள் திரிகின்றன. யானைகள் தூங்குகின்றன. அருவிகள் சொரிகின்றன. மாதவிக் கொடிகள் மேகத்தை எட்ட எட்ட முயற்சிக்கின்றன. இவ்வாறான பொதுவான அழகான இடத்தைப் பற்றிய வருணனைகள் கிடைக்கின்றன.

 

திருமங்கை ஆழ்வார் பிரபந்தத்தில் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்கிற வகைகளில் 1137 பாசுரங்கள் யாத்துள்ளார்.

 

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் ஒரு முழு ‘ஆயிர’த்தையும் அவருடைய பெரிய திருமொழி வியாபிக்கிறது. எல்லா வகைப் பாடல்களையும் செய்திருக்கிறார். சங்க இலக்கிய மரபான மடல்கள் இரண்டை, பகவான் பேரில் அனுப்பியிருக்கிறார். வாழ்க்கையில் ஓர் அரசனுக்குரிய சந்தோஷங்களையும், பதவிச் சலுகைகளையும் பெற்றும் பக்தியில் ஈடுபட்டு இத்தனை உருக்கமாகப் பாடியுள்ளது பிரபந்தத்தில் வற்றாத வியப்பு. திருமாலை அவர் எப்படிக் கருதுகிறார் என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

எம்பிரான் எந்தை என்னுடைய சுற்றம்

எனக்கு அரசு என்னுடை வாணாள்

எனக்கு நன்மை செய்பவன், என் தந்தை, உறவினன், என் அரசன், என்னுடைய வாழ்நாள் எல்லாமே திருமால்தான் என்கிறார். மனித உடலை எப்படிக் கருதுகிறார்?

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி

உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்

தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்

சரணமே சரணம் என்றிருந்தேன்.

மாமிசம் எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் வைத்த இந்தச் சரீரத்தை விட்டு உயிர் பிரியும்போது உன்னைச் சரணடைய வேண்டும் என்று இருக்கிறேன்.

அவர் ஊர் ஊராய்ச் சென்று பாடிய பாசுரங்கள் பலவற்றுள் திருவேங்கடத்தில் பாடிய பாடல்கள் உருக்கமானவை.

 

மானே கண்மடவார் மயக்கிற் பட்டு மானிலத்து

நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்

தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே

மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.

 

திருமங்கையாழ்வாரின் பல பாடல்களில் இவ்வகையான பாவமன்னிப்புக் கோரும் repentant தொனியைப் பார்க்கலாம். வைணவக் கருத்துகளில் முக்கியமானது சரணாகதி தத்துவம். தான் செய்த தவறுகளை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்துவிட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்பதன் மறுபிரதியை மற்ற மதங்களிலும் காண்கிறோம்.

 

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

 

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்

என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்

குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா

அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும் நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும்.

பிற்காலத்தில் அருணாகிரிநாதரிடம் இந்தப் போக்கைக் காண முடிகிறது. மற்றொரு பாடலில் ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில் தருகிறார்.

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்

பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்

சின்ன வயசில் அறியாமையால் பல தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும் மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ள யாருக்கு மனம் வரும்?

திருமங்கை மன்னன் பாடிய தலங்களின் அழகான தமிழ்ப் பெயர்கள் கிறக்கமூட்டும் திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளியம்பாடி, திருப்புள்ளம்பூதங்குடி, திருநாங்கூர் செம்பொன்சேய்கோயில், திருநந்திபுரவிண்ணகரம் என்று பெரிய பெயர்களுள்ள சின்னச்சின்ன ஊர்களில் எல்லாம் போய்ப் பாடிப் பரவசமடைந்திருக்கிறார். கேரள மாநிலத்தில் இன்று திருவெள்ளா என்று அழைக்கப்படும் ஊர், அவர் காலத்தில் திருவல்லவாழ் என்றிருந்தது. திருநிறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம் போன்ற தலங்களை அதிகம் பாடியிருக்கிறார். வல்லவாழ் பாசுரங்களில் ஓசை நயத்தையும், பொருள் நயத்தையும் ரசிக்கலாம்.

தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல்

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனான

மைந்தனர் வல்லவாழ் செல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

தந்தை, தாய், உறவினர் போன்றவரைச் சார்ந்து நிற்கும் வாழ்க்கையை நீ ஒரு பந்தமாகக் கருதினாயானால் முடிவும், முதலும்-முதலுக்கும் முதலுமான திருமாலை வல்லவாழ் கோயிலில் சென்று அடையும் வழியைப் பார் நெஞ்சே!

பெரியாழ்வாரைப் போல பிள்ளைத் தமிழின் கூறுகளாக சில பாடல்கள் கண்ணனை மையமாக வைத்து திருமங்கை மன்னனும் அமைத்திருக்கிறார். வெண்ணெய் உண்டது, சப்பாணிப் பருவம், ஆய்ச்சியர் முறையிடல்.

 

ஆய்ச்சியரின் வாசலில் அழகாக ஆடை அணிகலன்களுடன் வந்து நின்று புன்னகைத்து அவர்களை மயக்குகிறான் என்று முறையிடுவதும், வியப்பதும் ஒரு தனிப்பட்ட பார்வை. கண்ணன் காதலனா, குழந்தையா என்கிற மருட்சி ஏற்படுத்தும் அணுகல் இது.

 

சுற்றும் சூழல்தாழச் சுரிகை அணைத்து

மற்றும் பலமாமணி பொன் கொடணிந்து

முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்

எற்றுக்கு இது என்னிது என்னிது வென்னோ

 

அணிகலன்களும் அலங்காரங்களும் கொண்டு எங்கள் முற்றத்தில் நுழைந்து புன்னகை செய்கிறாய். எதற்காக இது? என்னதான் இது? என்று வியப்படைகின்றனர் ஆய்ச்சியர்.

Advertisements

7 thoughts on “கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தோன் 2

  1. மனதை உருக்கும் பாடல்கள் . நாராயணா என்னும் நாமத்தின் மகத்துவம் உணர வைக்கும் பாடல்கள். பகிர்வதற்கு நன்றி.

    இதுபோலவே குலசேகராழ்வார் பாடல்கள் படித்தேன். எளிய தமிழில் மிக அழகாக இருந்தது. படிக்க படிக்க ஆனந்தம் . நேரம் கிடைக்கும் போது, குலசேகராழ்வார் பதிகங்களைப் பற்றி உங்கள் பாணியில் எழுதுங்கள் ரஞ்சனி. படிக்கக் காத்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s