Uncategorized

நான்தான் சீதை!

1

நன்றி: கூகுள்

 

ஒரு பிரபலப் பள்ளியின் வளாகம். யூகேஜியில் இடம் பெற வேண்டி, நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர். அதில் ஒரு குழந்தை. எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமலேயே எல்லோரையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது. அங்கு வந்த அந்தப் பள்ளியின் முதல்வர் அந்தக் குழந்தையுடன் பேச ஆரம்பித்தார் – ஆங்கிலத்தில்தான்!

‘உன் பெயர் என்ன?’

‘சரித்ரா….!’

‘ஓ! நல்ல பெயர். சரி இப்போது உனக்கு என்ன தெரியுமோ அதைச்சொல்லு…..!’

‘எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். உங்களுக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லுங்கள்!”

ஐயையோ! இவளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கிடைக்காது போலிருக்கிறதே! குழந்தையின் அம்மாவிடத்தில் ஒரு பதட்டம் தென்பட்டது. ‘அவள் வந்து……..!’ என்று ஆரம்பித்த அவரை முதல்வர் நிறுத்தினார். குழந்தையைப் பார்த்து ‘ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லு!’

குழந்தை விடவில்லை: ‘பாட்டா? கதையா?’

‘சரி. கதையே சொல்லு….!’

‘உங்களுக்கு நான் படித்த கதை வேணுமா? இல்லை நான் எழுதின கதை வேணுமா?’

முதல்வருக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆயினும் சமாளித்துக் கொண்டு, ‘ஓ! நீ கதை எழுதுவியா?’

‘ஏன் எழுதக் கூடாதா?’

இப்போது சுற்றியிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி! ஆனால் அவள் சொன்ன கதையை யாருமே கேட்டிருக்க மாட்டார்கள்.

‘சரி, நீ எழுதின கதையைச் சொல்லு….!’

சரித்ரா ஆரம்பித்தாள்: ‘ராவணன் சீதையைக் கடத்திக்கொண்டு போய் சிறிலங்காவில் வைத்தார்…..’

இந்தக் கதை தானா என்று மனதிற்குள் நினைத்தாலும், முதல்வர் ‘ம்…மேலே சொல்லு…’ என்றார்.

‘ராமன், ஹனுமானின் உதவியைக் கேட்டார். ஹனுமானும் சரி என்று உதவ சம்மதித்தார்……’

‘அப்புறம்?’

‘இப்போ ஹனுமான் தன்னோட நண்பன் ஸ்பைடர்மேனைக் கூப்பிட்டார்….’

இந்த திருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை!

‘எதற்கு?’

‘எதற்குன்னா, இந்தியாவுக்கும், சிறிலங்காவிற்கும் நடுவில் நிறைய மலைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன் இருந்தால் அவரோட கயிற்றைப் பிடித்துக்கொண்டு நாம சுலபமாக அங்க போகலாம்……!’

‘ஆனா ஹனுமானால பறக்க முடியுமே…இல்லையா?’

‘ஆமா. ஆனா அவர் ஒருகையில சஞ்சீவி மலையை வச்சிண்டு இருக்காரே! அதனால அவரால ரொம்ப வேகமா பறக்க முடியாது….!’

கதையை கேட்டுக் கொண்டிருந்தவர்களின் நடுவில் அமைதி.

சற்றுப் பொறுத்து சரித்ரா கேட்டாள்: ‘நான் கதையை தொடரட்டுமா? வேணாமா?

;சரி, சரி நீ மேலே சொல்லு…..!’

‘ஹனுமானும் ஸ்பைடர்மேனும் சிறிலங்காவிற்குப் போய் சீதையைக் காப்பாத்தினாங்க. சீதை இருவருக்கும் நன்றி சொன்னாள்’.

‘ஏன்?’

‘உங்களுக்கு யாராவது உதவி செய்தால் நன்றி சொல்லணும், இல்லையா? அதற்குத்தான்!’

‘……………..!’

‘அப்புறம் சீதா ஹனுமானிடம் ஹல்க்- ஐ  கூப்பிடச் சொன்னாள்’

.எல்லோருடைய வியப்பையும் உணர்ந்தவள் போல அந்தக் குழந்தை சொல்லிற்று: ‘சீதையை பத்திரமா ராமன் கிட்ட அழைத்துக் கொண்டு போக ஹல்க்- ஐ கூப்பிட்டாள் சீதை!’

‘ஹனுமானால் சீதையைத் தூக்கிக்கொண்டு போகமுடியுமே! எதுக்கு ஹல்க்?’

