ஆண்களுக்கு இந்தப் பதிவு!

‘குட்மார்னிங் ஆண்ட்டி…..!’

காலையில் வழக்கம்போல வாசல் தெளிக்க வந்த நான்  பக்கத்து வீட்டு இளைஞரின் குரல் கேட்டு ‘குட் மார்னிங்’ சொல்லியபடியே நிமிர்ந்து பார்த்தேன்.  சற்று வித்தியாசமாகத் தெரிந்தார். என்ன வித்தியாசம் மண்டையைக் குடைந்துகொண்டேன். ஆ! புரிந்து போயிற்று! புதியதாக மீசை வைத்திருக்கிறார். அதுவும் அடர்த்தியாக பார்ப்பவர்களை கேள்வி கேட்க வைக்கும்படியாக!

‘என்ன திடீரென்று மீசை?’

‘இந்த மாதம் முவம்பர்…….!’

‘முவம்பர்?’ மறுபடி என் புருவங்கள் முடிச்சிட்டன.

‘ஆமாம், நிறைய பேர் வேறு வேலை இல்லாமல் மீசை வளர்க்கிறாய் என்று சொல்லுகிறார்கள். அதனால மீசை வளர்க்கறதுக்கும் ஒரு குறிக்கோள் அதான் முவம்பர். அக்டோபர் மாதம் முழுக்க மழமழன்னு ஷேவ் பண்ணிக்கறது.  நவம்பர் மாதம் ‘முஷ்’ – மீசை மட்டும் வளர்க்கறது….’

‘எதுக்கு நவம்பர்ல மீசை மாத்திரம் வளர்க்கணும்….?’

‘என்னைப் பார்க்கறவங்க எல்லாம் உங்கள மாதிரி கேள்வி கேட்பாங்க, இல்லையா? அவங்க கிட்ட ஆண்களின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் இப்படி மீசை வளர்க்கிறேன் என்று சொல்லத்தான். நவம்பர் முழுக்க மீசை – ஆங்கிலத்தில் முஷ்டாஷ் – வளர்ப்பதால் நவம்பர் என்பது முவம்பர் ஆகிவிட்டது. நம்மால் எல்லோரையும் திருத்திவிட முடியாது. அட்லீஸ்ட் இரண்டு பேராவது என் பேச்சைக்கேட்டு முழு ஹெல்த் செக்கப் போனார்கள் என்றால் சந்தோஷமாக இருக்கும், இல்லையா?’

‘………………………’

இன்றைக்கு இணையத்தில் தேட ஒரு விஷயம் அகப்பட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

இனி முவம்பர் பற்றி இணையத்தில் நான் சேகரித்த தகவல்கள்:

முஷ் (moustache) என்பதன் முதல் இரண்டு எழுத்துக்கள் நவம்பர் (November) என்ற சொல்லில் உள்ள ‘No’ என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டு முவம்பர் ஆகியிருக்கிறது. இதில் பங்குபெறும் ஆண்கள் தங்களை MO BRO (முவம்பர் சகோதரர்கள்) என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் இந்த இயக்கத்தில் தங்களது பங்கை செய்கிறார்கள். அவர்கள் MO Sistas என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் என்னுமிடத்தில் இரண்டு நண்பர்கள் – ட்ரேவிஸ் கரோன் (Travis Garone), லுயிக் ஸ்லாட்டரி (Luke Slattery) என்ற இரு நண்பர்கள் ஒரு மதுபானக் கடையில் சந்தித்த போது ஒரு எண்ணம் தோன்றியது. ஆண்களின் மீசையை அடையாளமாக வைத்து ஆண்கள் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்று. 30 இளைஞர்கள் இந்த சவாலை ஏற்க தயாராயினர். இது நடந்தது 2003 ஆம் ஆண்டு. இதை தொடர்ந்து இந்த முவம்பர் என்ற இயக்கம் பதிவு செய்யப்பட்டு இணையதளமும் உருவாக்கப்பட்டது. இதன் மையக் குறிக்கோள் மீசை வளர்ப்பது; அது பற்றிக் கேட்பவர்களிடம் ஆண்களின் உடல்நலம் பற்றிப் பேசுவது.

ஆண்களைத் தாக்கும் ப்ரோஸ்டேட் மற்றும் டெஸ்ட்டிக்யூலர் புற்றுநோய்கள், மனநலம் குன்றுதல் அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளுதல்,  போதுமான அளவு உடல் உழைப்பின்மை அதனால் நேரிடும் மரணம் போன்றவை பற்றிய போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடையே – குறிப்பாக ஆண்களிடையே இல்லை. முவம்பர் இயக்கத்தின் குறிக்கோள் இவை பற்றிய விழிப்புணர்வை ஆண்களிடையே ஏற்படுத்தி அவர்களை தங்கள் உடல்நலம் பற்றி சிந்திக்க வைப்பதுதான்.

