என் குடும்பம்

நானே என்னைத் தொலைத்த கதை!

 

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆர்ட் ஆப் லிவிங் க்ரியா வகுப்புகள் எங்கள் வீட்டிலிருந்து சுமாராக ஒரு மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை நடக்கும். தினமும் வீட்டில் நாங்கள் பழகுவது ஷார்ட் க்ரியா. வாரம் ஒருநாள் இந்த லாங் க்ரியா நடக்கும். என் கணவரோ, என் பிள்ளையோ என்னைக் கொண்டுபோய் விடுவார்கள். முடிந்ததும் அழைத்து வருவார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்தப் பதிவு எழுதும் அவசியமே வந்திருக்காதே!

 

ஒவ்வொரு வாரம் வேறுவேறு நடத்துனர்கள் வருவார்கள். நான் தொலைந்து போனதற்கு முந்தின வாரம் வந்த நடத்துனர் க்ரியா ஆரம்பிப்பதற்கு முன் எங்களுக்கு நிறைய பயிற்சிகள் கொடுத்தார். வெகு சில நடத்துனர்கள்தான் இப்படி செய்வார்கள். சிலர் நாங்கள் போய் உட்கார்ந்த உடனேயே க்ரியாவை ஆரம்பித்துவிடுவார்கள்.

 

இந்த உற்சாக நடத்துனர் எங்களை நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கண்ணை மூடிக்கொண்டு கைகளை நீட்டிக்கொண்டு வேறிடத்திற்கு நகரச் சொன்னார். நாங்கள் கொஞ்சம் தயங்கியவுடன் அவர் சொன்னார்: ‘உங்களில் நிறைய பேர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பழகியிருப்பீர்கள். உங்களை உங்களது வசதியான இடங்களிலிருந்து எழுப்புவதுதான் என் உத்தேசம்’ என்றார் ஒரு இடக்கான புன்னகையுடன். அவர் சொன்னது ரொம்பவும் உண்மை. நானும் இதை பலமுறை கவனித்திருக்கிறேன். சிலர் எப்போதும் ஒரே இடத்தில்தான் உட்காருவார்கள். நாம் தப்பித்தவறி அவர்கள் இடத்தில் உட்கார்ந்து விட்டால், ஏதோ பணம் கொடுத்து முன்பதிவு – அதுவும் நிரந்தமாக – செய்திருப்பது போல நம்மை எழுப்பிவிட்டுவிடுவார்கள்.

 

வேறு இடத்திற்கு நாங்கள் நகர்ந்தவுடன், அங்கிருந்தபடியே சில பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார். பிறகு மறுபடியும் பழைய இடத்திற்கே வரச் சொன்னார் – கண்களை மூடியபடியே. ‘நில்லுங்கள்’ என்றார். எங்கள் பழைய இடத்திற்கு வந்தோமா என்றே தெரியவில்லை. எங்கிருந்தோமோ அங்கேயே உட்கார்ந்து க்ரியாவை செய்ய வைத்தார். க்ரியா முடிந்து கண்களைத் திறந்தபோதுதான் நாங்கள் முதலில் உட்கார்ந்த இடத்திலிருந்து எங்கெங்கோ வந்துவிட்டோம் என்று தெரிந்தது. எல்லோரும் அவரவர்கள் முதலில் உட்கார்ந்த இடத்திற்குச் சென்று எங்கள் உடமைகளை (பர்ஸ், செல்போன் etc., etc.,) எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்தபடியே!

