Uncategorized

குஜிலி குமாரி!

எத்தனை முறை சொன்னாலும் நமக்கும் இந்த ஹிந்தி மொழிக்கும் இந்த ஜென்மத்தில் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை. பெங்களூருவிற்கு வந்த மூன்றாம் மாதம் கன்னடத்தில் பேச, எழுத, படிக்க ஆரம்பித்துவிட்டேன். அதேபோல மலையாளமும் வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டேன் – எழுத படிக்க கூட. இப்போது எல்லாம் மறந்துவிட்டாலும், மலையாளப் படங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது பேசினால் மறுபடி எனக்கும் மலையாளம் பேச வந்துவிடும். ஆனால் இந்த ஹிந்தி மொழி மட்டும் என்னுடன் ரொம்பவும் கண்ணாமூச்சி விளையாடுகிறது. மும்பை அல்லது டில்லியில் ஒரு ஆறுமாதங்கள் இருந்தால் கற்றுக் கொண்டுவிடுவேன்! (என்று இன்னமும் திடமாக நம்புகிறேன்!!!)
திடீரென்று இப்போது என்ன, ஹிந்தி மொழி பற்றிய கொசுவர்த்தி என்று கேட்பவர்களுக்கு: ‘நான் ஈ’ படத்தில் ஒரு காட்சி. நடிகர் சுதீப் ஒரு ஸ்பாவிற்குப் போய் ஸ்டீம்பாத் எடுத்துக் கொள்வார். அவரை உள்ளே உட்கார வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவார் உதவியாளர். அவராக திறந்துகொண்டு வெளியே வர முடியாது. அப்போது அந்த ஈ வந்து அவரைப் பாடாய் படுத்தும், இல்லையா? அந்த ஸ்டீம் பாத் காட்சி தான் இந்த கொசுவர்த்திக்குக் காரணம்.
பல வருடங்களுக்கு முன் நான், என் ஓர்ப்படி, அவள் பெண் மூவரும் பெங்களூரில் இருக்கும் நேச்சர் க்யூர் மையத்திற்கு ஒருவார காலம் சென்று தங்கியிருந்தோம். இங்கு இயற்கை முறையில் நமது ஆரோக்கியத்தை சீர் செய்வார்கள். மண்குளியல், ஸ்டீம் பாத், எண்ணைய் மசாஜ் என்று விதம் விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். எல்லா ஊர்களிலிருந்தும் இங்கு நிறைய பேர்கள் வருவார்கள். சிலர் பத்து நாட்கள் தங்குவார்கள். சிலர் பதினைந்து நாட்கள். அவரவர்கள் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அதற்கேற்றார்போல அங்கு தங்க வேண்டும். தினமும் மதியம் ஒருமணி நேரம் யோகா வகுப்புகளும் நடக்கும்.
முதல் மூன்று நாட்கள் வெறும் எலுமிச்சம்பழ ஜூஸ் வெல்லம் சேர்த்தது. எ.பழம், வெல்லம் இரண்டும் அந்த ஜூஸில் எங்கே என்று தேட வேண்டும். பெரிய கூஜாவில் காலையில் வந்துவிடும். மூன்று வேளையும் இதுதான் சாப்பாடு. நான்காம் நாள் காலை ஒரே ஒரு பப்பாளி துண்டு – முழுப் பழம் அல்ல. மாலை மறுபடியும் ஜூஸ்(எ.பழம் + வெல்லம்) மைனஸ் எ. பழம் + வெல்லம். ஐந்தாம் நாள் காலை ஒரே ஒரு சப்பாத்தி + நிறைய காய்கறிகள் போட்டு செய்த கறியமுது. உண்மையிலேயே நிறைய கொடுப்பார்கள். அதிள் தேங்காய் சேர்த்திருப்பார்கள். தேங்காயில் உள்ள கொழுப்பு மிகவும் நல்லது என்பார்கள். சப்பாத்தி மட்டும் ஒன்று தான். மாலை அதேபோல ஒரு சப்பாத்தி + கறியமுது. ஆறாம் நாள் காலை இரண்டு சப்பாத்தி + ஏதாவது ஒரு பச்சடி. மாலையும் அதேபோல. காலை மாலை எ.பழம் ஜூஸ் வரும். காபி, டீ? மூச்! (எப்படா வீட்டுக்குப் போய் சுடச்சுட காபி குடிப்போம் என்று காத்திருப்போம்!)
நாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். தினசரி வேறு வேறு சிகிச்சை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு நாள் எண்ணைய் மசாஜ். சிலநாட்கள் ஸ்டீம் பாத் (சுதீப் இருந்தாரே அதே போல நாங்கள் அந்தப் பெட்டிக்குள் உட்கார்ந்திருப்போம்) சில நாட்கள் கால்களுக்கு மட்டும் மசாஜ். சில நாட்கள் முதுகிற்கு மசாஜ் + சுடச்சுட வெந்நீர் குளியல். எண்ணைய் என்று நான் குறிப்பிடுவது பல மூலிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களின் கலவை. நல்ல கெட்டியாக இருக்கும். எண்ணைய் மசாஜ் என்றால் நிச்சயம் ஸ்டீம் பாத் உண்டு. இல்லையென்றால் எண்ணைய் பிசுக்கு போகாது.
