என் குடும்பம்

தலைதீபாவளி அனுபவங்கள்!

crackers 2

 

முதல்நாளே ஊருக்குப் போய் சேர்ந்துவிட்டோம். ரயில்நிலையத்திலிருந்து வீட்டிற்குப் போகும் வழியிலேயே ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தன. ரொம்பவும் சத்தமான தீபாவளியாக இருக்கப் போகிறது என்று அப்போதே தெரிந்துவிட்டது.

 

வரவேற்பு பலமாக இருந்தது. வடை பாயசத்துடன் சாப்பாடு. உபசரித்த உபசரிப்பில் இரண்டு வயிற்றுக்கு சாப்பிட்டாகிவிட்டது. உண்ட களைப்பு – நீண்ட தூக்கமாக நீண்டது. எழுந்தவுடன் சுடச்சுட காப்பி கூடவே பட்சணங்கள். வயிரா வண்ணான் சாலா? என்று மனதிற்குள் எழுந்த கேள்வியை பட்சணம், காபி கொண்டு மேலெழும்ப ஒட்டாமல் செய்தாயிற்று.

 

crackers

 

பக்கத்தில் கோவில் பார்த்தனுக்கு தேரோட்டிய, மீசை வைத்துக் கொண்டு கம்பீரமாக வேங்கட கிருஷ்ணன்; பாம்பணையில் மன்னாதன்; அவருக்குப் பக்கத்தில் சக்கரவர்த்தித் திருமகன்; வெளியில் பிராகாரத்தில் வேதவல்லித் தாயார். அவள் சந்நிதியை விட்டு வெளியே வந்தால்  ஒரு பக்கத்தில் கஜேந்திர வரதன் – நித்ய கருடசேவையில். இன்னொரு பக்கத்தில் யோக நரசிம்மன் அமைதியான திருமுகத்தில் தவழும் புன்னகை. எத்தனை முறை சேவித்திருந்தாலும் மறுபடி மறுபடி சேவிக்க கசக்குமா?

தாசரதி - மைதிலி, இலக்குமணன், சிறிய திருவடி
தாசரதி – மைதிலி, இலக்குமணன், சிறிய திருவடி

 

இவர்களையெல்லாம் சேவிக்கலாம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தால் மழை! வானத்து மழையுடன் போட்டிப் போட்டுக்கொண்டு பட்டாசு மழை. வானம், பூமி எங்கெங்கும் பட்டாசு! சர்……….சர்ரென எழும்பும் ராக்கெட்டுகள்…..பூப்பூவாய் சொரியும் பூவாணங்கள். நடுநடுவில் காதை கிழிக்கும் அணுகுண்டு, லக்ஷ்மி வெடிகள். வீதியில் வைத்தாலும் நாங்கள் நின்று கொண்டிருக்கும் வீட்டிற்குள் சீறிப் பாய்ந்து வருகின்றன. கோவில் போகும் வழி முழுவதும் பட்டாசுகள் வெடித்த வண்ணம். வெடிச்சத்தம் காதுகளைத் துளைத்தன என்றால் அந்தப் புகையில் மூச்சு முட்டியது. கோவிலுக்குப் போகும் ஆசையை மூட்டை கட்டிக்கொண்டு மறுபடியும் வீட்டிற்குள் வந்து தொலைக்காட்சிச் சானல்களில் தொலைந்து போனோம். வீதியில் விடப்படும் பட்டாசுகளின் சத்தத்தில் வீட்டிற்குள் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குக் கேட்கவில்லை. தொலைக்காட்சியிலிருந்து சத்தம் வருவது போலவே இல்லை! மௌனப்படம் – பின்னணி இசை பட்டாசு சத்தம்!jilebi

 

சிறிது நேரத்தில் ‘பெருமாள் வாசலில் எழுந்தருளுகிறார்’ என்பதை கொட்டு சத்தம் தெரிவிக்க, மறுபடி வாசலுக்கு வந்தோம். பட்டாசு மழையும் ஓயவில்லை; வானமும் பொத்துக்கொண்டு கொட்டிக்கொண்டிருந்தது. பெருமாள் எங்குமே நிற்கவில்லை. ஓட்டமாக ஓடிவிட்டார் – உண்மையிலேயே! அவருக்காகவாவது கொஞ்ச நேரம் பட்டாசு வெடிப்பதை நிறுத்த மாட்டார்களோ? ஊஹூம்! பாவம் ஸ்ரீபாதம் தாங்கிகள்! மழைத்தண்ணீரில் பட்டாசுக் கழிவுகள் மிதந்து கொண்டிருந்த நீரில் பெருமாளை எப்படித்தான் வேகவேகமாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போனார்களோ?