இந்த இயக்கத்தில் சேர விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது அக்டோபர் மாதம் முழுவதும் முகத்தை  மழுங்க சிரைத்துக் கொள்ள வேண்டும். நவம்பர் மாதம் முதல் நாளிலிருந்து  மீசை மட்டும் வளர்க்க வேண்டும். என்ன திடீரென்று மீசை என்று கேட்கிறவர்களிடம் ஆண்கள் உடல்நலம் பற்றி பேச வேண்டும். முவம்பர் இணையதளத்தில் உங்கள் பெயரை பதிந்து கொள்வதன் மூலம் இந்த இயக்கத்தில் நீங்கள் இணையலாம். ஆண்கள் தங்களின் உடல்நலத்தைப் புறக்கணிப்பதால் வரும் தீமைகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டு பின் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொல்லத் தொடங்கலாம். இந்த இயக்கத்திற்கான முகநூல் பக்கமும் இருக்கிறது.

பெண்களை போல ஆண்கள் தங்கள் உடல்நலம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்கிற மனநிலைதான் இதற்குக் காரணம். அதிலும் இந்திய ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை ரொம்பவும் புறக்கணிக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. விரை வீக்கம் அல்லது விபரீதமான மனஅழுத்தம் போன்றவற்றைப் பற்றி பேச ஆண்களிடைய எப்போதும் ஒரு தயக்கம். குறிப்பாக படித்த, இளம்வயது ஆண்களிடையே இந்தத் தயக்கம் மிகவும் அதிகம் இருக்கிறது. அத்துடன் ஹெல்த் செக்-அப் என்பதை அவர்கள் விரும்புவதில்லை – ‘நான் நன்றாகத் தானே இருக்கிறேன்!’ என்ற மனப்பான்மை.

அடுத்தமுறை ரூபனைப் பார்த்தபோது நான் இணையத்தில் படித்துத் தெரிந்து கொண்டதை சொன்னேன். ‘இந்தியாவில் இன்னும் இந்த இயக்கம் அவ்வளவாக அறியப்படவில்லை’  என்பதை மிகவும் வருத்தத்துடன் சொன்னார் அவர். ‘நான் ஒருமுறை அலுவலக வேலை தொடர்பாக லண்டன் போயிருந்தபோதுதான் இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொண்டேன். என்னுடைய உறவினர்களிலேயே சிலரை புற்றுநோய் பறித்துக் கொண்டது. இந்த இயக்கத்தில் சேர்ந்து புற்றுநோய்க்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளவும், இந்நோயில் அவதிப்படுபவர்களுக்கு உதவவும், ஆண்களிடைய இந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்மானித்தேன்’.

‘பலர் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நன்கொடை அளிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இந்த இயக்கத்தின் அலுவலகம் இந்தியாவில் இல்லாதது ஒரு பெரிய குறை. சிலர் முதலில் ஆர்வம் காட்டினாலும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு மறந்து விடுகிறார்கள். பெறப்படும் நன்கொடைகள் வசதி இல்லாதவர்களின் சிகிச்சைக்கும், இந்த நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன’ என்றார் மேலும்.

மொத்தத்தில் இந்த நவம்பர் மாதத்தில் மீசை என்பது ஆண்களின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகை என்று சொல்லவேண்டும். ஆனால் அந்த மீசை மற்றவர்களின் கவனத்தைக் கவரக் கூடிய வகையில் இருக்க வேண்டும். ‘என்ன மச்சி! முகத்துல முறம் மாதிரி மீசை வச்சிருக்கே?’ என்று நக்கலடிக்கிறவர்களிடம் வித்தியாசமான இந்த இயக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

முவம்பர் இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றி அறிய கீழ்கண்ட தகவல்கள் உதவும்:

 • 7 ஆண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.
 • டெஸ்ட்டிக்யூலர் புற்றுநோய் 15-34 வயதுவரை உள்ள ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
 • ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 87 ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.
 • போதுமான அளவு உடல் உழைப்பு இல்லாமல் போவதால் வருடந்தோறும் 3.2 மில்லியன் இறப்புகள் நேரிடுகிறது.