எங்கள் பக்கத்து அறையில் சீதா மஹாஜன் என்று ஒரு சின்ன வயதுப் பெண்மணி இருந்தாள்.  ஹிந்தியில் மட்டுமே பேசுவாள். நான் ஆங்கிலம் பேசச் சொல்லித் தரும் ஆசிரியை என்று அறிந்ததும் ‘எனக்கும் இப்பவே சொல்லிக்கொடு’ என்பாள். என் ஓர்ப்படி நாக்பூரில் இருந்தவளாதலால் நன்றாக ஹிந்தி பேசுவாள். அவளும் சீதாவும் ஹிந்தியில் பேசும்போது நான் வழக்கம்போல கிண்டல் அடித்துக் கொண்டிருப்பேன். (இப்படி கிண்டல் பண்ணினால் அடுத்த ஜன்மத்திலும் உனக்கு ஹிந்தி வராது – இது என் பெண் எனக்குக் கொடுத்த, கொடுக்கும் சாபம்!)
ஒருநாள் நான் எனது சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருந்தாள் (சுதீப் போல!) என்னைப் பார்த்தவுடன், ‘குஜிலி….குஜிலி….!’ என்றாள். என்ன சொல்கிறாள்? ஒரு நிமிடம் தயங்கினேன். ஏதாவது புரிந்தால் தானே? அடுத்தாற்போல  ‘நாக் மே…..நாக் மே….!’ என்றாள். நாக்கா? அங்கு இருந்த கடியாரம் பத்து மணியைத் தொட்டிருந்தது. ஓ! பசி, பாவம்! நாக் மே சாப்பாடு வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ‘ஃபினிஷ் யுவர் ஸ்டீம் பாத். வீ கேன் ஹாவ் பாத்’ (பிசிபேளே பாத், பகாளா பாத் என்று நினைத்துக் கொண்டு அந்த சப்பாத்தியை சாப்பிடலாம் – இதெல்லாம் என் மைன்ட்-வாய்ஸ் சொன்னது) என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பின்னாலேயே சீதா என்னை ‘பெஹென்ஜி, பெஹென்ஜி….!’ என்று அழைக்கும் குரல் கேட்டது. நான் ஏன் அங்கு நிற்கிறேன். சிட்டாகப் பறந்து என் அறைக்கு வந்துவிட்டேன்!
எங்கள் அறைக்குப் போனவுடன் என் ஓர்ப்படியிடம் ‘சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருக்கா. என்னைக் கூப்பிட்டு நாக், குஜிலின்னு என்னனவோ சொன்னா. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓட்டமாக ஓடி வந்துவிட்டேன்!’ என்றேன். என் ஓர்ப்படி பெண் சிரித்தாள் சிரித்தாள், சிரித்தாள், அப்படி சிரித்தாள். (இன்னும் கூட எனக்கு அந்த சிரிப்பு கேட்கிறது!) ஓர்ப்படியும் அவளுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள். எதற்கு இந்த சிரிப்பு என்று புரியவில்லை. ஆனால் நான் ஏதோ காமெடி பண்ணியிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது. இருவரது சிரிப்பும் அடங்கியவுடன் என் ஓர்ப்படி சொன்னாள்: ‘சீதாவிற்கு மூக்கில் அரித்திருக்கிறது. உங்களைக் கூப்பிட்டு சொறியச் சொல்லியிருக்கா. அது உங்களுக்குப் புரியவில்லை!’
‘அடக் கஷ்டமே! அவளுக்கு பசிக்கிறது. அதுதான் நாக், நாக் என்று நாக்கைப் பற்றி சொன்னாள் என்று நினைத்தேன்!’ என்று சொல்லிவிட்டு நானும் சிரிக்க ஆரம்பித்தேன். அன்று சாயங்காலம் சீதாவைப் பார்த்தபோது எனது ஓர்ப்படியின் உதவியுடன் மனமார, உளமார எனது ஹிந்தி மொழிப் புலமையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன் – ஆங்கிலத்தில்தான்!
ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! சீதா சிகிச்சை முடிந்து எங்கள் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு போனாள்!
 தொடர்புடைய பதிவு: ஹிந்தி மாலும்?
Advertisements