 

அடுத்த தெருவுக்குள் பெருமாள் நுழைந்தவுடன் காது செவிடாகும்படியாக பட்டாசுச் சரங்கள் தொடர்ந்து வெடித்தன. என்ன இப்படிச் செய்கிறார்களே என்று நினைத்தால் ஒரு விஷயம் சொன்னார்கள்: இந்தத் தெருவிற்கும் அடுத்த தெருவிற்கும் போட்டியாம்! யார் அதிக நேரம் விடாமல் பட்டாசு வெடிக்கிறார்கள் என்று! ரொம்பவும் அதிர்ந்து போனேன். என்ன அராஜகம் இது?

 

அடுத்தநாளும் மழை ஓயவில்லை. பக்கத்தில் கடற்கரை. அங்கும் போகமுடியவில்லை. இப்படியாக மகனின் தலைதீபாவளியை சம்பந்தி வீட்டிற்குள்ளேயே – திருவல்லிக்கேணியில் கொண்டாடிவிட்டு சமர்த்தாக ஊர் வந்து சேர்ந்தோம்!

இது நடந்தது  நான்கு வருடங்களுக்கு முன்பு! இந்த வருடம் பெங்களூரிலேயே சத்தமில்லா தீபாவளி!

 

எல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!

Advertisements

21 thoughts on “தலைதீபாவளி அனுபவங்கள்!

 1. சத்தமில்லா தீபாவளியே சிறந்தது. மாசு, சத்தக் கட்டுப்பாடுகள் பினற்றப்பட வேண்டும்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   சத்தமில்லா தீபாவளி சிறந்தது தான். ஆனால் சிவகாசிப் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களின் மறுவாழ்விற்கு ஏதேனும் செய்தாகணும், இல்லையா? பாவம் எத்தனை குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி இருக்கின்றன!
   ரொம்பவும் நிதானமாக தீபாவளி வாழ்த்துச் சொல்லுகிறேன்.
   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

 2. தலை தீபாவளி அனுபவங்களே மிகவும் சுவையானவைதான். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  1. வாங்க கீதா!
   உங்களது வாழ்த்துக்கள் எனக்கு போனஸ்!
   ரொம்பவும் நிதானமாக தீபாவளி வாழ்த்துச் சொல்லுகிறேன்.
   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

 3. சம்பந்தி வீட்டு உபசாரம், நல்ல தீபாவளி. பெருமாளே வீட்டு வாசலில் தரிசனம் தந்தார். கொடுத்துவைத்த பிள்ளை வீட்டு சம்பந்திதான் நீங்கள். அன்புடன்

  1. வாங்க காமாக்ஷிமா!
   திருவல்லிக்கேணியில் தினமும் பெருமாள் வீதி உலா வருவார். ஐந்து பெருமாள்கள் இருக்கிறார்களே! ஏதாவது உற்சவம் நடந்த வண்ணம் இருக்கும்.
   ரொம்பவும் நிதானமாக தீபாவளி வாழ்த்துச் சொல்லுகிறேன்.
   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

  1. வாங்க புதுவை வேலு!
   என்னுடைய தளம் தேடி வந்து வாழ்த்துச் சொல்லுங்கள் உங்கள் பெருந்தன்மைக்கு எனது வந்தனங்கள்.

   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

  1. வாங்க இளங்கோ!
   என்னுடைய வலைத்தளத்திற்கு வந்து வாழ்த்துச் சொல்லும் உங்கள் பெரிய மனதிற்கு என் வந்தனங்கள்.

   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

 4. உங்களுடைய தலை தீபாவளி நினைவுகளாக்கும்னு பார்த்தேன்! தொலைக்காட்சி சானல்கள் என்ற வரியை படிக்கையில் கொஞ்சம் டவுட்! இந்த வருஷம் எங்க ஊரிலும் அதிக பட்டாசுகள் வெடித்தார்கள். சுற்றுச்சூழல் மாசு என்று சொன்னாலும் சிவகாசிக்காரர்கள் வயிற்றுப் பிழைப்பு அல்லவா?

  1. வாங்க சுரேஷ் பாபு!
   நீங்களும் அப்படி நினைத்தீர்களா? எங்கள் திருமணம் நடந்த வருடம்தான் சென்னையில் தொலைகாட்சி வந்தது. ஒரு வருடம் கழித்துத்தான் எங்கள் வீட்டில் டிவி வாங்கினோம். உங்கள் சந்தேகம் சரியே!
   உண்மை, பாவம் அவர்களுக்கு மாற்று வழி செய்துவிட்டுத் தான் நாம் பட்டாசு இல்லாத தீபாவளியைப் பற்றி யோசிக்க வேண்டும். கிரீன் பட்டாசுகள் வந்துவிடுமோ, என்னமோ!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s