‘ஆமா, ஆனா ஹனுமானோட ஒரு கையில சஞ்சீவி மலை; இன்னொரு கையில் ஸ்பைடர்மேனைப் பிடித்துக் கொண்டிருந்தாரே!’

எல்லோர் முகத்திலும் புன்னகை. ‘எல்லோரும் இந்தியாவுக்கு வரும் வழில என்னோட தோழன் அக்ஷய் –யைப் பார்த்தார்கள்….!’

‘அக்ஷய் எப்படி இங்கு வந்தான்?’

‘இது என்னோட கதை. எனக்கு யாரைப் பிடிக்குமோ அவங்களை கொண்டு வருவேன்!’

 

முதல்வருக்குக் கோபம் வரவில்லை.மாறாக கதையில் வரப்போகும் அடுத்த திருப்பத்திற்குக் காத்திருந்தார்.

‘எல்லோரும் இந்தியாவிற்கு வந்து வேளச்சேரி பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாங்க….!’

குழுமியிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்: ‘வேளச்சேரி பஸ் ஸ்டாப்பிற்கு எதற்கு?’

‘ஏன்னா, அவங்களுக்கு வழி மறந்து போச்சு. ஹல்க்கிற்கு  ஒரு ஐடியா தோணிச்சு அவரு டோராவைக் கூப்பிட்டாரு!’

‘டோரா வந்து சீதையை வேளச்சேரி வீனஸ் காலனிக்கு அழைச்சிகிட்டுப் போனா. கதை அவ்வளவுதான்!’

முகத்தில் பெரிய சிரிப்புடன் குழந்தை கதையை முடித்தது.

முதல்வர் கேட்டார்: ‘ஏன் வீனஸ் காலனி?’

‘ஏன்னா, சீதை அங்கேதான் இருக்கிறாள்….நான் தான் அந்த சீதை!’

முதல்வர் மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தையை அப்படியே கட்டிக்கொண்டார். அந்தக் குழந்தைக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைத்தது. கூடவே ஒரு டோரா பொம்மையும் பரிசாகக் கிடைத்தது.

 

குழந்தைகள் எப்போதுமே எதிர்பாராத விதத்தில் நம்மை அசத்துபவர்கள். நாம் தான் அவைகளின் கற்பனையை வெட்டி விடுகிறோம். நம் கோணத்திலேயே அவர்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களது கோணத்தில் இந்த உலகத்தைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.

 

குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுப்போம். அவர்களது கனவுகள் எல்லாம் நிஜமாகட்டும்!

 

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின்  தமிழாக்கம்.

Advertisements

18 thoughts on “நான்தான் சீதை!

  1. வாங்க வெங்கட்!
   கதையைப் படித்ததும் ரோஷ்ணி நினைவு வந்திருக்குமே!
   உண்மை. குழந்தைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 1. இவ்வளவு தீர்கமான குழந்தை ஐந்து வருஷத்திற்குள் பத்து கிளாஸை முடிச்சுட்டு வாத்தியாருக்கு வாத்தியாராகி,வாத்தியார் முழிப்பார். சுட்டிக்குழந்தை இதற்குமேலும் கற்பனைசெய்து கலக்கும். அன்புடன்

  1. வாங்க காமாக்ஷிமா!
   எனக்கு என் அக்கா பேத்திகளின் நினைவு வந்தது, இந்தக் கதையைப் படித்தவுடன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. நீங்கள் சொல்வது போல் குழந்தைகளின் கற்பனா சக்திக்கு நாம் தடை போடாமல் இருந்தாலே போதும். அவர்கள் கனவுகள் நிஜமாகும் வழியைத் தேடிக் கொள்வார்கள்.
  இந்த சுட்டிக் குழந்தை இணையத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டிருக்கிறது.

  வாழ்த்துக்கள் ரஞ்சனி.

 3. நாங்கள் மிகவும் ரசித்த கதை. குழந்தையின் கதை. இது மின் அஞ்சலில் வந்தது…எங்களுக்கும்..

  கீதா: மின் அஞ்சலில் வந்திருந்தாலும் இதைப் பற்றி எனது தோழி சொல்லக் கேட்டேன். அவளும் வேளச்சேரி…அவளுக்குத் தெரியும் நேரடியாக…கேட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் பாருங்கள் பகிர நினைவில் வரவில்லை. இப்படித்தான் பல பதிவுகள் மண்டையில் உரைப்பதில்லை. நீங்கள் அதை மிகவும் அழகாகப் பதிந்து விட்டீர்கள்!

  1. வாங்க துளசிதரன், கீதா!
   இந்தக் குழந்தை எல்லாருடைய கருத்தையும், கவனத்தையும் ஈர்த்துவிட்டது என்று தெரிகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s