 

சிலர் அவசர அவசரமாக தங்கள் கைப்பைகளைத் திறந்து தங்கள் உடமைகளை சரி பார்த்தார்கள். ‘இங்கு யாரும் திருடர்கள் இல்லை; பயமில்லாமல் நீங்கள் வீட்டிற்குப் போகலாம்’ என்றார் எங்கள் நடத்துனர் அவர்களைப் பார்த்து. அசடு வழியச் சிரித்தபடியே வெளியேறினார்கள் அவர்கள். அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. நமது உடைமைகளின் மீது கவனம் இருக்கும்போது க்ரியாவில் மனதை செலுத்த முடியுமா? எனக்கும் மனது சற்று அடித்துக்கொண்டது. ஆனாலும் க்ரியா ஆரம்பித்தவுடன் மனது அதில் லயிக்க ஆரம்பித்துவிட்டது. நீண்ட நேர க்ரியா என்பது சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ஆகும். க்ரியா முடிந்தவுடன் அப்படியப்படியே படுத்துக் கொண்டு விடுவோம். அந்த நிலையிலிருந்து வெளியே வரவே முடியாது. உடம்பு லேசாகி பறப்பது போல இருக்கும். நம்மைச் சுற்றி ஒரு எனெர்ஜி பரவியிருப்பதை உணர முடியும். அந்த நிலையை சொற்களில் வர்ணிக்க முடியாது. உணர்ந்து பார்க்க வேண்டும். சரி, நம் கதைக்கு வருவோம்.

 

அவர் செய்தது ரொம்பவும் சரியே. நாம் நமது கம்ஃபர்ட் Zஓனில் இருந்து வெளியே வர விரும்புவதேயில்லை. நான் இன்னொரு இடத்திலும் இப்படி சிலர் செய்வதைப் பார்த்திருக்கிறேன். மல்லேஸ்வரம் யதுகிரி யதிராஜ மடத்தில் உபன்யாசம் கேட்கப் போவேன். அங்கு சில மாமிகள் எல்லா  உபன்யாசங்களுக்கும் வருவார்கள். அவர்களுக்கென்று சில இடங்கள் இருக்கும். அதுவும் வேளுக்குடி திரு கிருஷ்ணன் ஸ்வாமியின் உபன்யாசம் என்றால் எள் போட்டால் எள் விழாது. கூட்டத்தில் நசுங்கி எண்ணைய் ஆக வழியும். அத்தனை கூட்டம். பெரும்பாலும் பெண்கள் தான். ஒருமுறை நான் சற்று முன்னால் போய்விட்டேன். ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டேன். சற்று நேரத்தில் ஒரு மாமி வந்தார். என்னைப்பார்த்தார். அருகில் வந்து ‘இது நான் உட்காரும் இடம். எழுந்திருங்கள்’ என்று சொல்லி என்னை தூக்கி தள்ளாத குறையாக எழுப்பிவிட்டு விட்டார்!

 

மறுபடி நம் கதைக்கு வருவோம். அடுத்த வாரம் சனிக்கிழமை. அந்த நடத்துனரே வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உடைமைகளின் மேல் மனது செல்வதால் ரொம்பவும் புத்திசாலித்தனமாக என் கணவரிடம் எல்லாவற்றையும் – மொத்தமாக என் கைப்பையை கொடுத்துவிட்டு – நான் உள்ளே நுழைந்தேன். என்னை இறக்கி விட்டுவிட்டு உடனே இவர் கிளம்பிவிட்டார். பள்ளி முழுவதும் அலங்காரம் வண்ண வண்ண விளக்குகள். இது என்ன என்றைக்கும் இல்லாமல் பள்ளி விழாக் கோலம் பூண்டிருக்கிறதே என்ற யோசனையுடன் படி ஏறிப் போனேன். என்னைக் கண்ட காவலாளி (வாராவாரம் பார்க்கிறாரே) ‘இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா. அதனால க்ரியா வகுப்பு இங்க இல்ல. மெயின் ரோடுல ஒரு வீட்டுல நடக்குது. எனக்கு சரியா விவரம் தெரியல. நீங்க யாருக்காவது போன் செய்து கேளுங்க!’ என்றார். அடக்கடவுளே! போனவாரம் இதைச் சொல்லவே இல்லையே!