நிறைய ஆண்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்து தங்கள் உடல்நலத்தைப் பேண வேண்டும் என்பதற்காக பல்வேறு பரிசுகள், விருதுகள் வழங்கப்படுகின்றன. அதிக நன்கொடை வசூலித்துத் தருபவர்களுக்கு பரிசுகள் உண்டு.

ஆரோக்கியத்தைப் பேண ஆண்களுக்கு இந்த இயக்கம் தரும் சில அறிவுரைகள்:

 • மற்ற விஷயங்களைப் போலவே நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். இதனால் உங்களுக்கும் நன்மை; உங்கள் நண்பர்களுக்கும் அப்படியே.
 • உங்களிடம் ஏதாவது மாறுதல் தெரிந்தால் சொல்லச் சொல்லுங்கள். அதேபோல அவரிடம் ஏதாவது வழக்கத்திற்கு மாறாக வித்தியாசம் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.
 • எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் நண்பர் சோர்வாகத் தெரிகிறாரா, உடனே அவரை மனம் விட்டுப் பேசச் சொல்லுங்கள். பொதுவா ஆண்கள் தங்கள் மனக்குறைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை விரும்புவதில்லை. உடல்நலக் குறைவு பற்றி பேசும் ஆண்கள் மிகமிகக் குறைவு.
 • உங்கள் நண்பருடன் சேர்ந்து நடக்கலாம், ஓடலாம்; உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
 • உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் உங்கள் குடும்பம் மட்டுமல்ல இந்த சமுதாயமும் ஆரோக்கியமாக மாறும்.
 • உங்கள் உடம்பைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஏதாவது ஒரு உறுப்பில் வலியோ, வீக்கமோ இருந்தால், தானாகவே சரியாகிவிடும் என்று அசட்டையாக இருக்காதீர்கள். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். முன்கூட்டி அறிதலினால் பல நோய்களை நாம் தடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
 • சுறுசுறுப்பாக இருங்கள். உங்களை எப்படி சுறுசுறுப்பாக வைத்திருப்பது என்பது உங்கள் கையில் இருக்கிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. ஒரு சின்ன நடை, சின்னதாக ஒரு ஓட்டம், அல்லது அரைமணிநேரம் விளையாடுதல் என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள்.
 • வாழ்க்கைத் துணையுடன் அல்லது விரும்பியவருடன் உறவு முறிதல், வேலையை இழத்தல், பணக்கஷ்டம், அல்லது முதல் முறையாக அப்பா ஆதல் முதலியவை உங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயங்கள். இவற்றினால் உங்களுக்கு ஏற்படும் துக்கம், மனக்கலக்கம், சந்தோஷம் இவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் தவறேதும் இல்லை.
 • உங்கள் குடும்ப சரித்திரம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அறிய இது உதவும். உங்கள் பெற்றோர்கள் எந்தெந்த நோய்களினால் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரம் உங்கள் உடல்நிலை பற்றியும், உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை பற்றியும் அறிய உதவும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் இது பற்றிப் பேசுங்கள். இறந்தவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

குடும்பத்தலைவராக, குடும்பத்தை நடத்திச் செல்லுபவர்களின் ஆரோக்கியமும் முக்கியம். பெண்களின் உடல்நலத்திற்காக அக்டோபர் மாதம் பிங்க் ரிப்பன் என்று இருப்பது போலவே இந்த நவம்பர் – முவம்பர் மாதம் ஆண்களின் உடல்நலத்தை பேண.

எல்லா ஆண்களுக்கும் இந்த செய்தி போய்ச் சேர் வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் முக்கிய நோக்கம். படிப்பவர்கள் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள், ப்ளீஸ்!

மேலும் விவரங்களுக்கு: முவம்பர் பவுண்டேஷன் 

24 thoughts on “ஆண்களுக்கு இந்தப் பதிவு!

  1. வாங்க ஸ்ரீராம்!
   நிறையப் பேர்களுக்குத் தெரியாத விஷயம் இது. அதற்காகவே எழுதினேன். எல்லோருக்கும் சொல்லுங்கள் ப்ளீஸ்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 1. அவசியமான பகிர்வு. மீசை தாடி வளர்ப்பார்கள் என தெரியும். ஆனால் எதற்கு என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

  1. வாங்க வெங்கட்!
   நான் படித்த ஒரு கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். நீங்கள் உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுவதுடன் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள், ப்ளீஸ்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. அருமை சகோதரி! நாங்கள் எழுத நினைத்திருந்த ஒரு விஷயத்தை மிக அழகாக எழுதிவிட்டீர்கள். (எங்களில் ஒரு வருக்கு வெளிநாட்டுத் தொடர்பும், அனுபவமும் அறியத்தந்த விஷயம்…என்பதால்)

  நல்ல தகவல்கள் திரட்டு. ஆனால், இங்கு இன்னும் அவ்வளவு ப்ராபல்யம் ஆகவில்லை. வெளிநாட்டிற்குச் சென்று வரும் இளைஞர்கள் கூட, எல்லோரும் இதில் இணைவதில்லை. ஒரு சிலரே. அதனால் இன்னும் இங்கு அத்தனை பரவலாக இல்லை.