7 thoughts on “குஜிலி குமாரி!

  1. சுவாரஸ்யமான அனுபவம்தான். ஆனால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் முயற்சிக்கும் உங்களைப் பாராட்ட வேண்டும். எ.ப சாறு,ஒரு பப்பாளித் துண்டு, ஒரு சப்பாத்தி… அம்மாடி… நமக்குத் தாங்காது!

  2. ஹஹஹஹஹஹ்ஹ் குஜிலி குமாரி மெய்யாலுமே மெய் குலுங்கச் சிரிக்கச் செய்தாள்! அது சரி குஜிலி குமாரி நாக்க முக்கனு அப்பவே பாடிட்டாரோ!!! என்றாலும் அவர் ஆங்கிலம் கற்றுக் கொண்டுவிட்டாரே…இனியும் நீங்கள் ஹிந்தி கற்றுக் கொண்டுவிடலாம்…

    பொதுவாக நாம் – தமிழர்கள் தான் எளிதாக எல்லா மொழியும் கற்றுக் கொண்டுவிடுவதாகச் சொல்லப்படுவதுண்டு. ஹிந்திக்காரர்கள் வேறு மொழி கற்க கஷ்டப்படுவதுமட்டுமின்றி தயங்கவும் செய்வார்கள் என்று…இங்கு அப்படியே உல்டா…ஹஹாஹ்

  3. உங்கள் ஹிந்தி புலமை வெளிப்பட்டுவிட்டதே அபாரம் போங்கள் ரஞ்சனி அவல் உங்கள் வகுப்பில் ஆங்கிலம் கற்றுக்கொண்டதற்கு குரு தட்சணையாக ஹிந்தி கற்றுகொடுத்திருக்கக்கூடாதோ ?

  4. உங்கள் குஜிலி குமாரிப் பதிவு நல்ல நகைச்சுவை . வேற்று மொழி நம்மை ஒரு வழி செய்து விடும்..மிகவும் ரசித்தேன் உங்கள் குஜிலிக் குமாரியை. அதை விடவும் பிசிபேளா பாத் என்று நினைத்துக் கொண்டு சப்பாத்தியை சாப்பிடுவது பற்றி குறிப்பிட்டது தான் இதில் ஹைலைட் .
    வாழ்த்துக்கள் ரஞ்சனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s