 

இப்போ எங்கே போவது? கையில் போன் இல்லை. யாரிடம் கேட்பது? சரி வீட்டிற்கே போகலாம் என்றால் என் கணவர் ஏதோ வாங்கவேண்டும்; பிக் பஜார் போய்விட்டு வருகிறேன் என்று சொன்னார். வீட்டு சாவி அவரிடம். முதலில் பணம் இல்லையே கையில். எப்படிப் போவது? உடனே ‘பல்பு’ எரிந்தது. நான் வேலை செய்து கொண்டிருந்த இன்ஸ்டிடியூட் சுமார் ஒரு கி.மீ தூரத்தில் இருந்தது. அங்கு போனால் யாராவது இருப்பார்கள். கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு கணவருக்கும் போன் செய்து சொல்லிவிடலாம்.. அதற்குள் கணவரும் வந்துவிடுவார் என்று நடக்க ஆரம்பித்தேன். என் அதிர்ஷ்டம் இல்லை – துரதிர்ஷ்டம்  இன்ஸ்டிடியூட் பூட்டி இருந்தது. என்ன செய்வது?

 

முன்பு ஒருதரம் இது போல தொலைந்தபோது கணவர் சொன்னது நினைவிற்கு வந்தது. ‘கையில காசு இல்லேன்னா என்ன? ஒரு ஆட்டோவ பிடிச்சு வீட்டுக்கு வரது. வீட்டுக்கு வந்து காசு கொடுக்கலாமே!’ சட்டென்று ஒரு ஆட்டோவைப் பிடித்தேன். வீட்டிற்கு வந்தேன். கடவுளே! கணவர் வீட்டிற்கு வந்திருக்க வேண்டுமே! வீட்டு சாவியும் கையில் இல்லையே! பரவாயில்லை. பக்கத்து வீட்டில் ஒரு சாவி கொடுத்து வைத்திருப்போம். அதை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவாறே ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி மாடிக்குப் போகிறேன். நல்லகாலம் என் கணவர் அப்போதுதான் வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். ‘என்ன, பின்னாலேயே வந்துட்ட?’ என்றவரிடம் மூச்சு இரைக்க இரைக்க ‘காசு கொடுங்கோ அப்புறம் வந்து கதை சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு காசை வாங்கிக் கொண்டு போய் ஆட்டோக்காரரிடம் கொடுத்துவிட்டு வந்தேன், வெற்றிகரமாக!

 

இப்போதெல்லாம் காசு இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. கூடவே அலைபேசியும்!

Advertisements

8 thoughts on “நானே என்னைத் தொலைத்த கதை!

  1. இந்த இடப்பிரச்சினை பெரும் பிரச்சினை. புதுக்கோட்டையில் ஒரு கல்லூரி பேருந்தில் ஒரு ஊழியர் என்னை எழுப்பி விட்டிருக்கிறார். பத்து வருடமாக பேருந்தில் அந்த சீட்ல தான் உக்காருவாராம். இத்தணைக்கும் நான் மாணவன் இல்லை. அட அல்பமே என்று தோன்றியது. மித்தபடி நீங்கள் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா, தொலைக்கப் படுகிறீர்களா என்று ஒரு பட்டி மன்றம் ஏற்பாடு செய்யப் போகிறோம். வீட்ல சார்ட்ட சொல்லிடுங்க. நன்றி.

  2. சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.! இந்த ‘இட ஆக்கிரமிப்பு உணர்வு’ மனிதனின் ஆதாரமான உணர்வு. அதையெல்லாம் உடைத்து மேல் வருபவர்களே வாழ்க்கையை இலகுவாக்கிக் கொள்ள முடியும். மேலாண்மை வகுப்புகளில், கண்மூடி இடம் மாறுவதை பங்கேற்பவர்களிடம்இன்னமும் விஸ்தாரமாகச் செய்வோம்.. காசே இல்லாமல் க்ஷேத்ராடனம் போவது பற்றி சிந்தித்திருக்கிறேன்.. நம் முன்னோர்கள் பலர் அப்படித்தானே கிடைத்ததை உண்டு, எங்கெங்கோ தங்கி பயணம் செய்திருக்கக் கூடும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s