  எப்படியேனும் விழிப்புணர்வு ஆண்களுக்கும் அவர்களது உடல்நலம் குறித்து வந்தால் நல்லதுதானே இல்லையா…சகோதரி

  வாழ்த்துகள். நன்றி..

  1. வாங்க துளசிதரன்!
   நம்நாட்டில் ஆரோக்கியம் என்பதற்கு எப்போதுமே கடைசி இடம் தான். முடியவில்லை என்று படுத்தால் ஒழிய அதைப்பற்றிக் கூட நினைக்க மாட்டோம். இந்த இயக்கம் நம் நாட்டிற்கு மிகத் தேவையான ஒன்று. முடிந்த அளவிற்கு என் பங்கைச் செய்ய வேண்டும் என்றே இதை எழுதினேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. ஆமாம், நிறைய தளங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலுமிருந்து இந்தத் தகவல்களை சேகரித்தேன்.

 3. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத் தகவல்! பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா!

  1. வாங்க செந்தில்குமார்!
   ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமே தேவையான தகவல்கள் இவை.
   உங்களால் முடிந்த அளவு உங்கள் ஆரோக்கியத்திற்காகவும், நண்பர்களின் ஆரோக்கியத்திற்காகவும் இந்தத் தகவல்களைப் பரப்புங்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

 4. உடல்நலத்தில் அலட்சியமாயிருக்கும் ஆண்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி ரஞ்சனி மேடம்.

  1. வாங்க கீதா!
   எல்லா ஆண்களும் பங்கு பெற வேண்டிய ஒரு இயக்கம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   ஆரோக்கியத்தில் அலட்சியம் என்பது கூடவே கூடாது. உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டு, உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களிடமும் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ப்ளீஸ்!

 5. முவம்பர் மீசை பற்றி சில வருடங்கள் முன்பு எதிலோ படித்து இருக்கிறேன்! நினைவு படுத்திய பதிவு! நம் ஊரில் இந்த இயக்கம் வளர்க்க இளைஞர்கள் முன் வந்தால் நன்றாக இருக்கும். சிறப்பான பதிவு! நன்றி!

  1. வாங்க சுரேஷ்!
   நம் ஊரிலும் இந்த இயக்கம் பெரியதாக வளர்ந்தால் நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். இந்த நவம்பர் மாதம் ஆண்களின் உடல்நலம் காக்கும் மாதம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. புதிய தகவல்கள். முவம்பர் நம் நாட்டிலும் வளர்ந்தால் நல்லதுதான்.
  பெண்களைப் போல ஆண்கள் தங்கள் உடல நலத்ஹை பேணுவதில்லை என்பது உண்மை

  1. வாங்க முரளி!
   நீங்கள் சொல்லும் உண்மையைக் கொஞ்சம் மாற்றுங்கள், ப்ளீஸ்!
   நீங்களும் உங்கள் உடல்நலத்தைப் பார்த்துக்கொண்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. முவெம்பர் பற்றிய விஷயம் அறிந்து கொண்டேன். நானும் என் ஆங்கிலத் தளத்தில் நவம்பர் மாதம் முடிவதற்குள்ளாக எழுதி விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். (செய்வேனா தெரியாது.)

   அறிய வேண்டிய தகவல் ஒன்றைப்பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ரஞ்சனி.

   1. வாங்க ராஜி!
    கட்டாயம் எழுதுங்கள். அப்படியே பார்க்கிறவர்களிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  2. வாங்க ரூபன்!
   எல்லோருக்கும் சொல்லுங்கள், ப்ளீஸ்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க வடுவூர் குமார்!
   உங்கள் பெயரைப் பார்த்தவுடன் ராமன் தான் நினைவில் வருகிறார்!
   நீங்கள் கேள்விப்பட்டதை எல்லோருக்கும் சொல்லுங்கள், ப்ளீஸ்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s